மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்காக. - குர்பச்சன் சிங்

நான்கு புதிய தொழில்துறைகள் பொருளாதார வளர்ச்சியையும், சமூகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் மேம்படுத்த முடியும்.


முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் அவரது இணை ஆசிரியர்கள், தங்கள் புதிய ஆய்வில் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவது போல சுமார் 6 சதவீதம் அல்லாமல், 2011 முதல் 2023 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக சுமார் 4 முதல் 4.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. வளர்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதைப் பற்றி விவாதித்த பிறகு, இப்போது கவனம் கொள்கையின் பக்கம் திரும்புகிறது. கொள்கை முடிவுகள் எவ்வாறாயினும் முக்கியமானவை.


மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதத்தை நாம் எவ்வாறு உயர்த்த முடியும்? மேலும், உலக மகிழ்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில் (World Happiness Report) இடம்பெற்றுள்ள 147 நாடுகளில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. இந்த விவரம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 'மகிழ்ச்சி' ஒரு பாடமாகவே கற்பிக்கப்படும் இக்காலகட்டத்திலும், இந்த உண்மை புறக்கணிக்கப்படுவது வியப்புக்குரியது. இங்கு வலியுறுத்தப்படுவது மரபுசாரா சிந்தனைகள் மீதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் அதிகரிக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைகள் மீதும் ஆகும்.


இந்தியாவில் உள்ள நான்கு "புதிய" தொழில்துறைகளை நாம் இப்போது ஆராய்வோம். இவை தற்போது மிகச் சிறிய அளவிலேயே உள்ளன. அவை குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்புத் தொழில் (safety industry), தூய்மைத் தொழில் (cleanliness industry), இடமாற்றத் தொழில் (relocation industry) மற்றும் மன அமைதி/ஓய்வுத் தொழில் (relaxation industry) ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த நான்கு தொழில்துறைகளையும் இணைக்கும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது.


உண்மையில், இந்தத் துறைகளிடமிருந்து கூடுதல் சேவைகளுக்கு வலுவான மற்றும் அவசரத் தேவை உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் குறைவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் பல வளங்கள் உள்ளன. இதன் காரணமாக, விநியோகத்தை அதிகரிக்க உண்மையான சாத்தியக்கூறு உள்ளது. இந்தத் துறைகள் வளர்ந்தால், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிக்க முடியும். இந்த வளர்ச்சி மக்களின் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும்.


பாதுகாப்புத் தொழில் (Safety industry)


பாதுகாப்புத் தொழிலிருந்து நாம் தொடங்குவோம். இந்தியா முழுவதும் பாதுகாப்பின்மை என்பது எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினையாகும். மேலும், "இயற்கைப்" பேரழிவுகளிலிருந்து நமக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இறுதியாக, சாலை மோதல்கள் (road rage), கூட்ட நெரிசல்கள், எரிவாயு கசிவுகள், இணைய ஊடுருவல்கள் (hacking), மோசடிகள், ஆக்கிரமிப்புகள், கந்துவட்டி கும்பல்கள் போன்ற தற்செயலான "காரணிகளிலிருந்து" குடிமக்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதற்கான கொள்கைசார்ந்த தீர்வை அறிந்துகொள்ள, நாம் இப்போது சில எளிய பொருளாதாரக் கோட்பாடுகளைச் சற்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.


முதலில், ஒரு எளிய உதாரணத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பிற்குத் தேவைப்படும் ஒரே உள்ளீடு (input) மனிதவளம் (manpower) மட்டுமே தேவைப்படுகிறது. இதற்கான செலவை ஈடுகட்ட, மக்கள் தாங்கள் வாங்கும் மற்ற எண்ணற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவை மிகச் சிறிய அளவில் குறைத்துக்கொண்டு, பாதுகாப்புச் சேவைக்காகச் சற்று கூடுதலாகச் செலவிட அவர்களை நாம் ஊக்குவிக்கலாம். இதன் விளைவாக, பாதுகாப்புத் தொழில் விரிவடையும்போது, ​​வேலையில்லாமல் இருந்த சிலருக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். இதனால் ஒட்டுமொத்தத் தேவை (aggregate demand) குறைந்துவிடாமல் பராமரிக்கப்படுவது மட்டுமல்லாமல், உண்மையில் அது மேலும் அதிகரிக்கவே செய்கிறது. பாதுகாப்புத் தொழிலிருந்து வெளிவரும் சேவைகளின் வெளியீடும் அதிகரிக்கிறது.


