ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்து கருவிகளையும் பயன்படுத்திவருகின்றன. -டெரெக் ஓ’பிரையன்

கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா 25 தலைமை தேர்தல் ஆணையர்களை (Chief Election Commissioners (CEC)) கண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் (மக்களவை அல்லது மாநிலங்களவை) இதுவரை ஒருமுறைகூட தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.


நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் வேளையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை சில எதிர்க்கட்சிகள் விரைவில் கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அத்தகைய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால், இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா 25 தலைமைத் தேர்தல் ஆணையர்களை (CEC) கண்டுள்ளது. இருப்பினும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரை ஒரு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்கின்றனர். தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர், இத்தகைய நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் நபராகக் கருதப்படுகிறார். 


பதவி நீக்க நடைமுறை


தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) பதவியிலிருந்து நீக்குவதற்கு, மக்களவையின் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் சபாநாயகர் அல்லது தலைவரிடம் உரிய அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இது குறித்து விசாரிக்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். விசாரணைக்குழுவில் வலுவான காரணங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்தத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். பின்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது 'சிறப்புப் பெரும்பான்மை' மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்; அதாவது, அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும், அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


இந்திய அரசியலமைப்பின்படி, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியை எந்த அடிப்படையில் பதவியிலிருந்து நீக்க முடியுமோ, அதே அடிப்படையில்தான் தலைமைத் தேர்தல் ஆணையரையும் (CEC) பதவியிலிருந்து நீக்கமுடியும் என்கின்றனர்.  அதாவது "நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை" (proved misbehaviour or incapacity) ஆகிய காரணங்களுக்காக மட்டுமே அவரை நீக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். "நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை" என்பது, அதிகாரத்தைத் திட்டமிட்டுத் தவறாகப் பயன்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவது அல்லது தலைமைத் தேர்தல் ஆணையரின் சுதந்திரமான மற்றும் நடுநிலையான செயல்பாட்டின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது ஆகியவை ஆகும். 




இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம்


அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களின்போது, தேர்தல் இயந்திரம் என்பது நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்று பி. ஆர். அம்பேத்கர் வலியுறுத்தினார். இதே கருத்தை அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றியம் (2023) (Anoop Baranwal v. Union of India (2023)) என்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்வதற்கு, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகிய மூவர் அடங்கிய குழு பரிந்துரைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தை புறக்கணித்தல்


சில மாதங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் புறக்கணித்துவிட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் (Chief Election Commissioner and Other Election Commissioners - (CEC Act)) என்பதைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 7, ஒரு தேர்வுக் குழுவை அமைப்பதன் மூலம் பழைய முறையை மாற்றியது. அந்தத் தேர்வுக் குழுவில் பிரதமர் (தலைவர்), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சரவை அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்த அமைப்பானது நிர்வாகத் துறைக்கு பெரும்பான்மையை வழங்குகிறது, இதன் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) நியமனங்களை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.


பெருமைமிக்க வரலாறு


இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு நீண்ட மற்றும் மரியாதைக்குரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய சுகுமார் சென், இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலான 1951-52 தேர்தலை நடத்தும் முக்கியமான பொறுப்பைப் பெற்றார். அந்தத் தேர்தலில் 17 கோடிக்கும் அதிகமான (170 மில்லியன்) இந்தியர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருந்தனர் ஆனால், அவர்களில் சுமார் 85% பேர் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர். இத்தேர்தல் பணிக்காக சுமார் 16,500 எழுத்தர்கள், 56,000 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 2 லட்சத்திற்கும் அதிகமான காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். மலைக் கிராமங்களைச் சென்றடைய ஆறுகளின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டன, மேலும் சிறிய தீவுகளைச் சென்றடையக் கடற்படைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நிகழ்வாக உருவெடுத்ததாகக் கூறப்படுகிறது. 


இந்தியாவின் 17-வது தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) எஸ். ஒய். குரைஷி, வாக்காளர் அறிவை மேம்படுத்துவதற்காக வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்புக்கான முறையான திட்டம் (Systematic Voters' Education and Electoral Participation (SVEEP)) என்பதை விரிவுபடுத்தினார்; மேலும், பணம் கொடுத்து செய்தி வெளியிடுதல் (Paid News) மற்றும் கருத்துக்கணிப்புகள் போன்ற ஊடக வளர்ச்சியின் எதிர்மறை விளைவுகளை கடுமையாக எதிர்த்தார். அதேபோல், இந்தியாவின் 23-வது தலைமைத் தேர்தல் ஆணையரான சுனில் அரோரா, 930 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களின் தரவுத்தளத்தை உருவாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதுடன், நாடு தழுவிய தொலைபேசி உதவி எண் சேவையையும் அறிமுகப்படுத்தினார்.

 

முதல் நிகழ்வு


2026-ஆம் ஆண்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தலைமை தேர்தல் ஆணையரை (CEC) பதவியில் இருந்து நீக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு சூழல் எவ்வாறு உருவானது? இதற்கான கண்டனத் தீர்மான அறிவிப்பை (Notice) ஏதேனும் ஒரு அவையில் மட்டும் தாக்கல் செய்ய முடியும் என்றாலும், ஒரு வலுவான செய்தியைச் சொல்லும் நோக்கில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) அதனை முன்மொழிய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் அரசியல் சாசன அமைப்புகளின் மாண்பைப் பாதுகாக்கத் தங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு அரசியலமைப்பு கருவியையும் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஒன்றிய அரசு இந்த அறிவிப்பின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது நாட்டின் நிர்வாகத் துறைக்கும் தலைமை தேர்தல் ஆணையருக்கும் (CEC) இடையே ஒரு மறைமுக உடன்பாடு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே எழுப்பக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். 


1991-ஆம் ஆண்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷனைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை நிலவியது. ஆனால், அதற்கான முறையான அறிவிப்பு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல், 2006-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்து நவீன் சாவ்லா அவர்களைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்கக் கோரி ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. இருப்பினும், அது தொடர்பாக எந்தவிதமான நாடாளுமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதியதொரு வரலாற்றைப் படைக்கப் போகிறார்களா?


பின் குறிப்பு: இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில், சுமார் 28 லட்சம் பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்? அவர்கள் தங்களின் உண்மையான பெயர்களை வழங்க மறுத்து, தங்களை "A-வின் தாய்" அல்லது "B-யின் மனைவி" என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர். பாப் டிலான் தனது பாடலில் பாடியது போல, 'காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன' (The Times They Are a-Changin'). இன்று பெண்களின் தனித்துவமான அடையாளம் குறித்த புரிதல் சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். 


டெரெக் ஓ’பிரையன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராவார். இந்தக் கட்டுரைக்குத் தேவையான கூடுதல் ஆராய்ச்சிகளை சாஹத் மங்தானி, ஆயஷ்மான் டே மற்றும் வர்ணிகா மிஸ்ரா ஆகியோர் செய்துள்ளனர்.


Original Link: Opposition is using every instrument to protect institutions.


Share: