Showing posts with label chipflation. Show all posts
Showing posts with label chipflation. Show all posts

‘சிப்ஃபிளேஷன்’: நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலை ஏன் உயர்கிறது? - ரவீனா பனேட்டா



சிப்ஃப்ளேஷன் என்பது “Chip” (செமிகண்டக்டர் சிப்) + “Inflation” (பணவீக்கம்) ஆகிய இரண்டு சொற்களின் கலவையாக உருவான புதிய சொல்.


இது குறைமின்கடத்தி சிப்கள் (குறிப்பாக நினைவக சிப்கள் – DRAM, NAND Flash போன்றவை) விலை வேகமாக உயரும் நிலையைக் குறிக்கிறது.


நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், ‘சிப்ஃபிளேஷன்’ (Chipflation) என்ற புதிய நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. சிப்ஃபிளேஷன் என்றால் என்ன? நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலை உயர்வுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியும் பிற காரணிகளும் எவ்வாறு பங்களிக்கின்றன?


தற்போதைய செய்தி :


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index (CPI)) தரவுகளின்படி, பல்வேறு நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலைகள் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 3-5% வரை அதிகரித்துள்ளன. 2025-ஆம் ஆண்டில் விலைகளின் மாற்றம் இதைவிட மிகவும் குறைவாகவே இருந்தது.


முக்கிய அம்சங்கள்:


1. உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடுகள் அதிக அளவில் அதிகரித்து வருவதால், தினசரி  பயன்படுத்தப்படும் நுகர்வோர் மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நினைவகச் சில்லுகளுக்கு (Memory Chips) கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


2. இதன் காரணமாக, உற்பத்தியாளர்கள் தாங்கள் வசூலிக்கும் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளனர். இதனால், கடந்த காலங்களில் திறன்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களின் விலைகள் பல ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்த அளவிலான விலை உயர்வு, 2026-ஆம் ஆண்டில்  ஆறு மாதங்களிலேயே ஏற்பட்டுள்ளது.


3. நினைவகச் சில்லுகள் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படை கூறுகளாக உள்ளன. குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், காற்றுப் பதனிகள், மின்கலன்கள், திறன்பேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள், காதொலி சாதனங்கள் மற்றும் பென் டிரைவ்கள் போன்ற பல நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலைகள் கடந்த சில மாதங்களில், வெவ்வேறு அளவுகளில், ஒரு மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கு தொடர்ந்து உயர்ந்துள்ளன.


4. இவை அனைத்திலும் பொதுவாக இடம்பெறும் மிகச் சிறிய ஒரு கூறுதான் இதற்குக் காரணம்: நினைவகச் சில்லுகள் (Memory Chips) ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பட்டியலில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளில், இந்த 9  பொருட்களும் சேர்ந்து 1% பங்கை மட்டுமே வகிக்கின்றன.


5. இருப்பினும், சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கத்தை இவை தொடர்ந்து அதிகரிக்கச் செய்து வருகின்றன. மேலும், வரும் ஆண்டுகளிலும் இந்த நிலை நீடிக்கக்கூடும். உதாரணமாக:


  1. திறன் பேசிகள்: 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை  வரையிலான காலத்தில் 4% விலை உயர்வு காணப்பட்டது. ஆனால், 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், இவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு  0.7% சரிவைக் கண்டிருந்தது.

(b) காற்றுப் பதனிகள் (Air conditioners): கோடைக்காலத்தில் இவற்றின் விலைகள் வழக்கமாக அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டு ஜனவரி–ஜூலை காலகட்டத்தில் விலை உயர்வு 4.8% ஆக இருந்தது. 2025-ஆம் ஆண்டின் ஜனவரி–ஜூலை காலகட்டத்தில் இது 1.1% மட்டுமே இருந்தது.


(c) தொலைக்காட்சிகள் (TVs): 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொலைக்காட்சிகளின் நுகர்வோர் விலைக் குறியீடு 3.5% உயர்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் பின்னோக்கிக் கணக்கிட்டால், இதே அளவிலான விலை உயர்வு ஏற்பட 54 மாதங்கள், அதாவது நான்கரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.


6. பிற நுகர்வோர் மின்னணுப் பொருட்களிலும் இதேபோன்ற பெரிய அளவிலான எண்ணிக்கைகள் காணப்படுகின்றன: காற்றுப் பதனிகளுக்கு 46 மாதங்கள், குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 45 மாதங்கள், திறன் பேசிகளுக்கு 41 மாதங்கள், சலவை இயந்திரங்களுக்கு 32 மாதங்கள், கணினிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கு 31 மாதங்கள் ஆகிய காலங்களில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு இணையான அளவிலான உயர்வு 2026-ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.


7. மேற்கூறப்பட்ட 6 நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் 2026-ஆம் ஆண்டுக்கான விலைக் குறியீட்டு உயர்வு, புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொடரின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.


