பயங்கரவாதிகளாக வகைப்படுத்துவதற்கான சட்டம் எது? அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட முதல் நபர்கள் யார்? இதற்கான நடைமுறை என்ன?
தற்போதைய செய்தி: ஜூலை மாதம் 4-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, ஒன்றிய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)), 1967-ன்கீழ் 23 நபர்களை "பயங்கரவாதிகள்" (terrorists) என்று வகைப்படுத்தியது. 'பயங்கரவாதிகள்' என்று அறிவிக்கப்பட்ட ஆறு இந்தியர்கள் மற்றும் 17 பாகிஸ்தானியர்களில் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் ஆவர். இந்தியாவில் இல்லாத இந்தக் குறிப்பிட்ட நபர்கள் மீது, ஆள் சேர்ப்பு, பயிற்சி, ஊடுருவல் மற்றும் தளவாட உதவிகள் முதல் நிதியுதவி, ஆயுத விநியோகம், ட்ரோன் மூலம் ஆயுதங்களை அனுப்புதல் மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் நடத்த திட்டமிடுதல் அல்லது அதற்குத் துணைபுரிதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 80-ஆக அதிகரித்துள்ளது.
எந்தச் சட்டத்தின்கீழ் இந்த அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன?
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)) பிரிவு 35-ன்கீழ் இந்தப் பெயர் பட்டியல் உருவாக்கப்பட்டது. ஒரு நபர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் கருதினால், அந்த நபரின் பெயரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) 4-வது அட்டவணையில் சேர்ப்பதற்கு ஒன்றிய அரசுக்கு இந்தப் பிரிவு அதிகாரம் அளிக்கிறது.
இது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
குறிப்பிட்ட இந்த விதிமுறை, 2019-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. 1967-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம், முதலில் 2004, 2008 மற்றும் 2013-ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளைத் தடை செய்வதற்காக 2004-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்கீழ் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட 34 அமைப்புகள் தடை செய்யப்பட்டன. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி அன்று கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம், தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் அதிகாரத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கியது.
முதலில் இந்தச் சட்டம் ஏன் திருத்தப்பட்டது?
2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதியன்று மாநிலங்களவையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதச் செயல்கள் அமைப்புகளால் அல்ல, தனிநபர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டார். ஒரு அமைப்பை மட்டும் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது அதற்குப் பின்னணியில் உள்ள தனிநபர்களைத் தடுத்துவிடாது என்றும், அவர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்காவிட்டால் அவர்கள் சட்டத்தைத் நிராகரித்துவிட்டு வேறு பெயரில் ஒன்றிணைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களைத் தொடர வாய்ப்பளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். பயங்கரவாதம் என்பது ஒரு உலகளாவிய பிரச்சனை என்றும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகள் தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கான சட்ட விதிகளைக் கொண்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பயங்கரவாதச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை முடக்க அல்லது கைப்பற்ற, தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தலைமை இயக்குநருக்கு இந்தத் திருத்தம் அதிகரமாளிக்கிறது. இந்தச் சட்டம் மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களைப் பறிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். தேசிய புலனாய்வு முகமை சர்வதேச மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து முக்கியமான தகவல்களும் தேசிய புலனாய்வு முகமையிடமே இருக்கும். மாநில காவல்துறையிடம் இருக்காது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தச் சட்டத்திருத்தம், பயங்கரவாதச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குத் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தலைமை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டம் மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களைப் பறிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார். சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புகளைக் கொண்ட ஒரு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுக்கும்போது, அந்த வழக்கு தொடர்பான அனைத்து முக்கிய உண்மைகளும் தேசிய புலனாய்வு முகமையிடம் தான் இருக்குமே தவிர, மாநிலக் காவல்துறையிடம் இருக்காது என்று கூறினார். தற்போதைய சட்டப்படி, பயங்கரவாதச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்தந்த மாநிலக் காவல்துறைத் தலைவரிடம் தேசிய புலானாய்வு முகமை முன்அனுமதி பெற வேண்டியுள்ளது. இத்தகைய சொத்துக்கள் பெரும்பாலும் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால், இந்த அனுமதி வாங்கும் நடைமுறை காலதாமதத்தை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.
பயங்கரவாதிகளாக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட நபர்கள் யார்?
2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தச் சட்டத்தின்கீழ் முதன்முதலில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஜெய்ஷ்-இ-முகம்மது (Jaish-e-Mohammad) அமைப்பின் தலைவர் மசூத் அசார், லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) அமைப்பின் ஹபீஸ் சயீத், அவரது துணைத் தலைவர் ஜாகி-உர்-ரஹ்மான் லக்வி மற்றும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர். இந்த தனிநபர் பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஆவர்.
இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் ஏதேனும் இருந்தனவா?
எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக இந்தச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பின.
காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் மாநிலங்களவையில், "ஒரு தனிநபரை எந்தக் கட்டத்தில் நீங்கள் பயங்கரவாதியாக அறிவிப்பீர்கள்? கைது செய்யும்போதா, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதா அல்லது விசாரணை முடிந்த பிறகா? இது தெளிவாக இல்லை. மேலும், அவர் மீது ஏற்கனவே பயங்கரவாதக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தால், அவரைப் பயங்கரவாதியாக அறிவிக்க முடியாது. ஏனெனில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் சட்டப்படி குற்றமற்றவராகவே கருதப்படுவார். இந்தச்சட்ட மசோதா நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு ரத்து செய்யப்படலாம். எனவே, இதை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்.
இதற்கு உள்துறை அமைச்சகத்தின் பதில் என்னவாக இருந்தது?
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சட்டங்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் உள்ளன என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இலங்கையும் தனிநபர்களை இவ்வாறு அறிவிக்கத் தொடங்கியதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்கீழ் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க உலக நாடுகளை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியில், 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு இராஜதந்திர வட்டாரங்களில் இக்கட்டான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார். அஸாரை ஏன் இன்னும் பயங்கரவாதியாக அறிவிக்கவில்லை என்று எங்களிடம் கேட்கப்பட்டது. அந்த முரண்பாட்டைச் சரிசெய்யவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (Unlawful Activities Prevention Act (UAPA)) மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி அப்போது கூறியிருந்தார்.
இதில் உள்ள நடைமுறை என்ன?
இந்த முழு செயல்முறையும் நீதிமன்றம் நடவடிக்கை இல்லாது ஒன்றாகும். இது உள்துறை அமைச்சக (MHA) அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும். மேலும், 'நிரூபிக்கும் பொறுப்பு' (burden of proof) அரசாங்கத்தை சார்ந்தே இருக்கும்.
ஒரு நபரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவு, உளவுத்துறை அமைப்புகளிடமிருந்தே வர வேண்டும். ஒரு பாதுகாப்பு முகமை வழங்கும் தகவல் மற்றொரு முகமையின் தகவலுடன் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. உள்துறை அமைச்சகம் அந்த முன்மொழிவை ஆய்வு செய்கிறது. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு அமைச்சகம் திருப்தியடைந்தால், உள்துறை அமைச்சரால் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் இந்திய அரசிதழில் (Gazette of India) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன.
பயங்கரவாதியாகக் குறிப்பிடப்பட்ட நபர்கள், நேரில் அல்லது பதிவுத் தபால் மூலம் உள்துறை அமைச்சகத்திடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டதும், 45 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் அது குறித்த முடிவை எடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட 3 பேர் அடங்கிய சுதந்திரமான மதிப்பீட்டுக் குழுவிடம் (Independent Three-Member Review Committee) மேல்முறையீடு செய்யும் உரிமை உள்ளது. இந்தக் குழுவையும் உள்துறை அமைச்சகம் நியமிக்கிறது. இதுவரை, பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட தனிநபர்கள் யாரும் தங்களது வழக்கை மறுபரிசீலனை செய்யக் கோரி உள்துறை அமைச்சகத்தை அணுகியதாக எந்தவொரு தகவலும் இல்லை.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (Unlawful Activities Prevention Act (UAPA)) பயங்கரவாத அமைப்புகளாகக் குறிப்பிடப்பட்ட குழுக்கள் மற்றும் அமைப்புகளின் நிலை என்ன?
உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 35-ன்கீழ் பயங்கரவாத அமைப்புகளாக 45 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அந்தச் சட்டத்தின் முதல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இது தவிர, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 3(1)-ன்கீழ் 'சட்டவிரோத அமைப்புகள்' (Unlawful Associations) என 23 குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Original article: How are terrorists designated under the UAPA? -Vijaita Singh