Showing posts with label National Food Security Act. Show all posts
Showing posts with label National Food Security Act. Show all posts

உணவு நச்சுத்தன்மை பாதிப்புகள் அதிகரிப்பது, உணவுப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது. - சாம்பவி பார்த்தசாரதி


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏறக்குறைய முக்கால்வாசிப் பங்குகள், உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (Food Safety Index) குறைந்த அல்லது மிதமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தன.


மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரின்  ஒரு தனியார் பள்ளியிலும், மகாராஷ்டிராவின் பிவாண்டியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் உணவை உட்கொண்ட பின்னர் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தை' (Food Safety and Standards (FSS) Act)) செயல்படுத்துவதை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளன.


சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த 'விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்' அறிக்கையின்படி, இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,122 பேர் உணவு நச்சுத்தன்மையால் உயிரிழந்தனர்.



இவ்வாறு தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள், உணவுப் பாதுகாப்புச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படாத குறைபாடுகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். இதை, 2023–24-ஆம் ஆண்டிற்காக ஒன்றிய அரசு வெளியிட்ட மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index) தெளிவாக வெளிக்காட்டுகிறது. மனித வளம் மற்றும் நிறுவனத் தரவுகள், விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுதல், உணவுப் பரிசோதனை உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோர் அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இந்தக் குறியீட்டை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) கணக்கிடுகிறது.


வலுவான தொடர்பை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், உணவு நச்சுத்தன்மை பாதிப்புகள் அதிக எண்ணிக்கையில் பதிவான மாநிலங்கள், இந்த குறியீடுகள்  குறைந்த அல்லது மிதமான மதிப்பெண்களையே கொண்டிருந்தன என்பதை அந்தகுறியீடு  காட்டியது.


அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில்  நான்கில் மூன்று பங்கு மாநிலங்கள், 100 மதிப்பெண்ணில் 50 மதிப்பெண்ணிற்கும் குறைவாகவே பெற்றுள்ளன.


2024-ஆம் ஆண்டில் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஜார்க்கண்ட் 26.5 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றது. அதேபோல், 2024ஆம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவான உத்தரப் பிரதேச மாநிலம், 44.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.


பதிவுசெய்யப்பட்ட அனைத்து உணவு வணிக நிறுவனங்களிடமிருந்தும் (Food Business Operators (FBOs)) உணவு மாதிரிகளைச் சேகரித்து, அவ்வப்போது ஆய்வு மற்றும் பகுப்பாய்வு செய்வதை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் கட்டாயமாக்குகிறது. இந்தச்சட்டத்தில் இந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஒரு திருத்தத்தின்படி, இனி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் குறியீடு அல்லது இடைவெளி என்பது, அந்தந்த நிறுவனங்களின் வகை, அவற்றின் கடந்தகால செயல்பாட்டுப் பதிவுகள் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் செய்யப்படும் 'மாறும் தன்மைக்கேற்ப ஆபத்து அடிப்படையிலான மதிப்பீடு' (dynamic risk-based assessment) மூலம் தீர்மானிக்கப்படும். இத்திருத்தப்பட்ட விதிமுறைகள் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், 2024-25-ஆம் ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (Food Safety and Standards Authority of India (FSSAI)) தரவுகள், பதிவுசெய்யப்பட்ட உணவு வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பல்வேறு மாநிலங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட உணவு மாதிரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்ததைக் காட்டுகின்றன.


எடுத்துக்காட்டாக, உணவுப் பாதுகாப்பு தரநிலை இணக்கக் கண்காணிப்பு  அமைப்பிடம் உள்ள தரவுகளின்படி, 1.8 லட்சத்திற்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட அல்லது செயல்பாட்டில் உள்ள உணவு வணிக உரிமங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், 20,877 மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.


உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை (Food Safety Regulations) திறம்பட செயல்படுவது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளின் செயல்பாட்டையே அதிகம் சார்ந்துள்ளது. தரவுகளின்படி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை கொண்டுள்ளது. இருந்த போதிலும், கீழ் மட்டத்தில் (Field Level) விதிகளை அமல்படுத்தும் முக்கியப் பொறுப்பு மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடமே உள்ளது. இருப்பினும், இந்த அமைப்புகள் காலிப் பணியிடங்கள் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றன.


