வேளாண்மை முதல் கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் வடிவமைப்பு, நிர்வாகம் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக மதிக்கப்படும் 1991-ஆம் ஆண்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் போல, இந்தியா ஒரு புதிய பொருளாதார மாதிரிக்கு மாறாமல் தனது 2047-ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைய முடியாது. ஆனால், புதிய பொருளாதார மாதிரி மட்டுமே அதற்குப் போதுமானதாக இருக்காது. எந்தவொரு பொருளாதார மாதிரியின் செயல்பாட்டையும் அதன் விளைவுகளையும் பல பொருளாதாரம் சாரா அல்லது ‘பரந்த பொருளாதார அடிப்படைக் காரணிகள்' (Meta-economic) பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பரந்த பொருளாதாரக் காரணிகளை மேம்படுத்துவது மிக அவசியமாகும். இருப்பினும், அரசாங்கங்களும் பொருளாதாரப் பகுப்பாய்வாளர்களும் பெரும்பாலும் பொருளாதாரக் கொள்கைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில், அவற்றை மாற்றுவதும் சீர்திருத்துவதும் எளிதானது. இந்த சமநிலையின்மையைக் கையாள்வதற்காக, இந்த விவாதம் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசாமல், பரந்த பொருளாதாரக் காரணிகளைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறது.
முதலாவதாக, பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். வேளாண்துறையை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்திய அரசியலமைப்பின்கீழ், வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலின்கீழ் வரும் ஒரு துறையாகும். அது ஒன்றிய அரசின் பட்டியலின்கீழ் வராது. இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ஒன்றிய அரசுக்கு என்று ஒரு தனி வேளாண்துறை அமைச்சர் இருந்து வருகிறார். அதோடு, கடந்த 25 ஆண்டுகளில் ஒன்றிய அரசு 20-க்கும் மேற்பட்ட வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்தத் தலையீடு, மாநில அரசாங்கங்களின் பொறுப்புணர்வைக் குறைப்பதோடு, வேளாண்துறையில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் கடினமாக்குகிறது. பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்படாததால் ஏற்படும் சிக்கல் 2020-ஆம் ஆண்டில் வெளிப்படையாகத் தெரிந்தது. அப்போது ஒன்றிய அரசு மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. முக்கியமாக, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில வேளாண் தொழிலாளர்களின் கடுமையான போராட்டங்களால், ஒன்றிய அரசு அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளின்போது, அந்தந்த மாநில முதலமைச்சர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
பொறுப்புகள் மற்றும் கடமைகளில் நிலவும் இந்தக் குழப்பமே இந்திய வேளாண் துறையை பின்னுக்குத் தள்ளியிருக்கும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். இது குறைந்த வருமானம், மந்தமான வளர்ச்சி விகிதம் மற்றும் வேளாண் தொழிலையே நம்பி மக்கள் இருக்க வேண்டிய கட்டாயம் போன்ற நிலைகளுக்கு வழிவகுத்துள்ளது. எனவே, வேளாண் துறைக்கான பொறுப்பையும் கடமையையும் ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு படிப்படியாக மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
நிர்வாக மேம்பாடு
இரண்டாவதாக, இந்தியாவிற்குச் சிறந்த நிர்வாகம் தேவைப்படுகிறது. நல்ல கொள்கைகள்கூட அவை சரியாகச் செயல்படுத்தப்படாததால் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. சில நேரங்களில், இந்தக் கொள்கைகளின் நன்மைகள் அவை யாருக்காக உருவாக்கப்பட்டவோ அந்த மக்களைச் சென்றடைவதில்லை. அடித்தட்டு அளவில் பணியாற்றும் இளம் நிபுணர்களுடனான கலந்துரையாடல்களிலிருந்து, தங்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளைப் பற்றி பல மக்களுக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. இதன் விளைவாக, இந்தக் கொள்கைகள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. ஒன்றிய மற்றும் மாநில அரசு கொள்கைகள் செயல்படுத்தப்படும்போதுகூட, அவை இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொள்ளாததால் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. ஒரே ஒரு மாவட்டத்திற்குள்ளேயே பலதரப்பட்ட பொருளாதார மண்டலங்கள் இருக்கலாம், அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வாய்ப்புகளும் சவால்களும் இருக்கும். எனவே, "அனைவருக்கும் ஒரே மாதிரியான கொள்கை" என்ற அணுகுமுறை இந்தச் சவால்களுக்குத் தீர்வாக இருக்காது.
இந்தியாவின் முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு, தண்ணீர் பற்றாக்குறை, சேதமடைந்த சாலைகள், சேகரிக்கப்படாத குப்பைகள் மற்றும் ஒலி மாசுபாடு போன்ற கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவை அனைத்தும் மக்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு காரணம் என்னவென்றால், மாநகர அதிகார அமைப்புகளுக்குத் திறம்படச் செயல்படுவதற்குத் தேவையான அதிகாரங்களும் நிதியும் பெரும்பாலும் இருப்பதில்லை. டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைத் தடுப்பது போன்ற ஒன்றிய அரசு உதவக்கூடிய விஷயங்களில், அது ஒரு குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஊரகப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ அமைப்புகளாகும். இவை உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இவை மிகவும் திறமையான அமைப்புகளாக மாறியிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவை டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டபோதிலும், அவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் இன்னும் குறைவாகவே உள்ளது. மாநிலங்களுக்கு இடையே அவற்றின் செயல்பாடுகள் பெரிதும் வேறுபடுகின்றன. மேலும், அவை தற்போது அல்லது விரைவில் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகளாக மாறும் என்பதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அவற்றுக்கு அதிகப் பொறுப்புணர்வும் கூடுதல் நிதி ஆதாரங்களும் தேவைப்படுகின்றன.
கல்வி முறை
மூன்றாவதாக, இந்தியா தனது ஒட்டுமொத்த கல்வி முறையையும் கணிசமாக மேம்படுத்த வேண்டும். உண்மையில், அதற்கு ஒரு முழுமையான சீரமைப்பு தேவைப்படுகிறது. போதிய கல்வியறிவு இல்லாத இளைஞர்கள், எதிர்காலத்தில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர்களாக மாறுவது கடினம். இந்தியா உலகத்தரம் வாய்ந்த பல மாணவர்களை உருவாக்கினாலும், அவர்கள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மிகச் சிறிய மற்றும் சலுகை பெற்ற ஒரு மேல்தட்டுப் பிரிவினராகவே இருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளின் செயல்பாடு மோசமாக உள்ளது. குறைந்த வருமானம் கொண்ட பல பெற்றோர்கள், தங்களுக்குப் பொருளாதாரச் சுமை இருந்தபோதிலும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகின்றனர். 1991-ஆம் ஆண்டில், சுமார் 80% குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வந்தனர். மக்களின் வருமானம் அதிகரித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது சுமார் 50%-ஆகக் குறைந்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் சொந்தத் தேவைகளைத் தியாகம் செய்துதான் பள்ளிக் கட்டணங்களை செலுத்துகிறார்கள். பெரும்பாலானவர்களால் மிகக் குறைந்த கட்டணம் கொண்ட தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்ப முடிகிறது. இந்த விளிம்புநிலைத் தனியார் பள்ளிகளின் கல்வியின் தரம் மிக அதிகமாக இல்லாவிட்டாலும், அது சராசரி அரசுப் பள்ளிகளைவிட ஓரளவுக்கு மேலானதாகவே இருக்கிறது. தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் வேகமான மாற்றங்கள் உற்பத்தியின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும் இன்றைய உலகச் சூழலில், போதிய கல்வியறிவு இல்லாத மாணவர்களைக் கொண்ட ஒரு நாடால் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது.
கல்லூரிக் கல்வி நிலையில் மாணவர்களும் பெரும்பாலும் மனப்பாடம் செய்யும் முறையை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு கல்வி முறையையே எதிர்கொள்கின்றனர். இருப்பினும், சில புதிய மற்றும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளன. ‘Infosys’ நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளது போல, கல்வி முறையில் உள்ள பலவீனங்கள் காரணமாக பெரும்பாலான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்குத் தேவையான தகுதிகள் அல்லது திறன்கள் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, அவர்களில் பலர் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர்களாகவே மாறக்கூடிய சூழல் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஒன்றிய அரசு முக்கியமாக உயர்தர கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. குறிப்பாகப் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், சாதாரண மாணவர்களின் திறன்களையும் உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்காக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துவதில் அதிக நிதி ஆதாரங்களையும் உழைப்பையும் முதலீடு செய்ய வேண்டும்.
முடிவாக, கொள்கைகளை விரைவாக வடிவமைத்து அவற்றைச் செயல்படுத்துவதற்கான தங்களின் திறனை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இருதரப்புமே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க விரும்பும் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் தலைமுறையினரின் கூட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், லாப நோக்கற்ற அமைப்புகள் (NGOs) தங்களின் செயல்பாட்டுத் திறனை மிக வேகமாக வளர்த்துக் கொள்ள முடியும். மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று இந்தியாவில் நிதி ஆதாரங்கள் மிக அதிகமாக உள்ளதால், இத்தகைய அமைப்புகள் நிதி உதவி பெறுவது இப்போது எளிதாகியுள்ளது. இவர்களின் பணிகள், இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science (IISc)) மேற்கொள்வது போன்ற ஆராய்ச்சிகள் முதல், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவது வரை பலதரப்பட்டதாக இருக்கலாம். மேலும், அரசாங்கங்களின் முக்கியப் பொருளாதார இலக்குகளுக்கு, இத்தகைய அமைப்புகள் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சுபோத் மாத்தூர், பொதுக் கொள்கை வகுப்பதில் மிக விரிவான நடைமுறை அனுபவம்கொண்ட ஒரு பொருளாதார நிபுணர் ஆவார்.
original article : Need to improve India’s meta-economic factors. -Subodh Mathur