உள்ளூர் பிரதிநிதிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்போது, தீர்வுகள் விரைவாகச் சென்றடைகின்றன.
காற்றின் தரக் குறியீடு (AQI) (AQI.in) என்கிற இணையதளம் தொகுத்த தரவுகளின்படி, மே மாதத்தில் உலகின் மிக வெப்பமான 100 நகரங்களின் பட்டியலில் 97 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருந்தன. பந்தேல்கண்டில் உள்ள பண்டா, ஒடிசாவில் உள்ள பாலங்கீர், பீகாரில் உள்ள சசாரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய இடங்களில் சுமார் 47℃ முதல் 48℃-ஆக வெப்பநிலை பதிவானது. சில வாரங்களுக்கு முன்பு, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் (Paris Agreement) இந்தியாவின் திருத்தப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவின் மூலம் தனது கார்பன் உறிஞ்சும் திறனை (carbon sink) விரிவுபடுத்தவும், புதைபடிவமற்ற மின்உற்பத்தித் திறனை 60 சதவீதமாக அதிகரிக்கவும், 2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கார்பன் உமிழ்வு அடர்த்தியை 2005-ஆம் ஆண்டு அளவிலிருந்து 47 சதவீதம் குறைக்கவும் இந்தியா உறுதியளித்தது. காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இந்தியா ஒரு வலுவான சாதனையைப் படைத்துள்ளது. இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறை, மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களை நேரடியாகக் கையாளும் நிறுவனங்களான உள்ளாட்சி அமைப்புகள், காலநிலை திட்டமிடல் சார்ந்த பணிகளில் இருந்து இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையிலயே உள்ளன.
இந்தியக் கிராமப்புறங்கள் முழுவதும், காலநிலை மாற்றம் மக்களின் அன்றாட வாழ்க்கையையே மாற்றி அமைத்து வருகிறது. முற்காலத்தில் கணிக்கக்கூடிய வகையில் பெய்த பருவமழையை நம்பித் தங்களது விதைப்பு காலத்தைத் திட்டமிட்ட வேளாண் தொழிலாளர்கள், இப்போது மழை எப்போது வரும், அது பயிர்களைக் காப்பாற்றும் அளவுக்கு நீடிக்குமா என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். பல இடங்களில் கோடைக்காலம் முடிவதற்கு முன்பே கிணறுகள் வறண்டு போவதால், குடும்பங்கள் தாங்கள் பயிரிடும் முறையையும், உண்ணும் உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொண்டுள்ளன. இந்தியாவில் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வரும் (Rural-to-urban migration) தற்போதைய சூழலில், இந்த மாற்றம் மிகவும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்று இந்தியாவின் காலநிலை சார்ந்த சிக்கல்களில் முக்கியமாக விளங்கும் நீர் மேலாண்மை, விவசாயம், சமூகக் காடுகள் வளர்ப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட 29 துறைகளின் அதிகாரங்களை கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு (Gram panchayats) வழங்குவதற்காக, 73-வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 6-வது நிதி ஆணையம், முதன்முறையாக, தனது அதிகாரப் பகிர்வு பரிந்துரைகளில் காலநிலை காரணிகளை ஒருங்கிணைத்தது. ஆனால், உள்ளாட்சி முன்னேற்றக் குறியீடு-2.0 (Panchayat Advancement Index (PAI)) மற்றும் உள்ளாட்சி அதிகாரப் பகிர்வுக் குறியீடு (Panchayat Devolution Index) ஆகிய இரண்டும், அதே காலகட்டத்தில் செயல்பாட்டு அதிகாரப் பகிர்வு குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. பயனுள்ள நிதிப் பரிமாற்றங்கள், அர்த்தமுள்ள நடைமுறை அதிகாரம் மற்றும் உண்மையான திட்டமிடல் அதிகாரம் இல்லாமல், கிராம உள்ளாட்சி நிர்வாகத்தால் காலநிலை மாற்றத்தின் சிக்கல்களைச் சரியாக எதிர்கொள்ள முடிவதில்லை.
கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையான ஆதரவு கிடைக்கும்போது என்னென்ன மாற்றங்களைச் சாதிக்க முடியும் என்பதற்குக் கள அளவில் நிரூபிக்கப்பட்ட பல உள்ளூர் மாதிரிகள் சான்றாக உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள ஹிவாரே பஜார் (Hiware Bazar), அருகிலுள்ள ரலேகன் சித்தியிடமிருந்து (Ralegan Siddhi) கற்றுக்கொண்ட அனுபவங்களின் உதவியுடன், நீர்ப்பிடிப்பு மேலாண்மை மூலம் வறட்சி பாதிப்புக்குள்ளான நிலப்பரப்பை மாற்றியமைத்தது. மகாராஷ்டிராவின் பேலாவில் உள்ள ஒரு நீர் பாதுகாப்பு மாதிரி, கார்வாலில் (Garhwal) வறட்சியை எதிர்கொள்ளும் ஒரு கிராம உள்ளாட்சி நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது. பொக்காரோவில் (Bokaro) உள்ள ஒரு கிராம உள்ளாட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக மாவட்ட கனிம அறக்கட்டளை (District Mineral Foundation) நிதியைப் பயன்படுத்திய விதம், சத்தீஸ்கரில் இதே போன்ற முயற்சிகளுக்கு ஒரு செயல் மாதிரியை வழங்குகிறது. கேரளாவின் கடலோர கிராம உள்ளாட்சி அமைப்புகளின் வானிலை இடர் மேலாண்மை நடைமுறைகள், அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு வழிகாட்ட முடியும். ஐந்து மாநிலங்களில் 1,100-க்கும் மேற்பட்ட கிராம உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்தியுள்ள 'உள்ளாட்சி அமைப்புகளின் மாநாடு' (Conference of Panchayats) என்ற முன்முயற்சியானது, உள்ளூர் பிரதிநிதிகளுக்கு எது பலனளிக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்போது, தீர்வுகள் வேகமாகச் சென்றடையும் என்பதைக் காட்டியுள்ளது.
மூன்று நடவடிக்கைகள் இந்தியாவின் காலநிலை இலக்குகளுக்கு வலுவான உள்ளூர் அடித்தளத்தை வழங்க முடியும். முதலாவதாக, தேசிய காலநிலை மாற்றக் குழுவும் (National Action Plan on Climate Change (NAPCC)) மாநில செயல் திட்டங்களும், வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்களுடன் கிராம உள்ளாட்சி அமைப்புகளை திட்டமிடல் பயணிகளில் முக்கியப் பங்களிப்பாளர்களாக முறையாகச் சேர்க்கப்பட வேண்டும். இரண்டாவதாக, உள்ளாட்சி முன்னேற்றக் குறியீட்டின் (PAI) ஒன்பது கருப்பொருள் பகுதிகள், ஒரே பிராந்தியத்தில் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளைப் பின்தங்கியவற்றுடன் இணைக்க வேண்டும். இது, மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறைகள் வழியாக மட்டுமல்லாமல், ஊராட்சிகளுக்கு இடையே வெற்றிகரமான யோசனைகளை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளவும் உதவும். மூன்றாவதாக, 16-வது நிதி ஆணையத்தின் காலநிலை தொடர்பான அதிகாரப் பகிர்வுடன், கிராம உள்ளாட்சி அமைப்புகள் செலவு செய்வதற்கு மட்டுமல்லாமல், திட்டமிடுவதற்கும் தேவையான நடைமுறை அதிகாரமும் இணைக்கப்பட வேண்டும்.
நிகிதா, பொதுக் கொள்கை ஆலோசனை பிரிவில் ஆலோசகராக உள்ளார். கோஷ், கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆலோசனைக் குழுவின் ராஜதந்திர தொடர்புகள் மற்றும் பொதுக் கொள்கை ஆலோசனை பிரிவில் இணை இயக்குநராக உள்ளார்.
Original article: In climate fight, panchayat must partner in planning. -Nikita, Bhargabi Ghosh