822 அதிகாரிகளை பணியிடங்களாகக் கொண்டுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் காலிப் பணியிடங்கள் 30%-இலிருந்து ஏறக்குறைய 40%-ஆக அதிகரித்துள்ளன. மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2025-26-ஆம் ஆண்டுகளின் நிதியாண்டின் 3-வது காலாண்டின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,208 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் (Food Safety Officers (FSO)) அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 2,997 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.


உலக சுகாதார அமைப்பு (WHO) 2026ஆம் ஆண்டின் உணவுப் பரவும் நோய் அறிக்கை,  பாதுகாப்பற்ற உணவினால் ஆண்டுதோறும் 866 மில்லியன் நோய்களும் 1.5 மில்லியன் இறப்புகளும் ஏற்படுவதாக மதிப்பிட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டில், உணவின் மூலம் பரவும் நோய்களால் 5.71 கோடி உடல்குறைபாடு சரிசெய்யப்பட்ட வாழ்நாள் ஆண்டுகள் (Disability-Adjusted Life Years (DALYs)) இழக்கப்பட்டதாகவும், இந்தச் சுமையில் 30% பங்கு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.


2000-ஆம் ஆண்டு முதல் உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு குறைந்திருந்தாலும், உணவால் ஏற்படும் நோய்களால் இழக்கப்படும் வாழ்நாள் விகிதம் (Years of Life Lost (YLL)) அடிப்படையில் நாடுவாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியா 15-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் குறைந்த வருமானம் கொண்ட பல ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.


வரைபடங்களுக்கான தரவுகள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், 'இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்' (Accidental Deaths and Suicides in India) மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.


Original Link: Rise in food poisoning cases highlights lapses in food safety.

Share:

முன்பக்க முகப்புச் சீட்டில் ‘100%’ எனக் குறிப்பிட்டு, பின்பக்கத்தில் மறுப்பு அறிவிப்புகளை வெளியிட்டதற்காக இரண்டு முன்னணி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஏன் அபராதம் விதித்தது? -வினீத் பல்லா

'Mrs Bectors' நிறுவனத்தின் '100%  கோதுமை மாவு ரொட்டி (Atta Bread) மற்றும் 'Storia' நிறுவனத்தின் '100% தேங்காய் நீர் (coconut water) ஆகிய தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் இருந்ததைக் கண்டறிந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, அந்நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது.


பழச்சாறுகள் முதல் ரொட்டி வகைகள் வரை, ஒரு தயாரிப்பின் கலப்படமற்ற தரத்தை நுகர்வோருக்கு உறுதிப்படுத்தும் நோக்கில் "100%" என்ற குறியீடு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சந்தைப்படுத்தல் உத்தியாக உள்ளது.


இருப்பினும், இந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட இரண்டு தனித்தனி உத்தரவுகளில், 'Mrs. Bectors Food Specialities Ltd' மற்றும் 'Storia Foods and Beverages Pvt Ltd' ஆகிய இரண்டு முக்கிய உணவு மற்றும் பான நிறுவனங்கள் மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)) தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது. இந்நிறுவனங்களின் தயாரிப்புகளின் உறைகள் மற்றும் விளம்பரப் பொருட்களில் "100%" என்ற வாசகத்தை முக்கியமாகப் பயன்படுத்தி, தவறான விளம்பரங்களை வெளியிட்டது மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் (unfair trade practices) ஈடுபட்டது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறும் ஆணையம் உத்தரவிட்டது.


இவ்விரு வழக்குகளிலும் 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019' (Consumer Protection Act) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு தயாரிப்பைப் பற்றித் தவறாக விவரிப்பது, பொய்யான உத்தரவாதம் அளிப்பது அல்லது முக்கியமான தகவல்களை வேண்டுமென்றே மறைப்பது ஆகியவற்றை "தவறாக வழிநடத்தும் விளம்பரம்" (misleading advertisement) என்று வரையறுக்கும் இச்சட்டத்தின் பிரிவு 2(28)-ஐ மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) பயன்படுத்தியது. அதேபோல், பொருட்களின் தரம் அல்லது கலவை குறித்துத் தவறான தகவல்களை அளிப்பதை "நியாயமற்ற வர்த்தக நடைமுறை" (unfair trade practice) என்று வரையறுக்கும் பிரிவு 2(47)-ஐயும் அது அடிப்படையாகக் கொண்டது.


இந்த உத்தரவுகளுக்கான ஒழுங்குமுறைச் சூழலை 'இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்' (Food Safety and Standards Authority of India (FSSAI)) உருவாக்கியிருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட ஓர் அறிவுறுத்தலில், "100%" என்ற சொல்லைப் பயன்படுத்தும் பிராண்டுகளின் போக்கு அதிகரித்து வருவதை உணவு ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது. விளம்பர விதிமுறைகளில் இச்சொல்லுக்கு வரையறை ஏதுமில்லை என்பதையும், இதன் பயன்பாடு "முழுமையான தூய்மை அல்லது மேன்மை குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் சந்தையில் உள்ள மற்ற போட்டித் தயாரிப்புகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்று நுகர்வோர் நம்புவதற்கு வழிவகுக்கலாம்" என்பதையும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வலியுறுத்தியது.


100% கோதுமை மாவு ரொட்டி (Atta Bread)


'English Oven' பிராண்ட் ரொட்டியைத் தயாரிக்கும் 'Mrs. Bectors Food Specialities Ltd' நிறுவனத்திற்கு எதிரான வழக்கில், இத்தகைய 'தூய்மை குறித்த தவறான எண்ணம்' என்பதே முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. அந்நிறுவனத்தின் "100% கோதுமை மாவு ரொட்டி" மற்றும் "100% முழு கோதுமை ரொட்டி" (Whole Wheat Bread) ஆகியவற்றுக்கான விளம்பரங்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தானாக முன்வந்து (suo-motu) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.



விசாரணையின் போது, ​​அந்த ரொட்டியில் இருந்த உண்மையான கோதுமை மாவு (atta) அளவு 87% மட்டுமே என்பதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா) எதுவும் சேர்க்கப்படாமல், கோதுமை மாவு மட்டுமே "ஒரே தானிய மூலமாக" பயன்படுத்தப்பட்டது என்பதை உணர்த்துவதற்காகவே "100%" என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அந்நிறுவனம் அதை நியாயப்படுத்தியது. ஒரு ரொட்டியை "முழு கோதுமை ரொட்டி" (Whole Wheat Bread) என வகைப்படுத்த குறைந்தபட்சம் 75% முழு கோதுமை மாவு இருக்க வேண்டும் என்று கூறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) லேபிளிங் விதிமுறைகளையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது. தங்கள் தயாரிப்பில் 87% கோதுமை மாவு இருந்ததால், அந்தக் குறியீடு நியாயமானதே என்று அவர்கள் வாதிட்டனர்.


இதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நிராகரித்தது. ஒரு தயாரிப்பை 'அட்டா பிரட்' (முழு கோதுமை மாவு ரொட்டி) என வகைப்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) விதிமுறைகள் குறைந்தபட்சம் 75% அளவை நிர்ணயித்திருந்தாலும், அதை '100% அட்டா பிரட்' போன்ற நிபந்தனையற்ற மற்றும் முழுமையான கூற்றை முன்வைப்பதற்கான நியாயமாக மாற்றிக்கொள்ள முடியாது என்று அது குறிப்பிட்டது.


சாதாரண நுகர்வோர் ஒருவர், அக்குறியீட்டைப் பார்த்து, அத்தயாரிப்பு முழுவதுமாக கோதுமை மாவால் (அட்டா) ஆனது என்றுதான் புரிந்துகொள்வார் என்று அது சுட்டிக்காட்டியது. "'100%' என்ற குறியீட்டுச் சொல் முழுமையானது மற்றும் தெளிவானது. இதில் எந்தவிதமான தளர்வுக்கோ அல்லது மாற்று விளக்கத்திற்கோ இடமில்லை" என்று தனது உத்தரவில் கூறிய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), இந்த நேரடி அர்த்தத்திற்குப் பொருந்தாத ஒரு தயாரிப்புக்கு இத்தகைய கூற்றை முன்வைப்பது உண்மையான நிலைக்கு முரணானது என்றும் தெரிவித்தது.


'100% இளநீர்' (Tender Coconut Water)


Storia Foods and Beverages நிறுவனத்திற்கு எதிரான வழக்கிலும் இதே போன்ற சட்டரீதியான அணுகுமுறையே பின்பற்றப்பட்டது. இதில், அந்நிறுவனத்தின் "100% இளநீர்" மற்றும் மாதுளை, கலப்புப் பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு "100% பழச்சாறு" வகைகளை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஆய்வு செய்தது.


ஸ்டோரியா நிறுவனத்தின் இளநீர் பழத்திலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட புதிய இளநீர் அல்ல என்பதையும், அது 9.6% செறிவூட்டப்பட்ட இளநீர் சாற்றிலிருந்து (coconut water concentrate) மீண்டும் தயாரிக்கப்பட்டது என்பதையும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கண்டறிந்தது. அதேபோல, அதன் "100% பழச்சாறு" வகைகளில் பெரும்பகுதி தண்ணீராகவே இருந்தது. பழக்கூழ் அல்லது செறிவூட்டப்பட்ட சாற்றின் அளவு வெறும் 4% முதல் 16% வரை மட்டுமே இருந்தது. மேலும், தங்கள் இளநீர் "வைரஸை எதிர்க்கிறது" (Combats Virus) மற்றும் "சோர்வைப் போக்குகிறது" (Kills Fatigue) என்று கூறி, அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் எந்தவித ஆதாரமும் இன்றி சில உடல்நலம் சார்ந்த கூற்றுகளை வெளியிட்டிருந்தது.


செறிவூட்டப்பட்ட சாறுகளிலிருந்து (concentrates) மீண்டும் திரவமாக்கி (reconstitution) பழச்சாறுகளைத் தயாரிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளிப்பதாக Storia நிறுவனம் வாதிட்டது. தனது உற்பத்தி செயல்முறை சட்டத்திற்கு உட்பட்டது என்றும், தயாரிப்பு "மீண்டும் நீர்த்த நிலையில் தயாரிக்கப்பட்டது” ​​(reconstituted) என்ற குறிப்பை உறையின் பின்புறம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால், முன்புறத்தில் உள்ள "100%" என்ற கூற்று சரியானது என்றும் அந்நிறுவனம் வாதாடியது.


இருப்பினும், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உற்பத்தி முறைக்கும், மக்களைத் தவறாக வழிநடத்தும் சந்தைப்படுத்தல் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தெளிவாகச் சுட்டிக்காட்டியது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மீண்டும் திரவமாக்கும் முறையை அனுமதித்தாலும், நீர்க்கச் செய்யப்பட்டு மீண்டும் திரவமாக்கப்பட்ட ஒரு தயாரிப்பை, நீர்க்கச் செய்யப்படாத இயற்கையான தயாரிப்பாகக் காட்ட உற்பத்தியாளருக்கு அது உரிமை அளிக்கவில்லை என்று ஆணையம் தீர்ப்பளித்தது.




பொருளின் உறையின் பின்புறம் மிகச்சிறிய எழுத்துக்களில் உள்ள குறிப்புகள் குறித்துப் பேசிய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), அவை முன்புறத்தில் உள்ள பெரிய அளவிலான கூற்றுகள் ஏற்படுத்தும் தவறான பிம்பத்தைச் சரிசெய்யாது என்று கூறியது. "இயல்பாகவே தவறான பிம்பத்தை உருவாக்கும் முன்புறக் கூற்றை, மூலப்பொருள் பட்டியலில் மிகச்சிறிய எழுத்துக்களில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்படும் ஒரு தொழில்நுட்பக் குறிப்பு சரிசெய்துவிடாது" என்று அந்த உத்தரவு குறிப்பிட்டது. மேலும், "100% இளநீர்" (Tender Coconut Water) என்று குறிப்பிடப்பட்ட பொருளை வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோர், அது செறிவூட்டப்படாமலும் மீண்டும் நீர்க்கச் செய்யப்படாமலும் இயற்கையான வடிவிலேயே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அது கூறியது.


தொழில்நுட்பரீதியான விதிமுறை இணக்கம் ஒரு 'பாதுகாப்புக் கவசம்' அல்ல


இரண்டு வழக்குகளிலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளைத் தொழில்நுட்ப ரீதியாகப் பின்பற்றியதை நிறுவனங்கள் ஒரு தற்காப்பு வாதமாகப் பயன்படுத்த முயன்றன. இருப்பினும், Storia நிறுவனத்தின் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், உற்பத்தி விதிகளைப் பின்பற்றுவது என்பது ஏமாற்றும் விளம்பரங்களுக்கு ஒரு "பாதுகாப்புக் கவசமாக" (safe harbour) அமையாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தீர்ப்பளித்தது.


Bectors நிறுவனத்திற்கு எதிரான உத்தரவில், "வாங்குபவரே விழிப்புடன் இருக்க வேண்டும்" (caveat emptor) என்ற பாரம்பரியக் கோட்பாடு, 2019-ம் ஆண்டுச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் "குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது" என்று அது குறிப்பிட்டது. இப்போது பொறுப்பு என்பது "விற்பனையாளரே விழிப்புடன் இருக்க வேண்டும்" (caveat venditor) என்ற கோட்பாட்டை நோக்கி மாறியுள்ளது.



Original Link : ‘100%’ on front label, disclaimers on the back: Why CCPA fined two major brands


Share:

பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சி. --குஷாங்கர் டே

பொது விநியோகத் திட்டத்தை (Public Distribution System (PDS)) வலுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டமான சார்த்தக் (Scheme for Assistance in Ration Transport and Handling-Income with Automation (SARTHAK)) திட்டத்தை இன்னும் மேம்படுத்த முடியும்.


SARTHAK (Scheme for Assistance in Ration Transport and Handling-Income with Automation in PDS) : ஒன்றிய அரசின் சார்த்தக்-பி.டி.எஸ் (SARTHAK-PDS) என்பது பொது விநியோகத் திட்டத்தை (நியாய விலை கடை) நவீனமயமாக்கும் ஒரு புதிய திட்டமாகும். இத்திட்டம் நியாய விலை பொருட்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.


மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் பொது விநியோகத் திட்டத்தில் தானியங்கி முறையுடன் கூடிய நியாய விலைப் பொருட்கள் போக்குவரத்து மற்றும் வருமானம்-கையாள்வதற்கான உதவித் திட்டம் (SARTHAK) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 81.35 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் பொது விநியோகத் திட்டத்தை (Public Distribution System (PDS)) நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் இந்தத் திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு, ஒன்றிய அரசு 25,530 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 


சார்த்தக் (SARTHAK) திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு: முதலாவதாக, தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்களுடன் மாநிலங்களுக்கு இடையேயான உணவு தானியங்களின் போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.     இது ஒரு பாதுகாப்பான மற்றும் விரைந்து செயல்படக்கூடிய விநியோக முறையை உருவாக்க உதவும். இரண்டாவதாக, 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (National Food Security Act (NFSA)) நியாயவிலைக் கடை (Fair Price Shop (FPS)) வியாபாரிகளின் லாப வரம்பை அதிகரிக்க வேண்டும்.       மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கண்காணிப்பு அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் நியாய விலை பொருட்கள் விநியோகத்தை முறைப்படுத்தி, பயனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த வேண்டும்.


மூன்றாவது, பொது விநியோகத் திட்ட (PDS) செயல்பாடுகளைக் கண்காணிக்க மாநிலக் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்தல், மாநில மற்றும் மத்திய கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடை (FPS) விநியோகர்களுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்லப்படுவதைக் மேற்பார்வையிடுதல், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், இருப்புக்களை நிர்வகித்தல், மற்றும் பயனாளிகளின் புகார்களைத் தீர்த்தல் போன்ற நடவடிக்கைகளை முதன்மையாகக் கொண்டுள்ளன.


நான்காவது, பயனாளிகளைச் சரிபார்ப்பதை மேம்படுத்தவும், போலிப் பதிவுகளை நீக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மற்றும் பயனாளிகள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்களின் நியாய விலை பொருட்களைப் பெறும் வசதியை மேம்படுத்தவும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய பொது விநியோகத் திட்ட தரவுத்தளத்தை உருவாக்குதல்.


குறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள்


இந்தத் திட்டம் புதிய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், இதில் சில முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது : (i) பரவலாக்கப்பட்ட/மையப்படுத்தப்பட்ட கொள்முதல் மற்றும் விநியோக முறைகளைக் கொண்டுள்ள மாநிலங்களில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்? (ii) பொதுவான மற்றும் சிறப்பு தகுதி பெற்ற மாநிலங்களுக்கான நியாய விலைக் கடை வியாபாரிகளின் மாற்றி அமைக்கப்பட்ட லாப வரம்பு என்னவாக இருக்கும், மேலும் இந்த லாப வரம்பை நிர்ணயிப்பது எவ்வாறு முறைப்படுத்தப்படும்? (iii) இத்திட்டம் எவ்வாறு மக்கள் எளிதாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும், மேலும் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) செயல்திறனையும் அதன் நீடித்த தன்மையையும் எவ்வாறு மேம்படுத்தும்?


முதலாவதாக, அரசாங்கம் அடிப்படை விநியோகஸ்தர்களின் லாப வரம்பை நிர்ணயித்துள்ளது; இது பொதுவான மாநிலங்களுக்கும் (ஒரு குவிண்டாலுக்கு ₹90) மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கும் (ஒரு குவிண்டாலுக்கு ₹180) இடையே மாறுபடுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட (NFSA) அமலாக்கம் குறித்த தற்போதைய மதிப்பீடு, பொதுவான மாநிலங்களில் நியாயவிலைக் கடைகளை (FPS) பொருளாதாரரீதியாக லாபகரமாக நடத்துவதற்கும், பொது விநியோகத் திட்டத்தை (PDS) வலுப்படுத்துவதில் அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும், அடிப்படை விநியோகர்களின் லாப வரம்பு ஒரு குவிண்டாலுக்கு ₹140 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், பயனாளிகளுக்கு நியாய விலை பொருட்களை விநியோகிப்பதற்கு, விநியோகர்களால் நிர்வகிக்கப்படும் மின்னணு விற்பனைப் புள்ளி (electronic Point of Sale (ePoS)) கருவியில் ஆதார் இணைப்பு மூலமாக கைரேகை அல்லது விழித்திரை சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இந்த மின்னணு விற்பனைப் புள்ளி (ePoS) கருவிகளின் பராமரிப்புக் கட்டணம் ஒரு குவிண்டாலுக்கு ₹21 முதல் ₹26 வரை இருக்கும் என்கின்றனர்.


இரண்டாவதாக, மையப்படுத்தப்பட்ட கொள்முதல் (Centralised procurement) நடக்கும் மாநிலங்களில், மாநிலத்திற்குள்ளான போக்குவரத்து மற்றும் கையாளுதல் கட்டணங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன. பரவலாக்கப்பட்ட கொள்முதல் (Decentralised procurement) முறையின்கீழ், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களது சொந்த மாநில முகமைகள் மூலமாக விநியோகத்தை நிர்வகிக்கின்றன மற்றும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கையாளுதல் கட்டணத்தை செலுத்துகின்றன. அடிப்படைப் போக்குவரத்து மற்றும் கையாளுதலுக்கான ஒன்றிய அரசின் உதவித்தொகை பொதுவான மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹105-ஆகவும், சிறப்பு தகுதி பெற்ற மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹143-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



மாநிலம் தழுவிய விநியோகக் கட்டமைப்பு, கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் தற்போது செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடை (FPS) விநியோகர்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, மக்கள் எளிதாக அணுகும் வசதி என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். இது நியாயவிலைக் கடைகளின் இருப்பிடம் மற்றும் அங்கு மக்கள் எளிதாகச் செல்லக்கூடிய வழி, நியாய விலை பொருட்களை வாங்குவதில் உள்ள எளிமை, தங்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கும் செயல்முறைகளின் எளிமை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. எனவே, பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் வழங்கப்படும் தானியங்களில் 28 சதவீதம் தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்பதால், பயனாளிகள் தங்களின் நியாய விலைப் பொருட்கள் பங்கீட்டை எளிதாகப் பெறுவதற்கான சாதகமான சூழலை இத்திட்டம் உருவாக்க வேண்டும்.


நான்காவதாக, ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் தேசிய அளவிலான தானிய விநியோகம் 93-98 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் இருப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகம் ஆகியவற்றை உடனுக்குடன் கண்காணிப்பதன் மூலமும், மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமும் இதை மேலும் மேம்படுத்தலாம்.


ஐந்தாவதாக, பொது விநியோகத் திட்டத்தைப் (PDS) பாதுகாப்பானதாக மாற்ற, கைரேகை/விழித்திரை சரிபார்ப்புத் தோல்விகள், இருப்பு ஒதுக்கீட்டில் ஏற்படும் தாமதங்கள், வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் மற்றும் தகுதியானவர்கள் விடுபட்டுப்போகும் அபாயங்கள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டும். இதன் மூலம், 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' (One Nation One Ration Card (ONORC)) திட்டத்தின்கீழ் 100 சதவீத நாட்டின் எந்தவொரு நியாய விலை கடையிலும் பொருட்கள் வாங்கும் வசதியெனும் இலக்கை அடைய வேண்டும். பிளாக்செயின் (Blockchain), - இணையவழிப் பொருட்களின் இணைப்பு (IoT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய தொழில்நுட்பங்களால் இந்தச் சிக்கல்களைச் சரிசெய்ய முடியும்.




இந்தத் திட்டம் ஒன்றிய அரசின் நிதி நெருக்கடியை அதிகரிக்கும் என்பதால், இதனை அதன் நோக்கங்களுக்கு ஏற்பவே செயல்படுத்த வேண்டும் : அதாவது, பொது விநியோகத் திட்டத்தின் (PDS) செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


குஷங்கூர் டே, லக்னோவில் உள்ள ஐஐஎம்-ல் (IIM Lucknow) இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

original article:  PDS integration push. -Kushankur Dey

Share: