வெப்ப அலைகள் போன்ற காலநிலை மாற்ற அபாயங்களால் முதியவர்கள் மிக எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய கடுமையான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழத் தொடங்கியுள்ளதால், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள முதியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கட்டமைப்புகளை இந்தியா உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியா ஒரு பெரிய மக்கள்தொகை மாற்றத்தின் தொடக்கத்தில் உள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இப்போது ஒரு புதிய கவலை எழுந்துள்ளது. அது முதியவர்கள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கமாகும். கடுமையான வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் கொள்கைகளை வகுக்கும்போது, வயதான மக்கள்தொகையின் தேவைகளையும் கண்டிப்பாகக் கணக்கில் கொள்ள வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் முதியவர்கள் ஏன் குறிப்பாகப் பாதிக்கப்படுகிறார்கள், இந்த அபாயத்தைக் கையாள்வதில் இந்தியாவின் தற்போதைய கட்டமைப்புகள் எவ்வாறு பின்தங்கியுள்ளன, மற்றும் நாடு இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
காலநிலை மாற்றத்தால் முதியவர்களுக்கு ஏன் அதிக பாதிப்பு ஏற்படுகிறது?
இந்திய மக்கள்தொகையில் முதியவர்கள் தற்போது ஏறக்குறைய பத்தில் ஒரு பங்காக (10%) உள்ளனர். ஆனால், 2050-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக (20%) மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் முதியவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
மனித உடல் வயதாக ஆக, வெப்பத்தைத் தாங்கி உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கும் திறனை இழக்கிறது. நீண்டநேரம் கடுமையான வெப்பத்தில் இருக்கும்போது, உடலின் இந்த பலவீனமான பாதுகாப்புத் திறன் முற்றிலும் செயலிழந்து விடுகிறது. இது உடலில் கடுமையான வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நோய்களை மேலும் மோசமாக்குகிறது. 75 வயதிற்கு மேற்பட்ட, குறிப்பாக இருதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் அல்லது உடல் நடமாட்டம் குறைந்த முதியவர்களுக்கு, கடுமையான வெப்ப அலை என்பது ஒரு பெரிய மருத்துவ அவசரநிலையாக மாறிவிடுகிறது.
'HelpAge India' அமைப்பு 2026-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'காலநிலையைத் தாங்கும் முதுமை' (Climate Resilient Ageing) என்ற அறிக்கை, இந்த காலநிலை ஆபத்தின் தீவிரத்தை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த அறிக்கைக்காக பத்து மாநிலங்களைச் சேர்ந்த 2,224 முதியவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 78% பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஒரு காலநிலை சார்ந்த பாதிப்பையாவது எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். குறிப்பாக 45% பேர் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வெள்ளம் மற்றும் வறட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இத்தகைய பாதிப்புகளைத் தொடர்ந்து எதிர்கொண்டுள்ளனர். இப்படி ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும், அவர்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை மிகவும் கடினமாக்குகிறது.
பாதிப்புகளைத் தாங்கி வாழ்வதற்கு தடையாக இருப்பவை எவை?
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்கும் அதன் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்கும் பொதுவாகப் பணம் தேவைப்படுகிறது. ‘HelpAge’ அமைப்பின் ஆய்வில் பங்கேற்றவர்களில் 69 சதவீதத்தினர், தங்களின் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் திறனுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது நிதி நெருக்கடிதான் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சுமை, தனியாக வாழ்வோர், நலிவடைந்த ஆரோக்கியம் கொண்டவர்கள் மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கு வெப்பம் மட்டுமே ஒரே ஆபத்து அல்ல. காற்று மாசுபாடு, சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை மேலும் மோசமாக்குகிறது. முதியவர்களுக்கு இத்தகைய பாதிப்புகளைத் தாங்கும் திறன் பொதுவாகக் குறைவாகவே இருக்கும். பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் மருந்துகள், அரசு உதவிகள், போக்குவரத்து மற்றும் மருத்துவச் சேவைகள் போன்றவை தடைபடலாம். வறட்சி போன்ற சூழ்நிலைகள் குடும்ப வருமானத்தைக் குறைத்து, முதியவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து வாழும் நிலையை இன்னும் அதிகமாக்கலாம்.
இத்தகைய தீவிரமான காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்குப் பல வழிகள் உள்ளன: வெப்பக் காலச் செயல்பாட்டுத் திட்டங்கள், குளிர்விக்கப்பட்ட இடங்கள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், பாதுகாப்பான வீடுகள், காலநிலை மாற்ற இழப்பீட்டுக் காப்பீடு மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை இதில் அடங்கும். ஆனால், முதியவர்கள் பலர் இன்னும் இந்த வசதிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ஆதரவு கிடைக்கப்பெறாமல் உள்ளனர். சிலரால் எச்சரிக்கைச் செய்திகளைப் படிக்கவோ அல்லது சரியான நேரத்தில் பெறவோ முடிவதில்லை. வேறு சிலரால் அடுத்தவர் உதவியின்றி அந்த எச்சரிக்கைகளின்படி உடனடியாகச் செயல்பட முடிவதில்லை. சிலர் வெப்பத்தை அப்படியே தேக்கி வைக்கும் அறைகளில் வாழ்கிறார்கள். இன்னும் சிலரோ மருத்துவ மையத்திற்கோ அல்லது நிவாரண முகாம்களுக்கோ எளிதாகப் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் என்ன, அவை எங்கு பின்தங்குகின்றன?
நிதியுதவி, மருத்துவ வசதி மற்றும் சிறந்த வீட்டு வசதி போன்ற அடிப்படை வசதிகளையே முதியவர்கள் கேட்கின்றனர். அவர்களுக்காக இந்தியாவில் பல நலத்திட்டங்களும் சுகாதார நடவடிக்கைகளும் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY)) திட்டம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. முதியோர்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம் (National Programme for Health Care of the Elderly (NPHCE)) பொது சுகாதார அமைப்பின் மூலம் முதியோர் மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.
அரசாங்கம் 'அடல் வயோ அபியுதய யோஜனா' (Atal Vayo Abhyuday Yojana (AVYAY)) திட்டத்தின்கீழ் முதியோர் இல்லங்கள், பராமரிப்பாளர்களுக்கான பயிற்சி, நடமாடும் மருத்துவச் சேவைகள் மற்றும் சமூகம் சார்ந்த பராமரிப்பு ஆகியவற்றிற்கும் நிதி வழங்குகிறது. 'Elderline' சேவை முதியவர்களுக்கான தேசிய அளவிலான உதவி எண்களை வழங்குகிறது. 'SACRED' (Senior Able Citizens for Re-Employment in Dignity) இணையதளம் முதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர முயல்கிறது. 'SAGE' (Seniorcare Ageing Growth Engine) திட்டம் முதியோர் பராமரிப்பில் புதிய கண்டுபிடிப்புகளை ஆதரிக்கிறது.
இந்தத் திட்டங்கள் மிகவும் முக்கியமானவைதான். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை நலத்திட்டங்கள், சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆதரவு அல்லது சமூக உள்ளடக்கம் ஆகியவற்றிற்காகவே உருவாக்கப்பட்டன. இவை இன்னும் பேரிடர் மேலாண்மை அல்லது காலநிலை மாற்றத்திற்குத் தகவமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றுடன் முழுமையாக இணைக்கப்படவில்லை. ஒரு கடுமையான வெப்ப அலை பாதிப்பின்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு நகர முடியாத ஒருவரை வெறும் மருத்துவ அட்டை மட்டுமே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடாது. ஒரு முதியவருக்கு அப்படி ஓர் உதவி எண் இருப்பது தெரியவில்லை என்றாலோ, அவரிடம் கைப்பேசி இல்லை என்றாலோ அல்லது அருகில் உதவிக்கு யாரும் இல்லை என்றாலோ அந்த உதவி எண்ணால் உதவ முடியாது. மிகக் கடுமையான வெயில் காலத்தில், காற்றோட்டம் இல்லாத ஒரு வீட்டை வெறும் முதியோர் இல்லக் கொள்கைகளால் பாதுகாப்பானதாக மாற்றிவிட முடியாது.
பெரும்பாலும் முதியவர்களை ஓய்வூதியம் பெறுபவர்களாக, நோயாளிகளாக அல்லது நலத்திட்டப் பலன்களைப் பெறுபவர்களாக மட்டுமே அரசாங்கம் பார்க்கிறது. ஆனால், காலநிலை மாற்றம் என்பது, முதியவர்களைக் கடுமையான வானிலை பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகக்கூடிய ஒரு மக்கள்தொகையாகவும் பார்க்க வேண்டியதை அவசியமாக்குகிறது.
வயதானவர்கள் அதிகம் வாழும் நாடுகள் இந்த ஆபத்தை எவ்வாறு சமாளித்து வருகின்றன?
இதற்கு ஜப்பான் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அது முதியவர்கள் அதிகம் வாழும் ஒரு நாடாகும், அதேநேரத்தில் இயற்கை பேரிடர்களுடனேயே வாழப் பழகிய ஒரு சமூகமும் ஆகும். இதன் காரணமாகவே, அவர்கள் முதியோர் பராமரிப்பையும் பேரிடர் காலப் பாதுகாப்பையும் ஒன்றாக இணைக்கத் தொடங்கியுள்ளனர்.
அங்குள்ள உள்ளூர் நிர்வாகங்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு பேரிடர் வருவதற்கு முன்பாகவே, அதனால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் முதியவர்களைப் பேரிடர் திட்டங்கள் மூலம் முன்கூட்டியே கண்டறிகின்றனர். மேலும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிவாரண உதவிகளுடன், உள்ளூர் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் ஆதரவு அமைப்புகளும் அங்குச் செயல்படுகின்றன. ஜப்பானின் நீண்டகால முதியோர் பராமரிப்பு அமைப்பானது, ஆபத்தில் இருக்கும் முதியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ உள்ளூர் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்தியாவில் நிலவும் மக்கள்தொகை அளவு, வறுமை, வீட்டு வசதிகள் மற்றும் குடும்பக் கட்டமைப்புகள் முற்றிலும் வேறானவை என்பதால், நம்மால் இந்த ஜப்பான் மாதிரியை அப்படியே முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது. ஆனால், வெறும் எச்சரிக்கை அமைப்புகள் மட்டும் போதாது என்ற பாடம் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. பேரிடர் வருவதற்கு முன்பே முதியவர்களைக் கண்டறிய வேண்டும், பாதிப்பின்போது அவர்களைச் சென்றடைய வேண்டும், அதற்குப் பிறகும் அவர்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள முதியவர்கள் ஏற்கனவே கடுமையான வெப்ப அலைகள், வெள்ள பாதிப்பு மற்றும் வறட்சிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல முதியவர்கள் மிகக் குறைந்த வருமானம், மோசமான வீட்டு வசதி, பலவீனமான ஆரோக்கியம் மற்றும் நிலையற்ற பராமரிப்புச் சூழலில்தான் இவற்றை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் முதியோர் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயம் வெறும் சாதாரணக் சமூக நலக் கவலையாக மட்டும் இருக்கப் போவதில்லை. மாறாக, இது பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மைத் திட்டமிடல் மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றிற்கான ஒரு முக்கியச் சோதனையாக மாறப்போகிறது.
நேஹால் சர்மா, ‘Gateway Research’ அமைப்பின் துணை தேசிய திட்டத் தலைவராகவும், பவ்யா கபூர், ‘Gateway Research’ அமைப்பின் மூத்த ஆராய்ச்சி மற்றும் கொள்கை இணைப்பாளராகவும் உள்ளனர்.