Showing posts with label transgender rights act. Show all posts
Showing posts with label transgender rights act. Show all posts

பாதுகாப்பில்லாத அங்கீகாரம் : இந்தியாவின் பாகுபாடு-எதிர்ப்பு (anti-discrimination) தர்க்கத்திலுள்ள குறைபாடு. -சுமித் பௌத்

சாதி மற்றும் பாலினச் சட்டங்கள் குறித்த சமீபத்திய விவாதங்கள் ஒரு பொதுவான சிக்கலை வெளிப்படுத்துகின்றன. இதில் இந்தியச் சட்டம், பொருத்தமற்ற நேரங்களில்கூட அடையாளத்தை அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பாகுபாடு மிகவும் தீவிரமாக இருக்கும் இடங்களில் அதைப் புறக்கணிக்கிறது.


திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் (Transgender Persons (Protection of Rights) Act) செய்யப்பட்ட திருத்தங்கள், தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் சாதி (Scheduled Caste (SC)) தகுதிலிருந்து தொடர்ந்து விலக்கப்படுவது மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகள் (anti-discrimination regulations) ஆகியவை தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் மிகவும் மாறுபட்ட பிரச்சினைகள் குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. இருப்பினும், இந்த சட்டமானது பாகுபாட்டை எவ்வாறு வரையறுக்கிறது என்ற ஒரு பொதுவான சிக்கலால் அவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லாத் துறைகளிலும், சட்டக் கட்டமைப்புகள், பாதுகாக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக யார் தகுதி பெறுகிறார் என்பதைத் தீர்மானிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒருவரின் அடையாளத்தை அங்கீகரிப்பது என்பது பாகுபாட்டின் யதார்த்தத்துடன் எப்போதும் பொருந்துவதில்லை என்பதால், அடையாளத்தின் மீதான இந்தக் கவனம், விலக்கப்படுவோமோ என்ற அச்சம் முதல் தவறாகப் பயன்படுத்தப்படுவோமோ என்ற கவலைகள் வரை பலவிதமான சங்கடங்களை அடிக்கடி ஏற்படுத்துகிறது.


பாகுபாடு (Discrimination) அங்கீகரிக்கப்படாமல் தொடரும்போது


முதலில், அரசியலமைப்பு (பட்டியல் சாதியினர்) ஆணை-1950 (Constitution (Scheduled Castes) Order) மீதான விவாதத்தைக் கருத்தில் கொள்வோம். இந்தச் சட்டம் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை குறிப்பிட்ட மதப் பிரிவுகளுடன் இணைக்கிறது. இதன் காரணமாக தலித் கிறிஸ்தவர்களும் தலித் முஸ்லிம்களும் பட்டியல் சாதி அந்தஸ்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது வெறும் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இது, 1989-ம் ஆண்டின் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) கீழ் சட்டரீதியான நிவாரணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் தீர்மானிக்கிறது. இருப்பினும், ஒருவர் மதம் மாறினாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடு முடிவுக்கு வருவதில்லை என்பதைப் பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். சட்டம் அவர்களைப் பாதுகாக்கப்பட்ட பிரிவின் உறுப்பினர்களாக அங்கீகரிப்பதை நிறுத்தினாலும், தனிநபர்கள் அதே சமூகக் களங்கத்தையும் வன்முறையையும் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடலாம். இந்தச் சூழ்நிலையில், பாகுபாடு தொடர்கிறது. ஆனால், பாதுகாப்பு மறைந்துவிடுகிறது.


அடையாளம் (Identity) முக்கியப் பிரச்சினையாக மாறும்போது


பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முன்மொழியப்பட்ட பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகளின் மீதான விவாதத்தில் ஒரு மாறுபட்ட கவலை தோன்றுகிறது. குறிப்பிட்ட அடையாளப் பிரிவுகளின் மூலம் பாகுபாட்டை வரையறுப்பது, தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட புகார்களுக்கு வழிவகுக்கும் என்று சில விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள். இத்தகைய அச்சங்கள் அனுபவப்பூர்வமாக நியாயப்படுத்தப்பட்டவையா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அடையாளம் எவ்வாறு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது என்பது குறித்த ஒரு நீடித்த கவலையை அவை பிரதிபலிக்கின்றன. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவரா என்பதில் சட்டம் முக்கியமாகக் கவனம் செலுத்தினால், தகராறுகளின் தன்மை மாறக்கூடும். இதில் வழக்குகள் உண்மையில் என்ன நடந்தது என்பதில் குறைவாகவே கவனம் செலுத்தக்கூடும். மாறாக, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதிலும் அதிகக் கவனம் செலுத்தக்கூடும்.


திருநங்கைகள் மீதான சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீதான விவாதங்களிலும் இதே போன்ற கவலைகள் எழுகின்றன. இங்கு, அடையாளம் அங்கீகரிக்கப்படும் நிபந்தனைகளே முக்கியப் பிரச்சினையாக உள்ளது. யார் திருநங்கையாகக் கருதப்படுகிறார்கள்? என்பதை வரையறுக்க அல்லது ஒழுங்குபடுத்த முற்படும் விதிகள், திருநங்கைகளுக்குள்ளேயே கவலையை உருவாக்கியுள்ளன. இதில் பலர் தவறாக வகைப்படுத்தப்படலாம் அல்லது குற்றவாளியாக்கப்படலாம் போன்ற அச்சங்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். மீண்டும் ஒருமுறை, அடையாளமானது (identity) முக்கியப் பிரச்சினையாக அமைகிறது. இம்முறை அரசின் அங்கீகாரம் என்ற வடிவில் சர்ச்சைக்குரிய களமாக மாறுகிறது.


அடையாள அடிப்படையிலான கட்டமைப்புகளின் வரம்புகள்


இந்த எடுத்துக்காட்டுகளை நாம் ஒன்றாகப் பார்க்கும்போது, ஒரு தெளிவான போக்கு புலப்படுகிறது. சில சமயங்களில், அடையாளப் பிரிவுகள் (identity categories) மிகவும் குறுகியவையாக இருப்பதால், பாகுபாட்டை எதிர்கொள்ளும் மக்களைப் புறக்கணித்துவிடுகின்றன. மற்ற சமயங்களில், அவை மிகவும் விரிவானவையாகவோ அல்லது மிகவும் தளர்வாக வரையறுக்கப்பட்டவையாகவோ கருதப்படுவதால், தவறான பயன்பாடு குறித்த கவலைகள் எழுகின்றன. முதலில், இந்தப் பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று எதிரானவையாகத் தோன்றலாம். இருப்பினும், அவை ஒரே மூலக் காரணத்திலிருந்துதான் உருவாகின்றன. பாகுபாட்டை வரையறுப்பதற்கான முக்கிய வழியாக அடையாளத்தின் மீது அதிகப்படியான சார்புநிலை உள்ளது.


இந்தச் சார்புநிலை ஒரு கட்டமைப்புப் பொருத்தமின்மையை உருவாக்குகிறது. அடையாளப் பிரிவுகள் பொதுவாக எளிமைப்படுத்தப்படுகின்றன. அவை அரசுக்குப் புரியக்கூடியதாகவும், சரிபார்க்கக்கூடியதாகவும், காலப்போக்கில் ஒப்பீட்டளவில் நிலையானதாகவும் இருக்க வேண்டும். ஆனால், பாகுபாடு என்பது பெரும்பாலும் மிகவும் சிக்கலானதாகும். அது, முறையான பிரிவுகளுடன் எப்போதும் நேர்த்தியாகப் பொருந்தாத சமூக நடைமுறைகள், கண்ணோட்டங்கள் மற்றும் சூழல்களால் வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. சட்டம், நிஜ வாழ்க்கை அனுபவங்களை முன்வரையறுக்கப்பட்ட அடையாளங்களுக்குள் பொருத்த வலியுறுத்தும்போது, ​​அது உண்மையான வழக்குகளை விலக்குவதற்கும், சேர்க்கப்பட்ட வழக்குகள்மீது சந்தேகத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது.


அடையாளத்திலிருந்து காரண காரியத்திற்கு


மற்ற நாடுகளைப் பார்ப்பது இந்தப் பிரச்சினையை நாம் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது. 1964-ம் ஆண்டின் குடிமை உரிமைகள் சட்டத்தின் (Civil Rights Act) கீழ், இனம், பாலினம் மற்றும் மதம் போன்ற பாதுகாக்கப்பட்ட பண்புகளை மையமாகக் கொண்டு பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவரா என்பது மட்டும் இதன் முதன்மைக் கேள்வி அல்ல. மாறாக, அந்தப் பண்பின் காரணமாக அந்த நபர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டாரா என்பதே உண்மையான கேள்வி. உதாரணமாக, போஸ்டாக் vs கிளேட்டன் கவுண்டி வழக்கில் (Bostock vs Clayton County), பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையிலான பாகுபாடு என்பது ஒரு வகையான பாலினப் பாகுபாடு என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், ஒரு தனிநபரின் பாலினம் 'இல்லாமல்' அத்தகைய நடத்தை நிகழ்ந்திருக்காது என்று நீதிமன்றம் விளக்கியது. இங்கு இதற்கான முக்கியத்துவமானது காரண காரியத் தொடர்பிற்கே அளிக்கப்படுகிறது.


இதன் பொருள் அடையாளம் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது என்பதல்ல. பாதுகாக்கப்பட்ட பண்புகள், வரலாற்றுரீதியாக வேரூன்றிய பின்தங்கிய நிலையின் அடையாளங்களாக இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் அவை, ஒரு வலுவான நுழைவாயிலாகச் செயல்படுவதில்லை. சட்டத்தின், அடையாளத்தைச் சரிபார்ப்பதிலிருந்து, அந்த அடையாளத்திற்கும், கோரப்படும் பாதிப்பிற்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை இது ஆராய்கிறது.


இந்தியச் சட்டத்தில் இதுபோன்ற ஒரு மாற்றம் எளிதானதாக இருக்காது. பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கும். ஆதார நிரூபணச் சிக்கல்கள், நிர்வாகச் சாத்தியக்கூறுகளில் உள்ள வரம்புகள் மற்றும் நிறுவனத் திறனில் உள்ள இடைவெளிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த மாற்றம் தவறான பயன்பாடு குறித்த கவலைகளையும் நீக்காது. ஆனால், முன்வரையறுக்கப்பட்ட பிரிவுகளுக்குள் பொருந்தும் இடங்களில் மட்டும் அல்லாமல், தீங்கு எங்கு நிகழ்ந்தாலும் அதனைக் கையாள்வதேயான பாகுபாடு எதிர்ப்பு கட்டமைப்புகளை அவற்றின் அடிப்படை நோக்கத்துடன் மீண்டும் சீரமைக்க இது உதவும்.


சாதி, பாலின அடையாளம் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை குறித்த தொடர்ச்சியான சர்ச்சைகள், தற்போதைய அணுகுமுறை அழுத்தத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. பாதுகாக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக யார் கருதப்படுகிறார் என்பதைத் தீர்மானிப்பதில் சட்டம் முக்கியமாகக் கவனம் செலுத்தும் வரை, அது பாகுபாட்டின் உண்மையான அனுபவங்களை தொடர்ச்சியாகப் பதிலளிக்கத் தவறிவிடும். மேலும் ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பு, ஒரு மாறுபட்ட கேள்வியுடன் தொடங்க வேண்டும். ஒரு நபர் யார் என்பது மட்டுமல்ல, அவருக்கு நேர்ந்தது அதன் காரணமாக நிகழ்ந்ததா என்றும் கேட்க வேண்டும்.


அந்த மாற்றம் நிகழும் வரை, பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் தீங்கைத் தவறாகப் புரிந்துகொள்வதைத் தொடரும். இதன் பொருள், முக்கியத்துவம் இல்லாத இடங்களில் அடையாளத்தைக் கண்டு, உண்மையான பாகுபாட்டைப் புறக்கணிக்கும்.


சுமித் பௌத், ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ஆவார்.


Original Link: Recognition without protection: The flaw in India’s anti-discrimination logic.


Share:

திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா ஒரு குறைபாடுள்ள தீர்வாகும் -கோபி சங்கர் மதுரை

இந்த மசோதா பாலின அடையாளங்களுக்கிடையிலான குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துவதுடன், இத்துறையில் உள்ள மிக முக்கியமான மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறது.


திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026 (மசோதா எண். 79/2026) (Transgender Persons (Protection of Rights) Amendment Bill, 2026 (Bill No. 79 of 2026), மார்ச் மாதம் 13-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் மாதம் 25-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இது "திருநங்கைகள்" (Transgender person) என்பதற்கான வரையறையை சுருக்கி, கின்னர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா, திருநம்பிகள் அல்லது உயிரியல்ரீதியாக வரையறுக்கப்பட்ட இருபாலின பண்பு போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களுக்குள் மட்டுமே அடக்குகிறது. மேலும், உடல் உறுப்பு சிதைப்பு, ஆண்மை நீக்கம் அல்லது அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் நடைமுறைகள் மூலம் கட்டாயப்படுத்தி இந்த அடையாளத்திற்குள் தள்ளப்பட்டவர்களையும் இது உள்ளடக்குகிறது. மிக முக்கியமாக, மாறுபட்ட பாலியல் விருப்பத்தேர்வுகள் கொண்டவர்களையும், பாலின அடையாளத்தில் நிலையற்ற (Gender fluid) நபர்களையும் இந்த வரையறையிலிருந்து இது வெளிப்படையாகவே  விலக்கி வைக்கிறது.


இந்தச் சட்ட மசோதா, பிரிவு 4(2)-ல் உள்ள "சுய விருப்பத்தின் அடிப்படையிலான பாலின அடையாள" உரிமையை நீக்குகிறது. இதற்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கும் எளிய நடைமுறையை மாற்றி, தலைமை மருத்துவ அதிகாரி (Chief Medical Officer (CMO)) தலைமையிலான மருத்துவக் குழுவின் பரிந்துரையைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டு வருகிறது. மேலும், திருநங்கைகளுக்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அறுவைச் சிகிச்சை குறித்தும் மருத்துவமனைகள் கட்டாயமாக மாவட்ட ஆட்சியரிடமும், அந்த மருத்துவக் குழுவிடமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.


கட்டமைப்புரீதியான சிக்கல்களின் தொடர்ச்சி 


2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த தெளிவற்ற தன்மைகளையும், அதைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்விகளையும் புதிய சட்டத் திருத்தங்கள் சரிசெய்வதாக அரசாங்கம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இருபாலின பண்புடைய (Intersex) குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் அல்லது மருத்துவ அறநெறிகளுக்கு முரணாக, அவர்களின் சம்மதமின்றி பாலினத் தேர்வு அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். "இயல்பான நிலை" என்கிற தவறான இலக்கை அடைவதற்காக, வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இக்குழந்தைகளின் உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன. நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முறைகளில் கோடிக் கணக்கான இருபாலின பண்புடைய நபர்கள் இன்னும் "புலப்படாத மனிதர்களாகவே" உள்ளனர். அவர்களின் பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படாததால், சட்டப்பூர்வ பாதுகாப்புகளும் சமூக சேவைகளும் அவர்களுக்குக் கிடைக்காமல் போகின்றன.


உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட பாலின அடையாளம் (Sex identity) மற்றும் சமூகப் பாலின அடையாளம் (Gender identity) ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதில்லை என்கின்றனர். அதேபோல், இருபாலின பண்பு வேறுபாடுகள் மற்றும் திருநங்கையர் அடையாளங்களுக்கு  இடையேயான வித்தியாசங்களையும் அவர்கள் அறியவில்லை. இந்தப் புரிதல் குறைபாடே பரவலான பாகுபாட்டிற்கு முக்கியக் காரணமாகிறது. இந்த சட்ட மசோதாவே ஆண் மற்றும் பெண் என்பதை "சமூகப் பாலின அடையாளம்"  என்று குறிப்பிடுகிறது, இது அடிப்படையிலேயே தவறானது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், ஆண் மற்றும் பெண் என்பவை "பாலின அடையாளங்கள்". பாலின அடையாளத்தை சமூகப் பாலின அடையாளங்களின்கீழ் வகைப்படுத்துவதன் மூலம், இந்தப் புதிய சட்டம் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகப் புதிய சிக்கல்களையே உருவாக்குகிறது.


இந்தியாவில் திருநங்கைகள் மற்றும் இருபால் தன்மையுடையவர்கள் குறித்த நம்பகமான தரவுகள் அரசிடம் இல்லை. அவர்களுக்கு உரிமைகளை வழங்க அரசு முற்பட்டாலும், அவர்கள் யார் என்பதைத் தெளிவாக அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 'உயிரியல் பாலினம்' மற்றும் 'பாலின அடையாளம்' ஆகியவற்றை தனித்தனி பிரிவுகளாகப் பிரிப்பது, இந்தப் பிரச்சினையின் அடிப்படை காரணங்களுக்குத் தீர்வாக அமையும் என்கின்றனர். 


புதிய சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், இந்த மசோதா இன்னும் "இருபாலின பண்பு வேறுபாடுகள் கொண்ட நபர்களை", "திருநங்கைகள்" என்ற வரையறைக்குள்ளேயே வைத்திருக்கிறது. "திருநங்கைகள்" என்ற சொல் பெரும்பாலும் பல்வேறு அடையாளங்களை ஒன்றாகக் கலந்து விடுகிறது. இடைபாலினத்தவர்களை "திருநங்கைகள்" என்ற பிரிவில் சேர்ப்பதன் மூலம், இந்தச் சட்டம் அவர்களுக்கென இருக்கும் பிரத்யேகத் தேவைகளைப் புறக்கணிக்கிறது. இருபாலின பண்புநிலை (Intersex) என்பது ஒரு இயற்கையான உயிரியல் மாறுபாடாகும் (இது உலகம் முழுவதும் சுமார் 1%–2% மக்களிடம் காணப்படுகிறது), ஆனால் திருநங்கை அடையாளம் என்பது ஒரு உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்தாகவே கருதப்படுகிறது.


இவை இரண்டையும் ஒரே பிரிவின்கீழ் வைத்திருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள உடல் முழுமைத்தன்மை மற்றும் தனிமனித உரிமை ஆகிய உரிமைகளை மீறுவதாக அமைகிறது. மேலும், இது இடைபாலினக் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்கத் தவறுவதோடு, அவர்களை "இயல்பாக்குவதற்காக" செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்குத் தெளிவான தடையையும் விதிக்கவில்லை. இருபாலின பண்புடைய நபர்களுக்கென்று தனிச் சட்டம் வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையையும் இந்த மசோதா புறக்கணிக்கிறது.

இந்த மசோதாவின் வரையறையானது சர்வதேச தரநிலைகளுக்கு முரணாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆகியவை, 'இருபாலின பண்பு' (Intersex) என்பதை வழக்கமான ஆண் அல்லது பெண் பிரிவுகளுக்குள் அடங்காத பாலின பண்புகளின் இயற்கையான வேறுபாடுகள் என்று வரையறுக்கின்றன. மேலும், இவர்களுக்குத் தனித்துவமான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் சம்மதம் இன்றி செய்யப்படும் மருத்துவ அறுவை சிகிச்சைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவை வலியுறுத்துகின்றன. ஆனால், இந்த மசோதா 'இருபாலின பண்பு' கொண்ட நபர்களைக் கட்டாயப்படுத்தி 'திருநங்கை' பிரிவின்கீழ் கொண்டு வருவதன் மூலம், உலகளாவிய தரநிலைகளை வலுவிழக்கச் செய்வதோடு, இந்தியா நிலைநிறுத்த ஒப்புக்கொண்ட மனித உரிமை கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது.


இந்த மசோதா, திருநங்கைகளுக்கான தேசிய அமைப்பு (National Council for Transgender Persons (NCTP)) மற்றும் அனைத்து மாநில நலவாரியங்களின் காலாவதியான பெயர்களையே மாற்றமில்லாமல் அப்படியே வைத்துள்ளது. இவற்றை தேசிய பாலின அடையாளம், வெளிப்பாடு மற்றும் உடல்ரீதியான பாலின பண்புகள் (Gender Identity/Expression and Sex Characteristics (GIESC)) நல அமைப்பு மற்றும் மாநில GIESC நல வாரியங்கள் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை இந்த மசோதா புறக்கணித்துள்ளது. இதன் விளைவாக, கொள்கை கட்டமைப்பு மிகவும் துல்லியமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாறுவதற்குப் பதிலாக, "திருநங்கை" என்ற ஒற்றை அடையாளப் பெயருக்குள்ளேயே வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒன்றிய அரசு தேசிய அளவில் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை மட்டுமே தொடர்ந்து முன்னிறுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.


இந்த ஒருபாலின ஈர்ப்பு முறைமை சார்ந்த (Heteronormative) மசோதா, திருநங்கைகள் உள்ளிட்ட பாலின அடையாளம், வெளிப்பாடு மற்றும் பாலின பண்புகள் (Gender Identity, Expression and Sex Characteristics (GIESC) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருநங்கை ஓரினச்சேர்க்கையாளர் (Trans Gay), திருநங்கை பெண்ணினச் சேர்க்கையாளர் (Translesbian), திருநங்கை இருபாலினச் சேர்க்கையாளர் (Transbisexual) அல்லது பால்புதுமையினர் (Queer) போன்ற பல்வேறு பாலின ஈர்ப்புகளைக் கொண்டிருக்கலாம் என்ற உண்மையை கவனிக்கத் தவறுகிறது.

சுரண்டல் தன்மையுள்ள கட்டமைப்புகளுக்குச் சட்டரீதியாக அதிகாரமளித்தல்


சட்டப்பிரிவு 18-ல் (Section 18) சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிகள், பெரியவர்களையோ அல்லது குழந்தைகளையோ வலுக்கட்டாயமாக "திருநங்கை அடையாளத்திற்கு" மாற்றுவது, பிச்சை எடுக்கவைப்பது அல்லது கொத்தடிமைகளாக நடத்துவது போன்ற செயல்களுக்கு 5 முதல் 14 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனையை விதிக்கின்றன. இருப்பினும், இந்த மசோதா காலனித்துவ காலத்து 'ஹிஜ்ரா ஜமாத்-கரானா' (Hijra Jamath-Gharana) முறையை முறைப்படுத்தவோ அல்லது அகற்றவோ இல்லை என்கின்றனர். வெளிநபர்களால் செய்யப்படும் குற்றங்களில் மட்டும் கவனம் செலுத்தி, இந்த அமைப்பிற்குள் இருக்கும் அதிகார படிநிலைகளை புறக்கணிப்பதன் மூலம், இந்தத் திருத்தம் நீண்டகாலமாக இருக்கும் இந்த முறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கி வலுப்படுத்துவதாக அமைகிறது. இத்தகைய கட்டமைப்புகள் முற்றிலும் பாரம்பரியமானவை அல்ல என்றும் பழங்கால இந்திய அமைப்புகள் பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர்களைத் தன்னுள் உள்ளடக்கியதாகவும், அவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


தற்போது, திருநங்கை (Hijra) சமூகத்தின் முக்கியத் தலைவர்கள், பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழில் மூலம் தங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் ஈட்டும் வருமானத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால், பெரும்பாலும் கைவிடப்பட்ட மற்றும் சமூக அடையாளங்களுக்கு உட்படாத பாலினத் தன்மையைக் கொண்ட குழந்தைகள் கொத்தடிமைத் தனத்தில் சிக்கவைக்கப்படுகின்றனர். அத்தகைய குழந்தைகள் பலரும் சுரண்டல் நிறைந்த திருநங்கை சமூக அமைப்புகளான ஜமாத் கரானாக்கள் (Jamath Gharanas), ஹவேலிகள் மற்றும் தாயாக்களில் (Dayars) கட்டாயமாகச் சேர்க்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்குக் கல்வி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளதோடு, பிச்சை எடுப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.


பாலின விதிமுறைகளுக்கு உட்படாத (Gender Non-conforming (GNC)) குழந்தைகள் காணாமல் போகும்போது, அவர்கள் குறித்த புகார்களைப் பதிவுசெய்ய காவல்துறை பெரும்பாலும் மறுக்கிறது. மேலும், அத்தகைய குழந்தைகளை மனிதக் கடத்தல் மற்றும் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கத் தனிப்பட்ட கொள்கைகள் ஏதும் வரையறுக்கப்படவில்லை. அவர்களின் சீர்திருத்தம், மறுவாழ்வு அல்லது பாதுகாப்பிற்கென எந்தவொரு முறையான அமைப்பும் உருவாக்கப்படவில்லை. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, காலனித்துவ காலத்து பழைய கட்டமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம், இந்தியாவிலிருந்த முந்தைய உள்ளடக்கிய மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பாரம்பரியங்களை இந்த மசோதாவின் மூலம் அரசாங்கம் பலவீனப்படுத்துகிறது.


இந்த மசோதா, அறுவை சிகிச்சைக்கான சான்றிதழ் பெறுவதற்கு முன்பாக மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் மரபணு ஆலோசனையையோ, இருபாலின பண்புடையவருக்கான (Intersex) அறுவை சிகிச்சைகளையோ அல்லது அது தொடர்பான சுகாதார சேவைகளையோ கட்டாயமாக்கவில்லை என்கின்றனர். மேலும், பாலின உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் குறித்து இந்திய சூழலுக்கு ஏற்ற நீண்டகால ஆய்வுகளை மேற்கொள்ள இந்த மசோதாவில் தெளிவான வரையறைகள் இல்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பலவீனமான பாதுகாப்பு வழிமுறைகளால் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளையும் எழுப்புவதாகத் தெரிவிக்கின்றனர்.


பல்வேறு பாலின அடையாளங்கள் மற்றும் பண்புகளைக் கொண்ட சமூகங்கள் (Gender Identity, Expression, and Sex Characteristics (GIESC)) எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளான நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் முறையற்ற மருத்துவ நடைமுறைகளான (அரசு ஊக்குவிக்கும் தீவிர உடல்நல அபாயங்கள் கொண்ட) பாலின உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் போன்றவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த மசோதா அவர்களின் தேவைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத மேலோட்டமான நடவடிக்கைகளையே வழங்குகிறது. குறிப்பாக, 2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கை (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UN CRPD)) பரிந்துரைகளின்படி, இருபாலின பண்புடையவர்களின் (Intersex) நலன் மற்றும் கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தும், இந்த சிக்கல்கள் இன்னும் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.





பிரிவுகளுக்கு இடையேயான பாகுபாடு இல்லை 


பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் (Scheduled Caste/Scheduled Tribe (SC/ST)) மற்றும் மாற்றுத்திறனாளி பின்னணி கொண்ட திருநங்கைகள் இப்போதும் பலவிதமான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், இவர்களுக்கான குறிப்பிட்ட தீர்வுகள் எதையும் இந்த மசோதா வழங்கவில்லை. கொள்கை மாற்றங்களைச் செய்வதற்கு முன்னால் தேவையான முறையான மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ளத் தவறியதன் மூலம், இந்தியாவின் குடும்பம் சார்ந்த சமூகக் கட்டமைப்பை இந்த மசோதா பாதுகாக்கத் தவறிவிட்டது. மிக முக்கியமாக, பன்முகத்தன்மை கொண்ட அடையாளங்களுக்கான சமூக மற்றும் திருமண உரிமைகளைப் பற்றி இந்த மசோதா எதையும் குறிப்பிடவில்லை. திருநங்கைகளுக்கான திருமணம், தத்தெடுத்தல், வாரிசுரிமை, விவாகரத்து அல்லது சொத்துரிமை போன்ற குடும்பச் சட்டங்கள் குறித்து எந்த விதிகளையும் இந்த சட்டத் திருத்தம் வழங்காததால், அவர்களுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைக்காமல் போவதோடு, முக்கியமான சமூக நிறுவனங்களில் இருந்து அவர்கள் தொடர்ந்து விலக்கி வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.


2026-ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் சில வரையறைகளைத் தெளிவுபடுத்துவதோடு, கட்டாயச் சுரண்டலுக்கான தண்டனைகளையும் அதிகரிக்கிறது. இருப்பினும், இது முக்கியமான கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்க்கத் தவறிவிட்டது. இது பல்வேறு பாலின நோக்குநிலை, பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு மற்றும் பாலினப் பண்புகள் (Sexual Orientation, Gender Identity, Gender Expression and Sex Characteristics (SOGIESC)) சார்ந்த அடையாளங்களைப் புறக்கணிக்கிறது. சமூகம் சார்ந்த மற்றும் திருமண உரிமைகளை கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், பண்டைய இந்திய மரபுகளைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, காலனித்துவ காலத்திய 'ஹிஜ்ரா' (Hijra) கட்டமைப்புகளையே தொடர்ந்து பின்பற்றுகிறது. உயிரியல் பாலினத்திற்கும் சமூகப் பாலின அடையாளத்திற்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டும் ஒரு அறிவியல்பூர்வமான மற்றும் கலாச்சாரரீதியிலான அணுகுமுறை இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. இது வெறும் சித்தாந்தங்களைச் சார்ந்து இருக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்கின்றனர். சம்மதமில்லாத இடைபாலின அறுவை சிகிச்சைகளை தடைசெய்யவும், சம உரிமைகளை உறுதிசெய்யவும், சுரண்டல் அமைப்புகளை நீக்கவும், இருபாலின தன்மை கொண்ட நபர்கள் (Intersex Persons) மற்றும் பாலின விதிமுறைகளுக்கு உட்படாத குழந்தைகளின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 


கோபி சங்கர் மதுரை அவர்கள், இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்கீழ், பாலின நோக்குநிலை, பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடு, மற்றும் பாலின பண்புகள் தொடர்பான உரிமைகளுக்கான சிறப்புக்  கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Original link:

The Transgender Persons Amendment Bill is a flawed fix.


Share:

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA) மற்றும் இந்திய ஒன்றியத்திற்கு இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? - பிரியா குமாரி சுக்லா

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திருத்தச் சட்டம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ல் (Transgender Persons (Protection of Rights) Act, 2019) முக்கிய மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டு தேசிய சட்டப்பணிகள் ஆணையம் vs இந்திய ஒன்றியம் (National Legal Services Authority v. Union of India - NALSA) இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'பாலினத்தை சுய-அடையாளம் காணும் உரிமையை' நீக்கவும், அதற்குப் பதிலாக அடையாள அங்கீகாரத்திற்காக 'மருத்துவச் சான்றிதழைப்' பெறுவதை நடைமுறைப்படுத்தவும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.


முக்கிய அம்சங்கள்:


• மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் (Social Justice and Empowerment) துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026-ஐ (Transgender Persons (Protection of Rights) Amendment Bill, 2026) கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் மாதம் 13-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். இருப்பினும், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர், இருபாலீர்ப்பு உடையவர் மற்றும் மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட LGBT+ (Lesbian, Gay, Bisexual, Transgender, and others) அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


• 2019-ஆம் ஆண்டின் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [Transgender Persons (Protection of Rights) Act, 2019], ஒரு நபர் பிறக்கும்போது ஒதுக்கப்பட்ட பாலின அடையாளத்துடன் ஒத்துப்போகாதவர்களை திருநங்கைகள் என வரையறுத்தது. ஆனால், தற்போதைய புதிய சட்டத் திருத்தமானது தங்களால் கட்டுப்படுத்த முடியாத உயிரியல் காரணங்களால் (Biological reasons) கடுமையான சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்பவர்களை மட்டுமே பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசு கூறுகிறது. இந்த அணுகுமுறையானது 2014-ஆம் ஆண்டிற்கு முந்தைய புரிதலுக்கு மீண்டும் செல்வது போல் உள்ளது, அதாவது ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்க உயிரியல் காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


• இந்த மசோதா திருநங்கைகளை மிகவும் குறுகிய வரம்பிற்குள் வரையறுக்கிறது. அதாவது, 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த பரந்த வரையறைக்குப் பதிலாக, சமூக-கலாச்சார அடையாளங்கள் கொண்டவர்கள் (கிண்ணர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா, பேடி போன்றவர்கள்) அல்லது குறிப்பிட்ட பிறவி உயிரியல் மாற்றங்களுடன் பிறந்தவர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது. குறிப்பாக, இதற்குமுன் இருந்த 'இடைநிலை பாலினத்தவர்' (intersex) என்ற விரிவான விளக்கத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக முதன்மை பாலின பண்புகள் (primary sexual characteristics), வெளிப்புற பிறப்புறுப்பு (external genitalia) மற்றும் குரோமோசோம்கள் (chromosomes) பாலின சுரப்பிகளின் வளர்ச்சி (Gonadal development) மற்றும் ஹார்மோன் உற்பத்தி அல்லது அதன் செயல்பாடு போன்ற மருத்துவரீதியான குறுகிய பட்டியலின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை இந்த மசோதா வகைப்படுத்துகிறது.


• இந்த மசோதா ஒரு புதிய மற்றும் தனித்துவமான பிரிவை உருவாக்குகிறது: இதில் உடல் உறுப்புகளைச் சிதைத்தல் (mutilation), ஆண்மை நீக்கம் செய்தல் (emasculation), உடல் உறுப்பைத் துண்டித்தல் (amputation), அல்லது அறுவை சிகிச்சை (surgical), வேதியியல் (chemical) அல்லது ஹார்மோன் (hormonal) சிகிச்சை முறைகள் மூலம் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டோ (force), ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டோ, தூண்டப்பட்டோ, ஏமாற்றப்பட்டோ அல்லது தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தியோ திருநங்கை அல்லது திருநம்பி அடையாளத்தை ஏற்குமாறு வற்புறுத்தப்பட்டால், அந்த நபர் அல்லது குழந்தை இந்தப் புதிய பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உங்களுக்குத் தெரியுமா?


• ஏப்ரல் மாதம் 2014-ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் திருநங்கைகளை "மூன்றாம் பாலினத்தவராக" அங்கீகரித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பின் மூலம், அவர்களைச் சமூகரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward Classes (SEBC)) கருதி, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)) தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமைந்ததால், இந்த முக்கியமான முடிவு "தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு  (NALSA) தீர்ப்பு" என்று அழைக்கப்படுகிறது.


• இந்தத் தீர்ப்பில், திருநங்கைகள் எதிர்கொள்ளும் பயம், அவமானம், சமூக அழுத்தம், மனச்சோர்வு மற்றும் களங்கம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு இன்மை), 19 (பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம்) மற்றும் 21 (வாழ்வு மற்றும் தனிநபர் சுதந்திரம்) ஆகியவற்றின்கீழ் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.


• மேலும், 2018-ஆம் ஆண்டில்தான் இந்திய உச்சநீதிமன்றம் தன்பாலின ஈர்ப்பை குற்றமற்றதாக்கியதன் மூலம் தனிநபரின் சுயாட்சி மற்றும் முடிவெடுக்கும் தனியுரிமையின் வரம்பை விரிவுபடுத்தியது. தன்பாலின உறவுகளைக் குற்றமாகக் கருதிய இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 377-ன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியதன் மூலம், இந்தச் சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், இந்தப் பிரிவு பாலினச் சிறுபான்மையினரான பால்புதுமையினர் (LGBTQ) சமூகத்தினரைத் துன்புறுத்துவதற்கும் அவர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டதையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.


• 2021-ஆம் ஆண்டில், நேரடி பணி நியமன முறை மூலம் நிரப்பப்படும் அனைத்து வகையான அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல் மற்றும் ஒரே மாநிலமாக கர்நாடகா மாநிலம் திகழ்கிறது. இதற்காக, கர்நாடக மாநில அரசுப் பணிகள் (பொது ஆட்சேர்ப்பு) விதிகள், 1977-ன் [Karnataka Civil Services (General Recruitment) Rules, 1977] விதி 9-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளுடன் கூடுதலாக 'மற்றவர்கள்' (Others) என்ற தனிப்பிரிவைச் சேர்க்குமாறு மாநில குடிமைப்பணி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.


Original Link: What was the Supreme Court’s verdict in National Legal Services Authority vs Union Of India, 2014?


Share:

திருநங்கையர் உரிமைப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்கள் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானவை. அவை அமல்படுத்தப்படக் கூடாது. -சஷாங்க் மகேஸ்வரி

சட்டப்பூர்வமான சலுகைகளையும் பாதுகாப்புகளையும் சரியாக வழங்குவதற்குத் தெளிவான வரையறைகள் அவசியம் என்று இந்தத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள் கூறலாம். இருப்பினும், நிர்வாக வசதிக்காக ஒருபோதும் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ அல்லது மீறவோ முடியாது என்கின்றனர். 


இந்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு (National Legal Services Authority (NALSA)) vs இந்திய ஒன்றிய அரசுக்கு (National Legal Services Authority vs Union of India (2014)) இடையிலான 2014-ஆம் ஆண்டு வழக்கில், பாலின அடையாளம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பில், திருநங்கைகள் தங்களின் கண்ணியம், தன்னாட்சி மற்றும் சமத்துவத்தின் ஒரு பகுதியாகத் தங்களின் பாலின அடையாளத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. இருப்பினும், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026, "திருநங்கை" என்பதற்கான சட்டப்பூர்வ வரையறையை மாற்றுவதன் மூலம் கடுமையான அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களை எழுப்புகிறது.


இந்தத் திருத்தமானது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் பிரிவு 2(k)-ஐ மறுவரையறை செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது 'திருநங்கைகள்' (Transgender Persons (TG)) என்பதற்கான வரையறையை இரண்டு குழுக்களாகக் குறைக்கிறது: முதலாவதாக, ஹிஜ்ரா, கின்னர், அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற பாரம்பரிய சமூக-கலாச்சாரக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்  என்றும்  இரண்டாவதாக, பிறப்புறுப்புகள், குரோமோசோம்கள், ஹார்மோன்கள் அல்லது இனப்பெருக்க வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகள் போன்ற உயிரியல் பாலின பண்பு மாற்றங்களுடன் பிறந்தவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது 2019-ஆம் ஆண்டின் முந்தைய சட்டத்திலிருந்து ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.  ஏனெனில், பழைய சட்டம் மருத்துவரீதியான மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், பிறப்பின் போது வழங்கப்பட்ட அடையாளத்துடன் ஒத்துப்போகாத பாலின அடையாளத்தைக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரையறையைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்தச் சட்டத்திருத்தத்திற்கான அடிப்படைப் பின்னணிக் காரணம் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலினம் என்பது ஒருவரின் சுய விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்குக் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது என்றும், மாறாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உயிரியல் காரணங்களால் பாகுபாட்டை எதிர்கொள்பவர்களுக்கு மட்டுமே அத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வரையறையைத் துல்லியமாக்குவதன் மூலம் இதற்கான சலுகைகள் மற்றும் பலன்கள் சரியான முறையில் அடையாளம் காணப்பட்ட தகுதியுள்ள நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே  இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. 


இருப்பினும், இந்த வாதமானது இந்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்கின்றனர். பாலினத்தை உயிரியல்ரீதியாக மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெளிவாக நிராகரித்தது. குறிப்பாக, உயிரியல் பண்புகளே பாலினத்தை அடையாளம் காண்பதற்கான இறுதி அடிப்படை என்று கருதிய 'கார்பெட் எதிர். கார்பெட்' (1970) (Corbett vs Corbett (1970) case) வழக்கின் அணுகுமுறையை நிராகரித்தது. அதற்குப் பதிலாக, ஒரு நபரின் பாலின அடையாளம் என்பது முக்கியமாக அந்த நபரின் சுயமான உளவியல் புரிதல் மற்றும் சமூக அனுபவத்தால் உருவாவதே என்று நீதிமன்றம் கூறியது. இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21-வது பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுடன் பாலின அடையாளத்தை இணைப்பதன் மூலம், மருத்துவ அல்லது உயிரியல் சான்றுகள் தேவையின்றி தனிநபர்கள் தங்கள் பாலினத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை நீதிமன்றம் அங்கீகரித்தது. இச்சூழலில், கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தமானது நீதிமன்றம் மாற்ற நினைத்த அதே பழைய அணுகுமுறையை மீண்டும் கொண்டு வரும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பாலின அங்கீகாரத்தை உயிரியல் பண்புகள் அல்லது குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்திருப்பதன் அடிப்படையில் அமைப்பதன் மூலம், இந்த மசோதா சுய-அடையாளத்தைவிட உயிரியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த மாற்றம் வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல என்றும் இது உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலிருந்து, ஒருவரின் அடையாளத்தை அரசு சரிபார்க்கும் முறையாக மாற்றக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


இந்தச் சட்டத்திருத்தமானது பாலின அடையாளத்தை (Gender Identity) சட்டம் புரிந்து கொள்ளும் விதத்தில் உள்ள ஒரு ஆழமான சிக்கலை வெளிப்படுத்துகிறது. பல அறிஞர்களின் கருத்துப்படி, "திருநங்கை/திருநம்பி" (Transgender) என்பது ஒரு விரிவான சொல்லாகும். இதில் மருத்துவரீதியான அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள் உட்பட, பிறப்பின்போது அடையாளப்படுத்தப்பட்ட பாலினத்திலிருந்து மாறுபட்டு வாழும் பலதரப்பட்ட மக்கள் அடங்குவர். சமூக-கலாச்சாரக் குழுக்கள், பாலின அடையாளம் மற்றும் இடைப்பால் (Intersex) நிலைகள் போன்ற வெவ்வேறான கருத்துருக்களை உயிரியல் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சட்டத்தில் ஒன்றிணைப்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். இத்தகைய குழப்பமானது பாலின விதிமுறைகளுக்கு உட்படாத மக்களின் உண்மையான வாழ்வியல் அனுபவங்களை மறைப்பதோடு, சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்திற்குப் பதில் மருத்துவநிலைகளைச் சார்ந்த ஒன்றாக மாற்றிவிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


இத்தகைய ஒரு முக்கிய மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் சட்டமியற்றும் செயல்முறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. சட்டங்களை உருவாக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் பிரிவினருடன் முறையான ஆலோசனைகளை மேற்கொள்வது, அவர்களின் உண்மை வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்யவும், அதன் மூலம் அச்சட்டத்தின் நீதியையும் செயல்திறனையும் மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தியாவில் திருநங்கைகளுக்கான சட்ட வரைவுகள் முதல் 2019-ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது (Transgender Persons Protection of Rights Act (TG Act)) வரையிலான நகர்வுகள், திருநங்கையர் சமூகத்தினரை போதுமான அளவு இதில் ஈடுபடுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. முறையான உரையாடல் இன்றி அவர்களின் அங்கீகாரத்தை குறைக்க முயற்சிப்பது, விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் அதே ஜனநாயகக் குறைபாடுகளை மீண்டும் ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


இந்தத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள், சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் பாதுகாப்புகளைச் சரியாக வழங்குவதற்குத் தெளிவான வரையறைகள் அவசியம் என்கின்றனர். இருப்பினும், நிர்வாக வசதிக்காக ஒருவரின் அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. திருநங்கைகளாக அங்கீகரிக்கப்படுபவர்களின் தகுதியைக் குறைப்பது சட்டமியற்றுபவர்களின் உண்மையான நோக்கமாக இருக்கக்கூடாது என்றும் மாறாக, ஒருவரின் சுய-அடையாளத்தை மதிக்கும் அதே வேளையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


இறுதியாக, 2026-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு முக்கியத்துவம் என்பது அது முன்னிறுத்தும் 'அடையாளம்' சார்ந்த கருத்தைப் பொறுத்தே அமைகிறது. தேசிய சட்டப் பணிகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)), தன்னாட்சி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அமைந்த உரிமை சார்ந்த முறையை ஆதரித்தது. அதற்கு நேர்மாறாக, இந்தத் திருத்தம் மீண்டும் உயிரியல் மற்றும் சமூக அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழைய முறையைக் கொண்டுவருவது போல் தோன்றுகிறது. இதன் விளைவாக, ஒருவரது பாலின அடையாளத்தை அவரே தீர்மானிக்கும் சுய-தீர்மான அரசியலமைப்பு வாக்குறுதியானது மாறி, அது அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுப்பாட்டு முறையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 


சஷாங்க் மகேஸ்வரி, ஜிண்டால் சர்வதேச சட்டப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Original Link: Amendments to Trans Act go against constitutional rights. They must not be implemented.


Share: