அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான மக்களாட்சியில், குடியுரிமையை நிர்ணயிக்கும் அமைப்பில், ஆவணங்களைவிட மனித நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
2026-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ஆம் தேதி, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (Ministry of External Affairs (MEA)) உறுப்பினர் ஒருவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்திய கடவுச்சீட்டு என்பது ஒரு "பயண ஆவணம்" (travel document) என்றும், அது "குடியுரிமை ஆவணம்" (citizenship document) அல்ல என்றும் கூறினார். இந்தக் கூற்று ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. கடவுச்சீட்டே போதுமானதாக இல்லையென்றால், வேறு எந்த ஆவணம் போதுமானதாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.
இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அறிக்கையும் அது எழுப்பும் கேள்விகளும் திசைதிருப்பும் ஒரு செயலாகவே தெரிகின்றன. இந்திய அரசாங்கம் "பொது நலன்" கருதி மிக அவசியமானதாகக் கருதும் சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே, இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவருக்குப் கடவுச்சீட்டு வழங்கப்பட முடியும். எனவே, அரசாங்கம் இந்தச் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வழக்குகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து நிலைகளிலும் ஒரு கடவுச்சீட்டு என்பது ஒரு நபரின் குடியுரிமைக்கான முழுமையான மற்றும் உறுதியான சான்றாகவே கருதப்பட வேண்டும்.
ஒருவர் தனது உண்மையான குடியுரிமை நிலையை மறைத்து இந்த ஆவணத்தைப் பெற்றுள்ளார் என்பதைச் சட்டத்தின்படி நிரூபிப்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு இருக்கலாம். ஆனால், அதற்காக ஒரு கடவுச்சீட்டை வெறும் பயண ஆவணம் மட்டுமே என்று கூறி முழுமையாக நிராகரித்துவிட முடியாது.
கண்காணிப்புக்குள்ளாகும் குடியுரிமை
வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வெளியிட்ட இந்த அறிக்கை, அரசியல் மற்றும் சட்டச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்ததை (Special Intensive Revision (SIR)) செய்து வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறை செல்லுபடியாகும் தன்மை மற்றும் குடியுரிமையை ஆய்வு செய்வதற்கான வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்ததின் அதிகாரம் குறித்தும், அதற்கு முன்பாக அசாம் ஒப்பந்தம் (Assam Accord) குறித்தும் வழங்கிய இரண்டு தீர்ப்புகளுக்குப் பின்னரும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அசாம் ஒப்பந்தத்தில், குடியுரிமை குறித்த குடியரசுக் கருத்துக்களை நீதிமன்றம் எவ்வாறு கருதுகிறது என்பது குறித்து விரிவாகக் கருத்து தெரிவித்தது. மேலும், 2019-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, ஒருவருக்குக் குடியுரிமை வழங்கும் விதிகள் மதத்தின் அடிப்படையில் மாற்றி எழுதப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, நம்மை நாமே ஒரு அடிப்படையான கேள்வியைக் கேட்டுக்கொள்ளத் தூண்டுகிறது: இந்தியக் குடிமகனாக இருப்பது என்பதன் அர்த்தம் என்ன, இந்த நாட்டிற்குச் சொந்தமானவர் யார், மற்றும் அது என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?
இந்தக் கேள்விகளுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பதில்கள், சிலருக்குத் தெளிவற்றதாகத் தோன்றினாலும் கூட, அவை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் உருவாக்கப்பட்டவை ஆகும். அரசியலமைப்பின் பகுதி II-ல் உள்ள 5 முதல் 11 வரை பிரவுகள், இந்தியப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட கடுமையான சூழ்நிலைகளில் சிக்கிய மக்களின் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளைத் பற்றி குறிப்பிடுகின்றன. பிரவுகள் 11, குடியுரிமையைப் பெறுதல், இழத்தல் மற்றும் குடியுரிமை தொடர்பான பிற அனைத்து விவகாரங்கள் குறித்து சட்டம் இயற்றுவதற்கான விரிவான அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கியது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, குடியுரிமையை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்னவாக இருக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் வரம்பற்ற அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருப்பதாகத் தோன்றலாம். உண்மையில், மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டங்களை ஆதரிப்பதற்காக இன்று முன்வைக்கப்படும் பல வாதங்களும் இந்த விளக்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால், அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களை ஆராய்ந்து கௌதம் பாட்டியா சுட்டிக்காட்டியுள்ளது போல, குடியுரிமை விவகாரத்தில் நாடாளுமன்றம் தன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நினைக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
குடியுரிமையின் அடித்தளங்கள்
உதாரணமாக, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு விதிகளில் பி.எஸ். தேஷ்முக் கொண்டு வர விரும்பிய ஒரு திருத்தத்தை எடுத்துக் கொள்வோம். இந்து அல்லது சீக்கிய மதத்தைச் சேர்ந்த, வேறெந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ஒரு நபர், அவர் எங்கு வசித்தாலும் இந்தியாவின் குடிமகனாக மாறுவதற்கு தகுதியுடையவர் என்ற தெளிவான நிபந்தனையை சேர்க்க முயன்றார். ஆனால், இந்த முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்தவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு, இத்திருத்தத்தை "பார்த்த உடனே முற்றிலும் அர்த்தமற்றது" என்று கூறி முற்றிலுமாக நிராகரித்தார்.
இதற்கு அலலாடி கிருஷ்ணசுவாமி ஐயர் மிகத் தெளிவான மற்றும் உறுதியான பதிலை அளித்தார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டது என்று அலாடி கிருஷ்ணசுவாமி வாதிட்டார். எனவே, இனம் அல்லது மதம் சார்ந்த அடிப்படையில் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே பாகுபாடு காட்டுவதற்கே இடமில்லை என்று கூறினார். இறுதியில், தேஷ்முக்கின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. அதேவேளையில், பி.ஆர். அம்பேத்கரின் நடுநிலையான குடியுரிமைக்கான விதிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே, சட்டப்பிரிவு-11-ல் உள்ள வார்த்தைகள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும், அவை அவற்றின் பரந்த வரையறையின் பின்னணியில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை போன்றவற்றுக்கான அரசியலமைப்பின் மிகவும் போற்றப்படும் மற்றும் அடிப்படையான உறுதிப்பாடுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு மறைமுகமான வரம்பு அவற்றில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றம் குடியுரிமையின் வழிமுறைகளைத் தீர்மானிக்கலாம். ஆனால், குடியுரிமை பெறுவதற்கு மதத்தை ஒரு நிபந்தனையாக நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்க முடியாது.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பிறப்பிட அடிப்படையிலான குடியுரிமை (Jus Soli) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது. ஒருவர் இந்தியாவில் பிறந்ததும் அல்லது இந்தியாவில் வசித்தது வருவதன் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்ற கோட்பாடே அப்போது பின்பற்றப்பட்டது. 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், இந்தக் கொள்கையைத் தனது முக்கியக் கொள்கையாகக் கருதியது. ஆனால் காலப்போக்கில், நாடாளுமன்றம் இந்தக் கோட்பாட்டிலிருந்து விலகிச் சென்றது. முதலில், 1985-ஆம் ஆண்டில், அசாம் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் விதமாக, சட்டத்தில் பிரிவு-6A (Section 6A) அறிமுகப்படுத்தப்பட்டது. இது, "இந்திய வம்சாவளியைச்" சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் வந்த தேதிகளின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை நிறுத்தி வைத்தது. இரண்டாவதாக, 2003-ஆம் ஆண்டு, குடியுரிமைச் சட்டம் மேலும் திருத்தம் செய்யப்பட்டு, இந்தியாவில் பிறந்திருந்தாலும், அந்த நபரின் பெற்றோரில் ஒருவர் கூட "சட்டவிரோத குடியேறியவர்" (illegal migrant) என்றுக் கருதப்பட்டால், அந்த நபருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்திய உச்சநீதிமன்றம், பிரிவு 6A-வின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தியபோது, இரண்டு முக்கியக் கொள்கைகளை வலுப்படுத்தியது. முதலாவதாக, அரசியலமைப்பின் பிரிவு-11 நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு எந்த மறைமுக வரம்பையும் விதிக்கவில்லை என்று நீதிமன்றம் கருதியது. அதற்குப் பதிலாக, குடியுரிமை தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருப்பது வரம்பற்ற அதிகாரமாகும் என்று நீதிமன்றம் கருதியது. இரண்டாவதாக, 2005-ஆம் ஆண்டு சரபானந்த சோனோவால் vs இந்திய ஒன்றியம் மற்றும் பிற (Sarbananda Sonowal vs Union Of India & Anr) வழக்கில் உச்சநீதிமன்றம் முதலில் முன்வைத்த ஒரு கருத்துக்கு, இந்த தீர்ப்பு அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியதாகவும் தோன்றியது. அசாம் மாநிலத்திற்குள் நடக்கும் குடியேற்றம் என்பது மாநிலத்திற்கு எதிரான "வெளிப்புற ஆக்கிரமிப்பு" (external aggression) என்பதாகும்.
