ஒரு கற்பனையான தொழில்நுட்ப யுகத்தில் (Mythos), வெறும் கணினி பாதுகாப்பு அடுக்கு (Firewall) கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டும் போதாது. கணினி அமைப்புகள் அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, உடனுக்குடன் தங்களின் பாதுகாப்புத் திறனைத் தானாகவே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.
மே மாதம் 1940-ஆம் ஆண்டில், பெல்ஜியத்தின் (Belgium) எபென்-எமேல் (Eben-Emael) கோட்டைதான் மனித வரலாற்றிலேயே கட்டப்பட்ட மிக வலிமையான பாதுகாப்பு உள்கட்டமைப்பு என்று ராணுவ வல்லுநர்கள் நம்பினர். கான்கிரீட் மற்றும் எஃகு கொண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கோட்டை, எந்தவொரு தாக்குதலையும் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது வெறும் 15 நிமிடங்களில் வீழ்த்தப்பட்டது. அது ஒரு பெரிய ராணுவத்தால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, 'வெடிபொருளின் ஆற்றலை ஒரே புள்ளியில் குவிக்கும் தொழில்நுட்பம்' (Shaped charge) எனப்படும் ஒரு புதிய ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்திய பாராசூட் படை வீரர்களின் (Paratroopers) ஒரு சிறிய குழுவால்தான் வீழ்த்தப்பட்டது. கோட்டையைப் பாதுகாத்த வீரர்கள் நீண்ட நாட்கள் நீடிக்கும் ஒரு பாரம்பரியப் போருக்குத் தயாராக இருந்தனர். ஆனால், புதிய கண்டுபிடிப்பு மற்றும் துல்லியமான உளவுத் தகவல்களின் உதவியோடு மின்னல் வேகத்தில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலால் முற்றிலும் நிலைகுலைந்து போயினர்.
கடந்த மாதம், இணையப் பாதுகாப்பு உலகம் இதேபோன்ற ஒரு முக்கிய திருப்புமுனையைச் சந்தித்தது. வலுவான பாதுகாப்பிற்குப் பெயர்பெற்ற ‘OpenBSD’ என்ற இயங்குதளத்தின் (OS) குறியீட்டில் (Code) கடந்த 27 ஆண்டுகளாக ஒரு சிறிய குறைபாடு யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தது. ஏறக்குறைய, முப்பது ஆண்டுகாலமாக, சிறந்த தணிக்கையாளர்கள், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கணினி ஊடுருவல் நிபுணர் குழுக்கள் (Red teams) மற்றும் தானியங்கி ஸ்கேனிங் கருவிகள் என அனைத்தும் இந்தக் குறியீட்டைப் பரிசோதித்து, இது மிகவும் பாதுகாப்பானது என்றே கருதின. ஆனால், 'Mythos' (அதிநவீன இணையவழித் தாக்குதல் முறை) வந்த பிறகு நிலைமை மாறியது.
‘Anthropic’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'Mythos' என்பது ஒரு சாதாரண உரையாடும் மென்பொருள் (Chatbot) அல்ல. அது இணையவழித் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தும் ஒரு கணினித் திறன் முகவர் (Cyber-offense reasoning agent) ஆகும். இது மென்பொருளில் உள்ள ஒரு பிழையை (Bug) சாதாரணமாகக் கண்டறியாமல், அந்தப் பலவீனத்தின் பின்னணியைப் புரிந்து கொண்டு, சில நொடிகளுக்குள் 32 படிகளைக் கொண்ட இணையவழித் தாக்குதலைத் தானாகவே வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. மேலும், ஏற்கனவே அறியப்பட்ட இணையவழித் தாக்குதல்களை அதன் முதல் முயற்சியிலேயே 83.1% துல்லியமாகச் செய்து காட்டியுள்ளது. இதனை நான் "ஆச்சரியங்களின் முடிவு" (End of Surprise) என்று அழைக்கிறேன். ஏனெனில், மனித திறனுக்கும் அப்பாற்பட்ட வேகத்திலும் அளவிலும், இதுவரை கண்டறியப்படாத புதிய மென்பொருள் பலவீனங்களை (Zero-days) கணினிகளே கண்டறியத் தொடங்கும்போது, நாம் வழக்கமாகச் செய்யும் காலமுறைப் பாதுகாப்புத் தணிக்கைகளை மட்டுமே ஒரு பாதுகாப்பு அரணாக இனி நம்பியிருக்க முடியாது, அப்படி நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.
