நகர்ப்புறப் பகுதிகள் பல்வேறு வகையான கழிவுகளையும் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் உருவாக்குகின்றன. இவற்றை மீண்டும் மதிப்புமிக்க 'இரண்டாம் நிலை மூலப்பொருட்களாகப்' (Secondary raw materials) பயன்படுத்த முடியும். முக்கியமான கனிமங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்தியா போன்ற அதிவேகமாக நகரமயமாக்கப்பட்டு வரும் ஒரு நாட்டிற்கு, 'நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல்' (Urban Mining) என்பது பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் உத்திமுறைரீதியில் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்தியா லித்தியம் (Lithium), கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), தாமிரம் (Copper), கிராஃபைட் (Graphite) மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் (Rare earth elements) போன்ற முக்கியமான கனிமங்களின் இறக்குமதிக்கு பெருமளவில் பிற நாடுகளையே சார்ந்துள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தால் அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றின் காரணமாக, இந்த இறக்குமதிச் சார்பு நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நகர்ப்புறக் கழிவுகளிலிருந்து இந்த மதிப்புமிக்க கனிமங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பை ‘நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல்’ வழங்குகிறது. இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சவால்கள் ஆகிய இரண்டையுமே எதிர்கொள்ள உதவுகிறது.
நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்றால் என்ன? அத்தியாவசியக் கனிமங்களுக்கான தேவை அதிகரித்து வரும் இந்தியா போன்ற அதிவேகமாக நகரமயமாக்கப்படும் ஒரு நாட்டிற்கு, இது ஏன் ஒரு பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் உத்திமுறைரீதியிலான அவசியமாக மாறியுள்ளது?
நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்றால் என்ன?
நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்பது நகரங்களில் உருவாகும் கழிவுகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட பொருட்களிலிருந்து மதிப்புமிக்கப் பொருட்களைப் பிரித்தெடுத்து மீட்டெடுக்கும் ஒரு செயல்முறையாகும். இது நகர்ப்புறக் கழிவுகளை, முக்கியமான மூலப்பொருட்களைப் பெறுவதற்கான ஒரு நிலையான ஆதாரமாக மாற்றுகிறது. 'நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல்' என்ற இந்தச் சொல்லை 1980-களில் ஜப்பானில் உள்ள தோஹோகு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிடேஓ நான்ஜியோ அறிமுகப்படுத்தினார். இன்று, நகர்ப்புறச் சுரங்கமானது சுழற்சிப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படுகிறது.
வேகமான நகரமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் அதிகரித்த பயன்பாடு ஆகியவை இருபத்தொன்றாம் நூற்றாண்டை வடிவமைத்துள்ளன. நகரங்கள் தொடர்ந்து விரிவடைந்து, உள்கட்டமைப்புகள் பெருகி வரும் சூழலில், தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை நோக்கிய மாற்றம் நிலக்கரி, லித்தியம் போன்ற முக்கியக் கனிமங்களின் தேவையை அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தாலும், அதேவேளையில் இரண்டு முக்கியச் சவால்களையும் உருவாக்கியுள்ளன.
முதலாவது, தூக்கி எறியப்படும் மின்னணு சாதனங்கள் (E-waste), பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகனங்கள் மற்றும் கட்டிடக் கட்டுமானக் கழிவுகள் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதாகும். இரண்டாவதாக, லித்தியம், கோபால்ட், தாமிரம், நிக்கல் மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் (Rare Earth Elements) போன்ற கனிமங்களுக்கான தேவை மிகவேகமாக அதிகரிப்பது. தேவைகளின் இந்தத் திடீர் உயர்வு, இயற்கை வளங்களின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சிக்கல்களின் தீவிரத்தை ஒரு உண்மையின் மூலம் நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நமது பூமி தனது இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்கித் தரும் வேகத்தைவிட, 1.7 மடங்கு வேகத்தில் மனிதகுலம் தற்பொழுது அந்த வளங்களைப் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், தினமும் லட்சக்கணக்கான டன் திடக் கழிவுகள் குப்பை மேடுகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், இந்த இரண்டு பெரும் சவால்களுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணும் ஒரு ஒருங்கிணைந்த தீர்வாக 'நகர்ப்புறச் சுரங்க முறை' (Urban Mining) உருவெடுத்துள்ளது.
நகர்ப்புற தாதுக்களின் முக்கிய ஆதாரங்கள்
நகர்ப்புறப் பகுதிகள் பல்வேறு வகையான கழிவுகளை உருவாக்குகின்றன. இவற்றை நாம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'இரண்டாம் நிலை மூலப்பொருட்களாக' மாற்ற முடியும். நகர்ப்புறங்களில் கிடைக்கும் இத்தகைய வளங்களில் மின்னணு பயன்பாட்டுக் கழிவுகள் மிகவும் முக்கியமானதாகும். இந்த மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, தாமிரம், கோபால்ட், லித்தியம் மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் போன்ற மிகவும் மதிப்புமிக்க உலோகங்கள் நிறைந்துள்ளன. 'Global E-waste Monitor' அமைப்பின் அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 6.2 கோடி டன்கள் மின்னணு கழிவுகள் உருவாகியுள்ளன. ஆனால், இதில் 22.3 சதவீதம் மட்டுமே அதிகாரப்பூர்வமாகச் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டன. இதன் காரணமாக, மீட்டெடுக்கக்கூடிய சுமார் 6,200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் வீணாக்கப்பட்டன.
குறிப்பாக, உலகளாவிய மின்னணுக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் 2.6 மில்லியன் டன்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், இது 2030-ஆம் ஆண்டிற்குள் 82 மில்லியன் டன் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023–24-ஆம் ஆண்டில், இந்தியா 17,51,236 மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகளை உருவாக்கியுள்ளது.
கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளால் உருவாகும் கழிவுகளே அளவின் அடிப்படையில் 'நகர்ப்புறத் தாதுக்களின்' (Urban ores) மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் எஃகு (Steel), மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட், மரம், தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற மறுபயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்கள் நிறைந்துள்ளன. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 முதல் 3 பில்லியன் டன்கள் வரை இத்தகைய கழிவுகள் உருவாகின்றன. மேலும், உலகின் ஒட்டுமொத்தத் திடக்கழிவுகளில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான கழிவுகள், கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளின் மூலம் உருவாகின்றன.
இருப்பினும், இந்த கழிவுகளை 91 சதவீதம் வரை மறுசுழற்சி செய்ய முடியும் என்ற போதிலும், இதில் 22.44 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சி காரணமாக, கட்டுமானம் மற்றும் இடிப்பு சார்ந்த கழிவுகள் ஆண்டுதோறும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அதிகரித்து வருகின்றன. ஆர்.கே. சக்திபாலா மற்றும் பலர் எழுதிய "A Critical Review on Recycling and Reuse of Construction and Demolition Waste Materials (2025)" ஆய்வின்படி, சீனாவே ஆண்டிற்குச் சுமார் 100 கோடி டன்கள் கழிவுகளுடன் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 60 கோடி டன்களுக்கு அதிகமான கழிவுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியம் 40 முதல் 50 கோடி டன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பயன்பாட்டுக்காலம் முடிந்த வாகனங்கள் (End-of-life vehicles (ELV) நகரங்களில் கிடைக்கும் வளங்களின் மற்றொரு முக்கிய ஆதாரமாகும். இவற்றில் எஃகு (Steel), அலுமினியம், தாமிரம் மற்றும் பிளாட்டினக் குழு உலோகங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன. இவற்றை மீட்டெடுத்து மீண்டும் உற்பத்தித் துறையில் பயன்படுத்த முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் 2023-ஆம் ஆண்டில் சுமார் 43 லட்சம் எண்ணிக்கையிலான பயன்பாட்டுக்காலம் முடிந்த வாகனங்கள் பதிவாகின. இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் சுமார் 1 கோடி அளவிலான பயன்பாட்டுக்காலம் முடிந்த வாகனங்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது; நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட "Enhancing Circular Economy of End-of-Life Vehicles in India (2026)" அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 5 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளப் பாதுகாப்பையும் சுழற்சிப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த நகர்ப்புறச் சுரங்க முறை
நகர்ப்புறங்களில் சேரும் கழிவுகளிலிருந்து பயனுள்ள உலோகங்களைப் பிரித்தெடுக்கும் இந்த நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் (Urban Mining), இந்தியாவின் முக்கியச் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக உருவெடுத்துள்ளது. இதனுடைய மிகப்பெரிய நன்மையே நாட்டின் வளப் பாதுகாப்பை மேம்படுத்துவதுதான். மேலும், முன்னர் குறிப்பிடப்பட்டபடி, லித்தியம் (Lithium), கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), தாமிரம் (Copper), கிராஃபைட் (Graphite) மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் போன்ற மிக முக்கியமான கனிமங்களுக்கு இந்தியா பிற நாடுகளின் இறக்குமதியை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளது. இதனால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது.
வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் வழக்கமான சுரங்கத் தொழிலைப் போலன்றி, நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் நாட்டிற்குள்ளேயே ஏற்கெனவே கொட்டிக்கிடக்கும் கழிவுகளிலிருந்து மதிப்பெமிக்கப் பொருட்களை மீட்டெடுக்கிறது. இது இத்துறையை மிக வேகமாக விரிவுபடுத்தவும், உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இரண்டாவதாக, நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் மூலம் கனிமங்களை மீட்டெடுப்பது, இயற்கையான சுரங்கங்களில் இருந்து கனிமங்களை எடுப்பதைவிட மிகக் குறைந்த அளவே ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, திறந்தவெளிச் சுரங்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், கழிவுப் பொருட்கள் தேங்குவது மற்றும் அதிகப்படியான நீர் வீணாவதைத் தடுக்கிறது. மேலும், மின்சார வாகனங்கள் (EVs), சூரியஒளி மின் தகடுகள் மற்றும் பிற தூய்மைத் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான முக்கிய கனிமங்களை வழங்கி, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆதரவளிக்கிறது. அதேவேளையில், வழக்கமான சுரங்கத் தொழிலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் குறைக்கிறது.
மூன்றாவதாக, நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்பது கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்ற உதவுகிறது மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது. இது தூக்கி எறியப்பட்ட பொருட்களிலிருந்து பயனுள்ள மூலப்பொருட்களை மீட்டு, அவற்றை மீண்டும் உற்பத்திச் சுழற்சிக்குள் கொண்டு வருகிறது. அதேநேரத்தில், கழிவுகளைச் சரியாகச் சேகரித்தல், தரம் பிரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் வளங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நகர்ப்புறக் கழிவு மேலாண்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது நச்சு மாசுபாட்டைக் குறைத்து, மண் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுப்பதுடன், காரீயம் (Lead), பாதரசம் (Mercury) மற்றும் காட்மியம் (Cadmium) போன்ற அபாயகரமான வேதிப்பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.
இந்தியாவின் நகர்ப்புறச் சுரங்க சாத்தியக்கூறுகளும், கொள்கை சார்ந்த முயற்சிகளும்
இந்தியா, உலகில் மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் மூன்றாவது பெரிய நாடாகும். இதன் ஆண்டுப் பொருளாதார மதிப்பு சுமார் 51,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பில் சுமார் 60 சதவீதத்தை தொழில்நுட்பரீதியாக மீட்டெடுக்க முடியும் என்றாலும், தற்போதைய அமைப்புகள் 18 சதவீதத்தை மட்டுமே மீட்டெடுக்கின்றன. நிதி ஆயோக் அமைப்பின் ‘Advancing Circular Economy of Waste Electronic and Electrical Equipment and Lithium-Ion Batteries in India, (2026)’ அறிக்கைப்படி, இந்தியா தனது மின்னணுக் கழிவுகளில் சுமார் 10 சதவீதத்தை மட்டுமே மறுசுழற்சி செய்கிறது. இது உலகளாவிய சராசரியான ஏறக்குறைய 22 சதவீதத்தைவிட குறைவாகும்.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 500 மில்லியன் டன் வரையிலான கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை உருவாக்குகிறது. இதில் பெரும்பாலான கழிவுகள் முறையான மறுசுழற்சி செய்யப்படமால் அப்படியே கொட்டப்படுகின்றன. நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் முறையின் மகத்தான சாத்தியக்கூறுகளை உணர்ந்த அரசு, கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்கவும், புதிய தாதுக்களை வெட்டி எடுப்பதன் மீதான சார்புநிலையைக் குறைக்கவும் கொள்கைகளை வலுப்படுத்தியுள்ளது. தேசிய முக்கியக் கனிமங்கள் திட்டத்தின்கீழ் (National Critical Mineral Mission), இரண்டாம் நிலை ஆதாரங்களில் இருந்து முக்கியத் தாதுக்களை மீட்கும் மற்றும் உற்பத்தி செய்யும் உள்நாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை 1,500 கோடி ரூபாய் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் 2025-26-ஆம் ஆண்டு முதல் 2030-31-ஆம் நிதியாண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கியமான கொள்கை நடவடிக்கை 'விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு' (Extended Producer Responsibility (EPR)) ஆகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு கொள்கையின்படி, தயாரிப்பாளர்களும் உற்பத்தியாளர்களும் தங்களது பொருட்கள் பயன்பாட்டுக் காலத்தின் முடிவை எட்டிய பிறகு, அவற்றைச் சேகரிப்பது, மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பாக நிர்வகிப்பது ஆகியவற்றிற்கு நிதிரீதியாகவும் செயல்பாட்டுரீதியாகவும் பொறுப்பேற்க வேண்டும். இந்த விதிமுறை சமீபத்திய பல கட்டுப்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, மின்கலக் கழிவு மேலாண்மை விதிகள், 2022-ன்படி, 2027–28-ஆம் ஆண்டு முதல் புதிய மின்கலன்களில் 5 சதவீதம் உள்நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் இருக்க வேண்டும். இது, 2030–31-ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். அதேபோல, மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், (E-waste (Management) Rules, 2022), சுற்றுச்சூழல் (கட்டுமானம் மற்றும் இடிப்பு) கழிவு மேலாண்மை விதிகள், (Environment (Construction and Demolition) Waste Management Rules 2025) மற்றும் சுற்றுச்சூழல் (பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகனங்கள்) விதிகள், (Environment (End-of-Life Vehicles) Rules 2025) ஆகியவை கழிவுப் பொருட்களை அறிவியல் பூர்வமாகச் சேகரிப்பதையும் மறுசுழற்சி செய்வதையும் உறுதிசெய்யக் கட்டாய விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இலக்குகளை நிர்ணயித்துள்ளன.
சவால்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும்
மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் மற்றும் பலன்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் (Urban Mining) இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதில் முதல் சவாலே, கழிவுகளைச் சரியாகச் சேகரிக்காததும் அவற்றைத் தரம் பிரிக்காததும்தான். நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுகளில் பெரும்பகுதி முறையாகச் சேகரிக்கப்படுவதில்லை, அல்லது அவை முறைசாராப் பிரிவினரிடம் சென்று சேர்கின்றன. எடுத்துக்காட்டாக, மின்னணு கழிவுகளில் இருந்து முறைசாரா மறுசுழற்சியாளர்கள் வெறும் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான மூலப்பொருட்களை மட்டுமே மீட்டெடுக்க முடிகிறது. ஆனால், நவீன வசதிகள் கொண்ட முறையான மறுசுழற்சி மையங்களோ 95 சதவீதம் முதல் 97 சதவீதம் வரையிலான மூலப்பொருட்களை வெற்றிகரமாக மீட்டெடுக்கின்றன.
இரண்டாவது சவால் என்னவென்றால், 'விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின்' (EPR) வரையறுக்கப்பட்ட எல்லையாகும். மின்னணுக் கழிவுகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பிற மதிப்புமிக்க மற்றும் முக்கியமான கனிமங்களை மீட்டெடுக்க முடியும் என்றபோதிலும், 2022-ஆம் ஆண்டின் மின்னணு கழிவு விதிகள் (E-Waste Rules, 2022) தாமிரம், அலுமினியம், இரும்பு மற்றும் தங்கம் ஆகிய நான்கு உலோகங்களை மட்டுமே விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின்கீழ் கொண்டுவந்துள்ளன.
மூன்றாவது சவால், அமைப்புகளிடையே நிலவும் பிளவுபட்ட பணிப்பகிர்வு முறை ஆகும். கழிவு மேலாண்மை, கனிமப் பாதுகாப்பு மற்றும் தொழிற்துறைக் கொள்கைகளுக்கான பொறுப்புகள் பல அமைச்சகங்களுக்கும், போதிய நிதி மற்றும் அதிகார வளங்கள் இல்லாத நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இதனால், வளங்களைச் சரியாக மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வெறும் விதிமுறைகளை நடைமுறைளவில் பூர்த்தி செய்வதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தச் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், நகர்ப்புறச் சுரங்கத்தின் (Urban Mining) முழுப் பலனையும் அடைவதற்கும், இந்தியா தனது கழிவு சேகரிப்புத் துறையை முறைப்படுத்த வேண்டும் மற்றும் மறுசுழற்சி உள்கட்டமைப்பை விரிவாக்க வேண்டும்.
உற்பத்தியாளரின் விரிவாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் விதிகளின்கீழ் கொண்டுவரப்படும் உலோகங்களின் பட்டியலில் லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் ஆகியவையும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், பொருட்கள் வடிவமைக்கப்படும் நிலையிலேயே, அவற்றைப் பழுதுபார்க்கும் வசதி மற்றும் சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புத் தரநிலைகள் ஆகியவற்றின் மூலம் வளங்களை மீட்டெடுக்கும் முறையை ஒருங்கிணைக்க வேண்டும்.
மேலும், அமைச்சகங்களுக்கு இடையேயான மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பும், கழிவு மேலாண்மையை முக்கியமான கனிமப் பாதுகாப்புடன் இணைக்கும் ஒரு முழுமையான சுழற்சிப் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதும் அவசியமாகிறது.
Original Link : How urban mining can transform waste into wealth and operationalise circular economy. - Renuka