உயர்கல்வியில் கூட்டாட்சித் தத்துவத்தைக் கையாளுதல் -எல்தோ மேத்யூஸ்

 அரசியலமைப்புரீதியாக கல்வி 'பொதுப் பட்டியலில்' (Concurrent List) இடம்பெற்றிருந்தாலும், தற்போதைய நிர்வாகச் சூழல் ஒன்றிய அரசுக்கே  சாதகமாக இருந்து வருகிறது.


இந்தியக் கூட்டாட்சியின் மாறிவரும்  சூழலை வெளிப்படுத்தும் ஒரு முக்கியக் களமாக இந்தியாவில் உயர்கல்வி உருவெடுத்துள்ளது. ஒழுங்குமுறை அதிகாரம், பாடத்திட்டம், மொழிக் கொள்கை, பொது நிதியுதவி மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பான சிக்கல்கள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மாறுபட்ட கொள்கை நோக்கங்கள் சந்திக்கும் முக்கிய துறையாக கல்விதுறை மாறியுள்ளது. இந்த முன்னேற்றங்கள் உயர்கல்வியின் திசையை மட்டுமல்லாமல், இந்திய ஒன்றியத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பரந்த கேள்விகளையும் வெளிக் காட்டுகின்றன. இதன் விளைவாக, உயர்கல்வி நிர்வாகத்தை இனி துறை சார்ந்த கொள்கை விவகாரமாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக, உயர்கல்வி இந்தியாவின் வளர்ந்து வரும் கூட்டாட்சி அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது


பல்வேறு மாநிலங்களில் 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையை (National Education Policy (NEP)) செயல்படுத்துவது தொடர்பான சர்ச்சைகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும். இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களது வளாகங்களை அமைக்க அனுமதிக்கும் சமீபத்திய ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள், மாநில அரசுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன. இது, உயர்கல்வி தொடர்பான விவகாரங்களில் மாநில அரசுகளின் வெவ்வேறு அணுகுமுறைகளையும் பார்வைகளையும் வெளிக் காட்டுகிறது. இந்தப் பிளவுபட்ட அரசியல் சூழல், நாட்டின் உயர்கல்வி நிர்வாகத்தில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான கவனத்தையே பெற்றுள்ளன.


ஒன்றிய அரசின் வளர்ந்து வரும் செல்வாக்கு


பல்வேறு நிகழ்வுகள் இந்தப் பதற்றங்களை எடுத்துக்காட்டியுள்ளன. தமிழ்நாட்டில், மாநில அரசு தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பல்வேறு அம்சங்களையும், குறிப்பாக மும்மொழி கொள்கையையும், அதனுடன் இந்த ஆண்டு மும்மொழி குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission’s (UGC)) வெளியிட்ட சுற்றறிக்கையை தொடர்ந்து எதிர்த்து வந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் ஆளுநர்களின் அதிகாரங்கள் தொடர்பான சர்ச்சைகளிலும் உயர்கல்வியில் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையே நிலவிவரும் சிக்கல்கள் தெளிவாகத் தெரிந்தன.


நமது நாட்டின் அரசியமைப்பின் சட்டத்தின் படி கல்வித்துறையானது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கும் பொதுப் பட்டியலின் கீழ் இருந்தாலும், தற்போது நிலவும் ஆட்சி முறை ஒன்றிய அரசுக்கே சாதகமாக மாறி வருகிறது. கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் அங்கீகார அமைப்புகள் போன்றவற்றின் மூலம், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்மீது ஒன்றிய  அரசு கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.


2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, இந்திய உயர்கல்வி அமைப்பின் கட்டமைப்பை மறுவடிவமைக்கும் ஒரு முக்கியமான மறுசீரமைப்பு முயற்சியாகும். இந்தக்கொள்கையானது, நான்காண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள், கல்விக் கடன் வங்கி, நிறுவன மறுசீரமைப்பு, பல்வேறுத் துறை சார்ந்தப் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேசமயமாக்கல் முன்முயற்சிகள் உள்ளிட்ட விரிவான சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள், வரலாற்றுரீதியாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த துறைகளில் ஒன்றிய அரசின் செல்வாக்கை விரிவுபடுத்துவதையும் காட்டுகின்றன.


மேலும், தற்போது ஒன்றிய அரசின் நிதி உதவிகளைப் பெறுவது, தேசிய அளவில் வடிவமைக்கப்பட்ட சீர்திருத்தத் திட்டங்களை மாநிலங்கள் பின்பற்றுகிறதா என்பதைக் கொண்டே அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.  சிறப்பு அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள்திட்டம் மற்றும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின்கீழ் செயல்படும் போட்டி அடிப்படையிலான ஆராய்ச்சி நிதி வழங்கும் அமைப்புகள் போன்ற திட்டங்கள், மாநிலங்களின் அதிகாரத்தின்மீது ஒன்றிய அரசின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளன.


தேசிய ஒழுங்குமுறை (national regulatory agencies) அமைப்புகளின் பங்கும் மற்றொரு முக்கிய முரண்பாட்டக் களமாக மாறியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு உள்ளிட்ட தற்போதுள்ள உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்புகளுக்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள, 2025-ஆம் ஆண்டின் விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்  மசோதாவின் கட்டமைப்புகள், மாநில அரசுகளின் அதிகாரம் படிப்படியாகக் குறைந்துவிடும் போன்ற அச்சங்களை உருவாக்கியுள்ளன. மையப்படுத்தலின்  மற்றொரு முக்கிய அம்சம் டிஜிட்டல் ஆளுகை (Digital Governance) ஆகும். மாநிலங்கள் முழுவதும் உயர்கல்வி ஆளுகையை தரப்படுத்தவும் கண்காணிக்கவும் ஒன்றிய அரசாங்கத்திற்கு, கல்வி வரவுகளின் வங்கி (Academic Bank of Credits) போன்ற ஒழுங்குமுறை அமைப்புககள் அதிகாரம் அளித்துள்ளன.


வலுவான மாநில அரசியல் அடையாளங்களைக் கொண்ட மாநிலங்களில், இந்தச் சீர்திருத்தங்கள் வெறும் நிர்வாகப் பிரச்சினைகளாக மட்டுமல்லாமல், இந்திய ஒன்றியத்திற்குள் உள்ள அதிகாரச் சமநிலை தொடர்பான அரசியலமைப்புச் சார்ந்த கேள்விகளாகவும் பார்க்கப்படுகின்றன.


ராஜதந்திர தகவைமைப்பு


2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையின் செயலாக்கம், உயர்கல்வியில் ஒன்றிய-மாநில உறவுகள் முற்றிலும் விரோதமானவை அல்ல என்பதையும்  காட்டியுள்ளது. முழுமையாக ஏற்றுக்கொள்வதோ அல்லது முற்றிலும் நிராகரிப்பதோ என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், தங்களின் உள்ளூர் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப சில சீர்திருத்தங்களைத் தேர்ந்தெடுத்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளன. இது, ராஜதந்திர ரீதியான தகவைமைப்பின் (Strategic Adaptation) மூலம் உருவாகியுள்ள பேச்சுவார்த்தை அடிப்படையிலான கூட்டாட்சியின் (Negotiated Federalism) ஒரு புதிய வடிவத்தை  வெளிக்காட்டுகிறது.


உதாரணமாக, சர்வதேசமயமாக்கல் அதிகரித்து வரும் சூழலில், பல மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதன் மூலம் தங்களை மாநில அளவிலான கல்வி மையங்களாக நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வருகின்றன. உலகளாவிய அங்கீகாரம் மற்றும் அறிவுசார் மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய உத்தியாக உயர்கல்வி கருதப்படுகிறது என்பதை இது போன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சர்வதேசக் கிளை வளாகங்களை அமைப்பது குறித்த விவாதங்களும் இந்த மாற்றத்தை  தெளிவுபடுத்துகின்றன. ஒழுங்குமுறைச் சட்டமும் கொள்கை வழிகாட்டுதல்களும்   ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்பட்டாலும், உள்ளூர் நிர்வாக அனுமதிகள், உள்கட்டமைப்பு ஆதரவு மற்றும் முதலீட்டு வசதிகள் ஆகியவற்றின் மூலம் இது போன்ற முயற்சிகளைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகளின் பங்கு மிக முக்கியமானது.


இந்தியாவில்  மாநில அரசியல் சூழல் தொடர்ந்து மாறிவருவதால், உயர்கல்வி நிர்வாகத்தின் போக்கானது, அரசியலமைப்பு விதிகள் அல்லது தேசிய அளவிலான கொள்கைக் கட்டமைப்புகளை மட்டும் சார்ந்திருக்காது. மாறாக, அது கூட்டாட்சி அமைப்புக்குள் போட்டி அதிகமாக இருக்கும் அரசியல் மற்றும் வளர்ச்சி முன்னுரிமைகளைச் சமாளிக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திறனையும் சார்ந்திருக்கும்.


எல்டோ மேத்யூஸ் கேரள மாநில உயர் கல்வி கவுன்சிலில் பணியாற்றுகிறார்.


Original article : Negotiating federalism in higher education. -Eldho Mathews

Share: