இந்தியாவின் எல்லை வேலி அமைக்கும் திட்டத்தில் (border fencing project) மேற்கு வங்கம் ஏன் முக்கியப் பங்கு வகிக்கிறது? இதில் உள்ள கொள்கைரீதியான சவால்கள் என்ன?
தற்போதைய நிகழ்வு :
இந்த நிலத்தில், எல்லை வேலி அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுக்காக, ஒன்பது இடங்களில் உள்ள 31.905 ஏக்கர் நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) நிரந்தரமாக மாற்ற மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் மால்டா, நாடியா மற்றும் கூச் பெஹார் ஆகிய இடங்களில் மூன்று புதிய எல்லைக் காவல் சாவடிகளை (Border Outposts (BOP)) அமைக்க 1.53 ஏக்கர் நிலத்தையும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் 2026-ன் தொடக்கத்தில் வெளியான இத்தகவல், இந்தியா-வங்கதேச எல்லையில் கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்டது. இந்த முடிவு, எந்தவொரு புதிய எல்லை சார்ந்த கொள்கையையும் அறிமுகப்படுத்தவில்லை. மாறாக, நிர்வாக மற்றும் நீதித்துறை சார்ந்த தொடர்ச்சியான தலையீடுகள் இருந்தபோதிலும் நிலுவையில் இருந்த நிலத்தை விடுவிப்பதே ஆகும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சர்ச்சைகள், கடினமான நிலப்பரப்பு மற்றும் சட்ட, அரசியல் சிக்கல்களால் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வந்த எல்லை உள்கட்டமைப்புத் திட்டத்தில், மாநில அளவில் இருந்த ஒரு முக்கியத் தடையை இது நீக்குகிறது. ஜனவரி 2026-ல் கல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. WPA (P) 45/2025 லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் சுப்ரதா சாஹா vs இந்திய அரசு மற்றும் பிறர் (Lt. Gen. (Retd.) Dr. Subrata Saha vs Union of India & Others) வழக்கில், தலைமை நீதிபதி சுஜோய் பால் மற்றும் நீதிபதி பார்த்த சாரதி சென் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட அல்லது அதற்கான இழப்பீடு வழங்கப்பட்ட நிலம் எல்லை வேலி அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ஒன்பது எல்லை மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மார்ச் 31, 2026-க்குள் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) ஒப்படைக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இத்திட்டத்தில் வங்காளம் ஏன் முக்கியப் பங்கு வகிக்கிறது?
இந்திய மாநிலங்களிலேயே வங்கதேசத்துடன் மிக நீண்ட சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், மேற்கு வங்கம் மிக முக்கியமான மாநிலமாகத் திகழ்கிறது. உள்துறை அமைச்சகத்தின் (MHA) தரவுகளின்படி, இந்தியா-வங்கதேசம் இடையிலான 4,096.70 கி.மீ நீளமுள்ள எல்லையில், 2,216.7 கி.மீ மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. இது இந்தியா-வங்காளதேச எல்லையின் மொத்த நீளத்தில் சுமார் 54% ஆகும். ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, 1,647.696 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், 569.004 கி.மீ தூரத்திற்கு வேலி அல்லது பிற எல்லை உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் அமைக்கப்பட வேண்டியிருந்தது. இதில், 112.780 கி.மீ தூரம் வழக்கமான முறையில் வேலி அமைப்பதற்குச் சாத்தியமற்றதாக வகைப்படுத்தப்பட்டது. அதேவேளையில், 456.224 கி.மீ தூரத்திற்கு வேலி அமைப்பது தொழில்நுட்பரீதியாகச் சாத்தியம் என்றாலும், அப்பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன.
இத்திட்டம் ஏன் தாமதமானது?
புவியியல், நிர்வாகம் மற்றும் சட்டம் சார்ந்த பல்வேறு தடைகளின் கலவையே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகும். தேசிய அளவில், ஆகஸ்ட் 2025-க்குள் இந்தியா-வங்கதேச எல்லையில் 3,232.218 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் (2,216.7 கி.மீ), திரிபுரா (856 கி.மீ), மேகாலயா (443 கி.மீ), மிசோரம் (318 கி.மீ) மற்றும் அசாம் (263 கி.மீ) ஆகிய மாநிலங்களில் மொத்தம் 864.482 கி.மீ தூரத்திற்கு இன்னும் வேலி அமைக்கப்படாமல் உள்ளது.
வேலி அமைக்கப்படாத மீதமுள்ள பகுதியில், 174.514 கி.மீ தூரம் வழக்கமான முறையில் வேலி அமைப்பதற்குச் சாத்தியமற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறுகள், சதுப்பு நிலங்கள், வெள்ளச் சமவெளிகள், மாறும் ஆற்றுப் பாதைகள், அடர்த்தியான மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சுந்தரவனக் காடுகள் (இங்கு வேலி அமைப்பது தொழில்நுட்பரீதியாகக் கடினமானது மற்றும் பருவகாலக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது) ஆகியவை இதற்குக் காரணங்களாகும். வேலி அமைக்கப்படாத எஞ்சிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறுதல் மற்றும் இருதரப்பு எல்லை மேலாண்மை நடைமுறைகளை நிறைவு செய்தல் ஆகியவை தேவைப்படுகின்றன. மக்கள் அடர்த்தி மிகுந்த எல்லை மாவட்டங்களில், மிகச் சிறிய நிலப்பரப்புகள்கூட இழப்பீடு, அணுகல் உரிமைகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான சிக்கல்களை உருவாக்குகின்றன.
