இந்தக் கேள்வியை உச்சநீதிமன்றம் ஏன் விரிவாக பரிசீலிக்க வேண்டிய நிலை உருவானது? ராம்சார் தளங்கள் என்றால் என்ன? ராம்சார் சதுப்புநிலப்பகுதிகளில் சுரங்கப்பணிகள் மேற்கொள்வது குறித்துச்சட்டம் என்ன சொல்கிறது?
தற்போதைய செய்தி: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 'ஆசன் சதுப்பு நிலப் பாதுகாப்பு காப்பகத்தைச் (Asan Wetland Conservation Reserve) சுற்றியுள்ள 10 கி.மீ சுற்றளவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ளும் முன் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று பிப்ரவரி 2024-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு, சமநிலையைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலப்பாதுகாப்பு காப்பகங்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விளக்கமானது, முன்னதாக உத்தரகண்டில் உள்ள 'ஆசன் சதுப்பு நிலப் பாதுகாப்பு' (Asan Ramsar) பகுதிக்கு மட்டுமே இருந்த ஒரு நீதிமன்றத்தின் பாதுகாப்பு உத்தரவை, இதேபோன்று அறிவிக்கப்பட்ட பிற சதுப்பு நிலப்பாதுகாப்பு காப்பகங்களுக்கும் விரிவுபடுத்தக்கூடும்.
இந்தக்கேள்வியை உச்சநீதிமன்றம் விரிவாக பரிசீலிக்க வேண்டிய நிலை எவ்வாறு உருவானது?
இமாச்சலப்பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது இந்த உத்தரவு வந்தது. உத்தரகண்டில் உள்ள ஆசன் சதுப்பு நிலப் பாதுகாப்பு காப்பகம் தொடர்பான பிப்ரவரி 14, 2024-ன் இடைக்கால உத்தரவு தங்களுக்குத் தானாகவே பொருந்தாது என்று அந்தமாநில அரசு வாதத்தை முன் வைத்தது. ஏனெனில், ஆசன் காப்பகம் இமாச்சலப் பிரதேசத்தில் அமையவில்லை. மேலும், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைப் போல் இல்லாமல், சதுப்புப் பாதுகாப்பு காப்பகங்களுக்குச் சட்டரீதியான 'பாதுகாப்பு வளையப் பகுதி' (buffer zone) எதுவும் இல்லை என்று இமாச்சலப்பிரதேச அரசு சுட்டிக்காட்டியது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, ஆசன் வழக்கில் வகுக்கப்பட்ட கொள்கை உத்தரகண்டிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல என்று வாய்மொழியாகத் தெளிவுபடுத்தியது. சமூகக் காப்பகம் (community reserve) அல்லது சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகம் எங்கு இருந்தாலும், சமநிலையைக் கருத்தில் கொண்டு ஆசன் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பொருந்தும் என்று நீதிபதி ஜாய்மால்யா பாக்சி குறிப்பிட்டார். அதே வேளையில், ஆசன் சதுப்புநிலப் பகுதி இமாச்சலப் பிரதேசம் வரை நீண்டுள்ளதா என்பதைத் சரிபார்க்குமாறு தேசிய வனவிலங்கு வாரியத்தின் (National Board for Wildlife (NBWL)) நிலைக்குழு அல்லது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு இருந்தால், 2024-ன் உத்தரவுகள் அங்கும் பொருந்தும். இல்லையெனில், சுரங்கத் தோண்டுதல் தொடர்பான முன்மொழிவுகள், நடைமுறையில் உள்ள பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.
ஆசன் (Asan) சதுப்புநிலம் தொடர்பான வழக்கின் பின்னணி என்ன?
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆசன் மற்றும் யமுனை ஆறுகள் சேரும் இடத்தில் அமைந்துள்ள 'ஆசன் சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகம்' (Asan Wetland Conservation Reserve), 2020-ஆம் ஆண்டில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. இது வலசை வரும் நீர்ப்பறவைகளுக்கு ஒரு முக்கியமான வாழ்விடமாகவும், வளமான நீர்வாழ் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரவளிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.
பிப்ரவரி 14, 2024 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு (Standing Committee of the NBWL) அல்லது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் (MoEFCC) இருந்து முன் அனுமதி பெறாத பட்சத்தில், இந்தக்காப்பகத்தைச் சுற்றியுள்ள 10 கி.மீ சுற்றளவிற்குள் எந்தவொரு சுரங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சதுப்புநிலம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் சூழலியல் தன்மையைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகள்மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. இந்தியா முழுவதும் உள்ள பிற சதுப்புநிலப் பாதுகாப்பு பகுதிகளுக்கும் இதே கொள்கை பொருந்தும் என்பதை சில நாட்களுக்கு முன்னர் வந்த தெளிவுபடுத்தல் சுட்டிக்காட்டுகிறன.
ராம்சார் தளங்கள் என்றால் என்ன?
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களைப் பாதுகாப்பதையும், அவற்றை விவேகத்துடன் பயன்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்காக 1971-ஆம் ஆண்டில் ஈரானின் ராம்சார் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'சதுப்புநிலங்கள் குறித்த ராம்சார் ஒப்பந்தத்தின்' (Ramsar Convention on Wetlands) கீழ் அறிவிக்கப்படும் சதுப்புநிலங்களே ராம்சார் தளங்கள் ஆகும். இந்தியா 1982-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்த (Contracting Party) நாடாக இணைந்தது.
தற்போது இந்தியாவில் மொத்தம் 101 ராம்சார் தளங்கள் உள்ளன. இது ஆசிய நாடுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி, அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிளா ஏரி (Glaw Lake), இந்தியாவின் 101-ஆவது ராம்சார் தளமாகவும், அந்த மாநிலத்தின் முதல் ராம்சார் தளமாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 98-ஆக இருந்த இந்தியாவின் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்தது.
ராம்சார் தளமாக அறிவிக்கப்படுவது மட்டும் இந்தியச் சட்டத்தின்கீழ் தனித்துவமான சட்டப்பூர்வ பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதில்லை. மாறாக, அந்த சதுப்புநிலம் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அங்கீகரிப்பதுடன், அதன் சுற்றுச்சூழல் தன்மையை (Ecological Character) இந்தியாவின் உள்நாட்டு சுற்றுச்சூழல் சட்டங்கள் மூலம் பாதுகாக்கும் பொறுப்பை நாட்டிற்கு வழங்குகிறது.
ராம்சார் சதுப்புநிலங்களில் சுரங்கத் தோண்டுதல் குறித்து சட்டம் என்ன கூறுகிறது?
ராம்சார் ஒப்பந்தமோ அல்லது சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 ராம்சார் தளங்களைச்சுற்றி ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வளையத்தை விதிக்கவில்லை அல்லது அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் சுரங்கம் தோண்டுவதை வெளிப்படையாகத் தடை செய்யவில்லை.
முன்னர் அமலில் இருந்த 2010-ஆம் ஆண்டு சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், சதுப்புநிலங்களுக்குள் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான பட்டியலைக்கொண்டிருந்தன. அந்த பட்டியலில் நிலமீட்பு (Reclamation), புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், திடக்கழிவுகளை கொட்டுதல் மற்றும் சதுப்புநிலச் சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கையும் இடம் பெற்று இருக்கும். மேலும், சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிக்குள் (Zone of Influence) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விதிகளும் பட்டியலில் இருந்தன.
2017-ஆம் ஆண்டுக்கான விதிகள், முந்தைய கட்டமைப்பைமாற்றி, மாநில சதுப்புநில ஆணையங்களின் (State Wetland Authorities) கீழ் செயல்படும் ஒரு அமைப்பை அறிமுகப்படுத்தின. இவை 2010-ஆம் ஆண்டு விதிகளில் இடம்பெற்றிருந்த தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் தெளிவான பட்டியலை நீக்கியதுடன், சதுப்புநிலங்களைக் கண்டறிந்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பை மாநிலங்களிடமே ஒப்படைத்தன. இந்த விதிகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ராம்சார் ஒப்பந்தத்தின்கீழ், அங்கீகரிக்கப்பட்ட பல செயற்கையான சதுப்புநிலங்கள் இந்தக்கட்டமைப்பில் விடுபட்டுள்ளதாகவும், 2010-ஆம் ஆண்டு விதிகளின்கீழ் இருந்த பாதுகாப்பு விதிகள் இதன் மூலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
இந்தப் பின்னணியில், ஆசன் சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில், சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகங்களின் 10 கி.மீ. சுற்றளவிற்குள் சுரங்கத் தோண்டுதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன் வனவிலங்கு அனுமதி (Wildlife Clearance) பெறுவது கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம், கூடுதல் நீதித்துறைப்பாதுகாப்பு (Additional Judicial Safeguard) உருவாக்கப்பட்டுள்ளது.
தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கத் தோண்டுதலுடன் இதை ஒப்பிடும்போது நிலைமை எப்படி உள்ளது?
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்கு வாழிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள், பல்வேறு சட்டங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் போன்றவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன.
1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் (Wildlife (Protection) Act) கீழ், தேசியப்பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்குள் சுரங்கம் தோண்டும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு தேசியப்பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் சுரங்கம் தோண்டும் பணிக்கு அனுமதி வழங்கப்படாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு விதிவிலக்காக, ஒரு பெரிய சூழல் உணர்திறன் மண்டலம் (Eco-Sensitive Zone (ESZ) ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், அறிவிக்கப்பட்ட பெரிய இடைப்பகுதியே நடைமுறையில் இருக்கும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் சுரங்கம் தோண்டுவது வனவிலங்குகளுக்கு ஆபத்தானது என்பதைக் கவனித்த பின்னர், நீதிமன்றம் இந்தத்தடையை நாடு முழுவதும் விரிவுபடுத்தியது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் அமைந்துள்ள அல்லது வனவிலங்குகளின் வாழ்விடங்களைப்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களுக்கு, தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் ஆய்வும் தேவைப்படுகிறது.
வனப்பகுதிகளில், சுரங்கதோண்டும் பணிக்காக வன நிலத்தை மாற்றுப்பயன்பாட்டிற்கு (Diversion of Forest Land) பயன்படுத்துவதற்கு, 1980-ஆம் ஆண்டின் வன (பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) அதிநியம் (Van (Sanrakshan Evam Samvardhan) Adhiniyam) சட்டத்தின்கீழ், மத்திய அரசின் முன் அனுமதி கட்டாயமக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத் தோண்டும் திட்டங்கள் பொதுவாக 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின் (Environment Impact Assessment Notification, 2006) படி சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டும்.
Original articles: How will the Supreme Court order impact mining around Ramsar wetland sites? -Jacob P Koshy