‘Mythos’ மென்பொருள் ஏற்படுத்திய தாக்கம் உலக அரசியல் சூழலையே மாற்றியமைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான கட்டுப்பாடுகளைக் குறைத்து, நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்கும் கொள்கையை பல மாதங்களாக ஆதரித்து வந்த டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், இப்போது தனது நிலையை அதிரடியாக மாற்றியுள்ளது. அதாவது, இந்தத் செயற்கை நுண்ணறிவுத் திறனை ஒரு நாட்டின் தேசிய சொத்தாக மாற்றி அரசாங்கத்தின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு "தேசியமயமாக்கல்" கொள்கையை நோக்கி தீவிரமாக நகரத் தொடங்கியுள்ளது.
மேம்பட்ட அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப (AI) மாதிரிகளைக் கட்டுப்படுத்தும் இறுதி அதிகார அமைப்புகளாக அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency (NSA)) ஆகிய இரு அமைப்புகளும் செயல்படும் ஒரு புதிய கட்டமைப்பு உருவாகி வருவதை அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்த அணுகுமுறையின்கீழ், எந்தவொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்பு, ராணுவத்தின் தலைமையிலான பாதுகாப்புச் சோதனைகளை அது கடந்து வருவது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம், அணுசக்தி செறிவூட்டல் தொழில்நுட்பத்தைப் (Nuclear enrichment technology) போலவே, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் தேசியப் பாதுகாப்போடு தொடர்புடைய, பொதுச் சமூகம் மற்றும் ராணுவம் ஆகிய இரண்டிற்கும் பயன்படும் ஒரு இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பமாக (Dual-use technology) அமெரிக்கா கருதுகிறது. இது "Fortress America" (அமெரிக்காவை ஒரு பலத்த கோட்டையாக மாற்றுவது) என்ற பாதுகாப்பு உத்தியின் டிஜிட்டல் வடிவமாகும். 'Mythos-class' போன்ற மிக அதீதத் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகள் இருக்கும் உலகில், ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரியின் ரகசியம் கசிவது என்பது வெறும் வணிகரீதியான இழப்பு மட்டுமல்ல, அது நாட்டின் பாதுகாப்பிற்கே ஏற்படும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடும் என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளைப் போல அதே தற்காப்பு மற்றும் கட்டுப்பாட்டு அணுகுமுறையைக் கையாள்வது ராஜதந்திரரீதியில் ஒரு பெரிய தவறாக முடிந்துவிடும். இந்தியாவின் உண்மையான பலமே அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில்தான் (Digital Public Infrastructure (DPI)) உள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்குத் துணையாக இருக்கும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகக் (Unified Payments Interface (UPI)) கட்டமைப்பு முதல் டிஜிட்டல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆதார் (Aadhaar) அமைப்பு வரை இதில் அடங்கும். நமது பலமே வெளிப்படைத்தன்மையிலும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும்தான் உள்ளது. உலகின் பிற பகுதிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் அதிநவீன தொழில்நுட்பங்களால் நமது பாதுகாப்பு அமைப்புகள் எளிதில் தாக்கப்படக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கும்போது, நாம் மேற்கத்திய நாடுகளின் "பாதுகாப்புச் சான்றிதழ்களுக்காக" மட்டும் காத்துக்கொண்டிருந்தால், அது நாமே நமக்கு ஒரு போலிப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு, எதிரிகளின் திடீர் மின்னல் வேகத் தாக்குதலுக்கு (Blitzkrieg-style attack) பலியாவதற்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்களின் மதிப்புச் சரிவு
இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் என்பது வெறும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இது நம் நாட்டின் ஒட்டுமொத்த வணிகம் சார்ந்த ஒரு பெரிய பிரச்சனையாகும். நம் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான TCS, Infosys, மற்றும் Wipro ஆகிய நிறுவனங்கள், கடந்த முப்பது ஆண்டுகளாக "வேலை நேரத்திற்கான கட்டணம்" (Billable hour) என்ற வணிக மாதிரியின் மூலம்தான் தங்களின் உலகளாவிய நிறுவனக் கட்டமைப்புகளைக் கட்டியெழுப்பியுள்ளன. இப்போதும், கணினிக் கட்டமைப்புகளை மனிதர்களே நேரடியாக ஆய்வு செய்யவும், பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யவும், மற்றும் பழைய கணினிக் குறியீடுகளைப் பராமரிக்கவும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால், 'Mythos' என்ற புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வருகையானது, இந்த பாரம்பரிய வணிக மாதிரிக்கு ஒரு "மதிப்புச் சரிவை" ஏற்படுத்தும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு செயற்கை நுண்ணறிவால் (AI) ஒரு மாத காலம் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஆய்வை, வெறும் ஐந்து வினாடிகளில் மிகக் குறைந்த செலவில் செய்து முடிக்க முடியும் என்றால், மனிதர்களால் செய்யப்படும் பாதுகாப்பு ஆய்வு என்பது ஒரு சேவையாக இருக்காது. மாறாக, அது ஒட்டுமொத்த வேலை வேகத்தையும் முடக்கும் ஒரு தடையாகவே மாறிவிடும்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இனிமேலும் வெறும் "சேவை வழங்குநர்களாக" மட்டும் இல்லாமல், உடனடியாக தாக்குதல்களைத் தாங்கித் தற்காக்கும் அமைப்புகளை உருவாக்கும் “மீள்திறன் கட்டமைப்பாளர்களாக" (Resilience architects) மாற வேண்டும். ஒரு பிழையை (Bug) சரிசெய்ய எவ்வளவு நேரமாகிறது என்பதற்குக் கட்டணம் வசூலிக்கும் முறையிலிருந்து மாறி, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு கணினி அமைப்பின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கும் நம்பகத்தன்மைக்கும் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு மாற வேண்டும்.
இயற்பியலாளரின் பார்வை
ஒரு இயற்பியலாளராக, இந்த நெருக்கடியை நான் 'அறிவுசார் பிறழ்வு' (Epistemic Drift) என்ற கோட்பாட்டின் மூலம் பார்க்கிறேன். அதாவது, நமது டிஜிட்டல் அமைப்புகள் மனிதர்களால் அவற்றின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலானதாக மாறும் ஒரு காலகட்டமாகும். மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத தொழில்நுட்ப அமைப்புகளை இப்போது நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு செயற்கை நுண்ணறிவால் (AI) 27 ஆண்டுகள் பழமையான மென்பொருள் குறைபாட்டைக் கண்டறிய முடிகிறது என்னும் போது, நமது மென்பொருட்களின் அடித்தளத்தையே நம்மால் நம்ப முடியாமல் போகிறது. இதனால், இந்த டிஜிட்டல் யுகத்தைத் தாங்கி நிற்கும் 'நம்பிக்கை' பலவீனமடையத் தொடங்குகிறது.
இயற்பியலில், 'Entropy' என்பது இயற்கையாகவே சீர்குலைவை நோக்கிச் செல்லும் ஒரு போக்கைக் குறிக்கும். இந்த டிஜிட்டல் உலகில், 'Mythos' செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது ஒரு சீர்குலைவை உண்டாக்கும் இயந்திரம் (Entropy engine) போலச் செயல்படுகிறது. நம்மால் ஒரு பாதுகாப்பை உருவாக்குவதற்கு முன்பாகவே, அது பலவீனங்களைக் கண்டறிந்து அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டுமானால், "பாதுகாப்பு" என்பதை வெறும் ஒரு கதவைப் பூட்டுவது போன்ற எளிய விஷயமாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, உடலின் "நோய் எதிர்ப்பு மண்டலம்" போல, பாதிப்புகள் வந்தாலும் தானாகவே மீண்டுவரும் திறனைக் கொண்ட தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்க வேண்டும்.
நான் அடிக்கடி “இறையாண்மை நிலைத்தன்மை” (sovereign resilience) பற்றி பேசியிருக்கிறேன், ஆனால் Mythos-ஐத் தொடர்ந்து, இது ஒரு கொள்கைப் பரிந்துரையிலிருந்து அரசுக்கான உயிரியல் அவசியமாக உருவாக வேண்டும். இது நமது தேசிய கட்டமைப்பில் ஒரு அடிப்படை மாற்றத்தைத் தேவைப்படுத்துகிறது.
முதலாவதாக, கணினித் திறன் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் 'Project Glasswing' போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த திட்டங்களில் இந்தியா ஒரு இரண்டாம்தரப் பங்களிப்பு நாடாகவே நீடிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, 'BharatGen' போன்ற நமது சொந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி, நமக்கான இறையாண்மைமிக்க 'பாதுகாப்பு மொழி மாதிரிகளை (Defensive LLMs) உருவாக்க வேண்டும். இவை பொதுமக்களுக்கான உரையாடும் மென்பொருள்களாக (Chatbots) அல்ல; மாறாக 'இந்தியா ஸ்டேக்' (India Stack) தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட, நமது உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளாகும். இவை நமது அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைத் தொடர்ச்சியாகத் தேடிக் கண்டறியவும், வரவிருக்கும் இணையவழித் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாக்க உதவும். இந்தியாவின் தொழில்நுட்ப பலவீனங்களை மற்ற நாடுகள் கண்டறிவதற்கு முன்பாக, நாமே முதலில் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
இரண்டாவதாக, நாம் 'தானியங்கி தன்-சீரமைப்பு' (Autonomous Self-Healing) முறையை நோக்கி நகர வேண்டும். தானியங்கி முறையில் இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் இன்றைய உலகில், ஒரு கணினி நிர்வாகி (Human administrator) உள்ளே நுழைந்து சர்வரைச் சரிசெய்வார் என்று காத்திருப்பது காலாவதியான முறையாகும். நமது மின்சாரக் கட்டமைப்புகள், தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் நிதி அமைப்புகள் போன்றவை ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதைத் தானாகவே கண்டறிந்து, உடனுக்குடன் தங்களைச் சரிசெய்து கொள்ளும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும். இது வெறும் வலுவான கணினிப் பாதுகாப்பு (Firewall) அமைப்புகளை உருவாக்குவது பற்றியது மட்டுமல்ல; ஒருவேளை தாக்குதலுக்கு உள்ளானாலும்கூட, தொடர்ந்து தங்கு தடையின்றி இயங்கக்கூடிய திறனுள்ள அமைப்புகளை உருவாக்குவது பற்றியதாகும்.
இறுதியாக, நமக்கு 'தாக்குதலுக்குப் பிந்தைய தணிக்கை ஒழுங்குமுறை கட்டமைப்பு' (Post-Audit Regulatory Framework) தேவைப்படுகிறது. வங்கிகளின் அபாயங்களை ஆராய்ந்து வரும் சி.எஸ். செட்டி குழு உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள், தாக்குதல்களைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 'Mythos' (அதிநவீன இணையவழித் தாக்குதல் முறை) போன்ற ஆபத்துகள் நிறைந்த இந்தக் காலத்தில், தாக்குதல்கள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, இப்போது மிக முக்கியமான அளவுகோல் என்னவென்றால், 'மீளெழுச்சிப் பெறுவதற்கான நேரம்' தான். அதாவது, ஒரு வங்கி தனது தொழில்நுட்ப அமைப்பிற்குள் நடந்த ஊடுருவலை எவ்வளவு விரைவாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியைத் தனிமைப்படுத்தி, மீண்டும் ஒரு பாதுகாப்பான நிலைக்குத் திரும்புகிறது என்பதுதான். 2026-ஆம் ஆண்டில், நாம் செய்ய வேண்டிய தணிக்கை முறை இதுவே ஆகும்.
ஒரு புதிய சூழல்
தாக்குதலின் வேகத்தை தொழில்நுட்பம் அதிகரிக்கும் போதெல்லாம், நாம் உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் வேகத்தையும் அதிகரிப்பதுதான் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. போர் பீரங்கிகளின் வருகை அகழிகளை (Trenches) பயனற்றதாக்கியது. போர் விமானங்களின் வருகை பிரம்மாண்ட போர்க்கப்பல்களை வெறும் இலக்குகளாக மாற்றியது. அதுபோலவே, இப்போது தன்னியக்க செயற்கை நுண்ணறிவின் (Autonomous AI) வருகையானது, நாம் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் நிலையான கணினிப் பாதுகாப்பு அமைப்புகளைப் பயனற்றதாக மாற்றிவிட்டது.
‘Mythos’ தொழில்நுட்பம் என்பது வெறும் மென்பொருள் மேம்பாடு அல்ல. அது ஒட்டுமொத்த டிஜிட்டல் சூழலையும் மாற்றியமைக்கும் ஒரு புரட்சியாகும். நாம் எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சியடைவதற்குக் காரணமான ஒரு காலகட்டம் இதோடு முடிவுக்கு வருகிறது. இதில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்றால், நாம் இன்னும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, மிக வேகமாகச் செயல்படும் மற்றும் தனக்குத்தானே தவறுகளைத் திருத்திக் கொள்ளும் ஒரு சுறுசுறுப்பான நாடாக இந்தியா மாற வேண்டும்.
தன்னியக்க நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (Autonomous intelligence) காலத்தில், இயந்திரங்களைவிட வேகமாக நம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனே நமக்கான ஒரே உண்மையான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும். பழைய பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே தகர்க்கப்பட்டுவிட்டன. இனி இந்தியா வேகமாக முன்னேறிச் செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.
நிஷாந்த் சஹ்தேவ், சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயற்பியலாளர் ஆவார். மேலும் இவர் செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய அமைப்புகள் குறித்து எழுதும் ஒரு கட்டுரையாளர் ஆவார்.
Original article : How India can protect its digital ecosystem? -Nishant Sahdev