சட்டப்பூர்வமான சலுகைகளையும் பாதுகாப்புகளையும் சரியாக வழங்குவதற்குத் தெளிவான வரையறைகள் அவசியம் என்று இந்தத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள் கூறலாம். இருப்பினும், நிர்வாக வசதிக்காக ஒருபோதும் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ அல்லது மீறவோ முடியாது என்கின்றனர்.
இந்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு (National Legal Services Authority (NALSA)) vs இந்திய ஒன்றிய அரசுக்கு (National Legal Services Authority vs Union of India (2014)) இடையிலான 2014-ஆம் ஆண்டு வழக்கில், பாலின அடையாளம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பில், திருநங்கைகள் தங்களின் கண்ணியம், தன்னாட்சி மற்றும் சமத்துவத்தின் ஒரு பகுதியாகத் தங்களின் பாலின அடையாளத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. இருப்பினும், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026, "திருநங்கை" என்பதற்கான சட்டப்பூர்வ வரையறையை மாற்றுவதன் மூலம் கடுமையான அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களை எழுப்புகிறது.
இந்தத் திருத்தமானது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் பிரிவு 2(k)-ஐ மறுவரையறை செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது 'திருநங்கைகள்' (Transgender Persons (TG)) என்பதற்கான வரையறையை இரண்டு குழுக்களாகக் குறைக்கிறது: முதலாவதாக, ஹிஜ்ரா, கின்னர், அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற பாரம்பரிய சமூக-கலாச்சாரக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டாவதாக, பிறப்புறுப்புகள், குரோமோசோம்கள், ஹார்மோன்கள் அல்லது இனப்பெருக்க வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகள் போன்ற உயிரியல் பாலின பண்பு மாற்றங்களுடன் பிறந்தவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது 2019-ஆம் ஆண்டின் முந்தைய சட்டத்திலிருந்து ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பழைய சட்டம் மருத்துவரீதியான மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், பிறப்பின் போது வழங்கப்பட்ட அடையாளத்துடன் ஒத்துப்போகாத பாலின அடையாளத்தைக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரையறையைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சட்டத்திருத்தத்திற்கான அடிப்படைப் பின்னணிக் காரணம் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலினம் என்பது ஒருவரின் சுய விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்குக் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது என்றும், மாறாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உயிரியல் காரணங்களால் பாகுபாட்டை எதிர்கொள்பவர்களுக்கு மட்டுமே அத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வரையறையைத் துல்லியமாக்குவதன் மூலம் இதற்கான சலுகைகள் மற்றும் பலன்கள் சரியான முறையில் அடையாளம் காணப்பட்ட தகுதியுள்ள நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த வாதமானது இந்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்கின்றனர். பாலினத்தை உயிரியல்ரீதியாக மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெளிவாக நிராகரித்தது. குறிப்பாக, உயிரியல் பண்புகளே பாலினத்தை அடையாளம் காண்பதற்கான இறுதி அடிப்படை என்று கருதிய 'கார்பெட் எதிர். கார்பெட்' (1970) (Corbett vs Corbett (1970) case) வழக்கின் அணுகுமுறையை நிராகரித்தது. அதற்குப் பதிலாக, ஒரு நபரின் பாலின அடையாளம் என்பது முக்கியமாக அந்த நபரின் சுயமான உளவியல் புரிதல் மற்றும் சமூக அனுபவத்தால் உருவாவதே என்று நீதிமன்றம் கூறியது. இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21-வது பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுடன் பாலின அடையாளத்தை இணைப்பதன் மூலம், மருத்துவ அல்லது உயிரியல் சான்றுகள் தேவையின்றி தனிநபர்கள் தங்கள் பாலினத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை நீதிமன்றம் அங்கீகரித்தது. இச்சூழலில், கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தமானது நீதிமன்றம் மாற்ற நினைத்த அதே பழைய அணுகுமுறையை மீண்டும் கொண்டு வரும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பாலின அங்கீகாரத்தை உயிரியல் பண்புகள் அல்லது குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்திருப்பதன் அடிப்படையில் அமைப்பதன் மூலம், இந்த மசோதா சுய-அடையாளத்தைவிட உயிரியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த மாற்றம் வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல என்றும் இது உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலிருந்து, ஒருவரின் அடையாளத்தை அரசு சரிபார்க்கும் முறையாக மாற்றக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சட்டத்திருத்தமானது பாலின அடையாளத்தை (Gender Identity) சட்டம் புரிந்து கொள்ளும் விதத்தில் உள்ள ஒரு ஆழமான சிக்கலை வெளிப்படுத்துகிறது. பல அறிஞர்களின் கருத்துப்படி, "திருநங்கை/திருநம்பி" (Transgender) என்பது ஒரு விரிவான சொல்லாகும். இதில் மருத்துவரீதியான அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள் உட்பட, பிறப்பின்போது அடையாளப்படுத்தப்பட்ட பாலினத்திலிருந்து மாறுபட்டு வாழும் பலதரப்பட்ட மக்கள் அடங்குவர். சமூக-கலாச்சாரக் குழுக்கள், பாலின அடையாளம் மற்றும் இடைப்பால் (Intersex) நிலைகள் போன்ற வெவ்வேறான கருத்துருக்களை உயிரியல் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சட்டத்தில் ஒன்றிணைப்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். இத்தகைய குழப்பமானது பாலின விதிமுறைகளுக்கு உட்படாத மக்களின் உண்மையான வாழ்வியல் அனுபவங்களை மறைப்பதோடு, சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்திற்குப் பதில் மருத்துவநிலைகளைச் சார்ந்த ஒன்றாக மாற்றிவிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தகைய ஒரு முக்கிய மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் சட்டமியற்றும் செயல்முறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. சட்டங்களை உருவாக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் பிரிவினருடன் முறையான ஆலோசனைகளை மேற்கொள்வது, அவர்களின் உண்மை வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்யவும், அதன் மூலம் அச்சட்டத்தின் நீதியையும் செயல்திறனையும் மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தியாவில் திருநங்கைகளுக்கான சட்ட வரைவுகள் முதல் 2019-ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது (Transgender Persons Protection of Rights Act (TG Act)) வரையிலான நகர்வுகள், திருநங்கையர் சமூகத்தினரை போதுமான அளவு இதில் ஈடுபடுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. முறையான உரையாடல் இன்றி அவர்களின் அங்கீகாரத்தை குறைக்க முயற்சிப்பது, விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் அதே ஜனநாயகக் குறைபாடுகளை மீண்டும் ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்தத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள், சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் பாதுகாப்புகளைச் சரியாக வழங்குவதற்குத் தெளிவான வரையறைகள் அவசியம் என்கின்றனர். இருப்பினும், நிர்வாக வசதிக்காக ஒருவரின் அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. திருநங்கைகளாக அங்கீகரிக்கப்படுபவர்களின் தகுதியைக் குறைப்பது சட்டமியற்றுபவர்களின் உண்மையான நோக்கமாக இருக்கக்கூடாது என்றும் மாறாக, ஒருவரின் சுய-அடையாளத்தை மதிக்கும் அதே வேளையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இறுதியாக, 2026-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு முக்கியத்துவம் என்பது அது முன்னிறுத்தும் 'அடையாளம்' சார்ந்த கருத்தைப் பொறுத்தே அமைகிறது. தேசிய சட்டப் பணிகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)), தன்னாட்சி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அமைந்த உரிமை சார்ந்த முறையை ஆதரித்தது. அதற்கு நேர்மாறாக, இந்தத் திருத்தம் மீண்டும் உயிரியல் மற்றும் சமூக அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழைய முறையைக் கொண்டுவருவது போல் தோன்றுகிறது. இதன் விளைவாக, ஒருவரது பாலின அடையாளத்தை அவரே தீர்மானிக்கும் சுய-தீர்மான அரசியலமைப்பு வாக்குறுதியானது மாறி, அது அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுப்பாட்டு முறையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
சஷாங்க் மகேஸ்வரி, ஜிண்டால் சர்வதேச சட்டப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Original Link: Amendments to Trans Act go against constitutional rights. They must not be implemented.