8. 2026-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்திற்கான விலைக் குறியீட்டு மாற்றங்கள், 2012-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட பழைய புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு தொடரைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்டுள்ளன. பழைய மற்றும் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு கூடைகள் இரண்டிலும் இடம்பெற்றுள்ள நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் மட்டுமே இந்த ஒப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.


நினைவகச் சில்லு பணவீக்கம் (Memory Chip Inflation), சிப்ஃபிளேஷன் (Chipflation)


சிப்ஃபிளேஷன் (Chipflation) என்றால் என்ன?


9. ஜூன் மாதத்தில், அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் ‘சிப்ஃபிளேஷன்’ (Chipflation) என்ற சொல்லை உருவாக்கினர். “AI-க்கான நினைவகச் சில்லுகளின் தேவை அதிகரிப்பதால், தரவு மையங்கள் முதல் திறன்பேசிகள் வரை அனைத்து பொருட்களின் செலவும் அதிகரிக்கிறது. இதன் விளைவுகள் தொழில்நுட்பத் துறையை தாண்டி செல்லக்கூடும்” என்பதை விளக்குவதற்காக இந்தச் சொல் உருவாக்கப்பட்டது.


10. எளிமையாகச் சொல்வதானால், நினைவகச் சில்லுகளின் விலை காலப்போக்கில் குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து அதிகரிப்பதும், அவற்றைக் கண்டுபிடிப்பதும் வாங்குவதும் கடினமாகி வருவதுமே சிப்ஃபிளேஷன் (Chipflation) ஆகும்.


11. உலகப் பொருளாதார மன்றத்திற்காக டேவிட் எலியட் எழுதிய “Chipflation: What to know about ‘AI’s hidden price tag’” என்ற கட்டுரையின்படி, பெருமளவிலான கணினிப் பயன்பாட்டில் இந்த சிலிக்கான் சில்லுகளுக்கு தற்போது மாற்று எதுவும் இல்லை. இதனால், எதிர்கால முன்னேற்றத்திற்கு இவை முக்கியமாவையாக இருப்பதுடன், நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.



12. எலியட்டின் கூற்றுப்படி, அமெரிக்காவின் ஐந்து மிகப்பெரிய AI நிறுவனங்கள் இந்த ஆண்டு $650 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செலவில் பெரும்பகுதி தரவு மையங்களுக்காக இருக்கும். இது 2025-ஆம் ஆண்டில் அவை செலவிட்ட தொகையைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். இந்த அளவிலான தேவை, ‘சிப்ஃபிளேஷன்’ எனப்படும் நிலை உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


சிப்ஃபிளேஷன் ஏன் ஏற்படுகிறது?


13. உலகளாவிய AI வளர்ச்சியின் காரணமாக, TSMC, Samsung மற்றும் SK Hynix போன்ற முக்கிய சிப் உற்பத்தியாளர்கள், உலகம் முழுவதும் வேகமாக உருவாகி வரும் தரவு மையங்களில் பயன்படுத்தப்படும், அதிகத் தேவை கொண்ட மேம்பட்ட சில்லுகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


14. இதன் விளைவாக, குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், காற்றுப் பதனிகள், திறன்பேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் மற்றும் காதொலி சாதனங்கள் போன்ற அன்றாட மின்னணுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இயக்கநிலைத் தற்செயல் அணுகல் நினைவகம் (Dynamic Random Access Memory (DRAM)) மற்றும் பிற சில்லுகளின் உற்பத்தி பின்தள்ளப்படுகிறது.


15. நுகர்வோர் மின்னணுப் பொருட்களுக்கு தேவைப்படும் சில்லுகளின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையின் விளைவாக அவற்றின் விலைகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளன. JPMorgan Global Research மதிப்பீட்டின்படி, 2024ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை DRAM சில்லுகளின் விலை 400%-க்கும் அதிகமாக உயர்ந்திருக்கும்.


16. இது 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலும், 21-ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளிலும் காணப்பட்ட, மூர் விதியால் (Moore’s Law) ஏற்பட்ட செலவுக் குறைவுக்கு முற்றிலும் மாறான நிலையாகும். அந்தக் காலகட்டத்தில் DRAM சில்லுகளின் விலை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் 90% குறைந்து வந்தது.


17. டேவிட் எலியட்டின் கூற்றுப்படி, சிப்ஃபிளேஷனுக்குப் பின்னால் உள்ள சில முக்கிய காரணிகள் பின்வருமாறு:


(i) செயற்கை நுண்ணறிவு தரவு மைய முதலீடு: செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு மையங்களுக்கு மிகப்பெரிய அளவில் சில்லுகள் தேவைப்படுகின்றன. இதனால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சிப் தொழில்துறை எளிதில் வழங்கக்கூடிய அளவைவிட அதிகமான சில்லுகளை வாங்குகின்றன.


