நாடாளுமன்றம் ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது? - சந்தீப் ஃபுகன்

2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-லிருந்து 34-ஆக உயர்த்திய பிறகு, நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்வு இதுவாகும்.


தற்போதைய செய்தி


இந்தியத்தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்திய அவசரச்சட்டத்திற்குப் பதிலாக, 2026-ஆம் ஆண்டு 'உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. தொடர்பில்லாத விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், எந்த விதமான விவாதமும் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது மாநிலங்களவையில் பரிசீலனைக்காகக் காத்திருக்கிறது.


இந்த மசோதா என்ன செய்கிறது?


இந்த மசோதா 1956-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ((Number of Judges) Act, 1956) எண்ணிக்கை சட்டத்தில் திருத்தம் செய்து, சாதாரண (Puisne) நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37-ஆக உயர்த்துகிறது. இதன் மூலம் இந்திய தலைமை நீதிபதி (CJI) உட்பட உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-லிருந்து 38-ஆக அதிகரிக்கிறது.



அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் என்ன கூறியது?


மக்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் முக்கிய நோக்கம், அதிகரித்து வரும் வழக்குகளை திறமையாக கையாளுவதன் மூலம் விரைவான மற்றும் தேவையான நீதியை வழங்கும் என்று தெரிவித்தார்.


தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதையும், நீதிமன்றத்தின் வழக்குத் தீர்வு காணும் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த மசோதா முன்வைக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளைக் கையாள்வதற்கு, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே "மிகவும் அவசியமான மற்றும் நடைமுறைக்கு தேவையான தீர்வுகளில்" ஒன்று என்று அரசு கூறியுள்ளது. வழக்கமான வழக்குகளின் விசாரணக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான முக்கியமான கேள்விகளைக் கொண்ட வழக்குகளை விசாரிக்க இந்தியாவின் தலைமை நீதிபதி  அரசியலமைப்பு அமர்வுகளை (Constitution Benches)  அடிக்கடி அமைக்கவும் இந்த மசோதா வழிவகுக்கும்.


கூடுதல் நீதிபதிகள் எவ்வாறு உதவுவார்கள்?


இந்த அதிகரிப்பு, உச்ச நீதிமன்றம் ஒரே நேரத்தில் அதிக வழக்குகளை விசாரிக்க உதவும் என்றும், அதன் மூலம் வழக்குகள் முடித்து வைக்கப்படும் விகிதம் மேம்படும் என்றும் அரசு கூறுகிறது.


கூடுதல் நீதிபதிகளை நியமிப்பதற்கு ஆதரவான வாதங்களில் ஒன்று, அது இந்தியத் தலைமை நீதிபதிக்கு அரசியலமைப்பு அமர்வுகளைத் தொடர்ச்சியாக அமைப்பதை எளிதாக்கும் என்பதாகும்.


குறைந்தது ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வுகள், அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் அடங்கிய வழக்குகளை விசாரிக்கின்றன. அன்றாடப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அத்தகைய அமர்வுகளை அமைப்பது பெரும்பாலும் கடினமாக இருந்து வருகிறது.


நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கப் போதுமானதாக இருக்குமா?


பெரும்பாலான சட்ட வல்லுநர்கள் இதை ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும், ஆனால் முழுமையான தீர்வு இல்லை என்று கூறி வருகின்றனர்.


வழக்குகள் தேங்கி இருப்பது (Pendency), நீதிமன்றங்களில் உள்ள பணியிடங்களின் நியமனங்களில் ஏற்படும் தாமதங்கள், அதிகரித்து வரும் வழக்குகள், அடிக்கடி ஒத்திவைக்கப்படுதல், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கிழமை நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தை வந்தடையும் அதிக எண்ணிக்கையிலான மேல்முறையீடுகள் ஆகியவற்றுடனும் தொடர்புடையது.


இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5.5 கோடியைத் தாண்டியுள்ளது அவற்றில் பெரும்பாலானவை கிழமை நீதிமன்றங்களில் உள்ளன.


1987-ஆம் ஆண்டில் இந்திய சட்ட ஆணையம் ஒரு மில்லியனுக்கு 50 நீதிபதிகள் எனப் பரிந்துரைத்ததற்கு மாறாக, தற்போது ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு 15.9 நீதிபதிகளே உள்ளனர் என்று 2025-ஆம் ஆண்டுக்கான இந்திய நீதி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


25 மாநிலங்களில் 22 மாநிலங்களில், கிழமை நீதிமன்றங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள், மொத்த நிலுவையில் உள்ள வழக்குகளில் 25% ஆகும் என்று அதே அறிக்கை குறிப்பிட்டது.





மேலும், 25 உயர்நீதிமன்றங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது.


நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, வழக்கு மேலாண்மை முறையை மேம்படுத்துதல், உயர்நீதிமன்றங்களை வலுப்படுத்துதல் மற்றும் நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை வேகமாக  நிரப்புதல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகள் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.


அரசாங்கம் ஏன் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது?


2026-ஆம் ஆண்டு மே மாதம், நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோது, மத்திய அமைச்சரவை இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.   அதன் பின்னர் அரசியலமைப்பின் 123-வது பிரிவின் கீழ் ஒரு அவசரச்சட்டத்தைப் பிறப்பித்தது. இது, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர அனுமதித்தது.


அவசரச் சட்டம் (Ordinance) அமலுக்கு வந்த பிறகு, உயர்த்தப்பட்ட அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்பின்படி, அவசரச்சட்டம் அடுத்த நாடாளுமன்றக்கூட்டத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் நாடாளுமன்றச் சட்டமாக மாற்றப்பட வேண்டும். நிறைவேற்றப்படவிட்டால் சட்டம் தானாகவே செயலிழந்துவிடும். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா அவசரச்சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ளது.


பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் பலம் எவ்வாறு மாறியுள்ளது?


இந்தியத் தலைமை நீதிபதி உட்பட எட்டு நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் 1950-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. அதிகரித்து வரும் வழக்குகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் அதன் நீதிபதிகளின் எண்ணிக்கையை அவ்வப்போது அதிகரித்துள்ளது.


உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1956-ஆம் ஆண்டு 11-ஆகவும், 1960-ஆம் ஆண்டு 14-ஆகவும், 1978-ஆம் ஆண்டு 18-ஆகவும், 1986-ஆம் ஆண்டு 26-ஆகவும், 2009-ஆம் ஆண்டு 31-ஆகவும், 2019-ஆம் ஆண்டு 34-ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது, 2026-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், இந்திய தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 38-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


அடுத்து என்ன நடக்கும்?


இந்த மசோதா தற்போது மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து சட்டமாக அமலுக்கு வந்ததும், தற்போதைய அவசரச் சட்டம் (Ordinance) மாற்றப்பட்டு, இந்திய தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக 38-ஆக நிர்ணயிக்கும்.


Original Link : Why has Parliament increased the number of Supreme Court judges? -Sandeep Phukan
Share: