அமெரிக்கா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களிலிருந்து பின்வாங்குவதாலும், காலநிலை மாற்றத்திற்கான நிதி உதவி குறித்த எதிர்பார்ப்புகள் குறைந்து வருவதாலும், இந்தியா தூய்மையான எரிசக்திப் பாதையில் உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா தனது 2035-ஆம் ஆண்டிற்கான காலநிலை இலக்குகளை கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தது. இதில் நாட்டின் பொருளாதாரத்தில் கார்பன் உமிழ்வு தீவிரத்தைக் குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை விரிவுபடுத்தவும், காடுகள் மற்றும் மரங்கள் மூலம் கார்பன் சேமிப்பிடங்களை (Carbon Sinks) உருவாக்கவும் இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியா தனது 2030-ஆம் ஆண்டிற்கான இலக்கான 50 சதவீதத்திலிருந்து உயர்த்தி, 2035-ஆம் ஆண்டிற்குள் நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் (Installed electricity capacity) குறைந்தது 60 சதவீதத்தை பெட்ரோலியம் அல்லாத எரிபொருள் (Non-fossil fuel) ஆதாரங்களிலிருந்து (சூரிய சக்தி, காற்று போன்றவை) பெறுவதை உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 2005-ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடுகையில், நாட்டின் கார்பன் உமிழ்வுத் தீவிரத்தை, (அதாவது ஒரு யூனிட் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வெளியாகும் உமிழ்வு) குறைந்தது 47 சதவீதத்திற்குக் குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தற்போதைய 2030-ஆம் ஆண்டிற்கான இலக்கான 45 சதவீதத்தைவிட இரண்டு சதவீதம் அதிகம் ஆகும். இத்துடன், 2005-ஆம் ஆண்டைவிட 3.5 முதல் 4 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன் சேமிப்பிடத்தை (Carbon Sink) உருவாக்குவதாக இந்தியா வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் தேவைப்படுவதற்கேற்ப, ஒவ்வொரு புதிய இலக்கும் ஏற்கனவே உள்ள 2030-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் பங்களிக்க, ஒவ்வொரு நாடும் தனக்கான காலநிலை நடவடிக்கைகளைத் தாமாகவே முடிவு செய்து செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவை தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDCs)) என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, நாடுகள் தங்களின் பணிகளின் வகை மற்றும் அளவை தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வரும் சமிக்ஞைகள்
முதன்முதலில் பார்க்கும்போது, இந்தியாவின் புதிய பருவநிலை இலக்குகள், ஏற்கனவே 2030-ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைவிடச் சற்று மட்டுமே மேம்படுத்தப்பட்டதாகத் தோன்றுகின்றன. மேலும், அந்தப் பழைய இலக்குகளை இந்தியா நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அடைந்துவிடும் நிலையில் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாகவும் மற்ற இரண்டு இலக்குகளும் புதிய புள்ளிவிவரங்கள் வெளிவரும்போது இலக்கை நெருங்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், நாடுகள் தங்களது எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இத்தகைய சூழலில், இந்தியா தான் தேர்ந்தெடுத்த தூய்மையான எரிசக்தி தொடர்பான திட்டங்களை மீண்டும் உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிகழ்வுகள், உலகளாவிய பருவநிலை மாற்றத் தடுப்பு முயற்சிகளைப் பெருமளவு பலவீனப்படுத்தியுள்ளன. இவை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற பெட்ரோலிய எரிபொருட்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு உலகம் மாறிவரும் வேகத்தைத் தலைகீழாக மாற்றும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைக் கைவிட்டுவிட்டு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை மேம்படுத்துவதற்கும் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருக்கும் ஒரு நாடு, தனது நிலையில் இருந்து இப்படிப் பின்வாங்கியது உலகளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் ஆகியவற்றின் மூலம், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பல நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. இதனால், அந்த நாடுகள் தங்களுக்குத் தேவையான எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பாக உறுதிசெய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார்பன் உமிழ்வு நாடாகவும், அதிக எரிசக்தி நுகர்வோராகவும் திகழும் இந்தியா—தூய்மையான எரிசக்தி மற்றும் வலுவான பருவநிலை செயல்பாடுகளில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகச் செயலாளர் (UN Climate Change Executive Secretary) சைமன் ஸ்டீல், இந்தியாவின் புதிய காலநிலை இலக்குகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவிலிருந்து வெளிவந்துள்ள இத்தகைய அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகிறது. குறிப்பாக, நிலையற்ற நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரிபொருட்களை மட்டுமே சார்ந்திருப்பதால் ஏற்படும் செலவுகள் அதிகரித்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த எரிபொருள் சார்ந்து இருப்பது உலகளவில் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பலவீனப்படுத்துவதோடு, விலைவாசி உயர்வையும் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இதற்கு மாறாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறுகிய கடல் போக்குவரத்து பாதைகளையோ அல்லது கப்பற்படையின் பலத்த பாதுகாப்பையோ சார்ந்து இருப்பதில்லை என்றும் சைமன் ஸ்டீல் கூறினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் இந்தப் புதிய காலநிலைத் திட்டம் அதன் பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்தும் என்றும் ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதிச் செயல்பாடுகள் மீதான ஏமாற்றம்
தற்போதைய இலக்குகளை அடைவதில் இந்தியா ஏற்கனவே அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும்போது, 2035-ஆம் ஆண்டிற்காக இன்னும் கூடுதலான இலக்குகளை இந்தியா நிர்ணயித்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
உதாரணமாக, மத்திய மின்சார ஆணையத்தின் (Central Electricity Authority (CEA)) சமீபத்திய அறிக்கையில், மின்உற்பத்தித் திறனில் பெட்ரோலியம் அல்லாத எரிபொருள் ஆதாரங்களின் பங்கு இப்போதுள்ள 52%-லிருந்து 2035-ஆம் ஆண்டிற்குள் 70%-ஆக உயரக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா தனது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contribution (NDC)) இலக்கில் 2035-ஆம் ஆண்டிற்குள் 60% அளவை அடைய வேண்டும் என்று மட்டுமே இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்கூட்டியே சர்வதேச உறுதிமொழிகளால் தங்களைக் கட்டாயப்படுத்திக் கொள்வதைவிட, வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இருக்கும்போது அதிகப்படியான இலக்குகளைச் சாதிக்க இந்தியா விரும்புவதையே இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு வளர்ந்த நாடுகள் போதிய நிதியுதவியை வழங்காதது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் எனவே, இந்தியா தனது 2035-ஆம் ஆண்டிற்கான இலக்குகளை இன்னும் உயர்த்தி நிர்ணயிக்காததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு பாகு (Baku) நகரில் நடைபெற்ற காலநிலை நிதிப்பேச்சுவார்த்தையின் முடிவுகளில் இந்தியா கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்காக ஆண்டுக்கு சுமார் 300 பில்லியன் டாலர் (அதாவது, சுமார் ₹25 லட்சம் கோடி) நிதியைத் திரட்ட மட்டுமே ஒப்புக்கொண்டன. அந்தத் தொகையும் 2035-ஆம் ஆண்டிலிருந்துதான் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வளரும் நாடுகள் தங்கள் காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்குக் குறைந்தது 1.3 டிரில்லியன் டாலர் (சுமார் ₹109 லட்சம் கோடி) நிதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியா சர்வதேச மேடைகளில் இந்த விவகாரத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் (United Nations Climate Change Conference (COP30)), காலநிலை நிதி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விவாதிப்பதற்கான இரண்டு ஆண்டுகால திட்டத்தை உருவாக்குவதற்கான முடிவை எடுப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளுக்குப் போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால், அவை தங்கள் காலநிலை மாற்றத் திட்டங்களின் இலக்குகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என்று இந்தியா வாதிட்டு வருகிறது. இது குறித்து இந்திய அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழிடம் கூறுகையில், பாகுவில் (Baku) நடந்த 29-வது காலநிலை (COP29) மாநாட்டில் காலநிலை நிதி தொடர்பாகக் கிடைத்துள்ள முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகவும், இந்தியாவின் 2035-ஆம் ஆண்டுக்கான காலநிலை இலக்குகளில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, பசுமை முதலீடுகளுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த வட்டியிலான, நீண்டகால நிதியைப் பெறுவது இந்தியாவின் 2035-ஆம் ஆண்டுக்கான காலநிலைத் திட்டத்தின் (2035 Climate Plan) மிக முக்கியமான இலக்காக மாறியுள்ளது.
இருப்பினும், இந்தியா தனது இலக்குகளைத் தற்போது குறைந்த அளவே அதிகரித்துள்ளது. இதன் மூலம், காலநிலை மாற்றத்திற்கு எதிராகச் செயல்படுவதில் தங்களுக்கு அர்ப்பணிப்பு இருந்தாலும், சர்வதேச அழுத்தங்கள் தங்கள் செயல்பாட்டின் வேகத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கப்போவதில்லை என்பதை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது. ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற அமைப்பிடம் (UN Climate Change (UNFCCC)) இன்னும் சமர்ப்பிக்கப்படாத இந்தியாவின் 2035-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contributions (NDC)), தகவமைப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Original Link: India’s new climate targets are modest but significant.