(ii) அதிக லாப விகிதம் கொண்ட சில்லுகளுக்கு முன்னுரிமை: செயற்கை நுண்ணறிவு சில்லுகள் கணிசமாக அதிக லாப விகிதத்தை வழங்கக்கூடியவை. இதனால், சிப் உற்பத்தியாளர்கள் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சில்லுகள் உள்ளிட்ட தினசரிப் பொருட்களுக்கான சில்லுகளைவிட செயற்கை நுண்ணறிவு சில்லுகளின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.


(iii) நீண்ட உற்பத்தி காலஅவகாசம்: புதிய குறைமின்கடத்தி உற்பத்தி ஆலைகளை உருவாக்கி அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இதனால், விநியோகத்தில் ஏற்படும் பற்றாக்குறையை விரைவாகச் சரிசெய்ய முடியாத நிலை உருவாகிறது.


(iv) கட்டுப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகள் (Constrained supply chains): புவிசார் அரசியல் பதற்றங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் துண்டிக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகள் தொடர்ந்து கட்டுப்படுத்துவதுடன், உற்பத்திச் செலவுகளையும் அதிகரிக்கின்றன.


நினைவகச் சில்லுகள் (memory chips) மற்றும் குறைமின்கடத்திகள் (semiconductors) என்றால் என்ன?


1. ஒரு சிப் (Chip) என்பது ஒருங்கிணைந்த மின்சுற்று (Integrated Circuit) அல்லது மைக்ரோசிப் (Microchip) என்பது சிலிக்கான் போன்ற குறைமின்கடத்திப் பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான மின்னணுத் தயாரிப்பு ஆகும்.


2. இன்றைய பெரும்பாலான குறைமின்கடத்திகள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளாக உள்ளன. இவை குறைமின்கடத்தி ‘சில்லுகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. அடிப்படையில், சிலிக்கான் செதில் (wafer) மீது அடுக்குகளாக அமைக்கப்பட்ட மின்சாரத்தை கட்டுப்படுத்தும் சிறிய மின்னணுக் கருவிகள் (transistors), டையோடுகள், மின்தேக்கிகள் (capacitors), மின்தடைகள் (resistors) மற்றும் அவற்றை இணைக்கும் எண்ணற்ற நுண்ணிய மின்சுற்றுகளின் தொகுப்பாகும், இவை ஒரு சிலிக்கான் தகட்டின் மீது அடுக்கப்பட்டிருக்கும்.


3. குறைமின்கடத்திகள், மின்கடத்திகள் மற்றும் மின்காப்பான்களுக்கும் இடையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. தாமிரம் போன்ற கடத்திகள் மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக்கும்போதும், கண்ணாடி போன்ற மின்காப்பான்கள் அதைத் தடுக்கும்போதும், குறைமின்கடத்திகள் கட்டுப்படுத்தப்பட்ட கடத்தும் திறனைக் காட்டுகின்றன.


4. இயற்கையான நிலையில் குறைமின்கடத்திகள் மின்சாரத்தின் பலவீனமான கடத்திகளாக உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சில பொருட்கள் சேர்க்கப்பட்டு, மின்புலம் பயன்படுத்தப்படும்போது மின்சாரம் பாயத் தொடங்கும். உதாரணமாக, சிலிக்கான் மற்றும் ஜெர்மேனியம் போன்ற குறைமின்கடத்திப் பொருட்களுடன் பாஸ்பரஸைச் சேர்ப்பது, ஒரு எதிர்மறை மின்னோட்டத்தின் பாய்வை அனுமதிக்கிறது.


5. மின்னணுச் சாதனங்களின் முக்கியமானவைகளாக குறைமின்கடத்திகள் உள்ளன. தகவல் தொடர்பு, கணினித் தொழில்நுட்பம், சுகாதாரம், ராணுவ அமைப்புகள், போக்குவரத்து, தூய்மையான ஆற்றல் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு இவை அடிப்படையாக உள்ளன.


6. குறைமின்கடத்திகள் வடிவமைப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் மிகவும் சிக்கலான பொருட்களாகும். மேலும், மின்னணு சாதனங்கள் தரவுகளைச் செயலாக்கவும், சேமிக்கவும், அனுப்பவும் தேவையான முக்கிய செயல்பாடுகளை அவை வழங்குகின்றன.


7. மத்திய அரசின் புதிய செமிகான் 2.0 திட்டம், உள்நாட்டில் சிப் வடிவமைப்பு நிறுவனங்களை உருவாக்குதல், ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த குறைமின்கடத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகரீதியாகச் சாத்தியமான சில்லுகளின் மேம்பாட்டுக்கு ஆதரவளித்தல் மற்றும் அந்தப் பொருட்களைச் சந்தையில் அறிமுகப்படுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரு முன்னெடுப்பை விவரிக்கிறது.


Original Link: ‘Chipflation’: Why are consumer electronics facing a price rise?

Share: