மாநிலங்களில் உள்ள கட்டமைப்பு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான சிக்கல்கள், சொத்து வரி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான பயனர் கட்டணங்களை விரிவுபடுத்துவதைத் தடுக்கின்றன.
1993ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 73வது அரசியலமைப்புத் திருத்தம், இந்தியாவின் ஊரக பகுதிகளில் கூட்டாட்சி (federalism) முறையை மாற்றியமைத்தது. இது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (Panchayati Raj Institutions (PRIs)) தங்கள் பகுதிகளில் சொந்தமாக வரிகள், கட்டணங்கள் மற்றும் பயனர் கட்டணங்களை வசூலிக்க அதிகாரம் அளித்தது. இது அரசாங்க மானியங்களுக்கான (grants-in-aid) அவற்றின் சார்புநிலையைக் குறைக்கிறது. அந்தந்த மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு, குறிப்பாக கிராம பஞ்சாயத்துகளுக்கு, பல வரிகளை (சொத்து வரி, பொழுதுபோக்கு வரி, வாகன வரி உட்பட) விதிப்பதற்கும், நீர் மற்றும் சுகாதார சேவைகளுக்கான பயனர் கட்டணங்களை வசூலிப்பதற்கும், மேலும் பொதுச் சொத்து வளங்களிலிருந்து (Common Property Resources (CPRs)) வருவாய் ஈட்டுவதற்கும் அதிகாரம் அளிக்கின்றன.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு, நிதி அதிகாரங்கள் இருந்தாலும், தங்களுக்குத் தேவையான நிதியைத் தாங்களாகவே திரட்டுவதில் (own source revenue (OSR)) பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிதிநிலை குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை, அவற்றின் சொந்த வருவாய் மிகக் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது; பெரும்பாலான மாநிலங்கள் முக்கியமாக சொத்து வரிகளைச் சார்ந்தே உள்ளன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் தங்களின் சொந்த வருவாயை அதிகரிப்பதற்குத் தடையாக இருக்கும் கட்டமைப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்களை சமீபத்திய NIPFP ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களால் வசூலிக்கப்படும் சொந்த வருவாயில் கிட்டத்தட்ட 40 சதவீதம் சொத்து வரியாக உள்ளது. இருப்பினும், உலக வங்கியின்படி, இந்தியாவின் சொத்து வரி வருவாய், பொருளாதாரத்தின் அளவோடு ஒப்பிடும்போது இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது; இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.2 சதவீதமாக இருக்கிறது. இந்த குறைந்த நிலைக்குக் கட்டமைப்புச் சிக்கல்களும், சில மாநிலங்களில் முறையான அதிகாரமின்மையுமே காரணமாகும். உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில், கிராம பஞ்சாயத்துக்கள் இன்னும் சொத்து வரி வசூலிக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில், சொத்து வரையறைகள், மதிப்பீட்டு முறைகள், வரி விகிதங்களைத் திருத்துதல் மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்து போதிய ஆதரவின்மை ஆகியவற்றில் குழப்பங்கள் நிலவுகின்றன. மேலும், சொத்துரிமை தொடர்பான சர்ச்சைகள் வரி வசூலைக் குறைக்கின்றன, குறிப்பாக சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள வணிகக் கட்டிடங்களின் விஷயத்தில் இது அதிகமாகக் காணப்படுகிறது.
தெளிவான வழிகாட்டுதல்கள்
மாறாக, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்களின் சொத்து வரி வசூலை மேம்படுத்தியுள்ளன. இதற்குக் காரணம், அந்த மாநிலங்கள் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்து, மாநில அரசாங்கத்திடமிருந்து முறையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கியதே ஆகும். போதுமான பணியாளர்களோ அல்லது தொழில்நுட்பத் திறன்களோ இல்லாத கிராம பஞ்சாயத்துகளுக்கு, மாநிலங்கள் வீட்டின் அளவின் அடிப்படையில் எளிய, ஒரே சீரான சொத்து வரி விகிதங்களை நிர்ணயிக்கலாம். இது குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவிலான வரி வசூலை உறுதிசெய்ய உதவும். போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட கிராம பஞ்சாயத்துகள், சிறப்பாகச் செயல்படும் இந்த மாநிலங்கள் பயன்படுத்தும் விதிகள் மற்றும் திருத்தங்களைப் பின்பற்ற வேண்டும்.
குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை (solid waste management (SWM)) போன்ற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்கும் அதிகாரம் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற குடிநீர் வழங்கல் துறை, பொது சுகாதாரப் பொறியியல் துறை போன்ற ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்களின் கீழ் உள்ள தனித்தனி முகமைகள் இந்தச் சேவைகளைக் கையாண்டு வருகின்றன. வழிகாட்டுதல்களின்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தேவையான அமைப்புகளைக் கட்டி முடித்தவுடன், அந்த அமைப்புகளின் நீண்டகாலச் செயலாக்கம், மேலாண்மை, இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதுவரையிலும் இது நடக்கவில்லை. கிராம பஞ்சாயத்துகள் பயனர் கட்டணத்தை வசூலிப்பதை இது தடுக்கிறது.
இருப்பினும், NIPFP நடத்திய கள ஆய்வுகளில், சில மாநிலங்களில் நீர் வழங்கல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு வெளியே, பயனர் சங்கங்கள் அல்லது சுய உதவிக் குழுக்கள் (self-help groups (SHGs).) மூலம் முறைசாரா முறையில் பராமரிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்த அமைப்புகளை சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பது, அவற்றின் முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை எளிதாக்குவது மட்டுமல்லாமல், கிராம பஞ்சாயத்துகளுக்கு வருவாய் ஈட்டவும் உதவும்.
கிராம பஞ்சாயத்துகளுக்கு வருவாய்க்கான மற்றொரு முக்கிய ஆதாரம் வணிக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் உரிமக் கட்டணங்களாகும். இருப்பினும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது கிராம பஞ்சாயத்துகளுக்கு தெளிவாக தெரியவில்லை. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், அவர்கள் இந்தக் கட்டணங்களை வசூலிக்கும் பொறுப்பை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்கின்றனர். இது வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. கிராம பஞ்சாயத்துகள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வணிகங்களின் முழுமையான பட்டியலைத் தயாரித்து, ஆண்டு வருமானம், லாபம் மற்றும் இருப்பிடம் போன்ற காரணிகளின் அடிப்படையில் கட்டணங்களைக் கணக்கிட வேண்டும்.
கடைசிப் பிரச்சினை, சிறிய வனப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற சமூகத்திற்குச் சொந்தமான வளங்கள் (Common Property Resources (CPRs)) பற்றியது. இவற்றிலிருந்து வருமானம் ஈட்ட கிராம பஞ்சாயத்துகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பல வனத்துறை போன்ற பிற துறைகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த வளங்களின் அதிகாரப்பூர்வக் கட்டுப்பாட்டை கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைப்பது, அவற்றின் திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், கிராம பஞ்சாயத்துகளின் நிதி ஆதாரங்களையும் அதிகரிக்கும்.
சுய வருவாய் ஆதாரங்களின் (own source revenue (OSR)) திறனை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (Ministry of Panchayati Raj (MoPR)), அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு பயிற்சித் தொகுப்பை பஞ்சாயத்து ராஜ் நிறுவன அதிகாரிகளுக்காக அறிமுகப்படுத்தியது. மேலும், மாநிலங்கள் பஞ்சாயத்துகளின் சுய வருவாய் ஆதார மேலாண்மையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக, 'Samartha' என்ற டிஜிட்டல் தளத்தையும் உருவாக்கியுள்ளனர். இந்த முயற்சிகள் அதிக வருமானம் ஈட்டும் அல்லது நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துக்களை இலக்காகக் கொண்டுள்ளன; இதன் மூலம் அவை தொடர்ச்சியான பொருளாதாரப் பலன்களுக்காக லாபகரமான திட்டங்களை உருவாக்க உதவுகின்றன.
லோஹானி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், ஷ்ரவன் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.
Original link:
Why panchayats aren’t able to boost revenues