அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏறக்குறைய முக்கால்வாசிப் பங்குகள், உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (Food Safety Index) குறைந்த அல்லது மிதமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தன.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரின் ஒரு தனியார் பள்ளியிலும், மகாராஷ்டிராவின் பிவாண்டியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் உணவை உட்கொண்ட பின்னர் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தை' (Food Safety and Standards (FSS) Act)) செயல்படுத்துவதை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த 'விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்' அறிக்கையின்படி, இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,122 பேர் உணவு நச்சுத்தன்மையால் உயிரிழந்தனர்.
இவ்வாறு தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள், உணவுப் பாதுகாப்புச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படாத குறைபாடுகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். இதை, 2023–24-ஆம் ஆண்டிற்காக ஒன்றிய அரசு வெளியிட்ட மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index) தெளிவாக வெளிக்காட்டுகிறது. மனித வளம் மற்றும் நிறுவனத் தரவுகள், விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுதல், உணவுப் பரிசோதனை உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோர் அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இந்தக் குறியீட்டை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) கணக்கிடுகிறது.
வலுவான தொடர்பை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், உணவு நச்சுத்தன்மை பாதிப்புகள் அதிக எண்ணிக்கையில் பதிவான மாநிலங்கள், இந்த குறியீடுகள் குறைந்த அல்லது மிதமான மதிப்பெண்களையே கொண்டிருந்தன என்பதை அந்தகுறியீடு காட்டியது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் நான்கில் மூன்று பங்கு மாநிலங்கள், 100 மதிப்பெண்ணில் 50 மதிப்பெண்ணிற்கும் குறைவாகவே பெற்றுள்ளன.
2024-ஆம் ஆண்டில் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஜார்க்கண்ட் 26.5 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றது. அதேபோல், 2024ஆம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவான உத்தரப் பிரதேச மாநிலம், 44.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட அனைத்து உணவு வணிக நிறுவனங்களிடமிருந்தும் (Food Business Operators (FBOs)) உணவு மாதிரிகளைச் சேகரித்து, அவ்வப்போது ஆய்வு மற்றும் பகுப்பாய்வு செய்வதை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் கட்டாயமாக்குகிறது. இந்தச்சட்டத்தில் இந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஒரு திருத்தத்தின்படி, இனி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் குறியீடு அல்லது இடைவெளி என்பது, அந்தந்த நிறுவனங்களின் வகை, அவற்றின் கடந்தகால செயல்பாட்டுப் பதிவுகள் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் செய்யப்படும் 'மாறும் தன்மைக்கேற்ப ஆபத்து அடிப்படையிலான மதிப்பீடு' (dynamic risk-based assessment) மூலம் தீர்மானிக்கப்படும். இத்திருத்தப்பட்ட விதிமுறைகள் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், 2024-25-ஆம் ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (Food Safety and Standards Authority of India (FSSAI)) தரவுகள், பதிவுசெய்யப்பட்ட உணவு வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பல்வேறு மாநிலங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட உணவு மாதிரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்ததைக் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, உணவுப் பாதுகாப்பு தரநிலை இணக்கக் கண்காணிப்பு அமைப்பிடம் உள்ள தரவுகளின்படி, 1.8 லட்சத்திற்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட அல்லது செயல்பாட்டில் உள்ள உணவு வணிக உரிமங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், 20,877 மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை (Food Safety Regulations) திறம்பட செயல்படுவது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளின் செயல்பாட்டையே அதிகம் சார்ந்துள்ளது. தரவுகளின்படி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை கொண்டுள்ளது. இருந்த போதிலும், கீழ் மட்டத்தில் (Field Level) விதிகளை அமல்படுத்தும் முக்கியப் பொறுப்பு மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடமே உள்ளது. இருப்பினும், இந்த அமைப்புகள் காலிப் பணியிடங்கள் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
822 அதிகாரிகளை பணியிடங்களாகக் கொண்டுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் காலிப் பணியிடங்கள் 30%-இலிருந்து ஏறக்குறைய 40%-ஆக அதிகரித்துள்ளன. மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2025-26-ஆம் ஆண்டுகளின் நிதியாண்டின் 3-வது காலாண்டின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,208 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் (Food Safety Officers (FSO)) அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 2,997 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) 2026ஆம் ஆண்டின் உணவுப் பரவும் நோய் அறிக்கை, பாதுகாப்பற்ற உணவினால் ஆண்டுதோறும் 866 மில்லியன் நோய்களும் 1.5 மில்லியன் இறப்புகளும் ஏற்படுவதாக மதிப்பிட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டில், உணவின் மூலம் பரவும் நோய்களால் 5.71 கோடி உடல்குறைபாடு சரிசெய்யப்பட்ட வாழ்நாள் ஆண்டுகள் (Disability-Adjusted Life Years (DALYs)) இழக்கப்பட்டதாகவும், இந்தச் சுமையில் 30% பங்கு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
2000-ஆம் ஆண்டு முதல் உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு குறைந்திருந்தாலும், உணவால் ஏற்படும் நோய்களால் இழக்கப்படும் வாழ்நாள் விகிதம் (Years of Life Lost (YLL)) அடிப்படையில் நாடுவாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியா 15-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் குறைந்த வருமானம் கொண்ட பல ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
வரைபடங்களுக்கான தரவுகள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், 'இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்' (Accidental Deaths and Suicides in India) மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.