வாட்ஸ்அப் செயலி (WhatsApp) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள பயனர்பெயர் (username) அம்சம் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதில் உள்ள தனியுரிமைப் பாதுகாப்புகள் யாவை? இந்திய அரசு ஏன் வாட்ஸ்அப் செயலியை அதன் அறிமுகத்தை நிறுத்தச் சொல்கிறது? ஒரு செயலியின் அம்சங்களை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியுமா?
ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு , வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தின் 'பயனர் பெயர்' (Username) வசதி அறிமுகப்படுத்தப்படுவதை நிறுத்துமாறு மெட்டா (Meta) நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தத் தகவல் பரிமாற்றச் செயலி, தற்போது இந்த பயனர் பெயர் வசதிக்கான முன்பதிவுகளைப் பெற்று வருகிறது. சமூக ஊடக நிறுவனமான மெட்டாவிற்கு அனுப்பிய அந்த அறிவிப்பாணையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: பயனர்களின் தொலைபேசி எண்களை மறைத்துவிட்டு பயனர் பெயரை மட்டும் காட்டுவது இணைய மோசடிகள், போலி இணைப்புகள் மூலம் தகவல்களைத் திருடுதல் (Phishing), டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டத் தாக்குதல்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் பயனர்பெயர் அம்சம் என்பது என்ன?
வாட்ஸ்அப் நிறுவனம், மொபைல் எண்களைப் பகிர்ந்து கொள்ளாமலேயே மற்றவர்களுடன் உரையாடல் (Chat) செய்வதற்கான ஒரு வழியாக இந்த 'பயனர் பெயர்' அம்சத்தை விளம்பரப்படுத்துகிறது. இதன் மூலம், உங்களது புதிய தொடர்புகளுக்கு மொபைல் எண்ணிற்குப் பதிலாக நீங்கள் தேர்ந்தெடுத்த பயனர் பெயர் மட்டுமே தெரியும். இது கட்டாயமான ஒன்று அல்ல, நீங்கள் விரும்பினால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கூடுதல் வசதி ஆகும்.
வாட்ஸ்அப்பில் பயனர் பெயர்களுக்கான பொதுப் பட்டியல் (public directory) எதுவும் இருக்காது. ஒருவரைத் தொடர்புகொள்ள, அவருடைய சரியான பயனர்பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். யாராவது தங்கள் பயனர்பெயரை ஊகித்துவிடுவார்களோ என்று கவலைப்படுபவர்களுக்காக, ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை (personal identification number (PIN)) அமைத்துக்கொள்ளலாம் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. அப்படி அமைத்துக்கொண்டால், உங்கள் பயனர்பெயர் தெரிந்த ஒருவரால்கூட, உங்கள் தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN) தெரியாவிட்டால் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது.
இந்த அம்சம் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் இது பரவலாகக் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த புதிய வசதியைக் குறித்து ஏன் கவலை கொள்கிறது?
தி இந்து நாளிதழ் ஆய்வு செய்த அறிவிப்பின் நகலில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அமைப்பு, இந்த அம்சம் "உண்மையான நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்களைப் போலவே இருக்கும் பயனர் பெயர்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம், தனிநபர்கள், பொது அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகளைப் போலப் போலியாக ஆள்மாறாட்டம் செய்வதற்கும், அடையாள மோசடி செய்வதற்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கவலைகளை எதிரொலிக்கும் வகையில், சில பொது நிர்வாகங்கள் தங்கள் பெயர்களின் பல்வேறு வடிவங்கள் ஏற்கனவே பயனர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ‘X’ தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், மொபிக்விக் நிறுவனர் (MobiKwik) பிபின் ப்ரீத் சிங், இது தனக்கும் நடந்ததாகக் கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “இது ஒரு நல்ல யோசனையே அல்ல. இது மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் பெருக வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தனது அறிவிப்பாணையில், தவறு செய்யும் நபர்கள் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்புகொண்டு குறுஞ்செய்தி அனுப்ப இந்த வசதி உதவுவதால், இது இணைய மோசடிகள், தகவல்களைத் திருடும் மோசடி (Phishing), டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டத் தாக்குதல்களை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இதற்கு அடுத்த சில நாட்களிலேயே, டெலிகிராம் (Telegram), சிக்னல் (Signal) மற்றும் அரட்டை (Arattai) ஆகிய செயலிகளுக்கும் அரசாங்கம் இதேபோன்ற அறிவிப்பாணையை அனுப்பியது. ஏனெனில், இந்த செயலிகளில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்களை மறைத்துக் கொள்ளும் வகையிலான 'பயனர் பெயர்' வசதி ஏற்கனவே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்தக் கவலைகளுக்கு வாட்ஸ்அப் நிறுவனத்தின் பதில் என்ன?
வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரபலங்களின் பெயர்களில் மற்றவர்கள் போலி கணக்குகளைத் தொடங்குவதைத் தடுப்பதற்காக, முன்னணி ஆளுமைகளின் பயனர் பெயர்களை மெட்டா (Meta) நிறுவனம் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அந்த அறிக்கையின்படி, பிரபல ஆளுமைகள் என்பதில் பொது நபர்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் மெட்டாவால் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் ஆகியவை அடங்கும்.
தங்கள் தொலைபேசி எண்ணை மறைத்துள்ள ஒரு பயனரிடமிருந்து உங்களுக்குச் செய்தி வந்தால், அனுப்புநரின் சொந்த நாட்டை வாட்ஸ்அப் காண்பிக்கும் என்றும், அவர்கள் ஏற்கனவே உங்கள் தொலைபேசிப் புத்தகத்தில் உள்ளார்களா என்பதையும் சுட்டிக்காட்டும் என்றும் மெட்டா கூறுகிறது.
இந்தக் கருத்துக்களை முன்வைப்பதற்காக, வாட்ஸ்அப் அதிகாரிகள் ஜூலை மாதம் 3-ஆம் தேதி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அதிகாரிகளைச் சந்தித்தனர். அரசின் அறிவிப்புக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளிப்பது ஜூலை மாதம் 4-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது.
அறிமுகம் இல்லாத புதிய நபர்களின் செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்கான உரிமை பயனர்களுக்கு உள்ளது என்று ஜூலை மாதம் 1-ஆம் தேதி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு செயலியின் அம்சங்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியுமா?
வாட்ஸ்அப் போன்ற தனியாருக்குச் சொந்தமான மற்றும் அவர்களால் இயக்கப்படும் ஒரு செயலியில் உள்ள அம்சத்தை அரசாங்கம் தடை செய்ய முடியுமா என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சட்டப்பூர்வமான ஒரு அம்சத்தின் வெளியீட்டை, நிறுவனம் நியாயப்படுத்த வேண்டிய ஒரு தவறாக இந்த அறிவிப்பு கருதுகிறது, என்று டெல்லியைச் சேர்ந்த டிஜிட்டல் உரிமைகளுக்கான குழுவான இன்டர்நெட் ‘Internet Freedom Foundation’ (IFF) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது அறிவிப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 2(1)(w)-ஐயும், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் விதிகள் 2(1)(v) மற்றும் 2(1)(w)-ஐயும் சேர்த்துப் படிக்கும்போது, வாட்ஸ்அப் (WhatsApp) ஒரு இடைநிலை அமைப்பு (Intermediary) மற்றும் ஒரு முக்கியமான சமூக ஊடக இடைநிலை அமைப்பு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட ஒரு தளம் முக்கியமான சமூக ஊடக இடைநிலை அமைப்பு என்று வரையறுக்கப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனத்திற்கோ இந்தியாவில் சுமார் 80 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தளம் தகவல் தொழில்நுட்ப விதிகளின்கீழ் உள்ள உரிய சோதனைகள் மற்றும் இதர கடமைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
அந்த அறிவிப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவுகள் 66C (அடையாளத் திருட்டு), 66D (ஆள்மாறாட்ட மோசடி) மற்றும் 79 (இடைநிலை அமைப்பின் பொறுப்பு/பாதுகாப்பு) ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த விதிகள் அத்தகைய அறிவிப்பை அனுமதிக்காது என்று ‘Internet Freedom Foundation’ (IFF) அமைப்பு கூறியது. ஒரு தயாரிப்பு அம்சத்தை வெளியிடுவதற்கு முன் அங்கீகரிக்கவோ அல்லது அதைத் திரும்பப் பெற உத்தரவிடவோ அனுமதிக்கும் எந்தவொரு விதியையும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) குறிப்பிடவில்லை. எனவே அது அத்தகைய எந்த விதியையும் குறிப்பிடவில்லை. அது சுட்டிக்காட்டும் விதிகள் அத்தகைய அதிகாரத்தை வழங்கவில்லை, என்று அந்த அமைப்பு தெரிவித்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு-79 என்பது, ஒரு இடைநிலை அமைப்பு உரிய கவனத்துடன் செயல்படும் வரை, அதன் பயனர்கள் பதிவிடும் விஷயங்களுக்கான பொறுப்பிலிருந்து அவரைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகும். ஒரு தளம் எப்போது பொறுப்பேற்க வேண்டும் என்பதை அது தீர்மானிக்கிறது. ஒரு தளம் என்ன அம்சங்களை வழங்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு (MeitY) இல்லை.
வாட்ஸ்அப் செயலியானது நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமாக இருக்கலாம், மேலும் அரசாங்கம் கடந்த காலங்களிலும் அதன் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வந்துள்ளது. உதாரணமாக, அக்டோபர் மாதம் 2022-ஆம் ஆண்டில் இந்தச் செயலி உலகளவில் முடங்கியபோது, அதற்கான காரணங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் அந்த நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டதாகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
Original article: Why are there concerns over WhatsApp usernames? -Aroon Deep