சிதை நெருப்பு, மனக்கவலைக்கு இடையில், மனக்கவலையே அதிக ஆபத்தை உண்டாக்குகிறது. சிதை நெருப்பு இறந்த உடலை மட்டும் எரிக்கிறது. ஆனால், மனக்கவலை உயிரோடு உள்ள மனிதனை எரித்துவிடுகிறது.
13 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்புறத்தை புரிந்துகொள்ள முடியாத நிலையில் (persistent vegetative state) இருந்துவந்த ஒரு இளைஞருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்குகையில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் இந்த கருத்தை மேற்கோளாக எடுத்துக்காட்டியது. இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியமான அரசியலமைப்பு நெறிமுறையை மீண்டும் உறுதிப்படுத்தியது: கண்ணியத்துடன் மரணமடையும் உரிமையானது, அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் வரும் 'வாழும் உரிமையின்' (right to life) ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை விளக்குகிறது. இருப்பினும், இந்த வழக்கு ஒரு நீடித்த அமைப்புரீதியான இடைவெளியையும் சுட்டிக்காட்டுகிறது. வாழ்வின் இறுதிப்பருவத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளை (end-of-life care) முறைப்படுத்தும் ஒரு விரிவான சட்டக் கட்டமைப்பு இந்தியாவில் இன்னும் இல்லை.
இந்த வழக்கு, தனது விடுதிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கடுமையான மூளைக் காயத்திற்கு உள்ளான தொழில்நுட்ப இளங்கலை மாணவர் ஹரிஷ் ராணா தொடர்பானது. விபத்துக்குப் பிறகு, அவருக்கு செயற்கை ஊட்டச்சத்து மற்றும் உணவுக்குழாய் மூலம் வழங்கப்படும் நீரேற்றம் ஆகியவற்றின் மூலமே உயிர் வாழ்ந்து வந்தார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி அமைக்கப்பட்ட மருத்துவக் குழுக்கள், தொடர் சிகிச்சையானது உயிரியல் வாழ்வை நீட்டிக்க மட்டுமே செய்கிறது என்றும், நரம்பியல்ரீதியான மீட்புபெற எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என்று முடிவு செய்தன. இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், நீதிமன்றம் உயிர்காக்கும் கருவிகளை விலக்கிக்கொள்ள அனுமதி அளித்தது.
இந்த முடிவு ஒரு நீண்ட அரசியலமைப்புப் பயணத்தின் ஒரு பகுதியாகும். செயலற்ற கருணைக்கொலை (passive euthanasia) குறித்த விவாதம் முதன்முதலில் 2011-ஆம் ஆண்டு அருணா ஷான்பாக் வழக்கில் சட்டரீதியாக முக்கியத்துவம் பெற்றது. அதில், உச்சநீதிமன்றம் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் செயலற்ற கருணைக்கொலையின் சட்டப்பூர்வ தன்மையை அங்கீகரித்து, நடைமுறைப் பாதுகாப்புகளையும் வகுத்தது. 2018-ஆம் ஆண்டில், காமன் காஸ் vs இந்திய யூனியன் (Common Cause v. Union of India) வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்கு பின்னர் இந்தக் கொள்கை வலுப்படுத்தப்பட்டது. அந்தத் தீர்ப்பில், மருத்துவ சிகிச்சையை மறுக்கும் உரிமை தனிநபர்களுக்கு உண்டு என்றும், அவர்கள் தங்களது விருப்பங்களை உயில் என்று பொதுவாக அறியப்படும் முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்தது. 2023-ஆம் ஆண்டில், மருத்துவப் பயிற்சியாளர்கள் எழுப்பிய கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, நீதிமன்றம் இந்த நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தியது.
உயில் ஆவணம் (living will) அல்லது முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல் ஆவணம் என்பது, தகுதியுள்ள வயது வந்த ஒருவர், உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்தி வைக்கவோ அல்லது திரும்பப் பெறவோ வேண்டிய சூழ்நிலைகளை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த ஆவணம் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு, ஒரு நோட்டரி அல்லது அரசு அலுவலரால் சான்றளிக்கப்பட்டு, காப்பாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களிடம் பதிவு செய்யப்பட வேண்டும். இது நோயாளியின் மின்னணு மருத்துவப் பதிவுகளிலும் இணைக்கப்படலாம். இதன் மூலம், பிற்காலத்தில் அந்த நபர் தனது விருப்பங்களை வெளிப்படுத்த இயலாத நிலையை எதிர்கொள்ள நேரிட்டால், மருத்துவர்கள் அதனைச் சரிபார்த்துச் செயல்படுத்த முடியும்.
நீதித்துறை சார்ந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், வாழ்வின் இறுதித் தருணம் குறித்த முடிவுகளை நெறிப்படுத்தும் சட்டக் கட்டமைப்பு இன்னமும் முழுமையடையாமலே உள்ளது. நாடாளுமன்றம் ஒரு விரிவான சட்டத்தை இயற்றும் வரை நடைமுறையில் இருக்கக்கூடிய இடைக்கால சட்டங்களே வழிகாட்டுதல்கள் என்று உச்சநீதிமன்றமே பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், அப்படி ஒரு சட்டம் பரிசீலனையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டிப் பல ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்தியா இன்றும் நீதிமன்றமே வகுத்தளித்த நடைமுறைகளையே சார்ந்திருக்கிறது.
சட்டரீதியான இதுபோன்ற நடவடிக்கை, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்பது குறித்த முடிவுகள் பெரும்பாலும் கடினமான சூழ்நிலைகளில் எடுக்கப்படுகின்றன. குடும்பங்கள் நிச்சயமற்ற தன்மையுடனும் தார்மீக வேதனையுடனும் போராட வேண்டியுள்ளது. அதே, நேரத்தில் மருத்துவர்கள் சட்டப் பொறுப்புக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். சட்டரீதியான தெளிவான வழிகாட்டுதல் இல்லாத நிலையில், மருத்துவரீதியாக தொடர்ந்து சிகிச்சை பயனற்றது என்று ஒருமித்த கருத்து இருந்தாலும், மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல்கள், மருத்துவ வாரியங்களை அமைப்பதையும், நோயாளிகளின் விருப்பங்கள் அல்லது குடும்பத்தினரின் ஒப்புதலை முறையாக ஆவணப்படுத்துவதையும் விதிப்பதன்மூலம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த முற்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் ஒரு முன்னேற்றத்தைக் குறிப்பதாக இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதில் சீரற்ற தன்மையே நிலவுகிறது.
ஒரு குறைபாடு, நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட நிறுவனக் கட்டமைப்பைப் பற்றியது. 2023-ஆம் ஆண்டின் விளக்கத்தின் படி, நகராட்சி அமைப்புகள் அல்லது பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள், முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்களின் பாதுகாவலர்களாகச் செயல்படும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாவலர்கள், தேவைப்படும்போது மருத்துவமனைகளும் மருத்துவர்களும் ஒரு நோயாளியின் விருப்பங்களைச் சரிபார்க்கும் வகையில் பதிவுகளைப் பராமரிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், பல மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை அல்லது உயில் ஆவணத்தை (living will) பதிவு செய்யும் முறைமையும் உருவாக்கப்படவில்லை. இதன் விளைவாக, இந்த அமைப்பு காகிதத்தில் மட்டுமே இருந்து, உண்மையான மருத்துவச் சூழல்களில் நடைமுறைப்படுத்துவதற்குச் சிரமமான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது.
தேசிய அளவில் அணுகக்கூடிய உயில் ஆவணங்களுக்கான ஒரு டிஜிட்டல் பதிவேட்டின் தேவையும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவசரத் தேவையின்போது முன்கூட்டியே வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் கண்டறியப்பட்டால் மட்டுமே அவை தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும். ஒருவர் ஒரு மாநிலத்தில் உயில் எழுதி வைத்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு நகரத்தில் அவருக்கு சிகிச்சை தேவைப்படலாம். ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று இணக்கமான தரவுத்தளம் இல்லாமல், மிகவும் முக்கியமான நேரத்தில் அந்த ஆவணத்தை அணுகுவதற்கு மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நடைமுறை வழி இல்லாமல் போகலாம். முன்கூட்டியே வழங்கப்படும் வழிகாட்டுதல்களை நாடு முழுவதும் டிஜிட்டல் சுகாதாரப் பதிவேட்டில் ஒருங்கிணைப்பது, ஒரு நோயாளியின் இறுதிக்கால விருப்பங்களை நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் பாதுகாப்பாக அணுகுவதை உறுதி செய்யும்.
நல்லெண்ணத்துடன் செயல்படும் மருத்துவர்களுக்கு வெளிப்படையான சட்டப் பாதுகாப்பு இல்லாதது மற்றொரு கவலையாகும். உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துவதில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள், அலட்சியம் அல்லது குற்றவியல் நடைமுறை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர். சட்டப்பூர்வப் பாதுகாப்புகள் இல்லாததால், தொடர் சிகிச்சையால் எந்த மருத்துவப் பயனும் இல்லாதபோதும், பல மருத்துவர்கள் இயல்பாகவே எச்சரிக்கையாக செயல்படுகினறனர்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளது. ஒருவரின் இறுதிக்கால விருப்பங்களைப் பதிவு செய்வது என்ற கருத்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை. அத்தகைய ஒரு சட்டப்பூர்வ வழிமுறை இருப்பதை பல நோயாளிகளும் குடும்பத்தினரும் தெரிந்திருக்கவில்லை. மருத்துவத் துறைக்குள்ளேயே, நடைமுறைச் சட்டக் கட்டமைப்பு குறித்த தெளிவுத் தன்மை வேறுபடுகிறது.
நோய்த்தணிப்பு மற்றும் இறுதிக்காலப் பராமரிப்பைச் சட்டக் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்துவது என்பது பராமரிப்பைக் கைவிடுவது என்று அர்த்தமல்ல. மாறாக, அது நோயாளியின் இறுதித் தருணங்களில் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வலி நிவாரணம், உளவியல் ஆதரவு மற்றும் இரக்கமுள்ள மருத்துவக் கவனிப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதாகும்.
இறுதியாக, செயலற்ற கருணைக்கொலை (passive euthanasia) குறித்த விவாதம் என்பது மருத்துவ நடைமுறை அல்லது சட்டக் கோட்பாடு பற்றியது மட்டுமல்ல. அது, ஒரு சமூக வாழ்வின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கட்டத்தில் மனித கண்ணியத்தை எவ்வாறு மதிக்கிறது என்பது பற்றியது. அரசியலமைப்பு மதிப்பை அங்கீகரிப்பதிலும், இடைக்காலப் பாதுகாப்புகளை உருவாக்குவதிலும் உச்சநீதிமன்றம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், நீதிமன்றங்களால் மட்டும் ஒரு முழுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க முடியாது.
தற்போதுள்ள பாதுகாப்புகளை முறைப்படுத்துவதோடு, அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை இடைவெளிகளையும் நிவர்த்தி செய்யும் ஒரு விரிவான இறுதிக்காலப் பராமரிப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றுவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. அதுபோன்ற ஒரு சட்டம், நடைமுறைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். சிறப்பாக செயல்படும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டும். நோய்த்தணிப்புப் பராமரிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்களைப் பதிவு செய்வதற்கும் அணுகுவதற்கும் நம்பகமான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
அதுவரை, கண்ணியமான மரணம் (dignified death) குறித்த வாக்குறுதியானது, நீதித்துறை வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாக அறிவுறுத்தல்களின் ஒரு பலவீனமான செயல்முறையைச் சார்ந்தே இருக்கும். அரசியலமைப்பு கோட்பாடு (constitutional principle) தெளிவாக உள்ளது. அந்தக் கோட்பாட்டை மனிதாபிமானமுள்ள மற்றும் நடைமுறைக்கு ஏற்ற சட்டக் கட்டமைப்பாக மாற்றுவதற்கான சட்ட உறுதிப்பாடு இன்னும் உருவாக்கபடவில்லை.
ராவத், மும்பையில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராகவும், மகாராஷ்டிராவில் 'முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்களுக்கான' (Advance Medical Directives) பாதுகாவலர்கள் நியமனத்திற்கு வழிவகுத்த பொதுநல வழக்கின் இணை மனுதாரராகவும் உள்ளார். டோங்ரே, இந்திய உச்சநீதிமன்றத்தில் ஆராய்ச்சிப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.
Original Link: Harish Rana case: Right to life includes the right to die with dignity.