இந்தியாவின் எதிர்கால மக்கள்தொகை சவால்கள் -எஸ். இருதய ராஜன், ஜே. ரெத்னகுமார்

அதிகரித்துவரும் வயதானோர் மக்கள்தொகையானது, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பின்மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக, அரசின் நிதிநிலையில் ஒரு சுமை உருவாகும்.


சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை ஆகியவற்றால் வெளியிடப்பட்ட 'இந்தியாவின் மக்கள்தொகை எதிர்காலத்தை வெளிக் கொண்டு வருதலின் மூலம்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மக்கள்தொகைக் கணிப்புகள், 2021-2051' என்ற தலைப்பிலான ஒரு புதிய அறிக்கை, நாடு முழுவதும் வெளிப்படத் தொடங்கியுள்ள மக்கள்தொகை அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை 2021-ல் 1,355.8 மில்லியனிலிருந்து 2051-ல் 1,590.1 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் சராசரி ஆண்டு அதிகரிப்பு 0.5% ஆகும். இது, மக்கள்தொகை வளர்ச்சி மெதுவாக இருக்கும் ஒரு நீண்டகாலத்தைக் குறிக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் முந்தைய மதிப்பீடுகளைவிடக் குறைவாக இருப்பதால், ஒரு காலத்தில் அரசியல் மற்றும் கல்வி விவாதங்களில் ஆதிக்கம் செலுத்திய மக்கள்தொகை அதிக  அச்சுறுத்தலை இந்தியா எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்ற வாதத்தை இது வலுப்படுத்துகிறது. இந்தக் கணிப்புகள் ஒரு திருப்புமுனையைச் சுட்டிக்காட்டுகின்றன. இதில் இந்தியா, இளைஞர்களை மையமாகக் கொண்ட, வேகமாக விரிவடைந்து வரும் மக்கள்தொகைக் கட்டமைப்பைக் கடந்து, அதிக நகரமயமான, சீராக வயதாகும் மற்றும் சமநிலையான மக்கள்தொகைக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு காலத்திற்குள் நுழையத் தயாராக உள்ளது.


பள்ளிகளுக்கான ஒரு சிக்கல்


முன்கணிப்புகள்படி, முன்பள்ளி வயதுக்குட்பட்ட (0-4 வயது) குழந்தைகள் எண்ணிக்கை 2021-ல் 113.5 மில்லியனிலிருந்து இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 8.6 மில்லியனாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆரம்பப்பள்ளி சேர்க்கை ஏற்கனவே நிறைவடைந்து உள்ளதால், புதிய பள்ளி வசதிகளுக்கான தேவை, அரசு துறையில், குறையக்கூடும். பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தால், குறைந்த மாணவர் சேர்க்கையால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத ‘பொருளாதாரமற்ற பள்ளிகளின்’ (uneconomic schools) எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதனால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயமும் உருவாகலாம். இந்த நிலை கேரள மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படுகிறது.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கும் ஆதாரங்கள், குறைந்து வரும் கருவுறுதல் விகிதங்கள் ஏற்கனவே பள்ளிக்கல்வித் தேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், வகுப்பறைகள் சிறிய மாணவர் குழுக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றன. கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (Unified District Information System (UDISE)) மற்றும் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள், கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன. 2014-15-ஆம் ஆண்டில் 11.07 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-24-ஆம் ஆண்டில் 10.18 லட்சமாகச்  குறைந்துள்ளது. இது நாடு முழுவதும் 90,000 பள்ளிகள் குறைந்திருப்பதைக் குறிக்கிறது. இந்த வீழ்ச்சிக்கு இணையாக, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஒரு அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது; இதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2.88 லட்சத்திலிருந்து 3.31 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 43,000 பள்ளிகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.


பிறப்பு விகிதங்கள் குறைந்து வருவதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, பல பள்ளிகள் மூடப்பட்டு வரும் அதே வேளையில், குடும்பங்களின் அளவு குறைந்திருப்பதும் கல்வியை வழங்கும் பொருளாதாரத் திறன் மேம்பட்டிருப்பதும் தனியார் பள்ளிகளுக்கான தேவையைத் தீவிரப்படுத்தியுள்ளன. பல பெற்றோர் தங்களுக்கு கிடைக்காத கல்வியை தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள். சமூக அழுத்தமும், அரசு பள்ளிகள் தரத்தில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் குறைவாக உள்ளன என்ற பொதுவான எண்ணமும் இதற்கு முக்கியக் காரணமாக இருந்து வருகின்றன.



முதுமையடைந்து வரும் மக்கள் தொகை


மக்கள் தொகை பலன் (Demographic Dividend) என்பது பெரும்பாலும் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையையே (15-59 வயது) சார்ந்திருப்பதால், இந்த வயது குழுவின் விகிதம் அதிகமாக இருந்தால், பொருளாதார வளர்ச்சி வேகமாகும். இது China, Japan, மற்றும் South Korea போன்ற நாடுகளின் வளர்ச்சியில் தெளிவாக  தெரிகிறது. உலகின் மிகப்பெரிய உழைக்கும் சக்திகளில் ஒன்றை இந்தியா கொண்டுள்ளது; இது 2021-ல் 833.8 மில்லியனாக (65.2%) இருந்தது. இது 2041-ல் 1,009.0 மில்லியன் (65.5%) என்ற உச்சத்தை எட்டும் என்றும், பின்னர் 2051-ல் 998.1 மில்லியனாக (62.8%) குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2041-க்குப் பிறகு மக்கள் தொகை பலனுக்கான வாய்ப்புக் காலம் (window) முடிவடையக்கூடும் என்ற கவலை உள்ளது. எனவே, அது பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கும் பயன் குறையும் முன்பே அதைச் சிறப்பாக பயன்படுத்துவது முக்கியமானதாகிறது. இருப்பினும், 2051-க்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு 10 பேரில் 6 பேர் வேலைக்குழுவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு நல்ல அறிகுறியாகும்.


ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை முதிர்ச்சி அடைந்து வருகிறது. 2021-ல், 60 வயதுக்கு மேற்பட்டோர் 130.5 மில்லியன் (9.62%) ஆக இருந்தனர். 2051-க்குள், இந்த எண்ணிக்கை 325.3 மில்லியன் (20.5%) ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை காட்டுகிறது. மக்கள் தொகையை வயதின் அடிப்படையில் சரிசமமாகப் பிரிக்கும் அளவுகோலான 'இடைநிலை வயது' (Median Age), 2021-ஆம் ஆண்டில் இருந்த 28 வயதிலிருந்து 2051-ஆம் ஆண்டிற்குள் 40 வயதாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மக்கள் தொகையியல் மாற்றத்தின் (Demographic Transition) ஒரு  முக்கிய கட்டத்தை நோக்கி நகர்வதை சுட்டிக்காட்டுகிறது. அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகையானது சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகள்மீது அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தவிருப்பதுடன், அதன் விளைவாக மாநிலத்தின் நிதிநிலையின்மீதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்  சூழலை  உருவாக்கியுள்ளது.




கொள்கை சார்ந்த அறிகுறிகள்


குழந்தைகள் எண்ணிக்கை குறைவதால், பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் மேம்படும் மற்றும் கட்டமைப்பு வசதிகள் (infrastructure) விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிறப்பு விகிதம் குறைவதால் மகப்பேறு சிகிச்சை சேவைகளின் தேவையும் குறைந்து, சுகாதார அமைப்பு வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி, சிறந்த மேம்பட்ட சிகிச்சையை வழங்க முடியும். இருப்பினும், கருத்தரிப்பு விகிதம் குறைந்து கொண்டிருந்தாலும், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பங்களைத் தடுப்பதற்கும், அதேவேளையில் மலட்டுத்தன்மையைக் குறைத்து பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கும் தொடர் முதலீடுகள் முக்கியமானதாகின்றன.


நவீனகால சவால்களை சமாளிக்க, இந்தியா தனது கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு (skill development) அமைப்பை முழுமையாக மாற்ற வேண்டும். மேலும், வரும் ஆண்டுகளில் மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic Dividend) குறையும் முன், இளைஞர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தக்கூடிய திறன்களுடன் தயாராக இருக்க வேண்டும். வேலைக்குச் செல்லக்கூடிய வயதுடைய மக்களின் எண்ணிக்கை குறைவதை, பெண்களை அதிக அளவில் முறையான வேலைவாய்ப்புகளில் சேர்த்தல் (gender dividend) மூலம் சமநிலைப்படுத்தலாம். அதேசமயம், தரமான வேலைவாய்ப்புகளுக்கான அணுகலை (access) விரிவுபடுத்தவும் வேண்டும். மூத்த குடிமக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், இந்தியாவின் நிதி மற்றும் சுகாதார அமைப்புகள், குறிப்பாக வயதானோர் பராமரிப்பு (geriatric care), அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும். இதேநேரத்தில், இது “வெள்ளிப் பொருளாதாரம்” (silver economy) எனப்படும் புதிய பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.  இது எதிர்காலத்தில் இரண்டாவது மக்கள்தொகை பலனை (second demographic dividend) வெளிக்கொண்டுவர உதவும்.


எஸ். இருதய ராஜன், கேரளத்திலுள்ள சர்வதேச குடியேற்றம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக உள்ளார். ஜே. ரத்னகுமார், கேரளத்திலுள்ள சர்வதேச குடியேற்றம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளராக உள்ளார்.



Original Link: India’s future demographic challenges 


Share: