விக்ரம்-1 முதல் திருஷ்டி செயற்கைக்கோள் வரை: இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை எவ்வாறு மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது? -ரோஷ்னி யாதவ்

 விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட்டை எது இவ்வளவு சிறப்பானதாக்குகிறது? திருஷ்டி (Drishti) செயற்கைக்கோள் எவ்வாறு அதன் வகையிலேயே முதன்முதலான ஒரு கண்டுபிடிப்பாக விளங்குகிறது? இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பின்வருமாறு:


தற்போதைய நிகழ்வு என்ன?


இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-1, 'மிஷன் ஆகமன்' (Mission Aagaman) திட்டத்தின்கீழ் தனது முதல் சோதனைப் பயணத்திற்குத் தயாராக உள்ளது. ஜூலை மாதம் 2-ஆம் தேதி, ‘Skyroot’ நிறுவனம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ஜூலை மாதம் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விக்ரம்-1 செயற்கைகோளை விண்வெளிக்கு ஏவப்போவதாக அறிவித்தது. இந்தச் சூழலில், விக்ரம்-1 லேண்டர் என்றால் என்ன என்பதையும், சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்றுள்ள ‘GalaxEye’ நிறுவனத்தின் திருஷ்டி செயற்கைக்கோள் குறித்தும் அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'விக்ரம் 1' (Vikram 1) ராக்கெட், முற்றிலும் கார்பன் கலவையாலான கட்டமைப்பைக் கொண்டது. இது திட எரிபொருள் பூஸ்டர்கள் (Solid fuel boosters) மற்றும் 3D முறையில் அச்சிடப்பட்ட திரவ எரிபொருள் இயந்திரத்தையும் கொண்டுள்ளது. முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், புவியின் கீழ்வட்டப்பாதை (Low Earth orbit (LEO)) வரை 350 கிலோ எடையையும், சூரிய ஒத்திசைவு வட்டப்பாதை (Sun-synchronous orbit (SSO)) வரை 260 கிலோ எடையையும் சுமந்து செல்லும் திறன்கொண்டது. சூரிய ஒத்திசைவு வட்டப்பாதை (SSO) என்பது பூமியின் துருவங்களுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு வட்டப்பாதையாகும். இங்கு சுற்றும் செயற்கைக்கோள், பூமியின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் அதே துல்லியமான உள்ளூர் நேரத்தின்போது கடந்து செல்லும்.


2. ‘Skyroot’ நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள விளக்கத்தின்படி, விக்ரம்-1 என்பது “சிறிய செயற்கைக்கோள்களை விரைவாகவும், துல்லியமாகவும், தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய வகையிலும் நிலைநிறுத்துவதற்கான ஒரு ஏவுகலன் ஆகும்.


3. விக்ரம் 1 ராக்கெட் உருவாக்கப்பட்டதன் பயணம் அவர்களின் ‘YouTube’ மற்றும் ‘Instagram’ பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பதிவுகளில், இந்த ராக்கெட்டிற்கு விமானியோ அல்லது ஜாய்ஸ்டிக்கோ (Joystick) கிடையாது; இது தன் கணினியில் உள்ள சுய நுண்ணறிவை வைத்தே விண்வெளிப் பாதையைச் சென்றடைகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.



4. இதன் வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, 'ராமானுஜன்' (Ramanujan) என்று பெயரிடப்பட்ட அதன் முதன்மை கணினியால் வழிநடத்தப்படும் விமானப் பயண மென்பொருளுடன் இணைந்து செயல்படுகிறது. இது ராக்கெட் விண்வெளியில் பயணிக்கும்போது தானாகவே முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது.


‘விக்ரம்-எஸ்’ (மிஷன் பிரரம்ப்) என்றால் என்ன?


1. 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ‘Skyroot’ நிறுவனம் இஸ்ரோவின் ஏவுதளங்களிலிருந்து இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோளான விக்ரம்-எஸ் (Vikram-S)  செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.




2. ‘விக்ரம்-எஸ்’ (Vikram-S) என்ற ஒரு சிறிய ரீதியிலான சோதனை ராக்கெட், இந்தியாவின் முதல் வெற்றிகரமான தனியார் துணை-சுற்றுப்பாதை பயணத்தைக் குறித்தது. ‘திட்டம் பிராரம்ப’ (Mission Prarambh) என்று பெயரிடப்பட்ட இது, பூமியைச் சுற்றி மட்டுமே வந்தது, மேலும் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்காக இது உருவாக்கப்படவில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ‘Skyroot Aerospace’ நிறுவனம், விண்வெளியில் ராக்கெட்டை ஏவுவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியாவின் முதல் விண்வெளி புத்தொழில் நிறுவனம் (start-up) ஆகும்.


‘GalaxEye’ நிறுவனத்தின் திருஷ்டி (Drishti) செயற்கைக்கோள் என்றால் என்ன?


1. இந்திய புத்தொழில் நிறுவனமான ‘GalaxEye’ உருவாக்கிய, தனது வகையான முதல் செயற்கைக்கோளான திருஷ்டி (Drishti), CAS500-2 திட்டத்தின் 45 செயற்கை கோள்கள் ஒன்றாக, ‘SpaceX’ நிறுவனத்தின் ‘Falcon 9’ ராக்கெட் மூலம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி ஏவப்பட்டது.


2. பொதுவாக, படமெடுக்கும் செயற்கைக்கோள்கள் பொதுவாக பல்நிறமாலை அல்லது மீநிறமாலை (ஒளியியல்) படங்களை எடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும், அல்லது அவை செயற்கைத் துளை ரேடாரை (synthetic Aperture Radar (SAR)) பயன்படுத்துகின்றன. இவ்விரு வகையான செயற்கைக்கோள் தரவுகளும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


3. இருப்பினும், இந்த இரண்டு படப்பிடிப்பு முறைகளிலும் சில குறைபாடுகள் உள்ளன. பலவண்ண படங்கள் பார்ப்பதற்குத் தெளிவாகவும், எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும்; ஆனால், மேகமூட்டமான வானிலை அல்லது இரவு நேரங்களில் இவற்றால் படங்களை எடுக்க முடியாது. மற்றொரு புறம், செயற்கை துளை ரேடார் (Synthetic Aperture Radar (SAR)) அலைகள் மேகங்களை ஊடுருவிச் சென்று, இரவும் பகலும் தொடர்ச்சியாகப் படங்களை எடுக்கும் திறன் கொண்டவை; ஆனால், அவை சாதாரணக் கண்களுக்கு எளிதில் புரியாது. எக்ஸ்-ரே (X-ray) படங்களைப் போல, அதிலிருந்து தகவல்களைப் புரிந்துகொள்வதற்குக் கூடுதல் நிபுணர்கள் தேவைப்படுவர்.


4. செயற்கைத் துளை ரேடார் (SAR) மற்றும் ஒளியியல் உணர்விகள் வெவ்வேறு வழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை பூமியை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன. எனவே, உதாரணமாக, அவை அருகருகே வைக்கப்பட்டால், ஒளியியல் உணர்வி பெங்களூரைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், செயற்கைத் துளை ரேடார் (SAR) அந்த கணத்தில் துபாயைப் படம் பிடித்துக் கொண்டிருக்கலாம். மேலும், படமெடுக்கும் நேரங்களில் ஏற்படும் வேறுபாடுகள் அல்லது கால இடைவெளிகள் எனும் சிக்கலும் உள்ளது. இத்தகைய இடைவெளிகள் முக்கியமான பணிகளில் சிரமங்களை உருவாக்குகின்றன.


5. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், விண்வெளியிலிருந்து தெளிவான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய படங்களைப் பெறுவதற்கும், இந்திய புத்தொழில் நிறுவனமான ‘GalaxEye’, திருஷ்டி செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதில் இரண்டு படமெடுக்கும் உணர்விகளும் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு, ஒரே இடத்தை ஒரே நேரத்தில் படமெடுப்பதற்காக ஒன்றோடொன்று ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதனால், பயனர்கள் இரண்டு வெவ்வேறு செயற்கைக்கோள்களிலிருந்து வரும் தரவுத் தொகுப்புகளைக் கைமுறையாகச் சீரமைக்க வேண்டிய தேவை நீக்கப்படுகிறது.


6. திருஷ்டி (Drishti) செயற்கைக்கோள், 'ஒளியியல் படமாக்கலின்' (Optical Imaging) தெளிவையும், செயற்கைத் துளை ரேடாரின் (SAR) அனைத்து காலநிலைகளிலும் செயல்படும் நம்பகத்தன்மையையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, பகுப்பாய்வுக்கு ஏற்கெனவே தயாராக உள்ள, உள்ளுணர்வு சார்ந்த, நம்பகமான, அனைத்து காலநிலைகளிலும் ஏற்ற புவிப் படங்களை வழங்குகிறது. இந்தக் காரணத்திற்காக, அந்நிறுவனம் தனது கண்டுபிடிப்பை ஆப்டோ-செயற்கைத் துளை ரேடார் (SAR) தொழில்நுட்பம் என்று விவரிக்கிறது.





IN-SPACe என்பது என்ன?


2020-ம் ஆண்டில், விண்வெளித் துறையில் தனியார் தொழில்துறையின் அதிகப்படியான பங்களிப்பை எளிதாக்கும் நோக்கத்தில், அரசாங்கம் IN-SPACe (இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம்) அமைப்பை உருவாக்கி, இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ஐ (Indian Space Policy 2023) வகுத்தது.

இது விண்வெளித் துறையின்கீழ் ((Department of Space(DoS)) ஒரு தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும், ஒற்றைச் சாளர அடிப்படையிலான, சுதந்திரமான, முக்கிய முகமையாகும்.


இந்த அமைப்பு ஒரு ஊக்குவிப்பாளராகவும் அதே நேரத்தில் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகவும் செயல்படுகிறது. இது இஸ்ரோவிற்கும் (ISRO) தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்படுவதோடு, இந்தியாவின் விண்வெளி ஆதாரங்களை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது மற்றும் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பதையும் மதிப்பீடு செய்கிறது.


Pathfinder என்றால் என்ன?


1. விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமான பிக்சல் (Pixxel), இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை தரவு மைய செயற்கைக்கோளான 'பாத்ஃபைண்டரை' (Pathfinder) உருவாக்கி கட்டமைப்பதற்காக, பெரிய மொழி மாதிரி (LLM) வழங்குநரான ‘Sarvam AI’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கடந்த மே மாதம் 4-ஆம் தேதி அறிவித்தது.


2. 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் விண்வெளிப் பாதையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த 200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள், வரைகலை செயலாக்க அலகு (Graphics Processing Unit (GPUs)) எனப்படும் அதிநவீனச் செயலிகளைக் கொண்டிருக்கும். இவை 'சர்வம்' (Sarvam) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிக்கான பயிற்சியளித்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும்.

3. செயல்திறனைவிட விண்வெளியில் நீண்டகாலம் தாக்குப் பிடிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட குறைந்த திறன் கொண்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி, தரவுகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்யும் நுண்செயலிகள் (Low-power edge processors) பயன்படுத்தும் வழக்கமான செயற்கைக்கோள் கணினி முறையைப் போலல்லாமல், இந்த 'பாத்ஃபைண்டர்' (Pathfinder) செயற்கைக்கோள் முற்றிலும் மாறுபட்டது. பூமியில் உள்ள தரவு மையங்களில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகளை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அதே தலைமுறையைச் சேர்ந்த நவீன வன்பொருள்களை இந்தச் செயற்கைக்கோள் கொண்டிருக்கும்.


Original article: From Vikram-1 to Drishti: How India’s private space sector is taking off. -Roshni Yadav

Share: