மாறிவரும் மேற்காசியச் சூழலுக்கு, நேரடி ராணுவப் பாதுகாப்பு கூட்டாண்மைகளை முன்னெடுப்பதில் இந்தியா இன்னும் உறுதியான, தீவிரமான பங்களிப்பை வழங்கிட வேண்டும்.
பல ஆண்டுகளாக, மேற்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு, தெளிவற்ற ஒரு கொள்கையின் அடிப்படையிலும், சில தூர விலகல் அணுகுமுறையிலுமே இயங்கி வந்தது. இந்திய அரசு, 'மத்திய கிழக்கு' நாடுகளை முக்கியமாகத் தன் பொருளாதாரத் தேவைகளுக்கான பகுதியாகவே பார்த்தது: அதாவது, கச்சா எண்ணெய்க்கான முக்கிய ஆதாரம், இந்தியத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் பாதுகாப்பான இடம் மற்றும் நாட்டிற்கு வரும் பணத்திற்கான முக்கிய வழித்தடம் என்று கருதியது. அங்கு பிராந்திய அளவில் பிரச்சினைகள் எழுந்தபோதெல்லாம், இந்திய வெளியுறவுக் கொள்கையானது எந்தவொரு நாட்டின் ராணுவப் பாதுகாப்புப் பொறுப்பிலும் தன்னை பிணைத்துக் கொள்ளாமல் விலகியிருந்தது. ரியாத், டெஹ்ரான், டெல் அவிவ் மற்றும் அபுதாபி போன்ற அதிகார மையங்களுக்கு இடையே ஒரு நடுநிலைப் போக்கையே பின்பற்றியது. சமீபகாலமாக, இந்த அணுகுமுறையை நாம் 'பல்முனை சீரமைப்பு' (Multi-alignment) என்று குறிப்பிட்டோம்.
இதுவரை பலனளித்தது
ஆனால், இந்தியா அனைவருக்கும் நட்பாக இருக்க விரும்பினாலும், யாருடைய கோபத்திற்கும் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக யாருடனும் அளவுக்கு அதிகமான நெருக்கத்தைக் காட்டவில்லை. இதற்கான காரணம் தெளிவாக இருந்தது. மேற்காசியாவில் உருவாகிவரும் பொருளாதார மறுமலர்ச்சியால் அனைத்து நாடுகளிடமிருந்தும் இந்தியாவிற்குப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக இருந்தது. அந்தப் பிராந்தியம் ஒரு பெரிய பொருளாதார அணுகுமுறையோடு பார்க்கப்பட்டது. அதன் சாதகமான புவியியல் அமைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற வளங்கள், பெரும் மூலதனச் சேமிப்பு, மற்றும் இந்தியாவில் அதிகமாக இருக்கும் மனிதவளத்தையும் திறன்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டன. வீழ்ச்சியடையும் மேற்கத்திய நாடுகளுக்கும், எழுச்சியடையும் ஆசிய நாடுகளுக்கும் இடையே மேற்கு ஆசியாவே கடல் மற்றும் தரைவழியாக இணைக்கும் முதன்மையான இணைப்புப் பாலமாகக் கருதப்பட்டது.
மேற்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவே முழுப்பொறுப்பேற்று, கடல்சார் வணிகப் பாதைகளைத் திறந்து வைத்துப் பிராந்திய அமைதியைப் பராமரித்த காலத்தில், இந்தியாவின் இந்தத் தற்காப்பு மற்றும் சுயநலன் சார்ந்த அணுகுமுறை கைக்கொடுத்தது. ஆனால், தற்போது மேற்கு ஆசியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா தனது உலகளாவியப் பொறுப்புகளைக் குறைத்துக்கொண்டு தேவைக்கேற்ப மட்டுமே தலையிடும் கொள்கைக்கு மாறியதால், அங்கே ஒரு பாதுகாப்பு இடைவெளி உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள நாடுகள் தங்களுக்கு நிலையான பாதுகாப்புத் தேவைகளுக்காக பிற நாடுகளை நாடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா வழக்கம் போல மௌனமாக இருந்து, பழமையான அணுகுமுறையையே பின்பற்றித் தன் முக்கியத்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதா?
மேற்கு ஆசிய நாடுகள் இனி நடுநிலை வகிப்பதையோ அல்லது பல நாடுகளுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்துக்கொள்வதையோ ஒரு சிறந்த கொள்கையாகப் பார்க்கவில்லை. வெறுமனே ராஜதந்திரப் பேச்சுக்களையும், வழக்கமான பொருளாதார உறவுகளையும் தாண்டி, தங்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பு அளிக்கக்கூடிய நாடுகளின் நட்புறவைத் தீவிரமாகத் தேடி வருகின்றன. சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து கையெழுத்தான 'மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்' (Mecca Joint Defence Agreement) இந்த மாற்றத்தை வெளிப்படையாக உணர்த்துகிறது. இது ஒரு தற்காப்பு ஒப்பந்தமாகச் சொல்லப்பட்டாலும், பிராந்தியப் பாதுகாப்பில் ஒரு பெரிய மாற்றத்தின் அடையாளமாகும். வளைகுடா நாடுகளின் வளம், துருக்கியின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் பாகிஸ்தானின் இராணுவப் பலம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மேற்குச் கடல் எல்லைக்கு மிக அருகில் ஒரு வலுவான புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.
மாற்றத்தின் தெளிவான அறிகுறி
இந்தியாவைப் பொறுத்தவரை, மெக்கா ஒப்பந்தம் என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தூதரக நடவடிக்கை அல்ல; மாறாக, மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்பதற்கான ஒரு தெளிவான கட்டமைப்பு சார்ந்த அறிகுறியாகும். இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கு நேரடியாக எதிரான உத்திசார் விருப்பங்களைக் கொண்ட அமைப்புகளாலேயே பெரும்பாலும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்த இந்தியாவின் உத்திப்பூர்வமான மௌனம் புரிந்து கொள்ளக்கூடியதுதான் என்றாலும், "அடுத்து என்ன?" என்ற கேள்வி எழவே செய்கிறது. வெளிநாட்டு சக்திகளின் வளர்ந்து வரும் செல்வாக்கும், பகையான பிராந்தியக் கூட்டமைப்புகளும் இந்தியாவின் வர்த்தகப் பாதைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வளைகுடாவில் வாழும் கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. இந்தியா தனது சொந்தக் கூட்டாண்மைகளை உருவாக்கப் போகிறதா, அல்லது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குத் தொடர்பற்ற ஒன்றாக மாறப்போகிறதா?
இந்தியா தொடர்ந்து பழமையான தூதரக நடைமுறைகளையும், வெறும் வணிகப் பரிவர்த்தனைகளையும் மட்டுமே நம்பியிருந்தால், தனது தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு பிராந்தியத்தில் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. இதிலுள்ள சவால்கள் மிகவும் கடினமானவை. ஈரானை உள்ளடக்கிய போர்கள், நவீன மற்றும் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உள்கட்டமைப்புகள், நிழல் யுத்தம் (grey-zone) மற்றும் சமச்சீரற்ற போர்களின்போது (asymmetric warfare) எவ்வளவு பலவீனமானவை என்பதை நிரூபித்தன. அதிநவீன துறைமுக வசதிகள், எரிசக்தி வலைப்பின்னல்கள் மற்றும் போக்குவரத்துப் பாதைகள் ஆகியவை குறைந்த செலவிலான ட்ரோன்களால் பாதிக்கப்படக்கூடியவை என்பது நிரூபணமாகியுள்ளது. பெரும் மூலதனத்துடன் கூடிய உள்கட்டமைப்புகள் மட்டுமே உள்ளூர் பாதுகாப்பு இடைவெளிகளை முழுமையாக ஈடுசெய்துவிடமுடியாது. பிராந்தியத்தில் நிலவும் நிலையற்றத் தன்மையின் விளைவுகளால், தீவிரமாகப் பாதுகாக்கப்பட்ட பொருளாதார மண்டலங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவே செய்யும் என்பது தெளிவாகிறது. நவீன வளைகுடா மாதிரியானது வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிதும் நம்பியிருப்பதால், அந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மை உலகளாவிய பார்வையோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆபத்துகள் ஒரு குறிப்பிட்ட உளவியல் எல்லையைக் கடக்கும்போது, தடையின்றி உள்ளே வந்த திறமைகளும் மூலதனமும் அவ்வளவு வேகமாக வெளியேறிவிடும். மேலும், குறுகிய கடல்வழிச் பாதைகளோ அல்லது நிலவழி வர்த்தகப் பாதைகளோ நேரடியாகப் பாதிக்கப்படும்போது, உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதன்மூலம், இந்த பிரம்மாண்டமான வர்த்தகப் பாதைகளின் பலம், அவற்றின் மிகவும் பலவீனமான புவியியல் இணைப்பைப் பொறுத்தே அமைகிறது என்பது தெளிவாகிறது.
இந்த நெருக்கடியான பின்னணியில், வெறும் வர்த்தக உறவுகளும் புலம்பெயர்ந்தோர் மூலமான ராஜதந்திரமும் மட்டுமே இந்தியாவின் செல்வாக்கைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வேகமாகச் சரிந்து வருகிறது. செங்கடலில் கடல்சார் அச்சுறுத்தல்கள், முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான ட்ரோன் தாக்குதல்கள், ஈரான், ஏமன், சூடான், ஹார்முஸ் நீரிணை மற்றும் தற்போது பாப் எல்-மந்தேப் ஆகியவற்றில் நடக்கும் மோதல்களுடன் போராடி வரும் ஒரு பிராந்தியத்திற்கு, உறுதியான பாதுகாப்பு வளங்களை வழங்கக்கூடிய நட்பு நாடுகள் தேவைப்படுகிறார்கள். கடற்படை ரோந்துகள், உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் நம்பகமான பயங்கரவாத எதிர்ப்புத் திறன்கள் போன்ற வலுவான இராணுவப் பாதுகாப்புத் தேர்வுகளுக்காக மேற்கு ஆசிய நாடுகள் காத்துக்கிடக்கின்றன. இத்தகையப் பொறுப்பை ஏற்பதில் இந்தியா தயக்கம் காட்டினால், மெக்காவில் துருக்கி ஏற்கனவே நிரூபித்துக் காட்டியதுபோல, அந்த வெற்றிடத்தை மற்ற நாடுகள் நிரப்பிவிடும் வாய்ப்புள்ளது.
இந்தியா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
தனது தேசியப் பாதுகாப்பையும் எல்லையையும் பலப்படுத்த, இந்தியா உடனடியாகத் தனது பாதுகாப்புப் அணுகுமுறையை மாற்றியாக வேண்டும். பிராந்திய அமைதியால் பயன்பெறும் ஒரு நாடாக மட்டும் இல்லாமல், அந்த அமைதியைத் தானே முன்னின்று உறுதிசெய்யும் அமைப்பாக இந்தியா மாற வேண்டும். இதற்கு வெறும் உயர்மட்ட தூதரகச் சந்திப்புகள் மற்றும் பொருளாதார மாநாடுகளோடு நின்றுவிடாமல், மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் தனது ராணுவ மற்றும் கடற்படைப் பலத்தை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஹார்முஸ் நீரிணை, ஓமன் மற்றும் ஏடன் வளைகுடாக்கள், சோமாலியக் கடற்பகுதி, பாப்-எல்-மண்டேப் ஆகிய முக்கியமான கடல்வழிப் பாதைகளில் தனது கடற்படை மற்றும் பாதுகாப்புப் பங்களிப்பு நாடுகளை இந்தியா விரிவுபடுத்த வேண்டும். நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளுடன் இணைந்து கடல் ரோந்துச் செல்வது, தளவாடங்களைப் பகிர்ந்து கொள்வது, கண்காணிப்பு வலைப்பின்னல்களை அமைப்பது ஆகியவற்றின் மூலம், தனது அண்டை நாடுகளின் ஒரு முதன்மைப் பாதுகாப்பு சக்தியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
மேலும், தனது வளர்ந்து வரும் ராணுவத் தளவாட உற்பத்தித் துறையைப் பயன்படுத்தி, மேற்கு ஆசிய நாடுகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி ஒரு நம்பகமான கூட்டாளியாக இந்தியா மாற வேண்டும். வெறும் ஆயுதங்களைக் வாங்குவது அல்லது விற்பது பற்றி மட்டும் பேசாமல், கூட்டு ராணுவப் பயிற்சிகள், ஆழமான உளவுத் தகவல் பகிர்வு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுடன் வலுவான இருதரப்பு மற்றும் சிறு கூட்டமைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவது, தேவையற்ற கூட்டணிகளுக்குள் சிக்காமல், எதிரிநாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியாவுக்கு உதவும். பிற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இந்தியா தலையிடுவது இதன் நோக்கமல்ல; மாறாக, இந்தியாவின் நலன்களைப் பாதுகாத்து, பிராந்திய நட்பு நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதே முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.
மேற்கு ஆசியாவில் இந்தியாவின் செயலற்ற தலையீடு இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவின் பங்களிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒன்றுசேர்ந்து உருவாகவே செய்யும் என்பதை 'மெக்கா ஒப்பந்தம்' தெளிவாகக் காட்டுகிறது. இந்தியா தனது பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தனது எரிசக்தி தேவைகளை உறுதிப்படுத்தவும், உலகளாவிய வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தவும் விரும்பினால், அது உடனடியாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் வழக்கமான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தாண்டி, பலம் வாய்ந்த பாதுகாப்பு கூட்டாண்மைகளை உருவாக்குவது என்பது இனி இந்தியாவின் விருப்பம் சார்ந்த விவாதம் அல்ல; அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கான முக்கியத் தேவையாகிறது.
சசி தரூர், திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தொடர்ந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றி, அதன் துணைப் பொதுச்செயலாளர் என்ற உயர்பொறுப்பு வரை உயர்ந்தவர். மேலும், இந்திய அரசின் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், 'Pax Indica: India and the World of the 21st century' உட்பட 29 புத்தகங்களை எழுதியப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். தற்போது, இவர் நாடாளுமன்ற வெளியுறவுத் துறைக்கான நிலையான குழுவின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
Original Link: The Gulf is calling and New Delhi must listen