முக்கிய சுகாதார மற்றும் மக்கள்தொகை குறியீடுகள், இரத்த சோகை தரவுகள்: ஆறாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் முடிவுகளில் விடுபட்டுள்ளவை எவை? - அனோன்னா டட்

 தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey-6 (NFHS-6)) தொடர்பான சமீபத்திய அறிக்கை, தூய்மை இந்தியா திட்டம் (Swachch Bharat Abhiyan) மற்றும் இலவச சமையல் எரிவாயு திட்டம் (Ujjwala Yojana) போன்ற ஒன்றிய அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்த பல தரவுகளைத் தவிர்த்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்போது இது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்த போதிலும், இந்தத் தரவுகள் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. 


சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) பல சாதகமான முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது. மருத்துவக் காப்பீடு அதிகரிப்பு, பெண்கள் இணையம் மற்றும் திறன்பேசி பயன்படுத்துவது அதிகரிப்பு, மற்றும் முக்கியத் தடுப்பூசிகள் போடும் விகிதம் அதிகரிப்பு போன்றவை இதில் அடங்கும். இருப்பினும், இந்த அறிக்கையில் தவிர்க்கப்பட்ட புள்ளிவிவரங்கள்தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.


இருப்பினும், முழுமையான விரிவான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. மக்கள் தொகை அளவிலான புள்ளிவிவரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான குறியீடுகள், குடும்பக் கட்டுப்பாடு, மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம் (சுகாதாரம்) மற்றும் இலவச சமையல் எரிவாயு திட்டம் (சமையல் எரிபொருள்) போன்ற முக்கியத் தரவுகளைத் தவிர்த்துள்ளது. கணக்கெடுப்பின்போது மக்கள் விடை அளித்திருந்தும், இந்தத் தரவுகள் அறிக்கையிலிருந்து விடுபட்டுள்ளன.


விடுபட்ட தரவுகள்


சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) குறித்த அறிக்கையில், முக்கியக் குறியீடுகளின் எண்ணிக்கை முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5-ல் இருந்த 131-லிருந்து 101-ஆகக் குறைந்துள்ளது. இந்த அறிக்கையில் பல முக்கியக் குறியீடுகள் விடுபட்டிருப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் வட்டாரங்கள் கூறும்போது, இது "தரவுகளை ஒழுங்குபடுத்தும்" (Data harmonisation) ஒரு முயற்சி என்று தெரிவித்துள்ளன.


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் உள்ள பல தரவுப் புள்ளிகள் ஏற்கனவே பிற அரசு நிறுவனங்களின் கணக்கெடுப்புகள் மற்றும் அறிக்கைகள் மூலம் தனியாக வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே, தரவுகளை ஒழுங்குபடுத்தவும், குழப்பங்களைக் குறைக்கவும் இந்த அளவீடுகள் தற்போதைய கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.



இதற்கு உதாரணமாய் அவர்கள் மொத்தக் கருவுறுதல் விகிதத்தைச் (Total Fertility Rate (TFR)) சுட்டிக்காட்டினர். இந்த குறியீடு தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS) அறிக்கையில் தொடர்ந்து நீடித்ததால் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறினர். "தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு அறிக்கையில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2 என்றும், மாதிரி பதிவு முறை (Sample Registration System (SRS)) அறிக்கையில் அது 1.9 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்கிறதா அல்லது குறைகிறதா என்ற விவாதங்களும் சந்தேகங்களும் எழுந்தன. மக்கள்தொகையை அடுத்த தலைமுறையினரைக் கொண்டு சரியாக ஈடுகட்டுவதற்கான மாற்று நிலை (Replacement level TFR) அளவீடு 2.1-ஆகக் கருதப்படுகிறது.


மற்ற அரசு கணக்கெடுப்புகள் மற்றும் அறிக்கைகளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதால், தற்போதைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்-6 (NFHS-6) உண்மைத் தகவல் அறிக்கையில் விடுபட்டுள்ள முக்கியத் தரவுகள் பின்வருமாறு:


முக்கிய புள்ளிவிவரங்கள்: ஒட்டுமொத்த பாலின விகிதம் மற்றும் பிறப்பின் போதான பாலின விகிதம் போன்ற மக்கள்தொகை அளவிலான குறியீடுகள், ஆறாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பிலிருந்து (NFHS-6) நீக்கப்பட்டிருந்தாலும், அவை மாதிரி பதிவு அமைப்பில் (SRS) கிடைக்கின்றன. சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பின் (SRS) அறிக்கையின்படி, ஆண் குழந்தைகளுக்கான சமூகத்தின் விருப்பத்தைக் காட்டும் குறியீடான 'பிறப்பின் போதான பாலின விகிதம்', ஒவ்வொரு 1,000-ஆண் குழந்தைகளுக்கு 918-பெண் குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.


பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு பற்றிய தகவல்கள் குடிமக்கள் பதிவு முறை மூலம் (Civil Registration System (CRS)) கிடைக்கின்றன. சமீபத்திய குடிமக்கள் பதிவு முறை (CRS) தரவுகளின்படி, இந்தியாவில் 95% பிறப்புகளும் 92% இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பிறந்து ஒரு மாதத்திற்குள் ஏற்படும் குழந்தை இறப்பு (Neonatal mortality), ஓராண்டிற்குள் ஏற்படும் குழந்தை இறப்பு (Infant mortality) மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (Under-five mortality) போன்ற தரவுகளும் மாதிரி பதிவு அமைப்பின் (SRS) அறிக்கையில் கிடைக்கின்றன. அதேபோல், ஆறாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் (NFHS-6) தொடர்ந்து இடம்பெற்றுள்ள மொத்தக் கருவுறுதல் விகிதமும் (TFR), மாதிரி பதிவு அமைப்பு (SRS) அறிக்கையிலேயே வெளியிடப்படுகிறது.


சுகாதாரம் மற்றும் எரிபொருள்: தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) தரவுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, சமையல் எரிவாயுப் பயன்பாடு மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்த தரவுகளை, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) அறிக்கைகளில் காணலாம். மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி, திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு போன்ற தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-6 (NFHS-6) தொடர்ந்து நீடிக்கும் சில குறியீடுகளும் இந்த தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) ஆய்வுகளில் இடம்பெற்றுள்ளன.


மக்களிடையே தூய்மையான சமையல் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 1.6 கோடி சமையல் எரிவாயு (Liquefied Petroleum Gas (LPG)) இணைப்புகளை வழங்குவதை அரசாங்கத்தின் இலவச சமையல் எரிவாயு திட்டம் (Ujjwala Yojana) நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேபோல், அனைவரும் கழிப்பறை வசதி பெறுவதை உறுதி செய்வதன் மூலம், நாட்டை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக மாற்றுவதை தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) நோக்கமாகக் கொண்டுள்ளது.


சுகாதாரத் திட்டங்கள்: சுகாதாரத் திட்டங்கள் குறித்து விடுபட்ட சில தகவல்களை மற்ற ஆதாரங்களில் இருந்து நாம் பெறமுடியும். உதாரணமாக, ‘HIV’ (Human Immunodeficiency Virus) தொடர்பான தரவுகளை தேசிய ‘HIV’ மதிப்பீட்டு அறிக்கைகளிலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) தடுப்பூசி இணையதளத்திலும் பார்க்க முடியும். இருப்பினும், மக்கள் சுகாதார வசதிகளைப் பெறுவதில் உள்ள நன்மைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு எந்தவொரு அரசு கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் பதில்கள் இல்லை.


உதாரணமாக, மக்கள் எந்த வகையான கருத்தடை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள், சுகாதாரப் பணியாளர்கள் குடும்பக் கட்டுப்பாடு குறித்து மக்களிடம் ஆலோசிக்கிறார்களா, பெண்களுக்குக் கருத்தடை முறைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றித் தெரிவிக்கப்படுகிறதா அல்லது வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாய்வழி நீரேற்றக் கரைசல் (Oral Rehydration Salts (ORS)) மற்றும் துத்தநாக (Zinc) சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா போன்ற தகவல்கள் மற்ற ஆய்வுகளில் கிடைப்பதில்லை. இதுதவிர, ஒவ்வொரு பிரசவத்திற்கும் மக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற தரவும் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் கணக்குகள் ஒட்டுமொத்தமாக மக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செய்யும் மருத்துவச் செலவுகளைக் கணித்தாலும், பிரசவம் தொடர்பான குறிப்பிட்ட செலவு விவரங்களைத் தெளிவாக வழங்குவதில்லை.


புற்றுநோய் பரிசோதனை: மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகிய மூன்று பொதுவான புற்றுநோய்களுக்கான பரிசோதனை குறித்த தரவுகள் இந்த உண்மைத் தகவல் அறிக்கையில் விடுபட்டுள்ளன. இந்த மூன்று புற்றுநோய்கள் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான (Non-Communicable Diseases) பரிசோதனை மற்றும் சிகிச்சையை வழங்குவதற்காக, 2018-ஆம் ஆண்டு முதல் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள்' (Ayushman Arogya Mandirs (AAM)) அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centres (PHCs)) மேம்படுத்தப்பட்டுள்ளன.


இருப்பினும், நிதி ஆயோக் ( National Institution for Transforming India (NITI Aayog)) 2024-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தப் புற்றுநோய் பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாகச் செயல்பட்டு வரும் மருத்துவ மையங்களில், 10 சதவீதத்திற்கும் குறைவான மையங்கள் மட்டுமே தங்களின் பகுதி மக்களுக்கு ஒரு முறை முழுமையான தொற்றா நோய் (NCD) பரிசோதனையைச் செய்து முடித்துள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளின்படி, வெறும் 0.9% பேருக்கு மட்டுமே மார்பக மற்றும் வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகளும், 1.9% பேருக்கு மட்டுமே கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.





இரத்த சோகையின் சவால்


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) அறிக்கையில் விடுபட்டுள்ள மற்றொரு முக்கியமான தகவல், இரத்த சோகை பாதிப்பு குறித்த மதிப்பீடாகும். விரல் நுனியில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கும் தற்போதைய முறை, இரத்த சோகையின் அளவை உண்மை நிலையைவிட அதிகமாகக் காட்டக்கூடும் என்று நிபுணர்கள் கூறியதால், இந்த அளவீடு இந்த முறை கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை.


நிபுணர்களின் கூற்றுப்படி, நரம்பிலிருந்து (Intravenous (IV)) எடுக்கப்படும் இரத்த மாதிரிகள் மூலம் இரத்த சோகையை இன்னும் துல்லியமாகக் கணக்கிட முடியும். நரம்பு இரத்த மாதிரிகளின் அடிப்படையிலான இரத்த சோகை பாதிப்பு குறித்த தரவுகள், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institute of Nutrition (NIN)) நடத்திவரும் 'உணவுமுறை மற்றும் உயிரியல் குறியீட்டு ஆய்வு' (Diet and Biomarker Survey) மூலம் வழங்கப்படும், இந்த அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இருப்பினும், இதில் உள்ள ஒரு பெரிய சவாலானது, இந்த புதிய தரவுகளை முந்தைய இரத்த சோகை மதிப்பீடுகளுடன் நேரடியாக ஒப்பிட முடியாது. தற்போதைய கணக்கெடுப்பில் பழைய மற்றும் புதிய முறைகள் இரண்டையுமே சேர்த்துப் பயன்படுத்தியிருந்தால் இந்தச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


குறிப்பாக, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையைக் குறைக்க சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் இரும்புச்சத்து-போலிக் அமில (Iron-folic acid) மாத்திரைகளை வழங்கும் அரசின் 'இரத்த சோகை இல்லாத இந்தியா' (Anaemia Mukt Bharat) திட்டம் செயல்பாட்டில் இருந்தபோதிலும், முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-5 (NFHS-5) இரத்த சோகை பாதிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்தது. இதன் பின்னரே, இந்த முறை இரத்த சோகை பாதிப்பு தரவுகளை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கணக்கெடுப்பில், 6-59-மாதக் குழந்தைகளுக்கு இடையேயான இரத்த சோகை 2015-16-ஆம் ஆண்டில் 58.6%-லிருந்து 67.1%-ஆக உயர்ந்திருந்தது. 15-49 வயதுடைய பெண்களிடையே இது 53.1%-லிருந்து 57%-ஆகவும், கர்ப்பிணிப் பெண்களிடையே 50.4%-லிருந்து 52.2%-ஆகவும் அதிகரித்திருந்தது.


இருந்தபோதிலும், தற்போதைய கணக்கெடுப்பில் 100 நாட்களுக்கும் மேலாக மற்றும் 180 நாட்களுக்கும் மேலாக இரும்புச்சத்து-போலிக் அமில மாத்திரைகளைப் பெற்ற தாய்மார்கள் பற்றிய தரவுகள் இன்னும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குறியீடுகளுமே கணிசமான அதிகரிப்பைக் காட்டுகின்றன. மேலும், கடுமையான இரத்த சோகை உள்ள பெண்களுக்கும், கர்ப்பத்தின் பிந்தைய கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் நரம்பு வழி இரும்புச்சத்து (IV iron) சிகிச்சையை மாநிலங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன.


முக்கியக் கண்டுபிடிப்புகள்


அந்தக் கணக்கெடுப்பின் பிற முக்கியக் கண்டுபிடிப்புகள் சில பின்வருமாறு :


முதுமையடையும் மக்கள்தொகை: 5 வயது மற்றும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் முறையே 8.2%-லிருந்து 8%-ஆகவும், 26.5%-லிருந்து 25.5%-ஆகவும் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. அதேநேரத்தில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது — ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளுடன் ஒப்பிடும்போது ஆறாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-6) தரவுகளில் முதியவர்களின் விகிதம் 11.8%-லிருந்து 12.9%-ஆக உயர்ந்துள்ளது.


காப்பீட்டு வசதி: அரசின் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்ட விரிவாக்கத்தின் காரணமாக, மருத்துவக் காப்பீடு பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த இரு கணக்கெடுப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில், காப்பீட்டு வசதி பெற்றவர்களின் எண்ணிக்கை 41%-லிருந்து 60.2%-ஆக உயர்ந்துள்ளது.




இணையப் பயன்பாடு அதிகரிப்பு: 2019-21-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-5 (NFHS-5), தங்கள் வாழ்வில் எப்போதாவது இணையத்தைப் பயன்படுத்திய பெண்களின் எண்ணிக்கை 33.3%-ஆக இருந்தது. அது 2023-24-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-6 (NFHS-6) 64.3%-ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதேபோல, ஆண்களிடையே இணையப் பயன்பாடு 51.2%-லிருந்து 80.5%-ஆக அதிகரித்துள்ளது.


கருத்தடை: இந்தக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்தமாக கருத்தடை முறைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், நவீன முறைகளான ஆணுறை, மாத்திரைகள், காப்பர்-டி போன்ற உள்வழிக் கருவிகள் (Intrauterine Devices (IUDs)) மற்றும் ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய நவீன கருத்தடை முறைகளின் பயன்பாடு, ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் (NFHS-5) 56.4%-ஆக இருந்தது, தற்போது ஆறாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் (NFHS-6) 52.7%-ஆகக் குறைந்துள்ளது.


இரத்தச் சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம்: அதிக இரத்தச் சர்க்கரை (சர்க்கரை நோய்) உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஆனால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (NFHS-5) தரவுகளுடன் ஒப்பிடும்போது, தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) தரவுகளில் 17.8% பெண்களுக்கும், 20.9% ஆண்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது பதிவாகியுள்ளது. முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில்-5 (NFHS-5) இது பெண்களிடம் 13.5%-ஆகவும், ஆண்களிடம் 15.6%-ஆகவும் இருந்தது.


குறைந்த எடை, உடல் பருமன்: குறைந்த எடை கொண்ட பெரியவர்கள் மற்றும் பருமனான அல்லது அதிக எடை கொண்ட பெரியவர்கள் ஆகிய இருவரின் பரவலும் அதிகரித்துள்ளது. NFHS-5-ல் 18.7% பெண்கள் மற்றும் 16.2% ஆண்கள் என இருந்ததோடு ஒப்பிடுகையில், NFHS-6-ல் BMI 18.5-க்கும் குறைவாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 19.7%-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக எடை அல்லது உடல் பருமனைப் பொறுத்தவரை, NFHS-5-ல் 24% பெண்கள் மற்றும் 22.9% ஆண்கள் என இருந்ததோடு ஒப்பிடுகையில், NFHS 6-ல் BMI 25-க்கும் அதிகமாக உள்ள பெண்களின் விகிதம் 30.7%-ஆகவும், ஆண்களின் விகிதம் 27.3% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


குறைந்த எடை மற்றும் உடல் பருமன்: குறைவான உடல் எடை கொண்ட பெரியவர்கள் மற்றும் அதிக உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் ஆகிய இருதரப்பினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6-ன்படி (NFHS-6), 19.7% பெரியவர்கள் 18.5-க்கும் குறைவான உடல் நிறை குறியீட்டை (Body Mass Index (BMI)) கொண்டுள்ளனர். இது முந்தைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5-ல் (NFHS-5) இருந்த 18.7% பெண்கள் மற்றும் 16.2% ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். அதேபோல், அதிக எடை அல்லது உடல் பருமன் (25-க்கும் மேல்) உள்ளவர்களைப் பொறுத்தவரை, தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6)-ல் 30.7% பெண்களும், 27.3% ஆண்களும் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (NFHS-5)-ல் இருந்த 24% பெண்கள் மற்றும் 22.9% ஆண்களின் எண்ணிக்கையைவிட கணிசமாக உயர்ந்துள்ளது.


original article:  Key health and population indicators, anaemia data: What went missing from NFHS-6 findings. -Anonna Dutt

Share: