தற்போதைய செய்தி
உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோ, காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்காக, 2026-ஆம் ஆண்டின் ‘தூய காற்று கணக்கெடுப்பு’ திட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது. அந்த நகரத்தின் நடவடிக்கைகளில், அதன் கழிவு சேகரிப்புக் குழுவில் மின்சார வாகனங்களைச் சேர்ப்பது, சாலை மாசுகளைக் கட்டுப்படுத்த இயந்திரமயமாக்கப்பட்ட துடைப்பான்களைப் பயன்படுத்துவது மற்றும் தேங்கியுள்ள கழிவுகளை நிர்வகிப்பது ஆகியவை அடங்கும்.
முக்கிய அம்சங்கள்:
1. இந்தியாவின் தூய்மையான நகரமாக விளங்கும் இந்தூர், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் (million-plus cities) பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது. ஜபல்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில், சென்னை, ஜாம்ஷெட்பூர், கோட்டா, கொல்கத்தா மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இந்தப் பிரிவில் கடைசி 7 இடங்களில் உள்ளன. டெல்லி மற்றும் மும்பை முறையே 30 மற்றும் 37-வது இடங்களில் உள்ளன.
2. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் லக்னோ முதலிடம் பிடித்தது இருந்தபோதிலும், தேசிய தூய்மையான காற்றுத் திட்ட (National Clean Air Programme (NCAP)) இணையதளத்தின்படி, தேசிய தரநிலைகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்ட 60 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்ற PM 10 வருடாந்திர சுற்றுப்புறக் காற்றின் தர அளவை இன்னும் எட்டவில்லை.
PM 10 (Particulate Matter 10): 10 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட காற்று மாசுபாட்டுக் துகள்கள் ஆகும். |
3. இருப்பினும், இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து, ஆண்டுதோறும் PM10 செறிவுகள் 2017-18-ஆம் ஆண்டில் 250 ug/m3 என்பதிலிருந்து 137-ug/m3 ஆகக் குறைந்துள்ளன.
4. கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலை, 100 சதவிகிதக் கழிவு சேகரிப்பு மற்றும் அறிவியல் பூர்வமான அகற்றல், இயந்திரமயமாக்கப்பட்ட தெரு சுத்தம் செய்தல் மற்றும் மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் ஆகியவை ஜபல்பூரின் சாதனைகளில் அடங்கும்.
5. கழிவு மேலாண்மை, சாலைகளில் உள்ள தூசியைக் கட்டுப்படுத்துதல், கட்டுமானம் மற்றும் வாகன, தொழிற்சாலை மாசுபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், இறுதித் தரவரிசைக்காக நகரங்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய அளவுகோல்களாகும். நுண்துகள்களின் செறிவைக் குறைப்பதில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு 2.5 சதவிகித முக்கியத்துவம் மட்டுமே வழங்கப்படுகிறது.
6. தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின்கீழ் (National Clean Air Programme (NCAP)) உள்ள 130 நகரங்களில், 2019 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 14 நகரங்கள் மட்டுமே தேசிய சுற்றுப்புறக் காற்றின் தரநிலைகளைப் பூர்த்தி செய்தன. தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின்கீழ் உள்ள 131 நகரங்களில், 47 நகரங்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவிலும், 44 நகரங்கள் 3-10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவிலும், 40 நகரங்கள் 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவிலும் வருகின்றன.
இந்தியாவில் காற்றின் தர மேலாண்மை மற்றும் கண்காணிப்பு, பல்வேறு திட்டங்கள், தரநிலைகள் மற்றும் முன்கணிப்புக் கருவிகளின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
தூய காற்று கணக்கெடுப்பு (Swachh Vayu Survekshan) என்றால் என்ன?
8. இது தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின்கீழ் (National Clean Air Programme (NCAP)) உள்ள 130 நகரங்களுக்கான வருடாந்திர மதிப்பீடு ஆகும். 2022-23-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC)) ஒரு முன்முயற்சியாகும்.
9. இந்த மதிப்பீட்டில் முக்கியமான காற்று மாசுபாட்டு மூலங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஒவ்வொரு நகரத்திற்கும் உருவாக்கப்பட்ட நகரம் சார்ந்த தூய காற்றுக்கான செயல் திட்டங்கள் (City-specific Clean Air Action Plans) செயல்படுத்தப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. நகரங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி, புதிய முயற்சிகள் மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான விரைவான நடவடிக்கைகளை இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.
10. நகரங்கள் மற்றும் பேரூராட்சிகள் மக்கள்தொகையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன: பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள், 3 முதல் 10 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட நகரங்கள் மற்றும் 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் என்பதன் அடிப்படையில் இந்த நகரங்கள் பிரிக்கப்படுகின்றன. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நகரங்கள் அல்லது பேரூராட்சிகளுக்குப் பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
11. மாநில அளவிலான கண்காணிப்புக் குழு ஒன்று நகரங்களையும் நகர்ப்புறங்களையும் மதிப்பீடு செய்கிறது. பின்னர் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board) அவற்றை மதிப்பீடு செய்கிறது. அதன் பிறகு, தன்னாட்சிக் குழுக்கள் நேரடியாக களத்திற்குச் சென்று இந்த மதிப்பீடுகளை சரிபார்க்கின்றன.
தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP) என்றால் என்ன?
1. நகர, பிராந்திய மற்றும் தேசிய அளவில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக, தேசிய தூய்மையான காற்றுத் திட்டமானது கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் 130-க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன.
2. நாட்டின் அனைத்து இடங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வருடாந்திர சராசரி சுற்றுப்புற காற்றுத் தரநிலைகளை அடைவதை தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் நீண்டகால நோக்கமாகக் கொண்டுள்ளது.
3. இந்த நகரங்களுக்கான முக்கிய இலக்கு, 2019-20-ஆம் ஆண்டு அளவுகளுடன் ஒப்பிடும்போது 2025-26-ஆண்டிற்குள் நுண்துகள் (PM) செறிவை 40% வரை குறைத்து, தேசிய சுற்றுப்புற காற்றுத் தரநிலைகள் (National Ambient Air Quality Standards (NAAQS)) நிர்ணயித்த 60 µg/m³ அளவாக குறைப்பதாகும்.
4. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் வழங்கப்படும் நிதி ஆதாரங்கள், 15-வது நிதி ஆணையத்தின் மானியங்கள், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும் கூடுதல் நிதிகள் என்று பலவகை நிதி ஆதாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தேசிய காற்றுத் தரக் கண்காணிப்புத் திட்டம் (National Air Quality Monitoring Programme (NAMP)) என்பது என்ன?
1. இந்தியாவில் காற்றின் தரம், 1984-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய காற்றுத் தரக் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் கண்காணிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)), மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (State Pollution Control Board (SPCB)), மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் மற்றும் பிற முகமைகளுடன் இணைந்து செயல்படுத்துகிறது. இது தேசிய காற்றுத் தரக் கண்காணிப்புத் திட்டம் எனப் பெயர் மாற்றப்படுவதற்கு முன்பு, தேசிய சுற்றுப்புறக் காற்றின் தரக் கண்காணிப்பு (National Ambient Air Quality Monitoring (NAAQM)) வலையமைப்பாகத் தொடங்கியது.
2. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய (CPCB) வலைத்தளத்தின்படி, தேசிய காற்றுத் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:
i) சுற்றுப்புற காற்றின் தரத்தின் தற்போதைய நிலை மற்றும் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை அறிதல்.
(ii) நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்புற காற்றுத் தரநிலைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்டறிதல்,
(iii) காற்றின் தரநிலைகளை எட்டாத நகரங்கள் (Non-attainment Cities) எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட காற்றுத் தரநிலைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யாத நகரங்களை அடையாளம் காணுதல்,
(iv) காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கும், ஏற்கனவே ஏற்பட்ட மாசுபாட்டைச் சரிசெய்வதற்கும் தேவையான அறிவு மற்றும் புரிதலைப் பெறுதல்,
(v) சுற்றுச்சூழலில் உருவாகும் மாசுபடுத்திகள், நீர்த்துப்போதல் (dilution), பரவுதல் (dispersion), காற்றின் மூலம் நகர்தல், உலர் படிவு (dry deposition), மழைப்பொழிவு (precipitation) மற்றும் வேதியியல் மாற்றம் (chemical transformation) போன்ற இயற்கையான செயல்முறைகள் மூலம் எவ்வாறு இயற்கையாக சுத்திகரிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதும் இதன் நோக்கமாகும்.
3. தேசிய காற்றுத் தரக் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் (NAMP), கந்தக-டை-ஆக்சைடு (Sulphur Dioxide (SO₂)), நைட்ரஜனின் ஆக்சைடுகளான NO2, சுவாசிக்கக்கூடிய காற்றில் மிதக்கும் துகள்கள் (Respirable Suspended Particulate Matter (RSPM / PM10)) மற்றும் நுண்ணிய துகள்கள் (PM2.5) ஆகிய நான்கு காற்று மாசுபடுத்திகள் அனைத்து இடங்களிலும் வழக்கமான கண்காணிப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
4. காற்றின் தரத்தைக் கண்காணிப்பதுடன், வானிலை தொடர்பான அளவுருக்களும் கண்காணிக்கப்படுகின்றன. காற்றின் வேகம், காற்றின் திசை, ஈரப்பதம் (relative humidity (RH)) மற்றும் வெப்பநிலை ஆகியவை அடங்கும்.
5. இது நேரடிக் கண்காணிப்பு மற்றும் 'தொடர்ச்சியான சுற்றுப்புறக் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்' (CAAQMs) மூலமாக உடனுக்குடன் செய்யப்படும் நேரலைக் கண்காணிப்பு ஆகிய இரண்டு வழிகளிலும் செய்யப்படுகிறது.
6. காற்றின் தரக் கண்காணிப்பு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2009-ஆம் ஆண்டு அறிவித்த சுற்றுப்புறக் காற்றின் தரத் தரநிலைகள் (Ambient Air Quality Standards) அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் PM10 மற்றும் PM2.5 உள்ளிட்ட 12 மாசுபடுத்திகளுக்கான அனுமதிக்கப்பட்ட வரம்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய சுற்றுப்புறக் காற்றின் தர நிர்ணயங்கள் (National Ambient Air Quality Standards (NAAQS)) என்றால் என்ன?
7. 1981-ஆம் ஆண்டின் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்ட ((Prevention & Control of Pollution) Act) விதிகளின்கீழ், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2009-ஆம் ஆண்டில் தேசிய சுற்றுப்புறக் காற்றின் தர நிர்ணய அளவின் 4-வது பதிப்பை அறிவித்தது.
8. இவை, தேசிய சுற்றுப்புறக் காற்றின் தர நிர்ணயங்கள் (National Ambient Air Quality Standards (NAAQS)) என்பது வெளிப்புறக் காற்றில் இருக்கக்கூடிய மாசுபடுத்திகளின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட செறிவுக்கான சட்டப்பூர்வமான தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை வரம்புகள் ஆகும். இதில் மொத்தம் 12 மாசுபடுத்திகள் அடங்குகின்றன.
9. தேசிய தரநிலையானது, நாடு முழுவதும் நிலப் பயன்பாட்டு முறைகளைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் ஒரே மாதிரியான காற்றின் தர அளவுகோல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) என்றால் என்ன?
1. காற்றின் தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை அளவிடும் ஒரு எண்ணாகும். காற்றின் தரக் குறியீடு மதிப்பு அதிகமாக இருந்தால், அந்தளவுக்குக் காற்றின் தரம் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
2. பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறக் காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்காக, ‘ஒரே எண் – ஒரே நிறம் – ஒரே விளக்கம்’ (One Number – One Color – One Description) என்ற நோக்கத்துடன், தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிறக் குறியீட்டு காற்றின் தரக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
3. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) ஒரு அங்கமான மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) என்பது பல்வேறு மாசுபடுத்திகளின் சிக்கலான காற்றுத் தரவுத் தகவல்களை ஒற்றை குறியீட்டு மதிப்பு, பெயரிடல் மற்றும் வண்ணமாக மாற்றுகிறது.
4. காற்றின் தரக் குறியீட்டு (AQI) முன்னறிவிப்பானது, நுண்துகள்கள் (PM10), நுண்துகள்கள் (PM2.5), நைட்ரஜன்-டை-ஆக்சைடு (NO2), சல்பர்-டை-ஆக்சைடு (SO2), கார்பன் மோனாக்சைடு (CO), ஓசோன் (O3), அம்மோனியா (NH3) மற்றும் ஈயம் (Pb) ஆகிய 8 மாசுபடுத்திகளை அடிப்படையாகக் கொண்டது.
5. காற்றின் தரக் குறியீட்டில் (AQI) 'நன்று' (0-50), 'திருப்திகரமானது' (50-100), 'மிதமான மாசுபாடு' (100-200), 'மோசமானது' (200-300), 'மிகவும் மோசமானது' (300-400), மற்றும் 'கடுமையானது' (400-500) எனப் பல்வேறு பிரிவுகள் உள்ளன. தற்போது "மிகக் கடுமையானது அல்லது அவசரநிலை" (Severe+ or Emergency) என்ற புதிய பிரிவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
6. இணையம் சார்ந்த அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்பானது, காற்றின் தரக் குறியீட்டை (AQI) உடனுக்குடன் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மனிதத் தலையீடு இல்லாமல் தொடர்ச்சியான கண்காணிப்பு நிலையங்களிலிருந்து தரவுகளைச் சேகரித்து, இயங்கும் சராசரி மதிப்புகளின் அடிப்படையில் காற்றின் தரக் குறியீட்டைக் காண்பிக்கும் ஒரு தானியங்கு அமைப்பாகும்.
7. காற்றுத் தர முன்னறிவிப்பு மிகவும் முக்கியமானது. இதன் மூலம் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கைகளைத் தொடங்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (GRAP)), டெல்லி பகுதிகளில் (National Capital Region (NCR)) வெவ்வேறு காற்றுத் தரக் குறியீட்டுப் பிரிவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்கிறது.
காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR)) என்பது என்ன?
1. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இணையதளத்தின்படி, இந்தியாவில் முதல் முறையாக, பெருநகரங்களில் காற்றின் தரம் குறித்த இடத்திற்கேற்ற தகவல்களை ஏறக்குறைய உடனுக்குடன் வழங்குவதற்கும், 1-3 நாட்களுக்கு முன்னதாக அதன் முன்னறிவிப்பை வழங்குவதற்கும், புவி அறிவியல் அமைச்சகத்தால் (Ministry of Earth Sciences (MoES)) "விளையாட்டு, சுற்றுலாவுக்கான நகரங்களுக்கான பெருநகர ஆலோசனைகள் (பெருநகர காற்றின் தரம் மற்றும் வானிலை சேவைகள்)" என்ற திட்டத்தின்கீழ் காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2. இது வானிலை அளவுருக்கள் மீதான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR)) அமைப்பானது, புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)), இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) மற்றும் தேசிய மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மையம் (National Centre for Medium Range Weather Forecasting (NCMRWF)) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.
3. இது PM1, PM2.5, PM10, ஓசோன், CO, NOx (NO, NO2), SO2, BC, மீத்தேன் (CH4), மீத்தேன் அல்லாத ஹைட்ரோகார்பன்கள் (Non-methane hydrocarbons (NMHC)), எளிதில் ஆவியாகும் கரிம சேர்மங்கள், பென்சீன் மற்றும் பாதரசம் ஆகியவற்றை கண்காணிக்கிறது. மேலும், புற ஊதா (UV) கதிர்வீச்சு, மழைப்பொழிவு, வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் சூரிய கதிர்வீச்சு போன்ற வானிலை காரணிகளையும் கண்காணிக்கிறது.
இந்தியாவின் காற்று மாசுபாட்டு நெருக்கடி (India’s pollution crisis)
1. இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்ந்து நீடிக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் உலகிலேயே மிக மோசமான காற்றுத் தரக் குறியீடு அளவுகள் பதிவாகின்றன. வளிமண்டலத்தில் 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள் (PM2.5) மற்றும் PM10 ஆகியவற்றின் பாதுகாப்பான அளவு மீறப்படுகிறது.
2. 2025-ஆம் ஆண்டு, ‘IQAir’ நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலகின் அதிக மாசுபாடு கொண்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் மேகாலயாவின் பைர்னிஹாட் நகரம் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாகப் பதிவாகியுள்ளது.
3. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2024-ஆம் ஆண்டு அறிக்கையில்: 2022–2023-ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 53 நகரங்களில் 50 நகரங்களில், ஆண்டின் சராசரி PM10 செறிவு 50 µg/m³ என்ற அளவைவிட அதிகமாக இருந்தது. ஃபரிதாபாத் (212 µg/m³), டெல்லி (209 µg/m³), தன்பாத் (203 µg/m³) ஆகியவை அதிக மாசுபாடு கொண்ட நகரங்களாக உள்ளன.
4. PM10 மற்றும் PM2.5 ஆகியவற்றின் ஆண்டு சராசரி செறிவுகள் முறையே 15 µg/m³ மற்றும் 5 µg/m³-க்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுவது முக்கியம்.