இந்த ஆண்டு மே மாதம் வழங்கப்பட்ட, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் vs இந்திய யூனியன் (Association for Democratic Reforms vs Union of India) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் இந்த வாதமே தொடர்ந்தது. அதில், வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கும் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக, ஒரு நபரின் குடியுரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) விசாரிக்கலாம் என்று கூறி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை நீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு நபரின் குடியுரிமையை சட்டப்பூர்வமாகத் தீர்மானிப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் நீடிப்பது குறித்த நிர்வாக ரீதியான திருப்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒரு கொள்கை ரீதியான வேறுபாடு என்று நீதிமன்றம் விவரித்தது. ஒரு நபர் தான் இந்தியக் குடிமகன் என்று கூறுவதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றால், அந்த வழக்கை குடியுரிமைச் சட்டத்தின்கீழ் உள்ள தகுதியான அதிகாரிடம் தேர்தல் ஆணையம் மாற்றிவிட வேண்டும் என்றும் கூறியது.
ஆனால், நாம் இதற்கு முன்பும் இதே போன்றதொரு சூழலைக் கடந்து வந்திருக்கிறோம். அசாமில், முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்போது, 'சந்தேகத்திற்குரியவர்' என்று குறிக்கப்பட்ட வாக்காளர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கு அனுப்பப்பட்டு, தங்கள் குடியுரிமையை நிலைநாட்டுவதற்காக ஒரு முடிவற்ற அதிகாரத்துவ சிக்கலில் தள்ளப்பட்டனர். எனவே, இன்று நம்மிடம் உள்ள செயல்முறையில், ஒருவரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கு, அவர் ஒரு வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்கள் ஒருவித நிச்சயமற்ற நிலையில், அவர்களின் குடியுரிமை உறுதி செய்யப்படாமலும், அதே சமயம் நிராகரிக்கப்படாமலும், அவர்களுடைய உரிமைகள் காலவரம்பின்றி நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இது போன்ற சூழலில், வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. குடியுரிமையை உறுதி செய்வதற்கான இது போன்ற நடைமுறைகள் அனைத்திலும், 'நிரூபிக்கும் பொறுப்பு' (burden of proof) என்பது ஒரு பொதுவானதாகத் திகழ்கிறது. ஒரு காலத்தில், ஒருவரின் குடியுரிமையை அரசு இயல்பாகவே ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று அந்தப் பொறுப்பு சிறிது சிறிதாக தனிநபர்கள் மீது சுமத்தப்பட்டு வருகிறது. சமர்ப்பிக்கப்படும் எந்த ஒரு ஆவணமும் போதுமான சான்றாகக் கருதப்படுவதில்லை. ஆதார் அடையாள அட்டை என்பது வசிப்பிடத்திற்கான சான்று மட்டுமே என்றும், வாக்காளர் அடையாள அட்டை என்பது முந்தைய பதிவிற்கான சான்று மட்டுமே என்றும், தற்போது கடவுச்சீட்டு என்பது பயணம் செய்வதற்கான உரிமைக்கான சான்று மட்டுமே என்றும் கூறப்பட்டு வருகிறது.
மனித நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்
அரசியலமைப்பின்கீழ், நமக்கு வழங்கப்படும் பல அடிப்படை உரிமைகள் குடியுரிமையை அல்ல, அவை மனித நலனையே (Personhood) அடிப்படையாகக் கொண்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு-14, "எந்தவொரு நபருக்கும்" சட்டத்தின்முன் அனைவரும் சமம், அது சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதேபோல், பிரிவு-21, அனைத்து நபர்களுக்கும் உயிர் வாழும் உரிமையையும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையையும் வழங்குகிறது. பிரிவு 19-ன்கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம், எந்தவொரு வர்த்தகம் அல்லது தொழிலைச் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை ஒரு நபருக்கு வழங்குகிறது. மேலும், குடியுரிமை இருப்பதால்தான் ஒருவர் வாக்களிக்கவும், தன்னை எவ்வாறு ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையையும் உறுதி செய்கிறது. எனவே, குடியுரிமையை இழப்பது என்பது மற்ற அனைத்து உரிமைகளையும் பயன்படுத்துவதற்கான அடிப்படை உரிமையையே இழப்பதாகும் என்று ஹன்னா அரெண்ட் குறிப்பிட்டுள்ளார்.
மனித நலனுக்கு முதலிடம் அளிக்கும் ஒரு அரசியலமைப்புச் சட்ட அமைப்பில், யார் குடிமகன் என்ற தகுதியை பெறுகிறார் என்பதைத் தீர்மானிக்கும் விதிகள், ஆவணங்களின் தகுதியை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது. அந்த விதிமுறைகள், அரசியலமைப்பு மிகவும் மதிக்கும் அடிப்படை மதிப்பீடுகளின் மீது கட்டமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதரின் சமமான கண்ணியத்தையும், அனைவரும் சட்டத்தின்முன் சமம் என்ற பாதுகாப்பைப் பெறும் உரிமையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
சுஹ்ரித் பார்த்தசாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வரும் வழக்கறிஞர் ஆவார்.
Original article: The right to belong beyond official documentation. -Suhrith Parthasarathy