பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு : நுகர்வோர்மீது இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? - சுகல்ப் சர்மா

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் போரின் காரணமாக, எரிபொருள் விற்பனையாளர்கள் மீதான நிதி நெருக்கடி ஏற்கனவே தொடங்கியுள்ளது. பெரும்பான்மையான இந்தியர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் மீதும், அரசாங்கத்தின் வருவாய் மீதும் இந்த நடவடிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இந்தப் பதிவில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.


உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளின் கடுமையாக உயர்வால், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (oil marketing companies (OMC)) நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 'சிறப்பு கூடுதல் கலால் வரியை' (Special Additional Excise Duty (SAED)) லிட்டருக்கு தலா ரூ. 10 வீதம் குறைத்து அரசாங்கம் மார்ச் 27, வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது. சில்லறை விலைகளைக் கட்டுப்படுத்துவதும், உலகளாவிய விலை உயர்வால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.


சர்வதேச எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்வாகவே இருப்பதால், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. அப்படியிருந்தும், அவை பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளை உயர்த்தவில்லை. மேலும், உள்நாட்டுச் சந்தையில் போதுமான அளவு பொருட்களின் தடையற்ற இருப்பை உறுதி செய்யும் நோக்கில், டீசல் மற்றும் விமான எரிபொருள் (aviation turbine fuel (ATF)) ஆகியவற்றின் ஏற்றுமதி மீதும் அரசாங்கம் வரியை விதித்துள்ளது.


கலால் வரி குறைப்பின் விளைவாக, பெட்ரோல் மீதான வரி தற்போது லிட்டருக்கு ரூ. 3 ஆகவும், டீசல் மீதான வரி 'பூஜ்யம்' (Nil) ஆகவும் குறைந்துள்ளது. இதன் மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்குச் சற்று நிம்மதியை அளிப்பதற்காக, இவ்விரு எரிபொருட்களின் சில்லறை விற்பனை வாயிலாக எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய தனது வருவாயின் பெரும்பகுதியை மத்திய அரசாங்கம் விட்டுக்கொடுத்துள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கு மாற்றாக இருந்த மற்றொரு வழி என்னவென்றால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை உயர்த்துவதாகும். அவ்வாறு செய்திருந்தால் அது பொருளாதாரத்தில் பணவீக்கத்தை மேலும் அதிகரித்திருக்கும் அல்லது சர்வதேச அளவில் மிக அதிகமாக உள்ள எரிபொருளின் விலையின் சுமையை அவர்களே தொடர்ந்து ஏற்றுக்கொண்டிருக்கலாம். இது அவர்களின் நிதி நிலையை மேலும் மோசமடையச் செய்திருக்கும்.


வழக்கமான பெட்ரோல் மீது மொத்தம் லிட்டருக்கு ரூ.21.9-ஆகவும், வழக்கமான டீசல் மீது லிட்டருக்கு ரூ.17.8-ஆகவும் கலால் வரியாக விதிக்கப்பட்டு வந்தது. இவ்விரு எரிபொருட்களுக்குமான கலால் வரி அமைப்பில், 'சிறப்பு கூடுதல் கலால் வரி' (Special Additional Excise Duty (SAED)) என்பதே மிகப்பெரிய அங்கமாகத் திகழ்ந்தது. அடிப்படை கலால் வரி, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கட்டணம் (Cess), சாலை மற்றும் உள்கட்டமைப்புக் கட்டணம் ஆகியவை கலால் வரியின் பிற அங்கங்களாக இருந்தன. தற்போது சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) குறைக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி லிட்டருக்கு ரூ. 11.9 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ. 7.8 ஆகவும் குறைந்துள்ளது.


அரசாங்கம் எரிபொருள் மீது ஏற்றுமதி வரிகளை விதித்துள்ளது. அவை, டீசல் மீது லிட்டருக்கு ரூ. 21.5-ம், விமான எரிபொருள் (ATF) மீது லிட்டருக்கு ரூ. 29.5-ம் வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும். அரசாங்கத்தின் தோராயமான மதிப்பீடுகளின்படி, இந்த ஏற்றுமதி வரிகள் மூலம் ஒரு இரண்டுவார காலத்திற்கு சுமார் ரூ. 1,500 கோடி வருவாய் கிடைக்கக்கூடும். இந்தத் தகவலை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) தலைவர் விவேக் சதுர்வேதி தெரிவித்தார். கலால் வரி குறைப்பால் அரசுக்கு பதினைந்து நாட்களுக்கு மதிப்பிடப்பட்ட ரூ. 7,000 கோடி வருவாய் இழப்புடன் ஒப்பிடும்போது, இந்த வருவாய் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இருக்கும்.


"சர்வதேச டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள இந்த நேரத்தில், ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்கும், சுத்திகரிப்பு நிலையங்கள் முதலில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்வதே மிக உயர்ந்த முன்னுரிமை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகளாவிய விலைகளில் எரிபொருள் ஏற்றுமதி அதிக லாபம் தரக்கூடியதாக இருந்தாலும், அதைவிட இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சகம் கூறியுள்ளது.


பெரும் நஷ்டம் மற்றும் அரசு வருவாயில் அதன் தாக்கம்


பெட்ரோலிய அமைச்சகத்தின்படி, தற்போதைய சர்வதேச கச்சா எண்ணெய் விலையில், பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.26 மற்றும் டீசலில் ஒரு லிட்டருக்கு ரூ.81.90 நஷ்டம் ஏற்படுகிறது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) கிட்டத்தட்ட ரூ.2,400 கோடி மதிப்பிலான தினசரி கூட்டு வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன.


"கலால் வரி குறைப்பு என்பது பெட்ரோல் நிலையங்களில் விலைக் குறைப்பாக நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை. மாறாக, இது பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான (OMC) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் ஈடுசெய்யப்படும் நஷ்டத்தை நேரடியாக குறைக்க உதவுகிறது. இந்த நிறுவனங்கள், தங்களின் விநியோகச் செலவை விட மிகக் குறைந்த விலையில் இந்திய நுகர்வோருக்குத் தொடர்ந்து எரிபொருளை வழங்கி வருகின்றன. இந்த கலால் வரி குறைப்பு, இந்த நஷ்டங்களில் ஒரு லிட்டருக்கு ரூ. 10 என்ற அளவில் அவற்றின் இழப்புகளைக் குறைக்கிறது. இதன் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சில்லறை விலைகளை மாற்றாமல், தடையின்றி தொடர்ந்து எரிபொருளை வழங்கமுடியும் என்பதை உறுதி செய்கிறது," என்று அமைச்சகம் கூறியது.


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி, மேற்கு ஆசியப் போரைத் தொடங்கி வைத்ததற்கு முந்தைய நாளான பிப்ரவரி 27 அன்று இருந்த விலைகளைவிட, சர்வதேச எண்ணெய் விலைகள் தற்போது சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளன.


Emkay Global நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோரா அவர்களின் கூற்றுப்படி, தற்போதைய விலைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வதன் மூலம் எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு ஏற்படும் ஆண்டு இழப்புகளில் சுமார் 30-40 சதவீதத்தை இந்த கலால் வரிக்குறைப்பு ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தச் சுமைப் பகிர்வின் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்படும் ஆண்டு நிதிச்சுமை சுமார் ரூ. 1.55 லட்சம் கோடியாக இருக்கும். தரமதிப்பீட்டு நிறுவனமான ICRA வெளியிட்ட குறிப்பு ஒன்றின்படி, கலால் வரியில் ஒரு லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் 16,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இதேபோல், ஒரு லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டால், அந்த வருவாய் இழப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் முதல் 1.6 லட்சம் கோடி வரை அதிகரிக்கும். India Ratings and Research நிறுவனம் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, இவ்வாறு அரசாங்கம் இழக்கும் ஆண்டு வருவாயின் அளவு ரூ.1.7 லட்சம் கோடியாக இருக்கும்.


கச்சா எண்ணெய் விலை சராசரியாக ஒரு பேரலுக்கு $100 முதல் $105 என்ற அளவிலேயே நீடித்தால், எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்குப் பெட்ரோல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு ரூ.11-ம், டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு ரூ.14-ம் இழப்பு ஏற்படும் என்றும் ICRA தெரிவித்துள்ளது.


எரிபொருள் விற்பனையாளர்களின் நிதிநிலையில் நெருக்கடி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட்டன. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) சமீபத்தில் 'பிரீமியம்' வகை பெட்ரோல் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தின. அதேவேளையில், இந்திய மக்களில் பெரும்பான்மையினர் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருந்தன.


எனினும், தனியார்துறை எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா ஆற்றல் நிறுவனம் (Nayara Energy), எரிபொருள் விநியோகத்திற்கான உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட கூடுதல் சுமையை ஓரளவிற்கேனும் நுகர்வோர் மீது சுமத்தும் வகையில், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை எரிபொருள் விற்பனையாளராக நயாரா (Nayara) திகழ்ந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் விற்பனை வலையமைப்பில் அதன் பங்கு சுமார் 7% மட்டுமே உள்ளது. அதேவேளையில், மூன்று பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) இணைந்து 90% பங்கை வைத்துள்ளன. மேலும், இந்தியாவின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நடைமுறையில் அவர்களே கட்டுப்படுத்துகின்றனர்.


“கடந்த ஒருமாத காலத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் மிகத் தீவிரமாக உயர்ந்துள்ளன. இதன் அடிப்படையில், ஒரு பீப்பாய்க்கு சுமார் 70 டாலர்களாக இருந்த விலை, தற்போது சுமார் 122 டாலர்களாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் நுகர்வோருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விலைகள் சுமார் 30% முதல் 50% வரையிலும், வட அமெரிக்க நாடுகளில் 30% வரையிலும், ஐரோப்பிய நாடுகளில் 20% வரையிலும், ஆப்பிரிக்க நாடுகளில் 50% வரையிலும் அதிகரித்துள்ளன. மோடி அரசாங்கத்திடம் இரண்டு வழிகள் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். ஒன்று, மற்ற நாடுகள் அனைத்தும் செய்தது போலவே இந்தியக் குடிமக்களுக்கு எரிபொருள் விலையைத் திடீரென வெகுவாக உயர்த்துவதாகும். இரண்டாவது, சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்திலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில், அந்த நிதிச்சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது,” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ‘X’ வலைதளத்தில் (முன்னர் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.


“இந்தக் கொள்கை, 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட ரஷ்யா-உக்ரைன் போரின்போது பின்பற்றப்பட்ட அணுகுமுறைக்கு இணக்கமாகவே அமைந்துள்ளது. அப்போதும், சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்தியக் குடிமக்களையும் வணிக நிறுவனங்களையும் பாதுகாக்க, எண்ணெய் நிறுவனங்கள் தொடர் இழப்புகளைத் தாங்கிக்கொண்டன. அதேவேளையில், மத்திய அரசாங்கம் தனது வரிகளைக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பளித்தது. அதே கொள்கையே இன்றைய நடவடிக்கையையும் வழிநடத்துகிறது. இந்தியக் குடிமக்களோ அல்லது இந்தியத் தொழில்துறையோ, தாங்கள் ஏற்படுத்தாத இடையூறுகளுக்கான விலையைச் சுமக்கக்கூடாது. மாறிவரும் சர்வதேச எரிசக்திச் சூழலை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும். மேலும், இந்திய நுகர்வோருக்கு எரிபொருள் விநியோகத்தில் நிலைத்தன்மையையும், விலைப் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


‘ஊரடங்கு திட்டம் இல்லை, போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது’


நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை மக்கள் பதற்றத்துடன் வாங்குவதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாகப் பரவும் வதந்திகள் “முற்றிலும் பொய்யானவை” என்றும், “அத்தகைய எந்தவொரு திட்டமும் இந்திய அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்றும் அமைச்சர் பூரி தெளிவுபடுத்தியுள்ளார். ஊரடங்கு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகள் பரவியதன் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. 


“உலகளாவிய சூழல் தொடர்ந்து நிலையற்ற தன்மையுடனே காணப்படுகிறது; எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சார்ந்த நிகழ்வுகளை அரசாங்கம் நேரடி தன்மையின் அடிப்படையில் மிகக் கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின்கீழ், நமது குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி மற்றும் பிற முக்கியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எழும் எந்தவொரு புதிய சவால்களை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம் அவர் கூறினார். உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும் இந்தியா தொடர்ந்து தனது மீள்திறனை (resilience) நிரூபித்து வந்துள்ளது. அதேபோல், அரசாங்கம் தொடர்ந்து சரியான நேரத்தில், முன்னெச்சரிக்கையுடனும், ஒருங்கிணைந்த முறையிலும் செயல்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.


வியாழக்கிழமையன்று, இந்தியாவிடம் தற்போது 60 நாட்களுக்கான நுகர்வுக்குப் போதுமான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்புகள் உள்ளதாகவும், வரும் இரண்டு மாதங்களுக்கான கச்சா எண்ணெய் கொள்முதல் ஏற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அரசு உறுதியளித்தது. இதன் மூலம், அடுத்த சில மாதங்களுக்கு நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பற்றாக்குறை ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அரசு, “தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், வேண்டுமென்றே தீங்கிழைக்கும் வகையில், ஒருங்கிணைந்து பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு” குடிமக்கள் பலியாகிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியது.


வீட்டு உபயோகத்திற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் (LPG) எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மேற்கு ஆசியாவைச் சாராத பிற நாடுகளிலிருந்து வரும் கூடுதல் எல்பிஜி கைருப்பு ஆகியவற்றின் மூலம் விநியோக நிலைமை மேம்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவைச் சாராத பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம், சுமார் ஒரு மாதத்திற்கான எல்பிஜி விநியோகம் "உறுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும், கூடுதல் கொள்முதல் பணிகள் தொடர்ச்சியான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, கச்சா எண்ணெய், எரிபொருட்கள் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.


"தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிலையங்களில் ஆங்காங்கே பதற்றத்தின் காரணமாக மக்கள் முண்டியடித்துக்கொண்டு எரிபொருளை வாங்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட சில காணொளிகள் வாயிலாகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட தவறான தகவல்களே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்தன. அத்தகைய எரிபொருள் நிலையங்களில் தேவை திடீரென அதிகரித்தபோதிலும், அனைத்து நுகர்வோருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. மேலும், விநியோகத்தை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இரவு முழுவதும் செயல்பட்டு வந்தன. எரிபொருள் நிலைய உரிமையாளர்களின் நடைமுறை மூலதனம் (working capital) தொடர்பான சிக்கல்களால் எந்தவொரு நிலையத்திலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், எரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் கடன் வழங்கும் கால அளவை, முன்னதாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நாளிலிருந்து மூன்று நாட்களுக்கும் மேலாக அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று பெட்ரோலிய அமைச்சகம் வியாழக்கிழமையன்று தெரிவித்தது.


Original Link: Petrol, diesel excise duty slashed by Rs 10: How it impacts consumers.

Share: