பொது விநியோகத் திட்டத்தை (Public Distribution System (PDS)) வலுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டமான சார்த்தக் (Scheme for Assistance in Ration Transport and Handling-Income with Automation (SARTHAK)) திட்டத்தை இன்னும் மேம்படுத்த முடியும்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் பொது விநியோகத் திட்டத்தில் தானியங்கி முறையுடன் கூடிய நியாய விலைப் பொருட்கள் போக்குவரத்து மற்றும் வருமானம்-கையாள்வதற்கான உதவித் திட்டம் (SARTHAK) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 81.35 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் பொது விநியோகத் திட்டத்தை (Public Distribution System (PDS)) நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் இந்தத் திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு, ஒன்றிய அரசு 25,530 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சார்த்தக் (SARTHAK) திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு: முதலாவதாக, தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்களுடன் மாநிலங்களுக்கு இடையேயான உணவு தானியங்களின் போக்குவரத்தை எளிதாக்க வேண்டும். இது ஒரு பாதுகாப்பான மற்றும் விரைந்து செயல்படக்கூடிய விநியோக முறையை உருவாக்க உதவும். இரண்டாவதாக, 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (National Food Security Act (NFSA)) நியாயவிலைக் கடை (Fair Price Shop (FPS)) வியாபாரிகளின் லாப வரம்பை அதிகரிக்க வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கண்காணிப்பு அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் நியாய விலை பொருட்கள் விநியோகத்தை முறைப்படுத்தி, பயனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த வேண்டும்.
மூன்றாவது, பொது விநியோகத் திட்ட (PDS) செயல்பாடுகளைக் கண்காணிக்க மாநிலக் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்தல், மாநில மற்றும் மத்திய கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடை (FPS) விநியோகர்களுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்லப்படுவதைக் மேற்பார்வையிடுதல், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், இருப்புக்களை நிர்வகித்தல், மற்றும் பயனாளிகளின் புகார்களைத் தீர்த்தல் போன்ற நடவடிக்கைகளை முதன்மையாகக் கொண்டுள்ளன.
நான்காவது, பயனாளிகளைச் சரிபார்ப்பதை மேம்படுத்தவும், போலிப் பதிவுகளை நீக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மற்றும் பயனாளிகள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்களின் நியாய விலை பொருட்களைப் பெறும் வசதியை மேம்படுத்தவும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய பொது விநியோகத் திட்ட தரவுத்தளத்தை உருவாக்குதல்.
குறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள்
இந்தத் திட்டம் புதிய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், இதில் சில முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது : (i) பரவலாக்கப்பட்ட/மையப்படுத்தப்பட்ட கொள்முதல் மற்றும் விநியோக முறைகளைக் கொண்டுள்ள மாநிலங்களில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்? (ii) பொதுவான மற்றும் சிறப்பு தகுதி பெற்ற மாநிலங்களுக்கான நியாய விலைக் கடை வியாபாரிகளின் மாற்றி அமைக்கப்பட்ட லாப வரம்பு என்னவாக இருக்கும், மேலும் இந்த லாப வரம்பை நிர்ணயிப்பது எவ்வாறு முறைப்படுத்தப்படும்? (iii) இத்திட்டம் எவ்வாறு மக்கள் எளிதாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும், மேலும் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) செயல்திறனையும் அதன் நீடித்த தன்மையையும் எவ்வாறு மேம்படுத்தும்?
முதலாவதாக, அரசாங்கம் அடிப்படை விநியோகஸ்தர்களின் லாப வரம்பை நிர்ணயித்துள்ளது; இது பொதுவான மாநிலங்களுக்கும் (ஒரு குவிண்டாலுக்கு ₹90) மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கும் (ஒரு குவிண்டாலுக்கு ₹180) இடையே மாறுபடுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட (NFSA) அமலாக்கம் குறித்த தற்போதைய மதிப்பீடு, பொதுவான மாநிலங்களில் நியாயவிலைக் கடைகளை (FPS) பொருளாதாரரீதியாக லாபகரமாக நடத்துவதற்கும், பொது விநியோகத் திட்டத்தை (PDS) வலுப்படுத்துவதில் அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும், அடிப்படை விநியோகர்களின் லாப வரம்பு ஒரு குவிண்டாலுக்கு ₹140 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை விநியோகிப்பதற்கு, விநியோகர்களால் நிர்வகிக்கப்படும் மின்னணு விற்பனைப் புள்ளி (electronic Point of Sale (ePoS)) கருவியில் ஆதார் இணைப்பு மூலமாக கைரேகை அல்லது விழித்திரை சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இந்த மின்னணு விற்பனைப் புள்ளி (ePoS) கருவிகளின் பராமரிப்புக் கட்டணம் ஒரு குவிண்டாலுக்கு ₹21 முதல் ₹26 வரை இருக்கும் என்கின்றனர்.
இரண்டாவதாக, மையப்படுத்தப்பட்ட கொள்முதல் (Centralised procurement) நடக்கும் மாநிலங்களில், மாநிலத்திற்குள்ளான போக்குவரத்து மற்றும் கையாளுதல் கட்டணங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன. பரவலாக்கப்பட்ட கொள்முதல் (Decentralised procurement) முறையின்கீழ், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களது சொந்த மாநில முகமைகள் மூலமாக விநியோகத்தை நிர்வகிக்கின்றன மற்றும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கையாளுதல் கட்டணத்தை செலுத்துகின்றன. அடிப்படைப் போக்குவரத்து மற்றும் கையாளுதலுக்கான ஒன்றிய அரசின் உதவித்தொகை பொதுவான மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹105-ஆகவும், சிறப்பு தகுதி பெற்ற மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹143-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் தழுவிய விநியோகக் கட்டமைப்பு, கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் தற்போது செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடை (FPS) விநியோகர்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, மக்கள் எளிதாக அணுகும் வசதி என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். இது நியாயவிலைக் கடைகளின் இருப்பிடம் மற்றும் அங்கு மக்கள் எளிதாகச் செல்லக்கூடிய வழி, நியாய விலை பொருட்களை வாங்குவதில் உள்ள எளிமை, தங்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கும் செயல்முறைகளின் எளிமை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. எனவே, பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் வழங்கப்படும் தானியங்களில் 28 சதவீதம் தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்பதால், பயனாளிகள் தங்களின் நியாய விலைப் பொருட்கள் பங்கீட்டை எளிதாகப் பெறுவதற்கான சாதகமான சூழலை இத்திட்டம் உருவாக்க வேண்டும்.
நான்காவதாக, ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் தேசிய அளவிலான தானிய விநியோகம் 93-98 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் இருப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகம் ஆகியவற்றை உடனுக்குடன் கண்காணிப்பதன் மூலமும், மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமும் இதை மேலும் மேம்படுத்தலாம்.
ஐந்தாவதாக, பொது விநியோகத் திட்டத்தைப் (PDS) பாதுகாப்பானதாக மாற்ற, கைரேகை/விழித்திரை சரிபார்ப்புத் தோல்விகள், இருப்பு ஒதுக்கீட்டில் ஏற்படும் தாமதங்கள், வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் மற்றும் தகுதியானவர்கள் விடுபட்டுப்போகும் அபாயங்கள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டும். இதன் மூலம், 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' (One Nation One Ration Card (ONORC)) திட்டத்தின்கீழ் 100 சதவீத நாட்டின் எந்தவொரு நியாய விலை கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதியெனும் இலக்கை அடைய வேண்டும். பிளாக்செயின் (Blockchain), - இணையவழிப் பொருட்களின் இணைப்பு (IoT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய தொழில்நுட்பங்களால் இந்தச் சிக்கல்களைச் சரிசெய்ய முடியும்.
இந்தத் திட்டம் ஒன்றிய அரசின் நிதி நெருக்கடியை அதிகரிக்கும் என்பதால், இதனை அதன் நோக்கங்களுக்கு ஏற்பவே செயல்படுத்த வேண்டும் : அதாவது, பொது விநியோகத் திட்டத்தின் (PDS) செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
குஷங்கூர் டே, லக்னோவில் உள்ள ஐஐஎம்-ல் (IIM Lucknow) இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
original article: PDS integration push. -Kushankur Dey