உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசியலமைப்பு அமர்வுகள் திறம்பட செயல்பட உதவுமா? -சாஹில் ஹுசைன் சௌத்ரி

 உச்சநீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதி பணியிடங்களை உருவாக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வு, தலைமை நீதிபதி தவறாமல் அரசியல்சாசன அமர்வுகளை அமைக்க உதவும் என்று அரசு தெரிவிக்கிறது. இருப்பினும், இதுபோன்ற பெரிய அளவிலான நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் ஏன் நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளுக்கு கூடுதல் அழுத்தத்தைத் தருகின்றன, மேலும் நான்கு கூடுதல் நீதிபதிகளால் உண்மையில் என்ன மாற்றத்தைக் கொண்டுவர முடியும்?


கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி, புதன்கிழமையன்று உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதாவை, (Supreme Court (Number of Judges) Amendment Bill, 2026) நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையின் அதிகரிப்பு, மே மாதம் 16-ஆம் தேதி முதல் அவசரச்சட்டம் மூலமாக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்த அவசரச் சட்டத்திற்குப் பதிலாகத்தான் இந்த புதிய பண மசோதா (Money Bill) கொண்டுவரப்பட உள்ளது.


உச்சநீதிமன்றம் உரிமையியல் மற்றும் குற்றவியல் மேல்முறையீடுகள், சிறப்பு விடுப்பு மனுக்கள், நீதிப்பேராணை மனுக்கள் மற்றும் பிற வழக்கமான வழக்குகளின் மிகப்பெரிய தினசரிப் பட்டியலைக் கையாண்டு வருகிறது. அதேவேளையில், அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான முக்கியமான விவகாரங்களுக்கும் தீர்ப்பளிக்கிறது. இதன் காரணமாக பெருமளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சட்டமசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த குறிப்பில் (Statement of Objects and Reasons) இந்தக் கருத்தே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதற்கான காரணம் தகுந்த முறையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பணியிடங்கள் மூலம், சட்டரீதியான முக்கிய கேள்விகள் அடங்கிய வழக்குகளை விசாரிப்பதற்கு, இந்திய தலைமை நீதிபதி வழக்கமான முறையில் "தேவையான நாட்கள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுகளை" உருவாக்க முடியும். எனவே, இன்னும் நான்கு நீதிபதிகள் கூடுதல் நியமனம் செய்யப்படுவது பயனுள்ளதாக இருக்குமா?


அரசியலமைப்பு அமர்வுகள் வழக்கமான வழக்கு விசாரணைகளை ஏன் பாதிக்கின்றன?


உச்சநீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளில் பெரும்பாலானவை, ஒரேநேரத்தில் அமர்ந்து விசாரணை நடத்தும் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளைக் கொண்ட பல அமர்வுகளாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளையில், ஓர் அரசியல் சாசன அமர்வுக்கு குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் இருக்க வேண்டியது அவசியமாகும்.


அரசியலமைப்பின் பிரிவு 145(3)-ன்படி, அரசியலமைப்பிற்கு விளக்கம் அளிப்பது தொடர்பான “முக்கியமான சட்டக் கேள்வி” அடங்கிய வழக்குகளைத் தீர்மானிக்கக் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் இருக்க வேண்டும். அதேபோல, பிரிவு 143-ன்கீழ் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் கேட்கும் ஆலோசனையைப் நீதிமன்றம் பரிசீலிக்கும்போதும், இதேபோன்று குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வே அதை விசாரிக்க முடியும்.


மேலும், ஓர் அரசியல் சாசனப் பிரிவு குறிப்பிடப்படும் அனைத்து வழக்குகளையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதில் உள்ள முக்கியக் காரணி என்னவென்றால், அந்த வழக்கில் "சட்டத்தின் கணிசமான கேள்வி" (Substantial Question of Law) அடங்கியுள்ளதா என்பது மட்டுமே ஆகும்.


"Substantial question of law" என்பது ஒரு வழக்கில் இருதரப்பினரின் உரிமைகளை நேரடியாகவும் முக்கியமாகவும் பாதிக்கக்கூடிய, தெளிவற்ற அல்லது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சட்டப் பகுதியைக் குறிக்கிறது.


கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு (ஏழு, ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு) தேவைப்படுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். அதாவது, முந்தைய தீர்ப்புகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தீர்ப்புகளை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கும், அல்லது அதிகாரப்பூர்வமான முடிவு தேவைப்படும் கேள்விகளுக்குத் தெளிவான தீர்ப்பு வழங்குவதற்கும் இந்த அமர்வு தேவைப்படலாம்.


இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், அரசியல்சாசன அமர்வுக்கோ அல்லது அதைவிடப் பெரிய அமர்வுகளுக்கோ நியமிக்கப்படும் நீதிபதிகள், நீதிமன்றத்தின் அன்றாட வழக்கமான வழக்குகளை விசாரிக்கும் அதே நீதிபதிகளின் பட்டியலிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


ஐந்து நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து ஒரு அரசியல் சாசன விவகாரத்தை விசாரிக்கும்போது, நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளில் பெரும்பகுதியைச் செய்யும் சிறிய நீதிபதிகள் குழுக்களில் அவர்களால் பங்கேற்க முடிவதில்லை. ஏழு அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டால், இருக்கும் நீதிபதிகளின் தேவையும் சுமையும் இன்னும் அதிகமாகும்.

ஒரு பெரிய நீதிபதிகள் அமர்வின் பணி என்பது வெறும் வழக்கின் விசாரணையோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. நீதிபதிகள் வழக்குப் பதிவேடுகளையும், தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதங்களையும் கவனமாகப் படிக்க வேண்டும்; அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகளுடன் ஆலோசிக்க வேண்டும். மேலும், தீர்ப்புகளைத் தயாரிக்க வேண்டும். இந்தத் தீர்ப்புகளில், முதன்மைத் தீர்ப்பை ஆதரிக்கும் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது மாறுபட்ட கருத்துகளோ இடம்பெறலாம்.


அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை vs தற்போதைய பணி எண்ணிக்கை


உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 1950-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மூல அரசியலமைப்புச் சட்டம் ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஏழு பிற நீதிபதிகளைக் கொண்ட ஒரு உச்சநீதிமன்றத்தையே அமைத்தது. மேலும், இந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் முடிவிற்கே விட்டுவிட்டது.


ஆரம்ப ஆண்டுகளில், உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்துதான் அவர்கள் முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்தனர். ஆனால், பணிச்சுமை கணிசமாக அதிகரித்ததைக் கருத்தில்கொண்டு, நாடாளுமன்றம் நீதிபதிகளின் எண்ணிக்கையைத் படிப்படியாக உயர்த்தியது. அதன்படி 1950-ஆம் ஆண்டில் 8-ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை, 1956-ஆம் ஆண்டில் 11-ஆகவும், 1960-ஆம் ஆண்டில் 14-ஆகவும், 1978-ஆம் ஆண்டில் 18-ஆகவும், 1986-ஆம் ஆண்டில் 26-ஆகவும், 2009-ஆம் ஆண்டில் 31-ஆகவும், இறுதியாக 2019-ஆம் ஆண்டில் 34-ஆகவும் அதிகரிக்கப்பட்டது.


2026-ஆம் ஆண்டின் இந்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கிறது. இந்த எண்ணிக்கை உயர்வு, அவசரச் சட்டம் மூலம் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. இந்த 38 இடங்களும் நிரப்பப்பட்டால், வழக்குகளை ஒதுக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுகளை அமைக்கும்போது தேர்வு செய்ய கூடுதல் நீதிபதிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால், அன்றாட வழக்கமான வழக்குகளை விசாரிக்கும் சிறிய அமர்வுகளுக்கும் போதுமான நீதிபதிகள் கிடைப்பார்கள். மேலும், பெரிய அமர்வுகள் தங்களின் வழக்கு விசாரணைகளை மற்ற வழக்குகளுக்கு இடையே இடைவெளிவிட்டு நடத்தாமல், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நடத்துவதும் எளிதாகும்.


ஆனால், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையும் தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையும் வேறாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தலைமை நீதிபதி மற்றும் 34 பிற நீதிபதிகள் என மொத்தம் 35 நீதிபதிகள் பணியில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 38-ல் 3 காலியிடங்கள் உள்ளன.


எனவே, இந்த நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வின் முழுமையான பலன், முதலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதிலும், நீதிமன்றம் அதன் முழுப் பணித்திறனுடன் இயங்குவதிலும்தான் உள்ளது. அதன்பிறகு, பெரிய அமர்வு விசாரணை தேவைப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் வழக்குப் பட்டியலின் மூலம் அவற்றிற்கு ஒதுக்கப்படும் விசாரணை நேரம் ஆகியவற்றைச் சார்ந்தே அதன் பயன் அமையும் என்றும் கூறப்படுகிறது. 


ஒரு தனி அரசியலமைப்புப் பிரிவு?


1984-ஆம் ஆண்டு, இந்தியச் சட்ட ஆணையம் தனது 95-வது அறிக்கையில் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கட்டமைப்புப் பிரிவை உருவாக்குவது குறித்த  ஆலோசனையை முன்மொழிந்தது. 


தற்போது, குறிப்பிட்ட சில வழக்குகளை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்திற்குள்ளேயே அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படுகிறது. ஆனால், அரசியலமைப்புப் பிரிவு அமைக்கப்பட்டால், அது நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சார்ந்த பணிகளையும், பொதுவான மேல்முறையீட்டுப் பணிகளையும் நிரந்தரமாகத் தனித்தனியாகப் பிரிப்பதாக அமையும்.


சட்ட ஆணையம் 1988-ஆம் ஆண்டின் தனது 125-வது அறிக்கையில் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தியது. தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் வெளியிட்ட 229-வது அறிக்கையில், டெல்லியில் அரசியலமைப்பு அமர்வு செயல்படும் அதேவேளையில், உயர்நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்க மண்டல அளவிலான மேல்முறையீட்டு அமர்வுகளை (Cassation Benches) அமைக்கப் பரிந்துரைத்தது.


கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க உதவுமா?


மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையின்படி (Statement of Objects and Reasons), ஜனவரி  மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 92,101 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2025-ஆம் ஆண்டில், 75,410 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன மற்றும் 65,615 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.


கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது, நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும் அமர்வுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும். ஆனால், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறைவதற்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லை என்றும் கூறப்படுகிறது.


2009-ஆம் ஆண்டில் வரலாற்றுத் தரவுகளை ஆய்வுசெய்த சட்ட ஆணையம், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை முன்பே உயர்த்தியதால் மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. மேலும், நீதிபதிகளின் எண்ணிக்கையை மட்டுமே வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான ஒரே காரணியாகக் கருதக்கூடாது என்றும் சட்ட ஆணையம் எச்சரித்தது. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகள், ஒத்திவைப்புகள், வழக்கு மேலாண்மை முறைகள் மற்றும் சிக்கலான வழக்குகளுக்குத் தேவைப்படும் நேரம் ஆகியவை வழக்குகள் முடித்து வைக்கப்படுவதைப் பாதிக்கும் மற்ற சில காரணிகளாகும்.


அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, அரசியலமைப்பு சார்ந்த வழக்குகள் மற்றும் சாதாரண வழக்குகள் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் முரண்பட்ட தேவைகளைச் சமாளிக்க நீதிமன்றத்திற்கு கூடுதல் வாய்ப்பை அளிக்கிறது. இருப்பினும், இது தொடர்ந்து அரசியலமைப்பு அமர்வு விசாரணைகளுக்கு வழிவகுக்குமா அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுமா என்பது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறதா, அதிகளவில் நீதிபதிகள் பணியில் இருப்பது தொடர்ந்து பராமரிக்கப்படுகிறதா மற்றும் உருவாகும் இந்த நீதித்துறை திறன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.


சாஹில் ஹுசைன் சௌத்ரி, ஓர் வழக்கறிஞரும் அரசியலமைப்புச் சட்ட ஆய்வாளரும் ஆவார்.


Original articles: Can more Supreme Court judges ease case backlog, free up Constitution Benches? -Sahil Hussain Choudhury

Share: