தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (Information Technology Act) பிரிவு 69A-ன்படி, (Section 69A of the IT Act, 2000) சமூக ஊடகங்களில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தடுக்கும் அல்லது முடக்கும் அதிகாரம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் (IT Ministry) மட்டுமே உள்ளது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்த அதிகாரத்தை மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை ஆகிய அமைச்சகங்களுக்கும் வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
• இந்த மாற்றத்தினால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பாதிக்கப்படும் என்கின்றனர். ஏனெனில், பல்வேறு அரசு துறைகளிடமிருந்து உள்ளடக்கங்களைத் தடை செய்யக் கோரும் உத்தரவுகள் இனி இந்த தளங்களுக்கு நேரடியாக வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
• இணையத்தில் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக, சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இரண்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
• தற்போது ஐந்து அமைச்சகங்கள் இது குறித்து பரிசீலித்து வந்தாலும், வரும் காலங்களில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளும் இதில் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களை நீக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நேரடியாக உத்தரவிடும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பாக, இணையதள பிரபலங்கள் (influencers) பகிரும் தவறான நிதித் தகவல்கள் குறித்து இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்குத் தெரியுமா?
• தற்போது, இந்தியாவில் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு இரண்டு இணையான வழிமுறைகள் உள்ளன. ஒன்று தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) 69(A) பிரிவின்கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உள்ளடக்கங்கள் நீக்கப்படுகின்றன. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு அதிகாரிகள் இத்தகைய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்புகின்றனர், பின்னர் அந்த அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்து அதைத் தடுப்பதற்கான உத்தரவை வெளியிடுகிறது.
• தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act (IT Act)) பிரிவு 79(3)(b)-ன்கீழ் செயல்படும் மற்றொரு வழிமுறை, பல்வேறு அமைச்சகங்கள் இணையதளங்களுக்கு நேரடியாகத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வழிவகை செய்கிறது. இது பொதுவாக உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலான சகயோக் இணையதளம் (Sahyog Portal) மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
• சமூக ஊடக நிறுவனங்கள் தேவையற்ற உள்ளடக்கங்களை விரைவாக அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்திவரும் நிலையில், இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கான கால அவகாசம் (Blocking Timelines) 24–36 மணிநேரத்திலிருந்து 2–3 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
• அரசாங்கத்தின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது விதிமுறை இணக்கக் கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக, சட்டவிரோதமானது அல்லாத, ஆனால் அரசாங்கத்தை விமர்சிக்கும் பல பதிவுகள் பாதிக்கப்படுவதாகப் இணையதளப் பயனர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
• பொதுவாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றின் நலன் கருதியோ அல்லது குற்றங்களைத் தடுப்பதற்கோ, பொது மக்கள் தகவல்களை அணுகுவதை முடக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த நடைமுறை, தகவல் தொழில்நுட்ப (பொதுமக்கள் தகவல்களை அணுகுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புகள்) விதிகள், 2009-ன்கீழ் நிர்வகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
• வழக்கமாக, ஒரு அரசு நிறுவனம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது அந்தக் கோரிக்கையானது ஒரு குழுவால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே, குறிப்பிட்ட உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான உத்தரவுகள் சமூகஊடகத் தளங்கள் போன்ற இடைநிலை நிறுவனங்களுக்குப் பிறப்பிக்கப்படுகின்றன. அவசர காலங்களில், மறுஆய்வு செய்வதற்கு முன்பே இடைக்காலத் தடையை விதிக்க உத்தரவிட முடியும் என்கின்றனர். ஆனால், இந்த இரண்டு சூழல்களிலும், சமூக ஊடக நிறுவனங்களுக்கு இறுதியான தடை உத்தரவை தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே அனுப்புவதாகத் தெரிவிக்கின்றனர்.
Original Link: What are the digital rights in India?