இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (BITs) - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• நாடுகளுடனான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை (Bilateral Investment Treaties (BITs))  ஒன்றிய அரசு மாற்றியமைப்பதற்கான மூன்று முக்கிய கோட்பாடுகள் இவை என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிந்து கொண்டுள்ளது.


• தற்போதைய, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் மாதிரியில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், மற்ற நாடுகளுடனான உறவுமுறைக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, சில நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளின்போது, ​​சர்வதேச நடுவர் மன்றத்தை நாடும் முன் உள்ளூர் சட்ட நடைமுறைகள் அல்லது தீர்வு வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த ஒரு வருட கால அவகாசத்தை அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக உயர்மட்டத்தில் இருக்கும் அரசு வட்டாரம் ஒன்று  செய்தித்தாளிடம் தெரிவித்தது.




• நாட்டின் 2016-க்கு முந்தைய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த (BIT) மாதிரியில் இடம்பெறாத 'உள்ளூர் தீர்வு வழிமுறைகள்' (local remedies) தொடர்பான விதிமுறை முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையை ஏற்படுத்துமா என்று கேட்டபோது, ​​இந்தியா இதற்கென தனியாக வணிக நீதிமன்றங்களை அமைப்பதை வலியுறுத்தியுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்தது. அனைத்து நாடுகளின் நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாததும், தன்னிச்சையான முடிவுகளுக்கு வழிவகுக்கக்கூடியதுமான சர்வதேச நடுவர் மன்ற நடைமுறைக்குச் செல்வதற்கு முன்னதாக, இந்த வணிக நீதிமன்ற வழிமுறையை ஆராய வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.


• Vodafone மற்றும் Cairn போன்ற உலகளாவிய நிறுவனங்கள் பல்வேறு வரி தொடர்பான பிரச்சனைகளில் இந்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்த சர்வதேச நடுவர் மன்ற வழக்குகள், 1993-ஆம் ஆண்டின் பழைய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த மாதிரியில் மாற்றங்களைக் கொண்டுவர முக்கியமானதாக அமைந்தன. முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகவும், நிலையான அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையிலும் 2016-ஆம் ஆண்டு மாதிரியை மறுசீரமைப்பதாக 2025-26-ஆம் ஆண்டிற்கான  நிதி நிலை அறிக்கை  அறிவிக்கப்பட்டது.


• பிப்ரவரி 2025-ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்த நடுவர் மன்றம் (International Commercial & Investment Treaty Arbitration) தொடர்பான நிகழ்வில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து (free trade agreements (FTAs)) தனியாக சரி பார்த்து  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும், வரிவிதிப்பு போன்ற கொள்கை உருவாக்கம் சார்ந்த அம்சங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


உங்களுக்குத் தெரியுமா?


• நாடுகள் ஒன்றுக்கொன்று முதலீடுகளை மேற்கொள்ளும்போது, ​​முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (Bilateral Investment Treaties (BITs)) முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போது, ​​டிசம்பர் 2015-ல் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 2016-ல் நடைமுறைக்கு வந்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த மாதிரியை அரசு பின்பற்றுகிறது. இந்த மாதிரி, சர்வதேச நடுவர் மன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன் உள்நாட்டுத் தீர்வு வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் (exhaustion of domestic remedies) என்று கட்டாயமாக்குகிறது.



• 2016-ஆம் ஆண்டு மாதிரிக்கு முன்னதாக, 1993-ஆம் ஆண்டின் மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் 2003-ல் திருத்தப்பட்டதன் அடிப்படையில், இந்தியா 83 நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது. அவற்றில் 74 ஒப்பந்தங்கள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டன. மார்ச் 2023-ல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, இந்த 74 இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில், 2016-ஆம் ஆண்டு மாதிரியின் அடிப்படையில் மறுபேச்சுவார்த்தை நடத்தக் கோரி 68 நாடுகளுக்கு ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது.


• திருத்தப்பட்ட 2016-ஆம் ஆண்டு மாதிரிக்குப் பிறகு, இந்தியா பெலாரஸ், ​​கிர்கிஸ் குடியரசு ஆகியவற்றுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களிலும், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடன் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் வசதி ஒப்பந்தத்திலும் (Investment Cooperation and Facilitation Treaty (ICFT)) கையெழுத்திட்டுள்ளது என்று ஏப்ரல் 2025-ல் மக்களவையில் அளிக்கப்பட்ட ஒரு பதிலின் மூலம் தெரியவந்தது. ஐக்கிய அரபு அமீரகத்துடனான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில், உள்ளூர் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடு ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், இந்தியா தைபே சங்கம் மற்றும் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் ஆகியவற்றுக்கு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது என்று அது தெரிவித்தது.


original article : Bilateral Investment Treaties (BITs)? -Priya Kumari Shukla

Share: