இந்தியாவை ஒரு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரமாக மாறுவதற்குத் தயார்படுத்துதல். - கௌரவ் ஜெயின், முகுந்தன் சக்ரபாணி

இந்தியாவின் ‘ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு’ (Research, Development, and Innovation) சார்ந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல, தனியார் துறையின் உறுதியானப் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. 


இன்றைய இந்தியா ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒரு தெளிவான முரண்பாட்டைக் காட்டுகிறது. பெரும் நிதி ஒதுக்கீடு, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index) முன்னேற்றம் எனப் பல்வேறு முயற்சிகள் மூலம் அரசாங்கம் தனது வலுவான லட்சியத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்லும் அடிப்படைக் காரணிகளில் நாடு இன்னும் பின்தங்கியே உள்ளது. ஊடகத் தலைப்புச் செய்திகள் முன்னேற்றத்தைக் காட்டினாலும், நடைமுறையில் உண்மைநிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது: அதாவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடு குறைவாக இருத்தல், உலகளாவிய தொழில்நுட்பத் தாக்கம் இல்லாமை, ஆராய்ச்சிகளைச் சந்தை தயாரிப்புகளாக மாற்றுவதில் உள்ள குறைபாடு மற்றும் தனியார் துறையின் குறைந்த அளவிலான பங்களிப்பு ஆகியவை ஆகும். சமீபத்திய கொள்கை முயற்சிகள் முக்கியமானவை என்றாலும், இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புகளில் உள்ள சிக்கல் என்பது இனி வெறும் "நோக்கம்" சார்ந்தது மட்டும் அல்ல என்றும் அது "செயல்படுத்துதல்" சார்ந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினம், காப்புரிமைகளின் அளவு மற்றும் தரம், மனிதவளத் திறன் இடைவெளி மற்றும் ஆராய்ச்சிக்கும் தொழில்முனைவோருக்கும் இடையிலான பலவீனமான தொடர்பு ஆகியவற்றை ஆராயும்போது, உண்மையான மாற்றத்திற்கு தொழில்துறையிடமிருந்து ஆழமான முறையான மாற்றங்கள் தேவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். 


நம்பிக்கையூட்டும் ஒரு ஆண்டு


கடந்த ஆண்டு இந்திய அரசு அறிவித்த ₹1,00,000 கோடி (சுமார் 12 பில்லியன் டாலர்) மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான  நிதியை (Research, Development, and Innovation (RDI Fund)) தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஒன்பதாவது தொடர்  ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், ஆழமான தொழில்நுட்பத் துறை சார்ந்த (Deep-tech) புத்தொழில் நிறுவனங்களுக்கான ₹20,000 கோடி நிதி, நீட்டிக்கப்பட்ட வரிச் சலுகைகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அரசின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, வருங்கால கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (Atal Tinkering Labs (ATL)) என்ற முதன்மைத் திட்டத்திற்கான நிதி ₹500 கோடியிலிருந்து சுமார் ஆறு மடங்கு அதிகரித்து ₹3,200 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. யுவ சக்தி (Yuva Shakti) மூலம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை (Viksit Bharat) உருவாக்குவதே அரசின் தெளிவான இலக்காகக் கூறப்படுகிறது.  இருப்பினும், இது உண்மையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்குமா என்பது தொழில்துறையினரின் பங்களிப்பைப் பொறுத்தே அமையும் என்றும் தெரிவிக்கின்றனர். 


அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஊக்குவிப்புத் திட்டங்களின்கீழ், முன்பு 'மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்' என்ற கட்டாய விதி இருந்தது. தற்போது அந்த விதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ‘Deep-tech’ புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டங்களை எளிதாக அணுக முடியும் என்றும் கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு, அணுசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவதற்கிருந்த ஒட்டுமொத்தத் தடையையும் அரசாங்கம் நீக்கியது. இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சட்டம், 2025 இப்போது "அணுசக்தி மற்றும் கதிர்வீச்சின் அமைதி வழி பயன்பாடுகளுக்கு" காப்புரிமை பெற அனுமதிக்கிறது, இது தனியார் துறையின் அதிகப்படியான பங்களிப்பிற்கு வழிவகுத்துள்ளது. இருப்பினும், மற்ற சீர்திருத்தங்களைப் போலவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களாக மாற்ற தொழில்துறையினர் போதுமான அளவு முதலீடு செய்கிறார்களா என்பதில்தான் இந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


இந்த அனைத்து முன்னேற்றங்களும் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index (GII)) இந்தியாவின் தரவரிசையில் ஏற்பட்டுள்ள தெளிவான முன்னேற்றத்துடன் இணைந்து நிகழ்ந்துள்ளன. 2025-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (GII) இந்தியா தற்போது 139 பொருளாதார நாடுகளில் 38-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2020-21-ஆம் ஆண்டில் 59,000-க்கும் குறைவாக இருந்ததிலிருந்து, 2024-25-ஆம் ஆண்டில் 1,10,000-க்கும் அதிகமாக உயர்ந்து இருமடங்காகியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்நாட்டு விண்ணப்பங்கள் மட்டும் மொத்த எண்ணிக்கையில் சுமார் 62% ஆகும். இருப்பினும், இந்த மாற்றம் முக்கியமாக அரசாங்கக் கொள்கைகளால் ஏற்பட்டது என்பது, இந்தியாவின் அடிப்படை கண்டுபிடிப்புத் திறன் — குறிப்பாகத் தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இன்னும் வரம்பிற்குட்பட்டே இருப்பதைக் காட்டுகிறது. இந்த அறிகுறிகள் சாதகமாகத் தெரிந்தாலும், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்கள் ஆகியவற்றில் இந்தியா உண்மையான மாற்றத்தை அடைவதைத் தடுக்கும் பல முறையான மற்றும் கட்டமைப்புரீதியான சிக்கல்கள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன.


தனியார் துறையின் குறைபாடுகள்


ஒரு நாட்டின் கண்டுபிடிப்புத் திறனை அளவிட, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவினம் — குறிப்பாகத் தனியார் துறையின் பங்களிப்பு — மிக முக்கியமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.  இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.65% மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு செலவிடுகிறது. இது சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைவிடவும், தென்னாப்பிரிக்காவைத் தவிர மற்ற பிரிக்ஸ் (Brazil, Russia, India, China, South Africa (BRICS)) நாடுகளைவிடவும் மிகவும் குறைவாகும். பெரும்பாலான முன்னணி கண்டுபிடிப்புப் பொருளாதாரங்களில், தனியார் தொழில்துறை நிறுவனங்களே அதிக அளவில் ஆராய்ச்சிக்குச் செலவிடுகின்றன. ஆனால் இந்தியாவில், அரசாங்கமே இன்னும் பெரும்பகுதியைச் செலவிடுவதால், நீண்டகால மற்றும் அதிக அபாயம்  கொண்ட புதிய கண்டுபிடிப்புத் திட்டங்களில் தனியார் துறைக்கு உள்ள ஆர்வம் குறைவாக இருப்பதையே காட்டுகிறது.


இதேபோல், இந்தியாவின் காப்புரிமைத் தாக்கல் (Patent filing) எண்ணிக்கை தனித்துப் பார்க்கும்போது சாதகமாகத் தோன்றினாலும், சீனாவில் தாக்கல் செய்யப்படும் 18 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் (இதில் 16 லட்சம் உள்நாட்டவர் தாக்கல் செய்தவை) மற்றும் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்படும் 6 லட்சம் விண்ணப்பங்களுடன் (இதில் 2.70 லட்சம் உள்நாட்டவர் தாக்கல் செய்தவை) ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் தனியார் துறையானது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அதிக அபாயம் கொண்ட முதலீடுகளைத் தொடர்ச்சியாகச் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.


புதிய கண்டுபிடிப்புகளின் தாக்கத்தை அளவிடுவதற்கான ஒரு வழி சர்வதேச காப்புரிமைத் தாக்கல் ஆகும்.  ஏனெனில், கண்டுபிடிப்பாளர்கள் பொதுவாக வணிக ரீதியாக மதிப்புமிக்க யோசனைகளுக்கு மட்டுமே பிற நாடுகளில் பாதுகாப்பு கோருகின்றனர். காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்த (Patent Cooperation Treaty -(PCT)) விண்ணப்பங்களின் எண்ணிக்கை இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. 2023-ஆம் ஆண்டைவிட 22% அதிகரித்து, 2024-ஆம் ஆண்டில் 4,547 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி வலுவானதாக இருந்தாலும், சீனா (70,000-க்கும் மேல்), அமெரிக்கா (54,000-க்கும் மேல்) மற்றும் ஜப்பான் (48,000-க்கும் மேல்) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா இன்னும் பின்தங்கி உள்ளது. கேரளாவை விடச் சற்றே பெரிய நாடான சுவிட்சர்லாந்துகூட 5,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப செல்வாக்கு என்பது வெறும் வளர்ச்சி விகிதத்தை மட்டும் பொறுத்தது அல்ல, அது ஒட்டுமொத்த அளவையும் பொறுத்தது என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன.


2025-ஆம் ஆண்டின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின்படி (Global Innovation Index (GII)), கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான முக்கியமான மனித மூலதனக் குறியீடுகளில் இந்தியா பின்தங்கியுள்ளது. அறிவு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குவதில் 95-வது இடத்திலும், முழுநேர ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கையில் 80-வது இடத்திலும் இந்தியா உள்ளது. பாலினப் பன்முகத்தன்மையைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. உயர்கல்வி தகுதி பெற்ற பெண்களுக்கு வேலை வழங்குவதில் 119 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. பன்முகத்தன்மை என்பது சிறந்த கண்டுபிடிப்பு முடிவுகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இது மிக முக்கியமானது. இந்த இடைவெளியை உணர்ந்து அரசாங்கம், அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க (Women’s Instinct for Developing and Ushering in Scientific Heights and Innovations (WIDUSHI)) மற்றும் (Women in Science and Engineering (WISE-KIRAN)) போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், அவற்றின் தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய தரவுகளின்படி, இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான சிக்கல் என்பது வெறும் நிதி அல்லது கொள்கைகள் சார்ந்தது மட்டுமல்ல என்றும் மாறாக, நாட்டில் திறமையானவர்களைத் தக்கவைத்துக் கொள்வது தொடர்பானவை என்பதையே தரவுகள் காட்டுகின்றன.


ஒரு தவறு


கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பெரிய அளவிலான, அதிக தொழிலாளர்களைக் கொண்ட தொழில்துறை வளர்ச்சி ஏற்படாதது ஒரு முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்படுகிறது; இது விவசாயம் மற்றும் சேவைத் துறைகளின் மீதான அதிகப்படியான சார்புநிலைக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவின் ‘New-age Unicorns’ என்று அழைக்கப்படும் பல நிறுவனங்கள்கூட, வலுவான மற்றும் ஆராய்ச்சி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைக் காட்டிலும், அதிக அளவிலான உழைப்பை மட்டுமே நம்பியுள்ளன. எனவே, உலகளவில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாகாததற்குக் கடந்தகால கொள்கை முடிவுகள் மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அதிக முதலீடு செய்து நீண்டகாலத் திட்டங்களை முன்னெடுக்கத் தனியார் துறை காட்டும் தயக்கமும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


ஆராய்ச்சியானது வணிகத்துடன் இணையும்போது மட்டுமே—அதாவது ஆய்வகத்திலுள்ள கருத்துக்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வணிக முறைக்கு வரும்போது மட்டுமே—கண்டுபிடிப்பின் முழுமையான பலன் கிடைக்கும் என்கின்றனர். இந்தியாவில், இந்த இறுதிக்கட்டமான தொழில்முறை சார்ந்த வணிகமயமாக்கல் (Commercialisation) என்பது ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான இணைப்புகளின் பலவீனமான பகுதியாகத் தொடர்கிறது. பல்கலைக்கழகங்களும் பொது ஆராய்ச்சி நிறுவனங்களும் அதிக அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டாலும், தொழில்நுட்பப் பரிமாற்றம் (Technology Transfer), புத்தொழில் நிறுவனங்களை (Startups) உருவாக்குதல் மற்றும் அபாயக் கால முதலீட்டு (Risk-capital) ஆதரவு போன்ற அமைப்புகள் இன்னும் போதிய வளர்ச்சியடையவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். உயர்-தொழில்நுட்பத் தொழில்முனைவு என்பது இயற்கையாகவே நிச்சயமற்றது, இதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதோடு எதிர்பார்க்கும் முடிவுகளைக் காட்ட நீண்டகாலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, இதற்குப் பொறுமையான நிதி உதவி, வலுவான அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு சூழல் அமைப்பு அவசியமாகிறது. புதிய கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ள நாடுகள் பல்கலைக்கழகங்கள், தொழில்துறை மற்றும் நிதித்துறை ஆகியவற்றுக்கு இடையே வலுவான தொடர்புகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவின் வாய்ப்பு என்பது வெறும் புத்தொழில் (Startups) எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இல்லை என்றும் மாறாக உலகளவில் போட்டியிடக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கக்கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த நிறுவனங்களை உருவாக்குவதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இந்தியாவின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகள் (RDI) துறையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை இப்போது நாட்டின் தனியார் துறை ஏற்க வேண்டும். வணிகரீதியான விண்வெளித் துறையில் ஏற்கனவே சில வெற்றிகரமான புத்தொழில் நிறுவனங்கள் (Start-ups) தங்களின் வலுவான திறனை வெளிப்படுத்தி வருவது ஊக்கமளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தொழில்துறையினர் நீண்டகால மூலதனத்தை தீவிரமாக முதலீடு செய்தல், ‘Deep tech’ என்பது அரசாங்கத்தின் ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறையாகக் கருதப்படுகிறது. வரும் ஆண்டுகளில் 6G அலைக்கற்றை தரநிலை உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் போது, இந்தியாவின் எத்தனை காப்புரிமைகள் அத்தியாவசிய காப்புரிமை (Standard Essential Patents (SEP)) பட்டியலில் இடம்பெறுகின்றன என்பது தெரியவரும் என்றும் குறிப்பிடுகின்றனர். அரசாங்கம் இதற்கான பாதையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவின் தனியார் துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எவ்வளவு விரைவாக முன்னோக்கி நகர்த்தும் என்பதுதான் தற்போதைய  முக்கியக் கேள்வியாக உள்ளது. 


கௌரவ் ஜெயின் என்பவர் '’Hastin Research’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அறிவுசார் சொத்துரிமை நிபுணர் ஆவார். இவர் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களது புதிய சிந்தனைகளை மதிப்புமிக்க அறிவுசார் சொத்துக்களாக மாற்ற உதவுகிறார். முகுந்தன் சக்ரபாணி, அறிவியல் துறையில் முனைவர் பட்டமும் சட்டப் பட்டமும் பெற்றவர். பல்வேறு துறைகளில் அனுபவம் கொண்ட இவர், சமீபத்தில் மீண்டும் கல்விசார் பணிகளில்  இணைந்து பணியாற்றி வருகிறார்.


Original Link: Preparing India for a true innovation-led economy 


Share: