நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திருத்தச் சட்டம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ல் (Transgender Persons (Protection of Rights) Act, 2019) முக்கிய மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டு தேசிய சட்டப்பணிகள் ஆணையம் vs இந்திய ஒன்றியம் (National Legal Services Authority v. Union of India - NALSA) இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'பாலினத்தை சுய-அடையாளம் காணும் உரிமையை' நீக்கவும், அதற்குப் பதிலாக அடையாள அங்கீகாரத்திற்காக 'மருத்துவச் சான்றிதழைப்' பெறுவதை நடைமுறைப்படுத்தவும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.
முக்கிய அம்சங்கள்:
• மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் (Social Justice and Empowerment) துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026-ஐ (Transgender Persons (Protection of Rights) Amendment Bill, 2026) கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் மாதம் 13-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். இருப்பினும், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர், இருபாலீர்ப்பு உடையவர் மற்றும் மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட LGBT+ (Lesbian, Gay, Bisexual, Transgender, and others) அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
• 2019-ஆம் ஆண்டின் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [Transgender Persons (Protection of Rights) Act, 2019], ஒரு நபர் பிறக்கும்போது ஒதுக்கப்பட்ட பாலின அடையாளத்துடன் ஒத்துப்போகாதவர்களை திருநங்கைகள் என வரையறுத்தது. ஆனால், தற்போதைய புதிய சட்டத் திருத்தமானது தங்களால் கட்டுப்படுத்த முடியாத உயிரியல் காரணங்களால் (Biological reasons) கடுமையான சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்பவர்களை மட்டுமே பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசு கூறுகிறது. இந்த அணுகுமுறையானது 2014-ஆம் ஆண்டிற்கு முந்தைய புரிதலுக்கு மீண்டும் செல்வது போல் உள்ளது, அதாவது ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்க உயிரியல் காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
• இந்த மசோதா திருநங்கைகளை மிகவும் குறுகிய வரம்பிற்குள் வரையறுக்கிறது. அதாவது, 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த பரந்த வரையறைக்குப் பதிலாக, சமூக-கலாச்சார அடையாளங்கள் கொண்டவர்கள் (கிண்ணர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா, பேடி போன்றவர்கள்) அல்லது குறிப்பிட்ட பிறவி உயிரியல் மாற்றங்களுடன் பிறந்தவர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது. குறிப்பாக, இதற்குமுன் இருந்த 'இடைநிலை பாலினத்தவர்' (intersex) என்ற விரிவான விளக்கத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக முதன்மை பாலின பண்புகள் (primary sexual characteristics), வெளிப்புற பிறப்புறுப்பு (external genitalia) மற்றும் குரோமோசோம்கள் (chromosomes) பாலின சுரப்பிகளின் வளர்ச்சி (Gonadal development) மற்றும் ஹார்மோன் உற்பத்தி அல்லது அதன் செயல்பாடு போன்ற மருத்துவரீதியான குறுகிய பட்டியலின் அடிப்படையில் மட்டுமே திருநங்கைகளை இந்த மசோதா வகைப்படுத்துகிறது.
• இந்த மசோதா ஒரு புதிய மற்றும் தனித்துவமான பிரிவை உருவாக்குகிறது: இதில் உடல் உறுப்புகளைச் சிதைத்தல் (mutilation), ஆண்மை நீக்கம் செய்தல் (emasculation), உடல் உறுப்பைத் துண்டித்தல் (amputation), அல்லது அறுவை சிகிச்சை (surgical), வேதியியல் (chemical) அல்லது ஹார்மோன் (hormonal) சிகிச்சை முறைகள் மூலம் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டோ (force), ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டோ, தூண்டப்பட்டோ, ஏமாற்றப்பட்டோ அல்லது தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தியோ திருநங்கை அல்லது திருநம்பி அடையாளத்தை ஏற்குமாறு வற்புறுத்தப்பட்டால், அந்த நபர் அல்லது குழந்தை இந்தப் புதிய பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• ஏப்ரல் மாதம் 2014-ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் திருநங்கைகளை "மூன்றாம் பாலினத்தவராக" அங்கீகரித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பின் மூலம், அவர்களைச் சமூகரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward Classes (SEBC)) கருதி, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)) தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமைந்ததால், இந்த முக்கியமான முடிவு "தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (NALSA) தீர்ப்பு" என்று அழைக்கப்படுகிறது.
• இந்தத் தீர்ப்பில், திருநங்கைகள் எதிர்கொள்ளும் பயம், அவமானம், சமூக அழுத்தம், மனச்சோர்வு மற்றும் களங்கம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு இன்மை), 19 (பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம்) மற்றும் 21 (வாழ்வு மற்றும் தனிநபர் சுதந்திரம்) ஆகியவற்றின்கீழ் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.
• மேலும், 2018-ஆம் ஆண்டில்தான் இந்திய உச்சநீதிமன்றம் தன்பாலின ஈர்ப்பை குற்றமற்றதாக்கியதன் மூலம் தனிநபரின் சுயாட்சி மற்றும் முடிவெடுக்கும் தனியுரிமையின் வரம்பை விரிவுபடுத்தியது. தன்பாலின உறவுகளைக் குற்றமாகக் கருதிய இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 377-ன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியதன் மூலம், இந்தச் சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், இந்தப் பிரிவு பாலினச் சிறுபான்மையினரான பால்புதுமையினர் (LGBTQ) சமூகத்தினரைத் துன்புறுத்துவதற்கும் அவர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டதையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
• 2021-ஆம் ஆண்டில், நேரடி பணி நியமன முறை மூலம் நிரப்பப்படும் அனைத்து வகையான அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல் மற்றும் ஒரே மாநிலமாக கர்நாடகா மாநிலம் திகழ்கிறது. இதற்காக, கர்நாடக மாநில அரசுப் பணிகள் (பொது ஆட்சேர்ப்பு) விதிகள், 1977-ன் [Karnataka Civil Services (General Recruitment) Rules, 1977] விதி 9-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளுடன் கூடுதலாக 'மற்றவர்கள்' (Others) என்ற தனிப்பிரிவைச் சேர்க்குமாறு மாநில குடிமைப்பணி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
Original Link: What was the Supreme Court’s verdict in National Legal Services Authority vs Union Of India, 2014?