எல்லை எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது?
முழு இந்திய-வங்காளதேச எல்லையையும் பாதுகாக்கும் பொறுப்பு, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) உள்ளது. அதேசமயம், விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு (Comprehensive Integrated Border Management System (CIBMS)) மற்றும் அரசாங்கத்தின் எல்லை உள்கட்டமைப்புத் திட்டம் (Border Infrastructure Programme) ஆகியவற்றின்கீழ் எல்லை உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இவை, குறிப்பாகத் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பகுதிகளில் தொடர்ச்சியான வேலி அமைப்பது, வேலியுடன் வெள்ளொளி விளக்குகள், எல்லைச் சாலைகள், கண்காணிப்பு நிலைகள், மிதக்கும் எல்லைச் சாவடிகள், ஆற்று ரோந்துப் பணிகள், கண்காணிப்புக் கேமராக்கள், உணர்விகள் (Sensors) மற்றும் பிற திறன் தொழில்நுட்பங்களை (smart technologies) ஒருங்கிணைக்கின்றன.
இந்தியா-வங்கதேச எல்லை வேலி அமைத்தல் எவற்றால் நிர்வகிக்கப்படுகிறது?
வெளியுறவு அமைச்சகத்தின்படி (MEA), எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் (BSF) வங்காளதேச எல்லைக் காவல்படைக்கும் (Border Guard Bangladesh (BGB)) இடையேயான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளுக்கு இணங்க, இந்தியா எல்லை வேலி அமைத்தல் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 1975-ம் ஆண்டின் இந்தியா-வங்கதேசம் எல்லை அதிகாரிகளுக்கான கூட்டு வழிகாட்டுதல்கள், 2011-ம் ஆண்டின் ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மைத் திட்டம் (Coordinated Border Management Plan (CBMP)), மற்றும் 2015-ம் ஆண்டின் நில எல்லை ஒப்பந்தம் (Land Boundary Agreement (LBA)) ஆகியவற்றால் இந்த எல்லை நிர்வகிக்கப்படுகிறது. இந்த நில எல்லை ஒப்பந்தம் (LBA), 1974-ம் ஆண்டின் நில எல்லை ஒப்பந்தத்தையும் அதன் 2011-ம் ஆண்டு நெறிமுறையையும் (Protocol) செயல்படுத்தியது. இது சுற்றியும் அந்நிய எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் (enclaves) மற்றும் எதிர்மறை உடைமை (adverse possession) தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தது. மேலும், வங்கதேசத்தில் உள்ள 111 இந்திய உட்பகுதிகள் மற்றும் இந்தியாவில் உள்ள 51 வங்கதேச உட்பகுதிகள் என 162 உட்பகுதிகளின் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது. கடத்தல், ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம், ஆயுதக் கடத்தல் மற்றும் கள்ள நோட்டு வலையமைப்புகள் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான ஒத்துழைப்பிற்கு இந்த உடன்படிக்கைகள் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்ற தனது எதிர்பார்ப்பையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கொள்கைரீதியான சவால்கள் யாவை?
இது, தேசியப் பாதுகாப்பையும், எல்லையோர மக்களின் வாழ்வாதாரத்தையும் சமநிலைப்படுத்துவதே முக்கிய சவாலாகும். மால்டா மற்றும் நாடியா போன்ற மாவட்டங்களில், விவசாயம், முறைசாரா வர்த்தகம் மற்றும் நீண்டகால சமூக உறவுகள் எல்லையைத் தாண்டிப் பரவியுள்ளன. இதன் காரணமாக, வேலி அமைப்பது கண்காணிப்பை மேம்படுத்துவதோடு, விவசாய நிலங்களுக்கான அணுகல், நடமாட்டம் மற்றும் உள்ளூர் வர்த்தகம் ஆகியவற்றையும் பாதிக்கக்கூடும். இந்தியா-வங்கதேச எல்லையின் மிகப்பெரிய முடிக்கப்படாத பகுதி மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளதால், தேசிய வேலித் திட்டத்தை (national border fencing programme) நிறைவு செய்வதற்கு அம்மாநிலத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் முக்கியமாக விளங்குகின்றன. பல துறைகளில், குறிப்பாக ஆற்றுப் பகுதிகளில், எல்லை மேலாண்மை என்பது தொடர்ச்சியான வேலி அமைப்பதை மட்டும் சார்ந்திருக்காமல், பௌதீகத் தடைகள், எல்லைச் சாவடிகள், கண்காணிப்புத் தொழில்நுட்பம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியைச் சார்ந்திருக்க வாய்ப்புள்ளது.
சயீ பாண்டே என்பவர் நடப்பு நிகழ்வுகள், சர்வதேச உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு சுதந்திரமான எழுத்தாளர் ஆவர்.
Original Link : Why has West Bengal cleared land for the BSF now? -Saee Pande