இது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) மக்களின் மகிழ்ச்சிக்கும் முக்கியப் பங்களிக்கிறது. கூடுதல் உள்ளீடுகளில் மனிதவளம் மட்டுமல்லாமல், பொருட்கள் மற்றும் உபகரணங்களும் அடங்கும் என்ற பொதுவான சூழலில், பாதுகாப்புத் துறையில் சாத்தியமாகக்கூடிய அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அது இப்போதும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. அடுத்து, நாம் தூய்மைத் தொழில் குறித்துக் காண்போம். 


அரசாங்கம் 2014-ம் ஆண்டில் 'தூய்மை இந்தியா இயக்கம்' (Swachh Bharat Mission) ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால் நடைமுறையில், அது முக்கியமாக திறந்தவெளியில் மலம் கழிப்பதைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது. இன்னும் பரந்த நோக்கில் பார்த்தால், பொது இடங்களில் தூய்மை என்பது இன்றும் ஒரு தீவிரமான பிரச்சினையாகவே நீடிக்கிறது. தூசி, கழிவுகள், கட்டுமான இடிபாடுகள், நீர் தேக்கம், புகை போன்ற முக்கியமான கவலைக்குரிய அம்சங்கள் இங்கு உள்ளன. தூய நீரின் தேவையை எவ்வளவு வலியுறுத்தினாலும் அது மிகையாகாது. காற்றின் தரக் குறியீட்டை (Air Quality Index (AQI)) கணிசமான அளவில் குறைக்க வேண்டியது அவசியமாகும்.


சுத்தத் துறையை விரிவுபடுத்துவதன் பொருளாதாரம், முன்னர் விளக்கப்பட்ட பாதுகாப்புத் துறையின் பொருளாதாரத்தைப் போன்றது. எனவே, அது இங்கே மீண்டும் விவாதிக்கப்படவில்லை. அடுத்து, இடமாற்றத் தொழிலை (Relocation industry) நாம் கருத்தில் கொள்வோம். இந்தியாவில் உள்ள பெருநகரங்கள், பெரும்பாலும் மக்கள் நெருக்கடியால் திணறுகின்றன.


இடமாற்றத் தொழில் (Relocation industry)


இந்த நெரிசலுக்கு ஒரு முக்கிய காரணம் நிலத்தின் அதிகப்படியான விலையாகும். இந்நிலை ஏற்படுவதற்கு, இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிகளில் பல இடங்களில் நிலவும் மனை வணிக துறையின் 'உரிம ஆட்சி' (License Raj) போன்ற காரணிகளே காரணமாக அமைகின்றன. மறுபுறம், 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்,-2013' (Land Acquisition Act) போன்ற காரணிகளால் கிராமப்புற நிலங்களின் விலையும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும், மாநில அளவில் இச்சட்டத்தில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நில விலைகள் உயர்வாக இருப்பதற்கு மற்றொரு கூடுதல் காரணியும் உள்ளது.


இந்த நிலைமை நிதித்துறையில் ஒரு வகையான நிதி அடக்குமுறையாகும் (financial repression). இது மனை வணிக போன்ற மாற்றுச் சொத்துக்களுக்கான வலுவான தேவையை அதிகரிக்கச் செய்யும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பொது அதிகார அமைப்புகள் கூட, நிலங்களை மிகப்பிரம்மாண்டமான அளவில் 'குவித்து' (hoarding) வைத்துக்கொண்டுள்ளன. இந்தியாவில் நிலங்கள் கணிசமான அளவில் முழுமையாகப் பயன்படுத்தப்படாமலும், தவறான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டும் உள்ளன. விவசாயிகளிடம் அதிக 'சந்தை' விலையைக் கொண்ட நிலங்களை  வைத்துக்கொண்டாலும், அவற்றின் அடிப்படைப் பயன்பாட்டு மதிப்பு குறைவாகவே உள்ளது. இதனால் அவர்களின் விவசாய வருமானம் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக அவர்கள் கவலையுடன் உள்ளனர்.


மறுபுறம், நகர்ப்புற மக்கள் சிறிய அளவிலான, அதிக விலை கொண்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். குடிமக்களில் பெரும்பகுதியினர் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளிலும், குடிசைப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்களும் மகிழ்ச்சியற்ற நிலையிலேயே உள்ளனர். மொத்தத்தில் நாட்டிற்குப் போதுமான அளவு நிலம் இருந்தபோதிலும், இத்தகைய நிலை நிலவுகிறது. கொள்கைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு மாற்றம், நிலத்தின் சராசரி விலையைக் குறைக்கக்கூடும். புதிய மலைவாழ் நிலங்கள் உள்ளடக்கிய புதிய நகரங்களை உருவாக்கலாம். அல்லது தற்போதுள்ள சிறிய நகரங்களை முறையாக விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம். 


இந்த முயற்சியில் திறமையான மனை வணிக மேம்பாட்டாளர்கள் ஈடுபட வேண்டும். அவர்களால் ஒரு முழுமையான சூழலமைப்பை உருவாக்க முடியும் அல்லது வழிகாட்ட முடியும். அத்தகைய சூழலமைப்பில், மக்கள் படிப்படியாக புதிய இடங்களுக்குச் செல்லத் தயாராக இருப்பார்கள். இடமாற்றம் ஒரே நேரத்தில் நடக்காமல், ஒவ்வொரு நிலையாக நடக்க வேண்டும். இதன் மூலம், திட்டமிட்ட வகையிலான கட்டுமானப் பணிகளை அதிகரிக்கவும், உயர்ந்த உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மகிழ்ச்சியைப் பெறவும் நம்மால் இயலும்.





ஓய்வுத் தொழில் (Relaxation industry)


இதுவரை நாம் பாதுகாப்புத் தொழில், தூய்மைத் தொழில், மற்றும் நிலத்தின் விலையைக் குறைக்கக்கூடிய இடமாற்றத் தொழில் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுள்ளோம். இவை அனைத்தும் ஓய்வுத் தொழிலை விரிவுபடுத்துவதற்குப் பயனுள்ளதாக இருக்கும். இது மிகவும் மாறுபட்ட கலவையை உள்ளடக்கியது. இதில் அதிக பொதுப் பூங்காக்கள், திரையரங்குகள், மன்றங்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு வளாகங்கள், விடுமுறைத் தலங்கள் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவை அடங்கும். இதை மேலும் விரிவுபடுத்தி, நமது சொந்த வடிவிலான மதுபான விடுதிகளைக்கூட உருவாக்கலாம். தூய்மையான காற்றும் சிறந்த சுற்றுப்புறமும் நமக்குக் கிடைக்கும்போது, ஓய்வுத் தொழிலில் சிக்கனமான திறந்தவெளி சிற்றுண்டிச்சாலைகளும் உள்ளடக்கும். இப்போது ஓய்வுத் தொழிலில் முற்றிலும் மாறுபட்ட அம்சத்தைப் பார்ப்போம். ஓய்வுக்கு நேர்மாறானது மன அழுத்தம் (stress) ஆகும். பலருடைய வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வேறு சிலர், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைச் சகித்துக்கொள்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகள் அதிக நேரத்தையும் பணத்தையும் விரையப்படுத்துவதால், அவர்கள் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர்க்கின்றனர்.


சில பொதுச் செலவினங்களை மறுஒதுக்கீடு செய்வதன் மூலமும், சில கொள்கைகளை மாற்றுவதன் மூலமும் நீதித்துறையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மக்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள், அவர்களால் தங்கள் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். அவர்களின் உரிமைகளில் தெளிவு கிடைக்கும். மேலும், வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். இது அதிக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது.


கட்டுரையாளர் ஒரு தன்னிச்சை பொருளாதார நிபுணர். இவர் அசோகா பல்கலைக்கழகம், ISI (டெல்லி) மற்றும் JNU ஆகியவற்றில் கற்பித்துள்ளார்.


Original Link: For GDP growth that spurs happiness.


Share: