அரசியலமைப்பின் 10-வது அட்டவணை அரசியல் கட்சித் தாவல்களை எவ்வாறு நெறிப்படுத்துகிறது? — ஆகான்க்ஷா ஷர்மா

 அரசியல் கட்சித் தாவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, 52-வது அரசியலமைப்புத் திருத்தம் 1985-ல் 10-வது அட்டவணை மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை (Anti-Defection Law) அறிமுகப்படுத்தியது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்தச் சட்டம் ஏன் தொடர்ந்து தீவிரமான அரசியல் மற்றும் அரசியலமைப்பு விவாதங்களை உருவாக்கி வருகிறது?


பி.ஆர்.எஸ் சட்டமன்ற ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, 1967-ல், "ஹரியானா சட்டமன்ற உறுப்பினர் கயா லால் ஒரே நாளில் மூன்று முறை கட்சியை மாற்றினார்". இதுபோன்ற, கட்சித் தாவல்களை விவரிக்க, இந்த இழிவான சம்பவம் இந்திய அரசியலில் 'ராமர் வந்துவிட்டார், ராமர் சென்றுவிட்டார்' (Aya Ram, Gaya Ram) என்ற சொற்றொடரைப் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்த பத்தாண்டுகளில் அடிக்கடி கட்சித் தாவல்கள், குதிரை பேரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் வீழ்ச்சி ஆகியவை நிகழ்ந்தன.


ஆனால் கட்சித் தாவல் என்பது வெறும் கட்சியை மாற்றுவது மட்டுமல்ல. அது அரசியல் ஒழுக்கநெறி, நீதித்துறை மறுஆய்வு, அரசியலமைப்பு ஆட்சிமுறை, சட்டமன்ற சுயாட்சி மற்றும் விவாத ஜனநாயகம் போன்ற கேள்விகளையும் உள்ளடக்கியது. கட்சித் தாவல் தடைச் சட்டம் இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முயல்கிறது?


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பின்னணி


அரசியல் கட்சித் தாவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 52-வது அரசியலமைப்புத் திருத்தம் 1985-ல் 10-வது அட்டவணை மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் சி. காஷ்யப், தனது Anti-Defection Law and Parliamentary Privileges (கட்சித் தாவல் தடைச் சட்டமும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளும்)-1993 என்ற நூலில், கட்சித் தாவல் என்பதை "விசுவாசம், கடமை அல்லது கொள்கை, அல்லது ஒருவரின் தலைவர் அல்லது கொள்கையைக் கைவிடுதல்" என்று விவரிக்கிறார்.


52-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிக்கை குறிப்பிடுவதாவது, "அரசியல் கட்சித் தாவல்கள் எனும் தீமை ஒரு தேசிய அக்கறைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இது தடுக்கப்படாவிட்டால், அது நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தையும், அதைத் தாங்கி நிற்கும் கொள்கைகளையும் சீர்குலைக்கும் வாய்ப்புள்ளது."


எனவே, 10-வது அட்டவணையானது, இத்தகைய கொள்கையற்ற நடைமுறைகளை ஊக்கமிழக்கச் செய்யவும், அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும் மற்றும் தேர்தல் ஆணையின் நேர்மையைப் பேணவும் அரசியலமைப்பு வழிமுறைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


இருப்பினும், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்தச் சட்டம் தீவிரமான அரசியல் மற்றும் அரசியலமைப்பு விவாதங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான கண்ணோட்டம், சட்டத்தின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.


சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலகட்டம்


1967 மற்றும் 1971-க்கு இடைப்பட்ட காலம் பொதுவாக "நிலையற்ற காலம்" (Era of Instability) என்று குறிப்பிடப்படுகிறது. இக்காலகட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர்ச்சியான கட்சித் தாவல்களின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் 45 அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு கவிழ்ந்தன. 1967 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு ஒற்றைக் கட்சி ஆதிக்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அரசாங்கங்களைக் கைப்பற்றுவதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ கட்சித் தாவல் ஒரு உத்திசார் கருவியாக மாறியது. சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டது, சித்தாந்தரீதியான கருத்து வேறுபாடுகளினால் மட்டுமல்லாமல், அமைச்சர் பதவிகளையோ அல்லது பிற பொருள்சார் ஆதாயங்களையோ பெறுவதற்காகவே அமைந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட கட்சித் தாவல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியதுடன், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பலவீனப்படுத்தின.


இந்தச் சூழலில், கட்சித் தாவல்கள் மீதான ஒய். பி. சவான் குழு-1969 (Y. B. Chavan Committee on Defections) இப்பிரச்சனையின் நிலையை ஆவணப்படுத்தி, அதனைச் சமாளிக்கப் பல நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் எந்த அரசியல் கட்சியின் சின்னத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அந்தக் கட்சிக்குத் தாவும் விசுவாசத்தைத் தானாக முன்வந்து கைவிடுவதே கட்சித் தாவல் என அக்குழு வரையறுத்தது. ஆனால், அத்தகைய செயல் கட்சியின் முடிவின் விளைவாக ஏற்பட்டால் இது பொருந்தாது.


பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் ஆணையின்படி பொறுப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையாக கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தை அடைவதற்காக, கட்சித் தாவல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கான காரணங்களை இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.

10-வது அட்டவணையின்கீழ் கட்சித் தாவல் என்பது என்ன?


கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய இருவருக்கும் பொருந்தும். இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ், பின்வரும் காரணத்தின் அடிப்படையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்:


1. ஒரு அவையின் உறுப்பினர், தான் சார்ந்த அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து துறக்கும் பட்சத்தில்,


ரவி எஸ் நாயக் vs இந்திய ஒன்றியம்-1994 (Ravi S. Naik vs Union of India) வழக்கில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு, அவர் தானாக முன்வந்து உறுப்பினர் பதவியைத் துறப்பது என்பது அவர் முறையாகப் பதவி விலக வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிட்டது. அவை, “உறுப்பினர் பதவியிலிருந்து முறையாக ராஜினாமா செய்யாத நிலையிலும்கூட, ஒரு உறுப்பினரின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அவர் தான் சார்ந்த அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து துறந்துவிட்டார் என்ற முடிவுக்கு வர இயலும்.”


வேறுவிதமாகக் கூறினால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியிலிருந்து முறையாகப் பதவி விலகாமல், மற்றொரு கட்சியுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் (உதாரணமாக, மற்றொரு கட்சியில் பதவிகளை வகிப்பது), அது தானாக முன்வந்து உறுப்பினர் பதவியைத் துறப்பதற்குச் சமமாகும் மற்றும் தகுதி நீக்கத்திற்கான காரணமாகவும் அமையும்.


2. ஒரு உறுப்பினர், தனது அரசியல் கட்சியின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக, முன் அனுமதி பெறாமல் அவையில் வாக்களித்தாலோ அல்லது வாக்களிப்பதைத் தவிர்த்தாலோ, அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். மேலும், அச்செயலை கட்சி 15 நாட்களுக்குள் மன்னித்து ஏற்காவிட்டாலோ அல்லது அங்கீகரிக்காவிட்டாலோ, அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.


3. ஒரு சுயேச்சை உறுப்பினர் (independent member), தேர்தலுக்குப் பிறகு ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைந்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.


4. ஒரு நியமன உறுப்பினர் (nominated member), தனது இருக்கையில் அமர்ந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைந்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.


தகுதி நீக்கத்திலிருந்து விதிவிலக்கு


10-வது அட்டவணையின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதிலிருந்து அளிக்கப்படும் முக்கிய விலக்கு, அரசியல் கட்சிகளின் இணைப்பு (Merger) ஆகும். ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பேர் மற்றொரு அரசியல் கட்சியுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டால், அந்த சட்டமன்ற உறுப்பினர் தகுதியிழப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்.


தொடக்கத்தில், 10-வது அட்டவணையில் "பிளவு" (Split) தொடர்பான விலக்கும் சேர்க்கப்பட்டிருந்தது. இப்பிரிவின் கீழ், ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தகுதி நீக்கத்திற்கு ஆளாகாமலே அக்கட்சியிலிருந்து பிரிந்து செல்ல முடிந்தது. இருப்பினும், இப்பிரிவு பரவலாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இது பெருமளவிலான கட்சித் தாவல்களுக்கு வழிவகுத்தது; இத்தாவல்கள் பெரும்பாலும் கட்சியின் உட்கட்சிப் பூசல்கள் என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டன.


2003-ம் ஆண்டின் அரசியலமைப்பு (99-வது திருத்தம்) சட்டம் (Constitution (Ninety-First Amendment) Act), பிளவுக்கான விலக்கை (split exception) முற்றிலுமாக நீக்கி, இணைப்புகளுக்கான விலக்கை மட்டும் தக்கவைத்துக்கொண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டது. அதே திருத்தம், கட்சி மாறியவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் அதிக ஊதியம் பெறும் அரசியல் பதவிகளும் வழங்கப்படுவதைத் தடுப்பதற்காக 75(1B), 164(1B) மற்றும் 361B ஆகிய விதிகளையும் சேர்த்தது.


இருப்பினும், இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளின் செயல்திறன் பெரும்பாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடைய நிறுவன அமைப்பையே சார்ந்திருக்கிறது. இது, அவைத் தலைவர்களின் (Presiding Officers) பங்கின் மீது கவனத்தை ஈர்க்கிறது.


சபாநாயகரின் பங்கு


10-வது அட்டவணையின் பத்தி 6 (1), தகுதிநீக்க மனுக்கள் மீதான முடிவெடுக்கும் அதிகாரத்தை அவைத் தலைவர் (சபாநாயகர் அல்லது தலைவர்) அலுவலகத்தில் வழங்குகிறது. மேலும், அவர்களின் முடிவு இறுதியானதாக இருக்கும். இது, சபாநாயகர் அலுவலகத்தை ஒரு பாரபட்சமற்ற அரசியலமைப்பு அதிகார அமைப்பாகவும், கட்சி சார்பற்ற முறையில் செயல்படக் கூடியவராகவும் அரசியலமைப்புரீதியாக நம்புவதைப் பிரதிபலிக்கிறது.




ஆனால், நடைமுறை அனுபவங்களும் அரசியல் சார்புகள் குறித்த குற்றச்சாட்டுகளும், சில சமயங்களில் அவைத் தலைவர்களின் நடுநிலைமை குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளன. எனவே, 10-வது அட்டவணையின் செயல்திறன், அவைத் தலைவரின் நிறுவன ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பெருமளவில் சார்ந்துள்ளது.


கூடுதலாக, தகுதிநீக்க மனுக்கள் மீதான முடிவுகளின் காலமானது அரசியல் ஆய்வுக்கு உட்பட்ட ஒரு விஷயமாக மாறியுள்ளது. 10-வது அட்டவணை ஆரம்பத்தில் சபாநாயகரின் முடிவின் மீதான நீதித்துறை மறுஆய்வைத் தடுத்தது.


சபாநாயகரின் முடிவின் மீதான நீதித்துறை மறுஆய்வு (Judicial review)


ஆனால், கிஹோட்டோ ஹோலோஹான் vs ஜச்சில்ஹு-1992 (Kihoto Hollohan vs Zachillhu) வழக்கில், உச்சநீதிமன்றம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை உறுதிசெய்ததுடன், சபாநாயகரின் முடிவுகள் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை என்றும் கூறியது. 10-வது அட்டவணையின் கீழ் சபாநாயகர் ஒரு தீர்ப்பாயமாகச் செயல்படுகிறார் என்றும், நீதித்துறை மறுஆய்வு என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது, அதைத் தவிர்க்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


நபாம் ரெபியா vs துணை சபாநாயகர்-2016 (Nabam Rebia vs Deputy Speaker) வழக்கில், ஒரு சபாநாயகரை நீக்குவதற்கான அறிவிப்பு நிலுவையில் இருக்கும்போது, ​​அவர் தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு தகுதிநீக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.


மேலும், கட்சித் தாவல் வழக்குகளில் சரியான நேரத்தில் முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. கெய்ஷம் மேகச்சந்திர சிங் vs சபாநாயகர், மணிப்பூர் சட்டமன்றம்-2020 (Keisham Meghachandra Singh vs Speaker, Manipur Legislative Assembly) வழக்கில், சபாநாயகர்கள் பொதுவாக மூன்று மாதங்களுக்குள் தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.


இத்தகைய நீதித்துறைத் தலையீடுகள், தகுதிநீக்க நடவடிக்கைகளை உரிய நேரத்தில் தீர்ப்பது மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கு அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த அதிகரித்துவரும் கவலைகளைப் பிரதிபலிக்கின்றன.


ஆகாங்ஷா ஷர்மா டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார். இந்தத் தொடரின் இரண்டாம் பாகம், நிலைத்தன்மைக்கும் எதிர்ப்புக்கும் இடையிலான விவாதம், சீர்திருத்தங்களின் தேவை, மற்றும் ஜனநாயகத்திற்குத் தாவல் தடைச் சட்டத்தின் பொருத்தம் ஆகியவற்றை ஆராயும்.


original article:  How the Tenth Schedule regulates political defections? —  Akanksha Sharma

Share: