பார்சியல்லாதவரைத் திருமணம் செய்துகொண்டதற்காகப் பார்சி பெண்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட முடியுமா? உச்சநீதிமன்றம் ஆராயவுள்ளது. -அமால் ஷேக்

பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்தால், அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்படலாம். ஆனால்,  ஆண்கள் அவ்வாறு செய்தால், அவர்களுக்கு இது போன்ற ஒரு நிலை இல்லை. இந்த நிலை சமத்துவக் கொள்கைக்கு (equality) எதிரானது என்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதை தீர்மானிக்கும் போது சிறுபான்மை சமூகங்களின் (minority communities) உரிமைகளையும் கருத்தில் பார்க்க வேண்டும்.


தமது சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பார்சிப் பெண், அதன் மூலம் பார்சி அல்லாதவராகக் கருதப்பட முடியுமா என்பதை உச்சநீதிமன்றம் ஆராய உள்ளது. இதன் மூலம், 2012-ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்து வந்த அரசியலமைப்பு தொடர்பான ஒரு கேள்வி மீண்டும் கவனம் பெற்றுள்ளது.


இந்த வழக்கு, 2024ஆம் ஆண்டு தனது பாட்டியின் இறுதி சடங்கிற்காக ஒரு அகியாரி (agiary)-க்குள் (ஜொராஸ்ட்ரியன் நெருப்புக் கோவில்) நுழையஅனுமதி மறுக்கப்பட்ட தினா புத்ராஜா என்பவரின் மனுவிலிருந்து உருவானது.


2009-ஆம் ஆண்டில், 1954-ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் அவர் ஒரு இந்து ஆணைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் இந்துமதத்திற்கு மாறவில்லை. இருந்த போதிலும், நாக்பூர் பார்சி பஞ்சாயத்து விதிகளின்படி, நடைபெற்ற திருமணம் மட்டுமே அவரைச் சமூகத்திலிருந்து விலக்கிவைப்பதற்கு முக்கிய காரணியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இங்கு 'பஞ்சாயத்துகள்' என்பவை, பல்வேறு பிராந்தியங்களில் உள்ள சமூகத்தினர் தங்கள் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக அமைத்துள்ள அறக்கட்டளைகளைக் (charitable trusts) குறிக்கின்றன.


பெண்களை விலக்கி வைக்கும் இந்தச் செயலை எதிர்த்துத் தனது மனுவில் வாதிட்டுள்ள அவர், அரசியலமைப்பின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தச் செயல் பெண்களைத் தங்கள் மதத்திலிருந்து ‘சமூகத்திலிருந்து விலக்கப்பட்டதாகவும்’ (ostracised), அவர்களின் ‘அடையாளத்தைப் பறிப்பதாகவும்’ (stripped) அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்ஜி, விபுல் எம். பன்சோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு, நாக்பூர் பார்சி பஞ்சாயத்திற்கும்  ஒன்றிய அரசுக்கும் அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.


வழக்கின் பின்னணி


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 60,000-க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட பார்சி சமூகம், இந்தியாவில் உள்ள மிகச்சிறிய மதச் சிறுபான்மையினரில் ஒன்றாகும். அவர்கள் பெரும்பாலும் குஜராத் மற்றும் மும்பையில் அதிகமாக உள்ளனர். பிறப்பு விகிதங்கள் குறைவாக உள்ளன. மக்கள் தொகை  குறைந்து வருகிறது. மேலும், கலப்புத் திருமணம் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. யார் பார்சி எனக் கருதப்படுவார், இறுதியில் அதை யார் தீர்மானிக்கிறார்  போன்ற கேள்விகள்  முக்கியத்துவம் பெற்றுள்ளன.


2012-ஆம் ஆண்டில், குஜராத்தில் உள்ள வல்சாத் பார்சி பஞ்சாயத்து, சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் ஒரு பார்சியல்லாத நபரைத் திருமணம் செய்துகொண்டதன் மூலம் தான் இனி ஒரு பார்சி அல்ல என்று அறிவித்ததைத் தொடர்ந்து, கூல்ரோக் குப்தா உச்சநீதிமன்றத்தில் ஒரு சிறப்பு அனுமதி (Special Leave Petition (SLP)) மனுவைத் தாக்கல் செய்தார். குடிமைச் சட்டம் மதமாற்றம் இன்றி வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. இருப்பினும், அந்தச்செயல் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று நாக்பூர் பார்சி பஞ்சாயத்து தனது வாதத்தை முன்வைத்தது.


சிறப்பு அனுமதி (Special Leave Petition (SLP)) என்றால் என்ன?


           உச்ச நீதிமன்றத்தில், கீழ் நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, அரசியலமைப்பின் பிரிவு 136-ஐ பயன்படுத்தி தாக்கல் செய்யப்படும் மனுவே  சிறப்பு அனுமதி (Special Leave Petition (SLP)) மனுவாகும்.


இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றம் ஒரு அரசியல் சாசன அமர்வை அமைத்தது; இருப்பினும், அந்த வழக்கு அப்போதிருந்து நிலுவையிலேயே உள்ளது. வல்சாத் பஞ்சாயத்து, குப்தா தனது பெற்றோரின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் ஒரு 'அகியாரிக்குள்’ (Zoroastrian fire temple) கலந்துகொள்ள அனுமதி அளித்தது.


உச்சநீதிமன்றத்தின் முன் தற்போது உள்ள வழக்கு 


2026-ஆம் ஆண்டு தாக்கல் செய்யபட்ட மனுவில், தீனா புத்ராஜா, பதில் மறுக்கப்படலாம் என்று தெரிந்திருந்ததால், அக்யாரிக்குள் நடைபெறும் உடல்நலம் குன்றிய தனது பாட்டியின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு நாக்பூர் பார்சி பஞ்சாயத்திற்கு முன்கூட்டியே கடிதம் எழுதியதாகக் கூறினார்.


சட்டம் கூறுவது என்ன?


பஞ்சாயத்தின் 5(2) விதிப்படி, “ஒரு பார்சி/இரானி ஜரோஸ்திரியன் பெண், பார்சி அல்லாத ஆணை திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றால், அந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் பார்சி/இரானி ஜர்தோஷ்டிகள் (Zarthostis) என்று ஏற்கப்படமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கோயிலுக்கு வெளியே உள்ள வெளிப்புற மண்டபத்தில் அந்த பெண்   அமரலாம் என்று பஞ்சாயத்து தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2024-ல் அந்த பெண்ணின் பாட்டி காலமான ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த பெண் தன்னை பார்சியாக எந்தவிதத்திலும் அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி, பஞ்சாயத்து அந்த பெண்ணிற்கு ஒரு கடிதம் எழுதியது.


விதிக்கு எதிரான சவால்


இந்த மனு விதி 5(2)-ஐ “உயிரியல் அபத்தம்” (biological absurdity) என்றும் “வெளிப்படையாக தன்னிச்சையானது” (manifestly arbitrary) என்றும் அழைக்கிறது. இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மதத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டால், அவர் தனது மத அடையாளத்தையும், அந்த சமூக இடங்களில் இருக்கும் உரிமையையும் தக்க வைத்துக் கொள்கிறார்.


மேலும், இத்தகைய பார்சி ஆண்களின் குழந்தைகள் மத உரிமைகளுடன் கூடிய பார்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். ஆனால், அதே போன்றதொரு செயலைச் செய்யும் பார்சிப் பெண்களின் குழந்தைகள் அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உயிரியல்ரீதியாக 50% பார்சி உள்ளவர்கள் அனைத்து உரிமைகளுடன் பார்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் மனுதாரர் 100% மரபியல் ரீதியாக பார்சி ஆனவராக இருந்தும், ஒரு இந்து ஆணை திருமணம் செய்ததன் காரணத்தினால் மட்டும் அகியாரி (Agiary) கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 


2023-ஆம் ஆண்டில், தனது மகனை ஜொராஸ்ட்ரிய மதத்தில் முறைப்படி இணைக்கும் 'நவ்ஜோத்' சடங்கை புத்ராஜா ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், பஞ்சாயத்தின் நிர்வாகக் குழு இதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுகுறித்த செய்திகளை சமூக ஊடகங்களிலும் பரப்பியது.


இந்த மனு, மூன்று அரசியலமைப்பு அடிப்படைகளின்கீழ் உள்ள விதிகளைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14-ன் (சட்டத்தின் முன் சமத்துவம்) கீழ், இந்த விதியின் வகைப்படுத்தல் முழுமையாக பாலினத்தை (gender) அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று வாதிடப்படுகிறது. நியாயமான வகைப்பாட்டிற்கான உச்சநீதிமன்றத்தின் அளவுகோலானது, மாறுபட்ட முறையில் நடத்தப்படும் குழுக்களுக்கு இடையே நிலவும் உண்மையான வேறுபாட்டின் அடிப்படையில் அத்தகைய பாகுபாடு அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


இங்கு, தங்கள் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பார்சி ஆணுக்கும், அதே செயலைச் செய்யும் ஒரு பார்சி பெண்ணுக்கும் இடையிலான ஒரே செயல்முறை சார்ந்த வேறுபாடு அவர்களின் பாலினமே ஆகும். சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறை பெண்களை மட்டுமே சமூக விலக்கிற்கும், சமய வழிபாட்டு உரிமைகளை மறுப்பதற்கும், தங்கள் அடையாளத்தை இழப்பதற்கும் உள்ளாக்குகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் (வாழ்வுரிமைப் பாதுகாப்பு) கீழ், ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமானது, அரசியலமைப்புரீதியாகப் பாதுகாக்கப்படும் கண்ணியம் மற்றும் சுயநிர்ணய உரிமையின் ஒரு பகுதியாகும் என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை இந்த மனு மேற்கோள் காட்டுகிறது. ஒரு பெண்ணின் திருமணத் தேர்வின் காரணமாக, அந்த பெண்ணினது மத அடையாளத்தையும் சமூக அணுகலையும் பறிக்கும் விதி, அத்தேர்வுக்கு விதிக்கப்படும் ஒரு தண்டனையாகவே செயல்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அந்த விதி திருமணத் தேர்வைத் தடுப்பதில்லை என்றாலும், அந்தத் தேர்வால் வரும் பாதிப்புகள் பெண்கள் மீதே விழுகிறது. அந்த விதி, "பெண்ணின் அடையாளம் அந்த பெண்ணின் கணவனின் அடையாளத்தைச் சார்ந்ததாகவே கருதப்படும் ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துகிறது என்றும், பார்சி பெண்களை "பார்சி ஆண்களுக்குக்  அடிபணிபவர்களாகவே" நடத்துகிறது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25-ன் (சமயச் சுதந்திரம்) கீழ், ஒரு அறக்கட்டளையாகச் செயல்படும் நாக்பூர் பார்சி பஞ்சாயத்திற்கு, இத்தகைய விளைவுகளை விதிக்கும் அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்புகிறது. ஜாம்ஷெட் கங்கா v பார்சி பஞ்சாயத்து நிதிகள் (Jamshed Kanga v Parsi Panchayat Funds) வழக்கில், பம்பாய் உயர்நீதிமன்றம், ஜரோஸ்திரிய மதத்தில் சமூக விலக்கு (excommunication) என்ற நடைமுறைக்கு இடமில்லை என்றும், அத்தகைய அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் தீர்ப்பளித்தது.


புத்ராஜா தனது சமயத்தை மாற்றிக்கொள்ளாமல்,  குடிமை சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொண்டார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஒரு சமயத்தை அவர் துறந்துவிட்டதாகக் கருதி, அவரை ஒரு அறக்கட்டளை மட்டுமே தீர்மானிக்க முடியாது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


மேலும், இது "பார்சி" மற்றும் "ஜொராஸ்ட்ரியன்" ஆகிய இரு சொற்களுக்கு இடையிலான வேறுபாட்டையும் தெளிவுபடுத்துகிறது. சர் தின்ஷா மானெக்ஜி பெட்டிட் தொடர்பான 1909-ஆம் ஆண்டின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, 'பார்சி' (Parsi”) என்பது பரம்பரை மற்றும் சமூகத்தைக் குறிக்கிறது என்றும், அது வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதேவேளையில் 'ஜொராஸ்ட்ரியன்' (Zoroastrian) என்பது சமயத்தைக் குறிக்கிறது மனுவில் கூறப்பட்டுள்ளது. "பார்சி பெற்றோருக்குப் பிறந்த ஒரு நபர், பிறப்பாலேயே பார்சியாகவே நீடிக்கிறார். அத்தகைய இன அடையாளத்தை திருமணத்தின் மூலம் பிரிக்க முடியாது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும்


நீதிமன்றங்கள் பொதுவாக மதங்களின் உள்ளக நிர்வாகம் தொடர்பான கேள்விகளில் தலையிடுவதைத் தவிர்த்து வந்துள்ளன. மதப் பிரிவுகள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது. ஆனால், அந்தப் பாதுகாப்பு முழுமையானதல்ல. கூல்ரோக் வழக்கில், இந்த விவகாரம் சட்டரீதியன கேள்வியை  எழுப்புகிறது என்று நீதிமன்றம் கருதியதால், அதை அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பியதாக  குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது ஒரு தெளிவான நடைமுறை இல்லாததையும் எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள பார்சி பஞ்சாயத்துகள், தங்கள் மதத்திற்கு வெளியே திருமணம் செய்யும் பெண்களைத் தங்கள் அடையாளத்தை இழந்தவர்களாகக் கருதுவதில்லை. இந்த விதி ஒரு கோட்பாட்டு விஷயமாக இருந்தால், அதில் ஒரு சீரான தன்மை இருக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கும்.


சமத்துவம் (equality), தனிநபர் சுதந்திரம் (personal liberty) மற்றும் மதச் சுதந்திரம் (religious freedom) ஆகியவற்றுக்கான உத்தரவாதங்களுக்கு இணையாக, அத்தகைய விதி நிலைத்திருக்க முடியுமா என்பதை நீதிமன்றம் உறுதிபடுத்த  வேண்டும்.


Original Link: Can Parsi women be excommunicated for marrying non-Parsis? SC to examine.


Share: