Showing posts with label COICOP. Show all posts
Showing posts with label COICOP. Show all posts

'திருத்தப்பட்ட' இரண்டு விலை குறியீடுகள் (Price Indices) குறித்து . . . - அபிமான் தாஸ், ஸ்மிதா ராய் திரிவேதி

நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index(CPI)) மற்றும் மொத்த விலை குறியீடு (Wholesale Price Index(WPI)) ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பணவீக்கம் (inflation) ஆகிய இரண்டும் குறைவாக மதிப்பிடப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.


இந்தியாவின் பணவீக்க அளவீட்டிற்கு அடிப்படையாக விளங்கும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) மற்றும் மொத்த விலை குறியீடு (WPI) ஆகிய இரண்டு விலை குறியீடுகளும், அடிப்படை ஆண்டுகளில் (base year) திருத்தங்கள் காரணமாக, வழக்கமான வேறுபாடுகளையும் அதே சமயம் புதிய முறையியல் சிக்கல்களையும் சந்தித்துள்ளன. இந்த இரண்டு குறியீடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் புதியவை அல்லது ஆச்சரியமானவை அல்ல என்றாலும், இந்தத் திருத்தங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை. இந்த மாற்றங்கள் பணவீக்கத்தின்மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்? பொருளாதார வளர்ச்சியின் அளவீட்டிலும், அதன் விளைவாகக் கொள்கை முடிவுகளிலும் இது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?


முதலில் தரவுகளைப் பார்ப்போம். ஜூலை 2026-ல், ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீடு (CPI) (headline CPI) விகிதமானது ஜூன் 2026-ல் இருந்த 4.38 சதவீதத்திலிருந்து 4.45 சதவீதமாக (தற்காலிக மதிப்பீடு) சற்று உயர்ந்ததுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 4 சதவீத பணவீக்க இலக்கை விட நுகர்வோர் விலை குறியீடு (CPI) தொடர்ந்து இரண்டு மாதங்களாக அதிகமாகவே உள்ளது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் (தற்காலிக மதிப்பீடு) கிராமப்புறங்களில் 5.79 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.05 சதவீதமாகவும் இருந்தது. நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) ஏற்பட்டுள்ள இந்த உயர்வு பெரும்பாலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டது என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நுகர்வோர் விலை குறியீடு (CPI) புள்ளிவிவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக உணவுப் பொருட்களின் விலைகள் இருப்பதால், ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீடு (CPI) எண்கள் 'முக்கியப் பணவீக்க' (core inflation) அளவிலிருந்து கணிசமாக விலகிச் செல்கின்றன.


கடந்த ஆறு மாதங்களாக மொத்த விலை குறியீட்டு (WPI) பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 2026-ல் இது 9.78 சதவீதமாக (தற்காலிக மதிப்பீடு) இருந்தது. மொத்த விலை குறியீட்டு (WPI), 'முதன்மைப் பொருட்கள்' (primary articles) மீதான பணவீக்கம் ஜூன் 2026-ல் 7 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து 8.52 சதவீதமாக உயர்ந்தது. அதே காலகட்டத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 27.41 சதவீதத்திலிருந்து 20.05 சதவீதமாகக் குறைந்த அதே வேளையில், உற்பத்திப் பொருட்கள் மீதான பணவீக்கம் 7.48 சதவீதத்திலிருந்து 8.29 சதவீதமாகச் சற்று உயர்ந்ததுள்ளது. மொத்த விற்பனை உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 6.14 சதவீதத்திலிருந்து 6.65 சதவீதமாக அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக மொத்த விலை குறியீடு (WPI) பணவீக்கம் உயர்வதற்கு எரிபொருள் பணவீக்கமே முக்கியக் காரணமாக இருந்தது என்பது தெளிவாகிறது. ஆனால், இப்போது உணவு மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகிய இரண்டிலும் காணப்படும் பணவீக்க உயர்வு அதிகளவில் உள்ளது என்பது தெளிவாகிறது. இரண்டு குறியீடுகளும் மேல்நோக்கிய போக்கைக் காட்டினாலும், மொத்த விலைக் குறியீட்டில் (WPI) ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வு நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) இன்னும் பிரதிபலிக்கவில்லை.


மொத்த விலைக் குறியீடு (WPI) : மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள்


இப்போது, ​​மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைப் பார்ப்போம். முதலாவதாக, நுகர்வோர் விலை குறியீடு (CPI) மற்றும் மொத்த விலைக் குறியீடு (WPI) ஆகிய இரண்டிலும் அடிப்படை ஆண்டுகள் (base years) புதுப்பிக்கப்பட்டுள்ளன. மொத்த விலைக் குறியீட்டுக்கான (WPI) அடிப்படை ஆண்டு 2011-12-லிருந்து 2022-23-க்கும், நுகர்வோர் விலை குறியீட்டுக்கான (CPI) அடிப்படை ஆண்டு 2012-லிருந்து 2024-க்கும் மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக, இக்குறியீடுகளுக்கு இடையிலான வேறுபாட்டிற்கு, அவற்றின் உள்ளடக்கம் மற்றும் பொருட்கள் தொகுப்பு (baskets), எடை விகிதங்கள் (weighting diagram) மற்றும் மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் உள்ள விலை மாறுபாடுகள் போன்ற காரணிகளே காரணமாகக் கருதப்படுகின்றன. உதாரணமாக, மொத்த விலைக் குறியீட்டில் (WPI) உற்பத்திப் பொருட்களின் பங்கு அதிகம். ஆனால், அதில் சேவைத் துறை சார்ந்த கூறுகள் எதுவும் இல்லை. மறுபுறம், நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) சேவைத் துறையின் பங்கு கணிசமாகவும், உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவும் உள்ளது.


தேசிய வருமானத்தைக் கணக்கிடுவதற்கு இவ்விரு விலைக் குறியீடுகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், ஏறக்குறைய ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகியவற்றிற்கு ஏன் வெவ்வேறு அடிப்படை ஆண்டுகள் (முறையே 2022-23 மற்றும் 2024) நிர்ணயிக்கப்பட்டன என்பது தெளிவாக இல்லை. அடிப்படை ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ​​அந்த ஆண்டுகள் 'சாதாரணமான' (normal) ஆண்டுகளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். வரலாற்றுரீதியாக, இவை இரண்டு வெவ்வேறு அமைச்சகங்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரு குறியீடுகளின் அடிப்படை ஆண்டு திருத்தத்தையும் ஒருங்கிணைக்கச் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.


இரண்டாவதாக, புதிய மொத்த விலைக் குறியீடு (WPI) தொடரில் உள்ள எடை விகிதங்கள், உள்நாட்டு உற்பத்தியின் 'மொத்த உற்பத்தி மதிப்பு' (Gross Value of Output(GVO)) அடிப்படையில் அமைந்துள்ளன. இது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தைக் கணக்கில் கொண்ட பழைய 'நிகர வர்த்தக மதிப்பு' (Net Traded Value) முறைக்கு (முந்தைய 2011-12 தொடர்) மாற்றாக வந்துள்ளது. அதாவது, மொத்த உற்பத்தி மதிப்பை (GVO) அடிப்படையாகக் கொண்ட தற்போதைய மொத்த விலைக் குறியீட்டு (WPI) முறையானது, பொருட்களின் வர்த்தக மதிப்பைவிட உள்நாட்டு உற்பத்தியில் அவற்றின் பங்கிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, மொத்த விலைக் குறியீட்டில் (WPI) ஏற்பட்டுள்ள தற்போதைய உயர்வு, உலகளாவிய விலை மாற்றங்களுக்கு உட்பட்ட பொருட்களைவிட உள்நாட்டுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதைக் குறிப்பதாக இருக்கலாம்.


மூன்றாவதாக, தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பும் தன்மையும் பெருமளவில் மாறியுள்ளன. அப்படியிருக்க, கடந்த முப்பதாண்டுகளாக மொத்த விலைக் குறியீட்டு (WPI) எடை விகிதங்கள் எவ்வாறு இவ்வளவு நிலையாகத் தொடர்கின்றன? என்பதை வரைபடம் 1 காட்டுகிறது. உற்பத்திப் பொருட்கள் மற்றும் முதன்மைப் பொருட்கள் (primary articles) ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆதிக்கம் போன்ற பரந்த பேரியல் பொருளாதார விகிதாச்சாரங்கள் நடுத்தர காலத்தில் படிப்படியாக மாறக்கூடும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இருப்பினும், 1990-களிலிருந்து காணப்பட்ட இந்த நிலையான எடைகளில் காணப்படும் நிலைத்தன்மை ஆச்சரியமளிப்பதாகவும், இயல்பான எதிர்பார்ப்புகளுக்கு முரணானதாகவும் உள்ளன.


நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) திருத்தம்


நுகர்வோர் விலைக் குறியீட்டுத் (CPI) தொடரின் இந்த மாற்றமானது தனிநபர்கள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்கள் என இரு தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். 2016-ல் ரிசர்வ் வங்கி (RBI) நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய பணவீக்கக் கட்டுப்பாட்டு முறையை (flexible inflation targeting approach) ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் இதுவாகும். இம்முறையில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் ஒரு முக்கிய அளவுகோலாக (nominal anchor) பயன்படுத்தப்பட்டது. இப்புதிய தொடரானது, முன்பு இருந்த ஆறு முக்கியக் குழுக்களைக் கொண்ட கட்டமைப்பிற்குப் பதிலாக, 'நோக்கத்தின் அடிப்படையில் தனிநபர் நுகர்வு வகைப்பாடு-2018' (Classification of Individual Consumption According to Purpose(COICOP)) முறையைப் பின்பற்றுகிறது. திருத்தப்பட்ட குறியீட்டு எடைகள் (weights), HCES 2023-24 கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட புதுப்பிக்கப்பட்ட குடும்பச் செலவின முறைகளை பிரதிபலிக்கின்றன. அகில இந்திய அளவில், குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 299-லிருந்து 358-ஆக அதிகரித்துள்ளது. இதில், பொருட்கள் (goods) 259-லிருந்து 308-ஆகவும், சேவைகள் (services) 40-லிருந்து 50-ஆகவும் அதிகரித்துள்ளன. புதிதாகச் சேர்க்கப்பட்ட குறிப்பிடத்தக்க பொருட்களில் கிராமப்புற வீட்டுவசதி, இணையவழி ஊடகம் அல்லது ஸ்ட்ரீமிங் சேவைகள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள், பார்லி மற்றும் அதன் தயாரிப்புகள், பென் டிரைவ்கள் மற்றும் வெளிப்புற வன்வட்டுகள் (external hard disks), குழந்தைப் பராமரிப்புச் சேவைகள் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள் ஆகியவை அடங்கும்.


முக்கியமாக, விலை சேகரிப்பு நடைமுறையில், 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 12 பெரிய நகரங்களில், மின்னணு வர்த்தக (e-commerce) விலைகளும் ஒரு கூடுதல் சந்தைப் பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தொடரில், உணவு மற்றும் பானங்களின் பங்கு 45.86 சதவீதத்திலிருந்து 36.75 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொகுப்பின் (basket) மிகப்பெரிய அங்கமாக இது தொடர்ந்து நீடிக்கிறது என்பதை வரைபடம் 2 வெளிப்படுத்துகிறது.



இருப்பினும், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) திருத்த ஆவணம் மற்றும் HCES 2023-24 ஆகியவற்றை உன்னிப்பாக ஆராயும்போது, ​​புதிய CPI-ல் - குறிப்பாக உணவுப் பொருட்களுக்கான - ஒதுக்கப்படும் முக்கியத்துவமானது (weightage), இணையவழி கொள்முதல்களால் ஏற்படும் நுகர்வு மாற்றங்களைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், புதிய CPI-ல் உணவுப் பொருட்களுக்கான முக்கியத்துவமும், உணவுப் பொருட்களின் பணவீக்கமும் குறைவாக மதிப்பிடப்படலாம். CPI தொடர்ந்து உணவுப் பொருட்களின் பணவீக்கத்தைக் குறைவாக மதிப்பிட்டால், பொதுவான பொருட்களின் விலையில் கூட இவ்விரு குறியீடுகளுக்கும் இடையே பணவீக்க வேறுபாடு ஏற்படுவது எதிர்பாராத ஒன்றல்ல.


மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) மீதான தாக்கம்


இந்தியாவின் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டு முறையில் (அடிப்படை ஆண்டு 2022–23), புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), ஒவ்வொரு பொருளுக்கான 'தனியார் இறுதி நுகர்வுச் செலவினத்தை' (Private Final Consumption Expenditure (PFCE)) கண்காணிக்கவும், காலாண்டுப் பகிர்வு முறைகளை மாற்றியமைக்கவும் குடும்ப நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பு (HCES) 2022-23 தரவை நேரடி தேசிய அளவுகோலாகப் பயன்படுத்துகிறது. இருப்பினும், முன்பே குறிப்பிட்டது போல, HCES 2022-23 தரவு இணையவழி கொள்முதல்கள் மூலமான நுகர்வை உள்ளடக்கவில்லை. இணையவழி கொள்முதல்கள் நுகர்வு முறையை அதிகளவில் தீர்மானித்து வரும் நிலையில், நாம் நுகர்வு அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அந்த அளவிற்கு குறைவாக மதிப்பிடுகிறோமா?. மேலும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) (nominal GDP), யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியின் தாக்கம் இன்னும் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். முறைசாரா அல்லது அமைப்புசாரா துறையை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்ற கவலை முன்பு இருந்த நிலையில், தற்போது முறைசார் துறையிலிருந்து (formal sector) வரும் பொருளாதாரப் பரிவர்த்தனைகளும் விடுபட்டுப் போகலாம் என்ற கவலை அதிகரித்து வருகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டின் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது (தாஸ் மற்றும் ராய் திரிவேதி, ஏப்ரல் 17, 2026, பிசினஸ்லைன்). எனவே, அடிப்படை ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரும் கூட, நாம் உற்பத்தி மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டையும் குறைவாகவே மதிப்பிடுகிறோமா?


தாஸ், IIM அகமதாபாத்தில் ICICI வங்கியின் 'சேர் பேராசிரியர்' (Chair Professor) ஆவார். திரிவேதி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனத்தில் (NIBM) இணைப் பேராசிரியராக உள்ளார்.


Original Link: A tale of 2 ‘revised’ price indices 

Share: