Showing posts with label NCERT. Show all posts
Showing posts with label NCERT. Show all posts

ஹரப்பாவின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு 'நடனமாடும் பெண்' (Dancing Girl) சிலையானது எவ்வாறு உதவுகிறது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• புகழ்பெற்ற வெண்கலச் சிலை தொடர்பான முந்தைய விவாதத்தின்போது, ​​அது நிர்வாணமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்த சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், அரசில் இடம்பெற்றுள்ள நிபுணர்களில் ஒருவர்  எதிர்ப்பை  ஏற்கவில்லை. இறுதியாக அவரது கருத்தே ஏற்கப்பட்டது. இது போன்ற சூழ்நிலை இருந்தபோதிலும், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


• தற்போது திருத்தப்பட்ட அந்தப் புகைப்படம், 9-ஆம் வகுப்பிற்கான புதிய கலைக் கல்விப் பாடப்புத்தகமான 'மதுரிமா'வின் (Madhurima) முதல் அத்தியாயமான "கலைகளின் வரலாறு" (History of Arts) என்பதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில், அந்தச் சிலையினுடைய தோள்பட்டையிலிருந்து கீழ்நோக்கிய உடல் பகுதி நிழலால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான சிலையின் புகைப்படங்களில் தெளிவாகக் காணப்படும் உடல் அமைப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அந்தச் சிற்பம் ஆடை அணிந்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.


• இந்தச் சித்தரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் “நடனமாடும் பெண்” சிலை, குறைந்தபட்சம் கடந்த 25 ஆண்டுகளாக NCERT பாடப்புத்தகங்களில் இடம்பெற்று வருகிறது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சிக் காலத்தில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி பொறுப்பில் இருந்த காலத்திலும் இந்தச் சிலை பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது. இந்தப் பத்திரிகை மேற்கொண்ட முந்தைய பதிப்புகளை ஆய்வு செய்ததில், அந்தச் சிறிய உருவம் நீண்ட காலமாகப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்று வந்தாலும், அதன் உட்புறப்பகுதி இதற்கு முன் ஒருபோதும் மறைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

• திருத்தப்பட்ட அந்தப் படம், தேசியக் கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) மற்றும் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (National Curriculum Framework (NCF)) ஆகியவற்றின் கீழ், கலைகளை முதன்மைக் கல்வியுடன் ஒருங்கிணைப்பதற்காக 1 முதல் 10-ஆம் வகுப்புகள் வரை அறிமுகப்படுத்தப்பட்ட தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் கலைக் கல்வித் தொடரின் ஒரு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவரை 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


• தொல்லியல் ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே இந்தச் சிறிய சிலையை, அந்த நாகரிகத்தின் மேம்பட்ட உலோகவியல் அறிவுக்குச் சான்றாகக் கருதி வருகின்றனர். இதன் உண்மையான வடிவம் புது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


• தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் புதிய 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களுக்கான உருவாக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கிய வரலாற்றாசிரியர் மைக்கேல் டானினோ, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு தகவலை வெளியிட்டார். அதன்படி, சிந்து சமவெளி நாகரிகம் குறித்த பாடத்தின் முதல் பக்கத்தில் "நடன மங்கை" சிலையை இடம்பெறச் செய்வதற்கு தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில், அந்தச் சிலை ஆடையின்றி இருப்பதால் அது "சர்ச்சைக்குரியதாக" மாறக்கூடும் என்று அவர்கள் கருதினர்.


• நடனமாடும் பெண் சிலை அந்த வயது மாணவர்களின் வயதுக்கு ஏற்ற சிலை இல்லை என்றால், அந்தச் சிலையின் உண்மையான வடிவம் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால், அந்த வயதில் இருக்கும் குழந்தைகளை தேசிய அருங்காட்சியகத்திற்கும் அனுமதிக்கக் கூடாது என்று டானினோ கூறியிருந்தார். இந்த ஆலோசனையை அவர் ஆரம்பத்தில் எதிர்த்தாலும், இறுதியாக படத்தின் அளவைக் குறைத்து, அதை அத்தியாயத்தின் தொடக்கப் பக்கத்தில் இருந்து உள்ளே இருக்கும் ஒரு பக்கத்திற்கு மாற்ற அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அந்தப் படம் பாடப்புத்தகத்தில்  இன்னும் இடம்பெற்றுள்ளது.


• சிலையின் வடிவபகுதிப் மறைக்கப்பட்டதற்கும் நிர்வாணம் குறித்த கவலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, ​​NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி இல்லை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம், இதற்குப் பின்னணியில் குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல கண்டுபிடிப்புகளுடன் 'நடன மங்கை' சிலையும் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், அதுவும் அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். கலைப் பாடப்புத்தகங்களைப் பொறுத்தவரை, அது தொடர்பான பாடப்புத்தக உருவாக்கக் குழு (Textbook Development Team) (TDT)) உறுப்பினர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்."


உங்களுக்குத் தெரியுமா?


• சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3300–1300; அதன் முதிர்ந்த கட்டம் கி.மு. 2600–1900), ஹரப்பா–மொகஞ்சோதாரோ (Harappa-Mohenjodaro Civilisation) நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1924-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை நீண்டகாலம் மறக்கப்பட்டிருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்நாகரிகத்தின் தளங்களும் பொருட்களும் அறியப்பட்டிருந்தாலும், 1920-களில்தான் அவை சரியாக கணக்கீடு செய்யப்பட்டு, மெசபடோமியா மற்றும் எகிப்து போன்ற பழமையான நாகரிகங்களுக்கு இணையான முழுமையான நாகரிகமாக அங்கீகரிக்கப்பட்டன.


• இது ஒரு பழமையான நாகரிகம் என்று ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அதுவரை அறியப்பட்டிருந்த இரண்டு முக்கிய இடங்களான ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவில் தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது போன்ற ஒரு அகழ்வாராய்ச்சியின்போது, ​​1926-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஏர்னஸ்ட் மெக்கே என்பவரால் 'நடனமாடும் மங்கை' சிலை கண்டுபிடிக்கப்பட்டது.


• இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவை பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'நடனமாடும் பெண்' (Dancing Girl) சிலை இந்தியாவிலேயே  வைக்கப்பட்டது. இன்று, இந்தச்சிலை இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் 'HR-5721/195' என்ற அடையாள எண்ணுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகக் காட்சிக்கூடத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் ஒரு பொருளாக இது  இருந்து வருகிறது.


• பல ஆண்டுகளாக, தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் இந்தச்சிலை அதிக ஈர்ப்பை அளித்து வருகிறது. குறிப்பாக, அந்தப் பெண் நிற்கும் தோரணையும் அதன் அர்த்தமும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.


வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் தனது 'The Penguin History of Early India: From Origins to AD 1300' (2002) என்ற நூலில், இந்தச்சிலை "இளம் மற்றும் துடிப்பான பெண்ணின் கவரும் வகையில் தோற்றத்தை" கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷம் தனது புகழ்பெற்ற 'The Wonder that was India' (1954) என்ற நூலில், "மற்ற பழமையான நாகரிகங்களின் கலைப்படைப்புகளில் இல்லாத வகையில், இந்தப் பெண் துடிப்பான மற்றும் துணிச்சலான ஒரு தோற்றத்தைக் கொண்டுள்ளார் என்று எழுதியுள்ளார்.


• 1944 முதல் 1948 வரை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India (ASI)) இயக்குநராகப் பணியாற்றிய மோர்டிமர் வீலர், இந்தச் சிறிய சிலையைத் தனக்குப் மிகவும் பிடித்தமானதாகக் குறிப்பிட்டார். அவர், “தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் முழு நம்பிக்கையுடன் நிற்கும் ஒரு பெண். உலகில் அந்த பெண்ணைப் போன்ற வேறு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று எழுதியுள்ளார். 1902 முதல் 1928 வரை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநராக இருந்து, ஹரப்பா மற்றும் மொகஞ்சோதாரோவில் நடைபெற்ற ஆரம்பகால அகழாய்வுகளை மேற்பார்வையிட்ட John Marshall, அந்தச் சிற்பத்தைப் பற்றி இது ஒரு இளம் பெண்ணின் உருவம். அந்தப் பெண் ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, சற்றுத் துணிச்சலான தோரணையில்  நிற்பதாகவும் இசையின் தாளத்துக்கு ஏற்ப தனது கால்கள் மற்றும் பாதங்களால் தாளமிட்டு ஆடுவதைப் போல, அந்தப் பெண்ணினது கால்கள் முன்னோக்கி அமைந்துள்ளதாக  விவரித்தார்.


• இந்த வெண்கலச் சிலையிலிருந்து ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் உலோகவியல் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட நிலையை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. உலோகக் கலவை மற்றும் 'இழந்த மெழுகு வார்ப்பு முறை' (lost-wax casting) முறை ஆகியவற்றில் அந்த நாகரிகத்திற்கு இருந்த அறிவுக்கு இச்சிலை ஒரு சான்றாகும். "நடனமாடும் பெண்" சிலை, சிந்து சமவெளி நாகரிக மக்களின் உலோகக் கலவை மற்றும் இழந்த மெழுகு வார்ப்பு முறை பற்றிய மேம்பட்ட சான்றாக விளங்குகிறது. இழந்த மெழுகு வார்ப்பு முறை என்பது, முதலில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பத்தின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அதே வடிவத்தில் மற்றொரு உலோகச் சிற்பத்தை உருவாக்கும் ஒரு சிக்கலான தொழில்நுட்பமாகும். இந்த முறையின் மூலம் மிக நுணுக்கமான மற்றும் உயர்தர உலோகக் கலைப்பொருட்களை உருவாக்க முடியும்.


• மேலும், 'நடனமாடும் பெண்' போன்ற ஒரு சிலை இருப்பதிலிருந்தே ஹரப்பா சமூகத்தில் உயர்தரக் கலைத்திறன் இருந்ததை அறிய முடிகிறது. கலை மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். ஆனால், அதன் நுட்பமும் மேம்பாடும் ஒரு சமூகத்தின் முன்னேற்ற நிலையை வெளிப்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்க்கையில், அந்த நடனமாடும் சிறுமி ஒரு பயன்பாட்டு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பொருள் அல்ல. கலைஞர்கள், முற்றிலும் குறியீட்டு மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதற்காக அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.


original article : How does the Dancing Girl figurine contribute to the understanding of Harappan social and cultural life? -Priya Kumari Shukla

Share:

ஒன்றிய அரசு மற்றும் பிறருக்கு எதிரான மோஹித் மினரல்ஸ் நிறுவன இயக்குநர் வழக்கில், இந்தியாவின் ‘கூட்டாட்சித் தத்துவம்’ குறித்து இந்திய உச்சநீதிமன்றம் கூறியது என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• இந்தியப் பிரிவினையின் துயரங்களுக்குப் பிறகு நமது அரசியலமைப்பை வடிவமைக்கும்போது ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதில் தொடங்கி; நிதிப்பகிர்வில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான செங்குத்து மற்றும் கிடைமட்டப் பகிர்வு குறித்த முடிவில்லாத விவாதங்கள்; திட்டக் குழுவின் மூலம் நிகழ்ந்த அதிகாரக் குவிப்பு; அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ஐத் தவறாகப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது; ஆளுநர்களின் ஒருதலைபட்சமான செயல்பாடுகள்; மொழிச் சிக்கல்கள்; தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கான இடங்களைப் பகிர்ந்தளிப்பது எனப் பல விஷயங்களை எதிர்கொண்ட இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் என்பது காலம் மற்றும் சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து மாறிவரும் மற்றும் பரிணமித்து வரும் ஒரு செயல்முறையாகவே இருந்து வருகிறதே தவிர, அது ஒருபோதும் மாற்ற முடியாத ஒன்றாகக் கல்லில் எழுதப்படவில்லை.


• ஜனநாயக நாடுகளில், சமமான குடியுரிமை (Equal citizenship) என்பது ஒவ்வொரு குடிமகனின் வாக்கிற்கும் சமமான மதிப்பு இருக்க வேண்டும் என்று கோருகிறது. மக்கள்தொகை மாறும்போது, இந்தச் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, மாநிலங்களுக்கு இடையேயும் (மெதுவாக மக்கள்தொகை வளரும் மாநிலங்கள் மற்றும் வேகமாக மக்கள்தொகை வளரும் மாநிலங்கள் இடையே) மற்றும் மாநிலங்களுக்குள்ளும் (மெதுவாக மக்கள்தொகை வளரும் கிராமப்புறங்கள் மற்றும் வேகமாக மக்கள்தொகை வளரும் நகர்ப்புறங்கள் இடையே) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைப்பது அவசியமாகிறது. ஆனால், இத்தகைய கோட்பாடுகளை வெறும் தத்துவங்களாக மட்டும் பார்க்காமல், அரசியல் விவேகத்தின் நடைமுறை உண்மைகளுக்கேற்ப அவற்றை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.


உங்களுக்குத் தெரியுமா?


• தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்களின்படி, கூட்டாட்சி (Federalism) என்பது ஒரு நாட்டின் ஒன்றிய அதிகார அமைப்பிற்கும் (ஒன்றிய அரசு), அதன் பல்வேறு உறுப்பு அமைப்பிற்கும் (மாநில அரசுகள்) இடையே அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும் ஓர் அரசாங்க முறையாகும். பொதுவாக, கூட்டாட்சி முறையில் இரண்டு அடுக்கு அரசாங்கங்கள் இருக்கும். ஒன்று, ஒட்டுமொத்த நாட்டிற்குமான அரசாங்கம் (ஒன்றிய அரசு); இது பொதுவாகப் பொதுவான தேசிய நலன் சார்ந்த சில குறிப்பிட்ட துறைகளுக்குப் பொறுப்பாகச் செயல்படும். மற்றொன்று, மாகாணங்கள் அல்லது மாநிலங்களின் அளவில் உள்ள அரசாங்கங்கள் (மாநில அரசுகள்); இவை தங்களின் மாநில அன்றாட நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கின்றன. இந்த இரண்டு அடுக்கு அரசாங்கங்களும் மற்றொன்றைச் சார்ந்து இருக்காமல், தங்களுக்குரிய அதிகாரங்களைத் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் பயன்படுத்துகின்றன.








Original Link: What Supreme Court of India said on Federalism in India in Union of India and Anr versus M/s Mohit Minerals Through Director case? 


Share:

NCERT நிபுணர்களை தடை செய்வதன் மூலம், உச்சநீதிமன்றம் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறது.

நீதிமன்றத்தின் திறந்த மனப்பான்மை மற்றும் பரந்த சிந்தனை கொண்ட நீண்டகால நற்பெயருக்கு, ஒரு அதீத உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினை முரணாக அமைகிறது. நீதித்துறையின் இத்தகைய நற்பெயர் என்பது பல நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளால் காலப்போக்கில் கட்டமைக்கப்பட்டதாகும்.


கடந்த மாதம், எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு பகுதியை இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாக எதிர்த்தது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட பல மாற்றங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருந்ததால், இந்த குறிப்பிட்ட பகுதியும் தவறான எண்ணத்துடன் சேர்க்கப்பட்டதாகக் கருதப்பட்டது. நீதித்துறை ஒரு முக்கியப் பங்காற்றுவதால், அதன் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு மதிப்பீடும், குறிப்பாக இளம் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில், மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் அந்தப் பாடப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதுடன், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (NCERT) அமைப்பைக் கண்டித்தது. இருப்பினும், இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்தாமல், வரலாற்றாசிரியர் மிஷல் டானினோ, சட்ட நிபுணர் அலோக் பிரசன்னா குமார் மற்றும் கல்வியாளர் சுபர்ணா திவாகர் ஆகிய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) உறுப்பினர்களுடன் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த புதன்கிழமை அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தடையும் கட்டுப்பாடுகளும் ஏமாற்றமளிப்பதாக உள்ளன. கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை விரிவுபடுத்திய பல தீர்ப்புகளின்மூலம் நீதித்துறை பெற்ற நற்பெயருக்கு எதிராக, இத்தகைய உணர்ச்சிகரமான அணுகுமுறை அமைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். 


கடந்த பத்தாண்டுகளில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்கள் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, குஜராத் கலவரம் குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது, இடைக்கால இந்திய வரலாறு தொடர்பான பாடங்கள் சுருக்கப்பட்டது, போராட்ட இயக்கங்கள் பற்றிய தகவல்கள் குறைக்கப்பட்டது மற்றும் பாபர் மசூதி இடிப்பு குறித்த வரிகள் நீக்கப்பட்டது போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் சமூகத்தின்  உண்மைநிலையை எளிமைப்படுத்துவதோடு, ஆளுங்கட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அதே சமயம், மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும், அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளில் உறுதியாக இருப்பதே தனது பலம் என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இந்த உறுதிப்பாடானது நீதித்துறை தன்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளவும் வழிவகுத்துள்ளது. அந்த சுயபரிசோதனை உணர்வின் வெளிப்பாடாகவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "வருந்தத்தக்க வகையில், நீதித்துறைக்குள்ளும் ஊழல் வழக்குகள் உள்ளன" என்று குறிப்பிட்டார். தற்போது திரும்பப் பெறப்பட்ட பாடப்புத்தகத்தில் நீதிபதி கவாயின் இந்த உரை இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் முயற்சியாகக் கருதி, உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய கோபம் தவறானது அல்ல என்றாலும் நீதிமன்றத்தின் அந்தக் கண்டனம் தற்போது கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் தணிக்கையாக மாறுமானால், விமர்சனங்களை பெருந்தன்மையுடன் எதிர்கொண்ட அதன் சொந்த வரலாற்றுப் பெருமைக்கே அது இழுக்காக அமைந்துவிடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


Original Link: In blacklisting NCERT experts, SC does itself a disservice.


Share:

NCERT பாடப்புத்தகங்களில் இருந்து நீதித்துறை ஊழல் குறித்த குறிப்புகளை நீக்குவது, உண்மையான பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? -உம்மர் ஜமால்

 நீதித்துறையின் மாண்பைப் பாதுகாப்பதும், கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதும் ஒன்றிற்கு ஒன்று எதிரான குறிக்கோள்கள் அல்ல. ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் தனது நிறுவனங்கள்மீது மரியாதையையும், அதே நேரத்தில் அவற்றை விமர்சனரீதியாக ஆய்வு செய்யும் துணிச்சலையும் கொண்டிருக்க வேண்டும்.


எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வழக்கமான மாற்றம், எதிர்பாராத விதமாக இந்திய நீதித்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு  (National Council of Educational Research and Training (NCERT)) வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தகத்தில் “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்கிறது. குறிப்பாக, தேங்கிக் கிடக்கும் வழக்குகள், நீதிபதிகளின் பற்றாக்குறை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற சிக்கல்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது நீதித்துறையின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் கூறியுள்ளது.


இந்த அத்தியாயம் நீதிமன்றக் கட்டமைப்புகளை விளக்குவதுடன் நின்றுகொள்ளாமல், திறமையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற உண்மையானப் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியது. இதன் சொல்லாடல்கள் நீதித்துறையில் முறையான பலவீனங்கள் இருப்பதை உணர்த்தியதால், உச்சநீதிமன்றம் இதனை ஏற்க முடியாத ஒன்றாகக் கருதியது. பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த பாடப்புத்தகத்தை விமர்சித்ததுடன், நீதித்துறை ஊழல் குறித்த அந்தப் பகுதியை "நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ஆழமாக வேரூன்றிய, நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி" என்று குறிப்பிட்டது.


நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் அமைந்த அந்தப் பாடப்புத்தகக் கருத்துக்கள், நீதித்துறையை இரத்தக் காயம் அடையச் செய்த துப்பாக்கிக் குண்டு போன்றது என்றும், இத்தகையக் கூற்றுக்களை இளம் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது பெரும் ஆபத்தானது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடப்புத்தகத்திற்குத் தடை விதித்த நீதிமன்றம், அதன் அச்சு மற்றும் மின்னணுப் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் தொடங்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) இயக்குநர் மற்றும் பள்ளி கல்வித்துறைச் செயலாளருக்கு நீதிமன்றம் அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.


உச்சநீதிமன்றம் நீதித்துறை மீதான நியாயமான விமர்சனங்களை எதிர்க்கவில்லை என்றும், அதேவேளையில் எளிதில் எதையும் நம்பக்கூடிய மாணவர்களிடம் தவறான அல்லது அவதூறான தகவல்கள் உண்மைகளாக முன்வைக்கப்படுவது குறித்தே கவலை கொள்வதாகவும் தெளிவுபடுத்தியது. இந்த விவகாரத்தில், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தலைமையிலான அரசுத் தரப்பு மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட பாடப்பகுதியை உருவாக்கியவர்கள் இனி இதுபோன்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள் என்று உறுதியளித்தது. இருப்பினும், அரசாங்கத்தின் இந்த அதிகாரப்பூர்வ பதில் உண்மையான வருத்தத்தைவிட தற்காப்பு மனப்பான்மையையே வெளிப்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீவிரமான எதிர்வினை, குறிப்பாகத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்களின் கருத்துக்கள், குருட்டுத்தனமான ஆதரவோ அல்லது முற்றிலுமான நிராகரிப்போ இன்றி ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை ஆகும். நீதிமன்றம் தனது நிறுவனத்தின் மாண்பைக் காக்க முயற்சிப்பது ஒருபுறம் நியாயமானதாகத் தெரிந்தாலும், பாடப்புத்தகத்திற்கு முழுமையான தடை விதிப்பது, பிரதிகளின் பறிமுதல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவது போன்ற அதன் அதிரடிச் செயல்கள், அந்தப் பிரச்சனைக்கு இணையாக எடுக்கப்பட்ட ஒரு சரியான அளவிலான நடவடிக்கைதானா?  என்கிற கவலையை எழுப்புகிறது.


ஒரு உண்மை மிகத் தெளிவாக உள்ளது: பாடப்புத்தகங்களிலிருந்து நீதித்துறை ஊழல் தொடர்பான குறிப்புகளை நீக்குவதால், நீதித்துறையில் உள்ள ஊழல் ஒழிந்துவிடாது. பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், மௌனமாக இருப்பதன்மூலம் மட்டும் ஒரு பிரச்சனையை மறைத்துவிடவோ அல்லது இல்லாமலோ செய்துவிட முடியாது.


2025-ஆம் ஆண்டில், யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் அதிகாரப்பூர்வ கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், உயர்மட்டங்களில் உள்ள பொறுப்புக்கூறல் குறித்த தீவிர கவலைகளை எழுப்பியது. அதேபோல், 2024-ஆம் ஆண்டின் இறுதியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மாவட்ட நீதிபதி பிணை வழங்குவதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்டு அவர் மீது முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) பதிவு செய்யப்பட்டதும் கீழ்நிலை நீதித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள், பள்ளிப் பாடப்புத்தகங்களில் இவை எவ்வாறு சித்தரிக்கப்பட்டாலும், நிறுவனரீதியான ஊழல் சிக்கல்கள் இன்னும் தொடர்வதையே காட்டுகின்றன. இவ்வாறான உண்மைகளை மாணவர்களிடமிருந்து மறைப்பது சமூகப் பொறுப்பு சார்ந்த கல்வியை வலுவிழக்கச் செய்வதோடு, அதிகாரத்தைக் கேள்விகேட்கும் திறனற்ற குடிமக்களை உருவாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.


ஒரு குடிமகனின் சமூகப் பொறுப்புகள் சார்ந்த பயிற்சி என்பது அரசு நிறுவனங்களை விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, பொது அமைப்புகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகிய இரண்டையும் மாணவர்கள் புரிந்து கொள்ள உதவுவதே அதன் உண்மையான நோக்கமாகும். ஒரு ஜனநாயக நாட்டில், எந்தவொரு நிறுவனமும் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வெளிப்படைத்தன்மையும் சீர்திருத்தமும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். சங்கடமான உண்மைகளை மறைப்பது தற்காலிகமாக விமர்சனங்களைக் குறைக்கலாம், ஆனால் அது நிலையான நம்பிக்கையை உருவாக்காது. வெளிப்படைத்தன்மை மற்றும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலமே ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கை வளருமே தவிர, உண்மைகளைத் தவிர்ப்பதன் மூலம் அல்ல என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


அதே நேரத்தில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல்களின் பின்னணியில் தலைமை நீதிபதியின் இந்த எதிர்வினையைப் புரிந்து கொள்ள வேண்டும். 2015-ஆம் ஆண்டில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) உச்சநீதிமன்றம் ரத்து செய்து, கொலிஜியம் முறையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அன்றிலிருந்து, நீதிபதிகள் நியமன செயல்முறை என்பது நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே ஒரு தீராதப் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், காலதாமதம் ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே வேளையில், நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்தச் சூழலில், பாடப்புத்தக சர்ச்சை என்பது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, நீதிபதிகள் நியமன முறையை மாற்றக் கோரும் ஒரு பெரிய போக்கின் பகுதியாக நீதிமன்றத்திற்குத் தோன்றியிருக்கலாம் என்றும் இந்தக் கண்ணோட்டம் நீதிமன்றத்தின் கடும் எதிர்வினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இந்தச் சூழலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. பாடப்புத்தகத்தின் நடை, தொனி அல்லது துல்லியம் தொடர்பான பிரச்சனைகளை, அந்த அத்தியாயத்தைத் தடை செய்வதற்குப் பதிலாக, திருத்தங்கள் மற்றும் தெளிவுபடுத்துதல்கள் மூலமாகவே சரிசெய்திருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 


நீதித்துறையின் மாண்பைப் பாதுகாப்பதும், கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதும் ஒன்றிற்கு ஒன்று எதிரான குறிக்கோள்கள் அல்ல. ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் தனது நிறுவனங்கள் மீது மரியாதையையும், அதே நேரத்தில் அவற்றை விமர்சனரீதியாக ஆய்வு செய்யும் துணிச்சலையும் கொண்டிருக்க வேண்டும். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்து மாணவர்களின் வயதுக்கேற்ற புரிதலுடன் கலந்துரையாடுவது ஜனநாயகத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றும் மாறாக, இது அதிகாரத்தில் இருப்பவர்களின் பொறுப்புணர்வை ஊக்குவித்து ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்கின்றனர். 


அதேநேரத்தில், நீதித்துறை மீதான விமர்சனங்கள் உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதோடு, அவை பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்பட வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நிறுவனத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அதனை மேலும் வலுப்படுத்துகின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) வெளியிட்ட பாடப்புத்தகத்தின் அத்தியாயத்தைத் தடை செய்வது உடனடி விமர்சனங்களைத் தடுத்து நிறுத்தலாமே தவிர, அந்தப் பாடம் எழுப்பிய ஆழமான பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என்கின்றனர். கடினமான உண்மைகளை மறைப்பதன் மூலம் அல்லாமல், அவற்றை முறையான விவாதம் மற்றும் சீர்திருத்த மனப்பான்மையுடன் எதிர்கொள்வதன் மூலமே ஜனநாயகம் நிலைத்துநிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


உம்மர் ஜமால், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு கட்டுரையாளர் ஆவார். அவர் தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை எழுத்தராகவும் மற்றும் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article : Will purging reference to judicial corruption from NCERT textbooks solve the real problem? -Ummar Jamal

Share: