'வளர்ந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்' (Drug-Free Youth for Viksit Bharat) பிரச்சாரம் என்பது என்ன? -தேவேஷ் கே பாண்டே

 போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான அரசின் உத்தி என்ன? சட்ட   செயல்பாடு எவ்வாறு இருந்துள்ளது?


போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக இளைஞர்களைத் திரட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லா இளைஞர் உறுதிமொழி இயக்கம் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.


இந்த இயக்கத்திற்கு, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி, ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களின் பங்கேற்புடன் 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட்டது. இதற்கு 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.


விளையாட்டு, கலை, கலாச்சாரம், தியானம், ஆன்மீகம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை மையமாகக்கொண்ட செயல்பாடுகளுடன், இந்த முன்னெடுப்பு 100 வாரங்களுக்குத் தொடரும்.


இந்த பிரச்சாரம் ஏன் வளர்ந்த இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது?


இந்த தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இந்தியாவின் இளைஞர் சமுதாயமே முக்கியம் என அரசு கருதுகிறது. பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தபிறகு பேசிய மோடி, இந்தியாவின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் படைப்பாற்றலைச் சார்ந்தே உள்ளது என்று குறிப்பிட்டார்.


போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உடல்நலம், உற்பத்தித்திறன் மற்றும் சமூக நிலைத்தன்மை போன்றவற்றைப் பாதித்து, நாட்டின் மக்கள்தொகை சார்ந்த சாதகமான நிலையை வலுவிழக்கச் செய்யலாம்.


குடும்பங்களிலும் சமூகத்திலும் இது போன்ற சூழல் ஏற்படும்போது, ​​நாட்டின் நிலைத்தன்மையும் குறைகிறது. நமது இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்குள் தள்ள எதிரி நாடுகள் சதி செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல் மூலம் லாபம் ஈட்டுவதும், அதே வேளையில் நமது நாட்டை வலுவிழக்கச் செய்வதும் அவர்களின் தீய நோக்கத்தின் ஒரு பகுதியாகும். எனவே, ஒவ்வொரு இளைஞரும் இதில் சிக்காமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான அரசின் உத்தி என்ன?


அரசின் அணுகுமுறை மூன்று பரந்த தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது: அவை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தேவையைக் குறைத்தல், கடுமையான சட்டங்கள் மூலம் விநியோகத்தைக் குறைத்தல் மற்றும் மறுவாழ்வு மூலம் பாதிப்புகளை குறைப்பாதகும்.


இந்த விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் விரிவான  செயல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்பு மையத்தின் (Narco-Coordination Centre (NCORD)) 10-வது உயர்மட்டக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “போதைப்பொருள் கட்டுப்பாட்டிற்கான தொலைநோக்கு ஆவணத்தை (Vision Document on Drug Control, 2026–2029) வெளியிட்டார்.


இந்த உத்தி, “கண்டறிதல் (Detect), சீர்குலைத்தல் (Disrupt), மற்றும் முற்றிலுமாக அழித்தல் (Destroy)” என்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் நோக்கம், சர்வதேச போதைப்பொருள் வழங்குநர்கள், குற்றங்களை செய்யும் குழுக்கள், உள்ளூர் விநியோக வலையமைப்புகள், போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி வழங்கும் நிதி வலையமைப்புகள்,  உருவாகி வரும் டிஜிட்டல் கடத்தல் முறைகள் உள்ளிட்ட முழு போதைப்பொருள் சூழலையும் இலக்காகக் கொண்டு ஒழிப்பதாகும்.


உள்துறை அமைச்சர் எது போன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்?


ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான போதைப்பொருள் தடுப்புப் பணிப் படைகளை (Anti-Narcotics Task Forces (ANTFs)) அமைக்கவும், மத்திய மற்றும் மாநில முகமைகளுக்கு இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் உள்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தடயவியல் அறிவியல் ஆய்வகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல், உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தல், அதிக தண்டனைத் தீர்ப்பு விகிதங்கள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலான வழக்கமான மறுஆய்வுகள் ஆகியவற்றையும் உள்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட அமலாக்கத்தின் பதிவு எப்படி இருந்துள்ளது?


போதைப்பொருட்கள் மற்றும் மனதை பாதிக்கும் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances (NDPS)) சட்டத்தின்கீழ், வலுவான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றாக, பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


அரசாங்கத் தரவுகளின்படி, 2014 மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கு இடையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முகமைகளால் ₹1.84 லட்சம் கோடி மதிப்புள்ள 1.18 கோடி கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 42.47 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. இந்த முகமைகள் 8.75 லட்சம் வழக்குகளைப் பதிவு செய்து, 10.97 லட்சம் குற்றவாளிகளைக்கைது செய்துள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில், மே 2026-ல் 'ஆபரேஷன் ரேஜ்பில்' (Operation Ragepill) திட்டத்தின்கீழ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) முதன்முறையாக சுமார் 227.7 கிலோ கேப்டகானைப்  (Captagon) பறிமுதல் செய்த நடவடிக்கைகளும் அடங்கும். அதே மாதம், 'ஆபரேஷன் ஒயிட் ஸ்ட்ரைக்' (Operation White Strike) திட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பை பகுதியில் ₹1,745 கோடி மதிப்புள்ள 349 கிலோ கொக்கைனை அந்த அமைப்பு பறிமுதல் செய்தது.


வரவிருக்கும் சவால்கள் என்ன?

தங்கப் பிறை (Golden Crescent) மற்றும் தங்க முக்கோணம் (Golden Triangle) போன்ற முக்கிய போதைப்பொருள் உற்பத்திப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், இந்தியா இது போன்ற சவால்களை எதிர்கொள்கிறது.


புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டால், பாரம்பரிய போதைப்பொருள் கடத்தல் முறைகள் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளன. செயற்கை போதைப்பொருட்கள் (Synthetic Drugs), டார்க்நெட் வழி நடைபெறும் கடத்தல், குறியாக்கப்பட்ட (Encrypted) தகவல் தொடர்பு வலையமைப்புகள், கிரிப்டோகரன்சி மூலம் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகள், ட்ரோன் மூலம் கடத்தல், ஆன்லைன் சந்தைகள் மற்றும் எல்லை தாண்டிய விநியோக வழித்தடங்கள் போன்றவை புதிய சவால்களாக அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன.


கடுமையான சட்ட நடவடிக்கைகளுடன் போதுமான மறுவாழ்வு (Rehabilitation) நடவடிக்கைகளையும் உறுதிசெய்வது மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது. குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பது முக்கியமான ஒன்றாகும். அதேவேளையில், போதைக்கு அடிமையானவர்கள் மீண்டு வந்து சமூகத்துடன் மீண்டும் இணையத் தொடர்ச்சியான நிறுவனரீதியான ஆதரவும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.


Original Link : What is the Drug-Free Youth for Viksit Bharat campaign? -Devesh K  Pandey

Share: