தற்போதைய செய்தி :
கடந்த காலத்தைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகள், போர்கள் மற்றும் நிகழ்வுகளின் வரலாற்று நினைவுகள், ஒரு தேசத்தின் பயணத்தை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. சந்தால் கலகம் மற்றும் பிளாசி போர் முதல் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிசூட்டு விழா, மவுண்ட்பேட்டன் திட்டம் மற்றும் அவசரநிலை பிரகடனம் வரை ஜூன் மாதம் பல வரலாற்று நிகழ்வுகள் அதற்கு முக்கிய சாட்சியாக அமைந்துள்ளன.
ஜூன் 6, 1674 — மராத்தா வரலாறு
ராய்கட் கோட்டையில் முடிசூட்டு (Coronation) விழா
சத்ரபதி சிவாஜி மகாராஜ், ராய்கட் கோட்டையில் மராத்தியப் பேரரசின் முதல் அரசராக அரியணை ஏற்றார். அவருக்கு அதிகாரப்பூர்வ வழங்கப்பட்ட பட்டம் "ஸ்ரீ ராஜா சிவ சத்ரபதி" (Shri Raja Shiva) என்பதாகும். அவர் தனக்கென ஒரு ஆட்சிக்காலத்தைத் தொடங்கினார். இது 'முடிசூட்டு (Coronation) விழா' (Rājyābhiṣheka shaka) என்று அழைக்கப்பட்டது. முகலாய மற்றும் சுல்தான் ஆட்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மராத்தியர்களுக்கான ஒரு தனித்துவமான இறையாண்மை அடையாளத்தை அவர் உருவாக்கினார்.
1630-சத்ரபதி சிவாஜி பிறந்தார்.
1680-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி இறந்தபோது, அவரது கட்டுப்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட கோட்டைகள் இருந்தன.
2025-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) நிறுவனத்தால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.
சிவாஜி மகாராஜா பங்கேற்ற முக்கியப் போர்கள்
1659-ஆம் ஆண்டு பிரதாப்கர் போர்:
-மராத்தியர்கள் மற்றும் அடில்ஷாஹி படைகளுக்கு இடையிலான போரில், மராத்தியர்களின் முதல் முக்கியமான வெற்றி இதுவாகும்.
1664-ஆம் ஆண்டு சூரத் போர்:
- 1664-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சத்ரபதி சிவாஜி மகாராஜின் படைகள் முகலாயர்களின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரின் மீது தாக்குதல் நடத்தின.
1665-ஆம் ஆண்டு புரந்தர் போர்:
- மராட்டியர்களுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையிலான போர் புரந்தர் உடன்படிக்கைக்கு வழிவகுத்தது.
1679-ஆம் ஆண்டு சங்கமநேர் போர்:
இது சிவாஜி கலந்து கொண்ட கடைசி போர் ஆகும். இந்தப் போர் முகலாய மற்றும் மராத்தா பேரரசுக்கு இடையே நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள்:
1. 1674-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழா
ஜூன் 6, 1674, மராட்டிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதே தேதியில், ராய்கட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவுக்கு முடிசூட்டப்பட்டது. அவர் மராட்டியப் பேரரசின் முதல் அரசரானார். முடிசூட்டு விழாவிற்குப் பிறகு அவரது அதிகாரப்பூர்வப் பட்டம் 'ஸ்ரீ ராஜா சிவ சத்ரபதி' என்பதாகும். மேலும், சில முற்கால மன்னர்களின் மரபைப் பின்பற்றி, அவர் தனது முடிசூட்டு விழாவை அடிப்படையாகக் கொண்டு “ராஜ்யாபிஷேக காலம்” என்ற புதிய ஆண்டுக் கணக்கை அறிமுகப்படுத்தினார்.
சத்ரபதி சிவாஜி 1630 முதல் 1680-ஆம் ஆண்டு வரை 17-ஆம் நூற்றாண்டில் பல்வேறு தக்காண அரசுகளை ஒன்றிணைத்து ஒரு சுதந்திரமான மராத்திய அரசை உருவாக்கினார். அவர், தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு தக்காண சுல்தான்களுக்குப் பணியாற்றிய ஒரு தளபதியின் மகனாகப் பிறந்தார்.
1650-களில் அவுரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்புகளின்போதுதான் முகலாயர்களுடனான அவரது முதல் நேரடி மோதல் நிகழ்ந்தது. முகலாய அரியணைக்காகப் போரிட அவுரங்கசீப் வடக்கு நோக்கிச் சென்றபோது, சிவாஜியால் பல பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தது. அவர் இறந்த சமயத்தில், சூரத் முதல் கோவாவிற்கு அருகிலுள்ள பகுதி வரை கொங்கணக் கடற்கரையோரமாக விரிந்து, முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கண்காணிப்பின் கீழ் அமைந்திருந்த ஒரு நிலப்பரப்பில், அவர் 300 கோட்டைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
மராட்டியர்களின் மலைக்கோட்டைகள் இராணுவ வியூகத்திற்கு இன்றியமையாதவையாக இருந்தன. 2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகப் பாரம்பரியக் குழுவின் (World Heritage Committee (WHC)) 47-வது அமர்வில், 'மராட்டியப் போர் நிலப்பரப்புகள்' (Maratha Military Landscapes) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றன.
2. 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போர்: இந்தியாவில் பிரிட்டிஷ் அரசியல் அதிகாரத்தின் தொடக்கம்
1757-ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, வங்கத்தில் ஹூக்ளி நதிக்கரையில் ஆங்கிலேயர்களுக்கும் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவுக்கும் இடையே நடந்த போர், நவீன இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் மீது ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்திய தருணமாக பிளாசிப் போர், வரலாற்றுப் நிகழ்வுகள் மற்றும் பண்பாட்டு, இலக்கியப் பிரதிநிதித்துவங்கள் மூலம் நினைவுப்படுத்த்ப்படுகிறது.
1717-ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனி முகலாயப் பேரரசரிடமிருந்து அரச அதிகாரம் பெற்றது. அது, வங்கத்தில் தங்கள் பொருட்களை வரிகள் செலுத்தாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கும், பொருட்களின் போக்குவரத்திற்காக அனுமதிச் சீட்டுகள் அல்லது வரிவிலக்கு வணிக அனுமதிச் சீட்டுகளை (dastaks) வழங்குவதற்கும் அவர்களுக்குச் சுதந்திரத்தை அளித்தது. வழங்கப்பட்ட அரச அதிகாரம், கம்பெனிக்கும் வங்காள நவாப்களுக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான மோதலுக்குக் காரணமாக அமைந்தது. முர்ஷித் குலி கான் முதல் அலிவர்தி கான் வரையிலான வங்காள நவாபுகள், அரச அதிகாரம் தொடர்பாக ஆங்கிலேயர் வழங்கிய விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
1756-ல், சிராஜ்-உத்-தௌலா தனது தாத்தாவான அலிவர்தி கானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தபோது, முர்ஷித் குலி கானின் காலத்தில் வர்த்தகம் செய்த அதே அடிப்படையில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கூறினார். இருப்பினும், தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களை வென்றதால் வலிமை பெற்றிருந்த ஆங்கிலேயர்கள், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் இருந்த தங்கள் கோட்டைகளை இடிக்குமாறு நவாப் இட்ட உத்தரவை கிழக்கிந்திய கம்பெனி ஏற்க மறுத்தபோது, இந்த நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரெஞ்சு கம்பெனி இதேபோன்ற ஒரு உத்தரவுக்கு ஏற்ப, சந்தர்நகூரில் இருந்த தங்கள் கோட்டையை இடித்தது. இந்த உத்தரவை ஏற்காததன் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, சிராஜ்-உத்-தௌலா கல்கத்தாவை நோக்கிப் படையெடுத்துச் சென்று, 1756 ஜூன் 20-அன்று வில்லியம் கோட்டையைக் கைப்பற்றினார்.
ஒரு வருடத்திற்குள், கெரியாவில் இருந்த மராத்தா கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் மெட்ராஸிலிருந்து வந்த, இளம் மற்றும் லட்சியம் மிக்க ராபர்ட் கிளைவின் இராணுவ அதிகாரத்தின்கீழ் கம்பெனி பதிலடி கொடுத்தது. அவர் நவாபை ஆங்கிலேயர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் படி கட்டாயப்படுத்தினார்.
இருப்பினும், ஆங்கிலேயர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் உயர்ந்த இலக்குகளைக் கொண்டிருந்தனர். சிராஜ்-உத்-தௌலா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தங்களுக்கு முழுமையான சலுகைகள் கிடைக்காது என்பதை அவர்கள் விரைவிவாக உணர்ந்தனர். நவாபை வீழ்த்துவதற்கு உதவுவதாக ஒப்புக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக நிதிச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, அந்நிறுவனம் மிர் ஜாஃபருடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது, 1757 ஜூன் 23 அன்று நடைபெற்ற பிளாசிப் போருக்கு வழிவகை செய்தது. இந்தப் போரில், ராபர்ட் கிளைவ் தலைமையில் செயல்பட்ட கம்பெனிப் படைகள், மிர் ஜாஃபர் மற்றும் ராய் துர்லப் ஆகியோரின் ஆதரவைப் பெற்று, சிராஜ்-உத்-தௌலாவின் படைகளைத் தோற்கடித்தன. நவாப் தப்பி ஓடவேண்டிய சூழல் உருவானது. பின்னர், அவர் சிறைபிடிக்கப்பட்டு, மிர் ஜாஃபரின் மகனான மீரனால் கொல்லப்பட்டார்.
பிபின் சந்திராவின் கூற்றுப்படி, பிளாசிப் போர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது வங்கத்தின் மீதும், இறுதியில் ‘இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின்’ மீதும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்த வழி வகை செய்தது. அது ஆங்கிலேயரின் செல்வாக்கை உயர்த்தியதுடன், ஒரே அடியில் அவர்களை இந்தியப் பேரரசுக்கான ஒரு முக்கியப் போட்டியாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
3. 1855-ஆம் ஆண்டுசந்தால் கலகம் : காலனித்துவச் சுரண்டலுக்கு எதிரான சந்தால் ஹுல்
1855-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, வருவாய் அதிகாரிகள், ஜமீன்தார்கள் மற்றும் அதிக ஊழல் நிறைந்த வட்டித்தொழில் செய்பவர்களின் அடக்குமுறைக்கு எதிராகக் கிழக்கிந்திய கம்பெனியைக் கிளர்ச்சி செய்வதற்காக, கன்ஹோ முர்மு, சந்த் முர்மு, பைரப் முர்மு மற்றும் சித்தோ முர்மு ஆகிய தங்களின் தலைவர்களால் 10,000-க்கும் மேற்பட்ட சந்தால்கள் அணி திரட்டப்பட்டனர். சந்தால் ஹுல் என்று குறிப்பிடப்படும் பழங்குடியினர் வரலாற்றின் இந்த நிகழ்வு, இன்றைய ஜார்க்கண்டில் உள்ள போக்நாடிஹ் (Bhognadih) கிராமத்தில் நடைபெற்றது.
பெரும் ஆவி (the great spirit) தங்களைச் சந்தித்து, தங்கள் நிலப்பகுதியிலிருந்து வெளியாட்கள் (dikus) அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அந்தப்பிராந்தியத்தில் சந்தால் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று தங்களுக்கு அறிவுறுத்தியதாக கன்ஹோ மற்றும் சிதோ ஆகியோர் கூறினர்.
சந்தால் கிளர்ச்சி அல்லது புரட்சி (‘Hul’) என்பதற்கான விதைகள், 1832-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியபோது விதைக்கப்பட்டன. டாமின்-இ-கோ பகுதிராஜ்மஹால் மலையில் உள்ள வனப்பகுதியில், வங்க மாகாணத்தின் பகுதிகளான பீர்பூம், முர்ஷிதாபாத், பகல்பூர், பரபூம், மன்பூம், பலாமு மற்றும் சோட்டாநாக்பூர் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த சந்தால்களுக்கு இப்பகுதி ஒதுக்கப்பட்டது.
சந்தால்களுக்கு டாமின்-இ-கோவில் குடியேற்றமும் வேளாண்மையும் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அதைத் தொடர்ந்து நில அபகரிப்பு மற்றும் இரண்டு வகையான பெகாரி (கொத்தடிமைத் தொழில்) போன்ற அடக்குமுறை அரங்கேறின: பல ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களின் உதவியுடன் நடந்த சுரண்டல் நடைமுறைகளால் சந்தால்கள் பாதிக்கப்பட்டனர்.
— முர்மு சகோதரர்கள் 60,000 சந்தால்களைத் திரட்டி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடினர். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்த அவர்கள் நடத்திய கொரில்லாப் போர், இறுதியாக 1856-ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அன்று முழுமையாக ஒடுக்கப்பட்டது. இந்தப் போரில் 15,000-க்கும் மேற்பட்ட சந்தால்கள் கொல்லப்பட்டனர். 10,000 கிராமங்கள் சூறையாடப்பட்டன.
1855-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி சித்தோவை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அவரைத் தொடர்ந்து, 1856-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்ஹுவும் தூக்கிலிடப்பட்டார். இந்தக்கிளர்ச்சி முடிவுக்கு வந்தபோதிலும், அது ஏற்படுத்திய தாக்கம் தற்போது வரை நிலைத்திருக்கிறது. 1876-ஆம் ஆண்டின் 'சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம்' (Santhal Pargana Tenancy Act (SPT)) மற்றும் 1908-ஆம் ஆண்டின் 'சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம்' (Chhotanagpur Tenancy Act (CNT Act)) ஆகியவை இந்தக் கிளர்ச்சியின் முக்கியக் காரணமாக உருவாகின.
4. 1947-ஆம் ஆண்டு மவுண்ட்பேட்டன் திட்டம்: சுதந்திரம் மற்றும் பிரிவினைக்கான பாதை
இந்தியாவின் சுதந்திரப் பாதையானது, அதிக சவால்கள் நிறைந்த பேச்சுவார்த்தைகள், அரசியல் குறுக்கீடுகள் மற்றும் ஆழமடைந்து வந்த இந்து-முஸ்லிம் பிளவு ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அனைத்திற்குமான தீர்வாக மவுண்ட்பேட்டன் திட்டம் அமைந்தது.
1947-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், வேவலுக்குப் பதிலாக லார்ட் மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் ஆனார். மவுண்ட்பேட்டன் கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பேச்சுவார்த்தையும் முடிவடையாததால், பிரிட்டிஷ் இந்தியா விடுவிக்கப்படும். ஆனால், பிரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பஞ்சாப் மற்றும் வங்கத்தின் சட்டமன்றங்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் எனத் தனித்தனி குழுக்களாகக் கூடி, மாகாணப் பிரிவினை குறித்து வாக்களிக்க வேண்டும் என்பது மவுண்ட்பேட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த இரண்டு குழுக்களில் ஏதேனும் ஒன்றில், பிரிவினைக்கு ஆதரவாக எளிய பெரும்பான்மை வாக்குகள் பதிவானால், அந்தந்த மாகாணங்கள் பிரிக்கப்படும். பிரிவினை ஏற்படும் பட்சத்தில், இரண்டு தன்னாட்சிப் பிரதேசங்களும் (Dominions), இரண்டு அரசியல் நிர்ணய சபைகளும் நிறுவப்படும். சிந்து மாகாணம் தனது முடிவைத் தானே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மேலும், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP)) மற்றும் வங்காளத்தின் சில்ஹெட் மாவட்டம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, அங்கு பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்பட இருந்தன.
மவுண்ட்பேட்டன் திட்டம் (மவுண்ட்பேட்டன் திட்டம்), முஸ்லிம் லீக் முன்வைத்த பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை அடிப்படையில் ஏற்றுக்கொண்டதுடன், இந்தியாவின் ஒற்றுமையை முடிந்தவரை பாதுகாக்க முயன்றது. 1947-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி, மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அடிப்படையில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியச் சுதந்திரத்திற்க்கான சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்திற்கு 1947-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி அரச ஒப்புதல் கிடைத்தது. இந்தச்சட்டம் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
5 அவசரநிலை பிரகடனம் (1975): இந்திய ஜனநாயகத்தின் ஒரு திருப்புமுனை
1975 ஜூன் 25 அன்று, பிரதமரின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, அரசியலமைப்பின் 352(1) பிரிவின் கீழ் அவசரநிலைப் பிரகடனத்தை வெளியிட்டார். இது நவீன இந்திய வரலாற்றில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.
‘அவசர நிலை' என்பது ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரையிலான காலப்பகுதியைக் குறிக்கிறது. இக்காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பில் உள்ள சிறப்பு விதிகளைப் (special provisions) பயன்படுத்தி, நாட்டின்மீது விரிவான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை அமல்படுத்தினார்.
1974 மற்றும் 1975-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய பல்வேறு அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தன. இந்த நிகழ்வுகளில் சில: ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம், ராஜ் நாராயண் வழக்கு மீதான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 1974-ஆம் ஆண்டின் இரயில்வே வேலைநிறுத்தம் ஆகும்.
1977-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி நிலை நீக்கப்பட்டது. ஜனசங், காங்கிரஸ் (ஒ), சோசலிஸ்டுகள் மற்றும் பாரதிய லோக் தல் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து உருவான ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததுடன், மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார்.
ஜூன்டீந்த் (Juneteenth)
இந்தியாவில் ஜூன் மாதம் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்காக நினைவுகூரப்பட்டாலும், இந்த மாதம் உலகளாவிய வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஜூன்டீன்த் ஆகும். இது அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுப்படுத்துகிறது.
1. “ஜூன்” மற்றும் “பத்தொன்பதாம் (nineteenth)” ஆகிய சொற்களின் இணைப்பால் உருவான ஜூன்டீன்த், அமெரிக்காவில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்தும் மிகப் பழமையான தேசிய நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று அனுசரிக்கப்படும் இது, அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணத்தைக் குறிக்கிறது.
2. ஜனவரி 1, 1863 அன்று, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், கிளர்ச்சி செய்த மாநிலங்களுக்குள் இருந்த அனைத்து அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் சுதந்திரம் அளிக்கும் விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார். இருப்பினும், இந்தப் பிரகடனம் உடனடியாக அனைத்து அடிமைப்படுத்தப்பட்டவர்களையும் விடுவிக்கவில்லை. ஏனெனில், கூட்டமைப்புப் பிரதேசங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், லூசியானா, டென்னசி, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய இடங்களில் இருந்த பல உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
3. 1865-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி, மாகாணங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கடைசி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர். மேஜர் ஜெனரல் கார்டன் கிரேஞ்சர் டெக்சாஸின் கால்வெஸ்டனுக்கு வந்து, டெக்சாஸில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததாக அறிவித்து, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பிரகடனப்படுத்தும் பொது ஆணை எண் 3-ஐப் பிறப்பித்தார். அடிமை விடுதலைப் பிரகடனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்தத் தேதி, ஜூன்டீன்த் என்று அறியப்பட்டது.
original article: From Plassey to Emergency: 5 key june events in Indian history. -Khushboo Kumari