இந்தியா 450-க்கும் மேற்பட்ட இருவாழ்வி இனங்களின் (amphibian species) தாயகமாக உள்ளது. அவற்றில் பல, காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களால் இந்த நிலையை மாற்றி வருகின்றன. மேலும், சாதாரண குடிமக்களும் இப்போது இந்த முயற்சியில் பங்கேற்கலாம்.
மார்ச் 20 அன்று கடைபிடிக்கப்படும் உலகத் தவளை தினம் (World Frog Day), உலகின் அதிக எண்ணிக்கையிலான இருவாழ்விகளான தவளைகளின் பங்கைக் கொண்டாடுகிறது. தவளைகள் நன்னீர் மற்றும் நிலச் சூழல் மண்டலங்களுக்கு இடையேயான இடைமுகப்பில் வாழ்கின்றன, பூச்சிகளை உண்கின்றன, பதிலுக்கு அவை மற்ற முதுகெலும்பிகளால் உண்ணப்படுகின்றன. இதனால், பூச்சிகளின் உயிர்மப்பொருளை முதுகெலும்பிகளின் உயிர்மப்பொருளாக மாற்றுவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தவளைகளை இழந்தால், தாவரங்களை வேட்டையாடும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், அதேநேரத்தில் நிலத்தில் வாழும் பல முதுகெலும்பிககளுக்கான உணவு ஆதாரம் குறைவதற்கும் வழிவகுக்கும். இது நன்னீர் மற்றும் நிலச் சூழல் மண்டலங்கள் இரண்டையும் சரிசெய்ய முடியாத அளவிற்குச் சேதப்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக, 1980-களிலிருந்து, தவளை மற்றும் பிற இருவாழ்விகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருகிறது. 2023-ல், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) உலகளாவிய நீர்நில வாழ் உயிரினங்கள் மதிப்பீட்டு அறிக்கை, 37 இனங்கள் அழிந்துவிட்டதாகவும், அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறியது. இதனால், இருவாழ்விகள் இப்போது முதுகெலும்பிகளிலேயே மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான குழுவாகக் கருதப்படுகின்றன.
இருவாழ் உயிரினங்களின் எண்ணிக்கைக் குறைவதற்கான முக்கிய வரலாற்று காரணம், சைட்ரிடியோமைகோசிஸ் (chytridiomycosis) எனப்படும் ஒரு நோயாகும். இது தவளைகளில் பாட்ராகோகைட்ரியம் டெண்ட்ரோபாட்டிடிஸ் (Batrachochytrium dendrobatidis (Bd)) என்பதாலும், சாலமண்டர்களில் பாட்ராகோகைட்ரியம் சாலமாண்ட்ரிவோரன்ஸ் (Batrachochytrium salamandrivorans (Bsal)) என்பதாலும் ஏற்படும் ஒரு பூஞ்சை நோயாகும். இந்த நோய் அவற்றின் தோலைப் பாதிக்கிறது. இருவாழ் உயிரினங்களுக்குத் தோல் ஒரு மிக முக்கியமான உறுப்பாக இருப்பதால், இது அவற்றைப் பாதுகாப்பதுடன், சுவாசிப்பதற்கும், எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க அயனிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும் ஒரு உறுப்பாக அமைகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், உலகளவில் 60%-க்கும் மேற்பட்ட நீர்நில வாழ் உயிரினங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் 63 இனங்களின் அழிவுகரமான அபாயத்தைக் குறைத்து, பாதிப்பைப் பாதியாகக் குறைத்துள்ளன.
ஆனால் இன்று, 39% இனங்களின் அழிவுக்கு காலநிலை மாற்றமும், 37% இனங்களின் அழிவுக்கு வாழ்விட இழப்புமே மிக முக்கியமான காரணிகளாக உள்ளன.
இந்தியச் சூழல்
இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட இருவாழ்வினங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய கால் பங்கு 'அச்சுறுத்தலுக்கு உள்ளானவை' (threatened) என்றும், ஐந்தில் ஒரு பங்கு 'தரவுப் பற்றாக்குறை உள்ளவை' (data deficient) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பா.டெண்ட்ரோபாட்டிடிஸ் (B.dendrobatidis) மற்றும் பா.சாலமாண்ட்ரிவோரன்ஸ் (B.salamandrivorans) பூஞ்சைகளின் தாக்கம் கணிசமானதாக இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தவளைகளுக்கு ஏற்பட்டதைப் போல இது பெருமளவிலான இறப்பை ஏற்படுத்தவில்லை.
பா.டெண்ட்ரோபாட்டிடிஸ் மற்றும் பா.சாலமாண்ட்ரிவோரன்ஸ் ஆகிய இரண்டுமே ஆசியாவில் தோன்றி, தவளைக் கால்கள் மற்றும் சாலமண்டர்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் வர்த்தகத்தின் மூலம் உலகெங்கிலும் பரவின. 1987-ல், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தைச் (Bombay Natural History Society) சேர்ந்த ஹுமாயூன் அப்துல் அலி, விவசாயப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அவற்றின் பங்கை எடுத்துரைக்கும் ஒரு அறிவியல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, இந்த வர்த்தகம் தடை செய்யப்பட்டது. இருப்பினும், அதற்குள், பா.டெண்ட்ரோபாட்டிடிஸ் ஆசியாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்குப் பரவியதால், தவளை மற்றும் சாலமண்டர் இனங்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் நிலைமையே சற்று தனித்துவமானது. 2015 வரை, பா.டெண்ட்ரோபாட்டிடிஸின் நிலை குறித்து விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. 2023-ல்தான் அதற்கான கண்டறியும் சோதனை முறை வெளிவந்தது. இருப்பினும், இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் இருவாழ்விகளின் இறப்புகள் பெரிய அளவில் பதிவு செய்யவில்லை என்றாலும், கடந்த இருபது ஆண்டுகளில் இருவாழ் உயிரினங்களின் நிலை மேம்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டறியவில்லை. எந்தவொரு உயிரினத்தைப் பற்றியும் நீண்டகால கண்காணிப்புத் தரவுகள் அவர்களிடம் இல்லாததால், அதற்கான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிவது கடினமாக உள்ளது.
உண்மையில், உலகளவில் 'தரவுப் பற்றாக்குறை' (data deficient) உள்ள இருவாழ் உயிரினங்களில் கணிசமான பங்கு இந்தியாவில்தான் உள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள 157 அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களில், ஆறு மட்டுமே 1972-ம் ஆண்டின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஏற்படும் காலநிலை மாற்றமும் ஒரு கடுமையான சவாலாக உள்ளது. பருவ காலங்களுக்கும், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இயற்கை சுழற்சிகளுக்கும் இடையே ஏற்படும் பொருத்தமின்மை ஒரு பொதுவான விளைவாகும். உதாரணமாக, முன்கூட்டியே தொடங்கும் பருவமழையைத் தொடர்ந்து வரும் நீண்ட வறண்ட காலம், இனப்பெருக்கத்தை மோசமாகப் பாதிக்கக்கூடும். அதே நேரத்தில், பல பிராந்தியங்களில் மேற்பரப்பு நீர் மட்டங்கள் அல்லது இருவாழ்விகளின் எண்ணிக்கை குறித்த நீண்டகாலத் தரவுகள் விஞ்ஞானிகளிடம் இல்லை. இந்தத் தரவுகளின் பற்றாக்குறையால், காலநிலை மாற்றம் இருவாழ்விகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.
கவனிக்க வேண்டிய நேரம்
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்தியாவை வந்தடைகிறது. இந்தப் பருவம் தவளைகளின் சத்தம் ஒலியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், முதிர்ந்த ஆண் தவளைகள் துணையை ஈர்ப்பதற்காகக் சத்தம் இடுகின்றன. பெண் தவளைகள் பல ஆண் தவளைகளுடன் இணைந்து, தங்கள் முட்டைகளை நீரில் இடுகின்றன. சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தத் தீவிரமான இனப்பெருக்கச் செயல்பாடு விரைவாகக் குறைகிறது. அப்போது, தாமதமாக இனப்பெருக்கம் செய்யும் சில தவளைகளும், முதல் முறை இனப்பெருக்கம் செய்யும் தவளைகளும் இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து முதிர்ந்த இருவாழ்விகளும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யாவிட்டாலும், இந்த அதிக இனப்பெருக்கச் செயல்பாடு ஒட்டுமொத்த இனத்தின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இனப்பெருக்கச் செயல்பாட்டின் நோக்கம், அதிக எண்ணிக்கையிலான தலைப்பிரட்டைகளை உருவாக்குவதாகும். இந்தத் தலைப்பிரட்டைகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் செழித்து வளரும் பாசிகளை அதிக அளவில் உணவாக உட்கொள்கின்றன. இதன் விளைவாக, அவை விரைவாக வளர்கின்றன. சிறிது காலத்திற்குப் பிறகு, அவை உருமாற்றத்தின் மூலம் தங்கள் வடிவத்தை மாற்றிக்கொண்டு, அவை சிறிய தவளைக்குஞ்சுகளாக மாறுகின்றன. பின்னர் அவை நீரிலிருந்து நிலத்திற்கு நகர்கின்றன. இந்த நிலையில், மற்ற விலங்குகளால் உண்ணப்படுவதால் அவற்றில் பல இறந்துவிடுகின்றன. தவளைகளின் குறுகிய ஆயுட்காலம் காரணமாக, மழை மற்றும் ஓடைகள், குட்டைகளில் மேற்பரப்பு நீர் கிடைக்கும் நேரத்துடன் அவற்றின் சிக்கலான இனப்பெருக்க நடத்தைகளின் நேரம் மிகவும் முக்கியமானதாகும்.
வேறு சில முக்கியமான பாதுகாப்பு முயற்சிகளில், 1985-ல் மேற்கு வங்கத்தின் ஜோரேபோக்ரியில் சாலமண்டர் சரணாலயம் (salamander sanctuary) உருவாக்கப்பட்டது. தற்போது அங்கு இனப்பெருக்கத்திற்கான கூட்டம் இல்லை என்றாலும், 2011-ல் கல்வி நோக்கங்களுக்காகத் தவளைகளை அறுத்துப் பார்ப்பதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு தடை விதித்தது. மேலும், டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு மிருகக்காட்சிசாலையில் இமாலய சாலமண்டர்களுக்காக (Himalayan salamanders) நடைபெற்றுவரும் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டம் ஆகியவை அடங்கும்.
பங்கேற்பதற்கான வழிகள்
சமீபகாலங்களில் பல வெற்றிக் கதைகள் உருவாகியுள்ளன. அவற்றுள், உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கே.வி. குருராஜாவால் ஒருங்கிணைக்கப்பட்ட 'மலபார் மரத் தவளை வரைபடத் திட்டம்' (Mapping Malabar Tree Toad Project) என்ற குடிமக்கள் அறிவியல் திட்டம் ஆகும். மற்றொரு உதாரணம், கேரளாவின் மூணாரில், கனன் தேவன் ஹில்ஸ் பிளான்டேஷன்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த எஸ். ஹரிகிருஷ்ணன் மேற்கொண்ட இருவாழ்விகள் மீட்புத் திட்டம் மற்றும் பர்கா சுப்பா தலைமையிலான இமாலய சாலமண்டர் பாதுகாப்புத் திட்டம் (Himalayan Salamander Conservation Project) ஆகியவை அடங்கும். இத்திட்டத்தில், அவர் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CSIR-Centre for Cellular and Molecular Biology(CSIR-CCMB)), ஒரு நீண்டகாலத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டம் நீரோடைத் தவளைகளைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்கிறது. மகாராஷ்டிர மாநில வனத்துறையுடனான கூட்டு முயற்சியாக, தில்லாரி பாதுகாப்புப் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா (Padmaja Naidu Himalayan Zoo) மற்றும் நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park) ஆகியவையும் தங்கள் விலங்கு சேகரிப்புகளின் இருவாழ்விகளை முக்கியமாகக் காட்சிப்படுத்துவதோடு, பார்வையாளர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், பல இளம் தொழில் வல்லுநர்கள் பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தனது அரசியலமைப்பில் பாதுகாப்பு நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு தேசத்தில், குடிமக்கள் பங்கேற்க பல வழிகள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் தனது நேரத்திலிருந்து சில நிமிடங்களை ஒதுக்கி, நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஆரோக்கியமான மற்றும் நோய்வாய்ப்பட்ட தவளைகளின் ஒலிகளைப் பதிவு செய்யலாம் அல்லது புகைப்படம் எடுத்து, அவற்றை iNaturalist போன்ற குடிமக்கள் அறிவியல் வலைத்தளங்களில் பகிரலாம். இத்தகைய நடவடிக்கைகள், புலிகள் மற்றும் பாண்டாக்கள் போன்ற ஒரு சில பிரபலமான உயிரினங்கள்மீது மட்டும் கவனம் செலுத்துவதிலிருந்து மாறுபட்டதை கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ள உதவும்.
இன்னும் சில மாதங்களில் பருவமழை வரவிருக்கிறது. இருவாழ் உயிரினங்களின் பாதுகாப்பில் நாம் நமது பங்கை ஆற்ற வேண்டும்.
கார்த்திகேயன் வாசுதேவன், ஹைதராபாத்தில் உள்ள CSIR-செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் தலைமை விஞ்ஞானி ஆவார். அவர் ஒரு ஊர்வனவியல் நிபுணர். அவர் இருவாழ்விகளைப் பாதிக்கும் நோய்களின் சூழலியலை ஆய்வு செய்கிறார்.
Original Link: India’s frogs are finding allies from citizen science to sanctuaries