டிஜிட்டல் உலகம் ஒரு தலைமுறையினரின் மகிழ்ச்சியைப் மெல்ல மெல்லப் பறித்துக் கொண்டிருக்கிறதா? 2026-ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, இதற்கான பதில் 'ஆம்' என்றே தோன்றுகிறது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் மேற்கு ஐரோப்பாவிலும் உள்ள இளைஞர்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே, அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு அவர்களின் மனநலத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், ‘Gallup’ நிறுவனம், ஐக்கிய நாடுகள் நிலையான வளர்ச்சி தீர்வுகள் இணைப்பு (United Nations Sustainable Development Solutions Network (UNSDSN)) மற்றும் ஒரு ஆசிரியர் குழு ஆகியவற்றுடன் இணைந்து வெளியிட்டுள்ள உலக மகிழ்ச்சி அறிக்கை 2026 (World Happiness Report 2026), சமூக ஊடகங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான உலகளாவிய உறவு குறித்த ஆழமான கருத்துக்களை வழங்குகிறது.
மனநிறைவு இல்லாத இளைய தலைமுறையினர்
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே வாழ்க்கை திருப்தி கடந்த பத்தாண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாக ‘Gallup’ நிறுவனத்தின் உலக வாக்கெடுப்பு (Gallup World Poll) தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 0 முதல் 10 வரையிலான அளவீட்டில் இது ஒரு புள்ளி வரை சரிந்துள்ளது. அதே சமயம் உலகின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களிடையே இந்த வாழ்க்கை திருப்தி அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் (Programme for International Student Assessment (PISA)) தரவுகளின்படி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைத் தவிர்த்து, 47 நாடுகளில் உள்ள 15 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே ஏழு வகையான இணைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், சமூக ஊடகங்களை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் மாணவர்களிடையே வாழ்க்கைத் திருப்தி மிக அதிகமாக இருப்பதும், சமூக ஊடகப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இந்தத் திருப்தி குறைந்து கொண்டே செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி தகவல் பரிமாற்றம், செய்திகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கங்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் வாழ்க்கையில் அதிக மனநிறைவோடு தொடர்புடையவை என்றும்; அதேசமயம் சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்குக்காக இணையத்தைப் பயன்படுத்துவது குறைந்த மனநிறைவோடு தொடர்புடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு இணையச் செயல்பாட்டையும் மிக அதிகமாகப் பயன்படுத்துவது குறைந்த மனநிறைவிற்கே வழிவகுக்கிறது. இது குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள மாணவிகளிடமும் மாணவர்களிடமும் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இணையத்தைப் பயன்படுத்தும் விதம் என்பது ஒரு முக்கியமான காரணியாகும்
லத்தீன் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, நாம் பயன்படுத்தும் சமூக ஊடகத் தளங்களின் வகை நமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, மக்கள் ஒருவரோடு ஒருவர் சமூகரீதியாக இணைவதற்கு உதவும் தளங்கள் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன. ஆனால், படிநிலைகள் மூலம் இயங்கும் உள்ளடக்கங்களைக் கொண்ட தளங்களை அதிகப்படியாகப் பயன்படுத்தும்போது அது மகிழ்ச்சியைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டம் (PISA) மற்றும் ‘Gallup’ ஆகியவற்றின் தரவுகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை அதிக நேரம் பயன்படுத்தும் நாடுகளில் உள்ள இளைஞர்களின் மனநலம் மற்றும் மகிழ்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உயர்வாக உள்ளது. அதேசமயம், சமூக ஊடகங்களை சராசரியாக அதிக மணிநேரம் பயன்படுத்தும் நாடுகளில் இளைஞர்களின் மனநலம் மிகக் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான மாற்றமாகத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது.
தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள், அதனைப் பயன்படுத்தாதவர்களை விடவும் மிகச் சிறந்த மனநலத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு மதிப்பீட்டின்படி, பதின்பருவத்தினர் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 2.5 மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியான நாடுகள்
உலக மகிழ்ச்சி அறிக்கையின் (World Happiness Report (WHR)) 14-வது பதிப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் நோர்டிக் (Nordic) நாடுகள் முதலிடத்தில் உள்ளன. பின்லாந்து 10-க்கு 7.764 சராசரி புள்ளிகளுடன் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சாதனை படைத்து உலகின் மகிழ்ச்சியான நாடாகத் நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. குறிப்பாக, கோஸ்டாரிகா (Costa Rica) 2023-ஆம் ஆண்டில் 23-வது இடத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி, தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது, இது ஒரு லத்தீன் அமெரிக்க நாடு பெற்ற மிக உயர்ந்த தரவரிசையாகக் கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 10-வது இடத்தைப் பிடித்து முதல் 10 நாடுகளின் (Top 10) பட்டியலுக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் கொசோவோ (Kosovo - 16-வது இடம்), ஸ்லோவேனியா (Slovenia - 18-வது இடம்) மற்றும் செக்கியா (Czechia - 20-வது இடம்) போன்ற நாடுகளும் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளன.
இருப்பினும், 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக, நியூசிலாந்து (11-வது இடம்), அயர்லாந்து (13-வது இடம்), ஆஸ்திரேலியா (15-வது இடம்), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (23-வது இடம்), கனடா (25-வது இடம்) மற்றும் இங்கிலாந்து (29-வது இடம்) போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகள் எதுவும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. மேலும், இவற்றில் பாதி நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றன. இந்தியா சராசரியாக 4.536 மதிப்பெண்களுடன் 116-வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையில், பெரிய போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் தரவரிசையில் தொடர்ந்து கடைசி இடங்களில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தரவரிசைப் பட்டியலானது மக்களின் வருமானம், ஆரோக்கியம், சமூக ஆதரவு, சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் நிலைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்க்கை முறை குறித்த மதிப்பீடுகளின் மூன்று ஆண்டு சராசரியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பெரிய அளவிலான பாதிப்புகள்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மைய இயக்குநரும், உலக மகிழ்ச்சி அறிக்கையின் ஆசிரியருமான ஜான்-இம்மானுவேல் டி நேவ் இது குறித்துக் கூறுகையில், சமூக ஊடகங்கள் நமது நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது நாம் எந்த தளங்களைப் பயன்படுத்துகிறோம், யார் பயன்படுத்துகிறார்கள், அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது என்று உலகளாவிய சான்றுகள் காட்டுகின்றன. சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது மனநலக் குறைபாட்டோடு தொடர்புடையது என்றாலும், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது சில நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிடுகிறார். இந்த சிக்கலான நிலையைத் தாண்டி, சமூக ஊடகங்களை உண்மையான அர்த்தத்தில் 'சமூகரீதியானதாக' (மக்களுடன் இணைப்பதாக) மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கண்டுபிடிப்புகள் உலகளாவிய சிக்கலான சூழலை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு இணையதள பாதுகாப்பை உறுதி செய்யப் பல நாடுகள் வலுவான சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கும் வேளையில் இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, டிசம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா 10 சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 13-லிருந்து 16-ஆக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளும் இத்தகைய விதிகளைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகின்றன. இந்தக் கொள்கைகளை முறையாக மதிப்பீடு செய்வதற்கு, இந்த அறிக்கையில் உள்ள ஆதாரங்கள் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Original Link: World Happiness Report 2026: The social media and happiness connect?