Showing posts with label BRICS. Show all posts
Showing posts with label BRICS. Show all posts

செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள் என்ன? - கண்ணல் அச்சுதன்

 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' (Building for Resilience, Innovation, Cooperation and Sustainability) என்ற கருப்பொருளானது, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


தற்போதைய நிகழ்வு : 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புது தில்லியில் நடைபெறவுள்ள இந்த பன்முகத்தன்மை கொண்ட நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்தியா முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இம்மாநாட்டின் போது நடைபெறும் விவாதங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். முக்கிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே, அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள் மற்றும் பணிக்குழு விவாதங்கள் பல நடத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நாடுகளின் 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது.


18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு எப்போது நடைபெறும்?


தலைநகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் முக்கியமானவை. இந்தியா ஜனவரி 1, 2026 அன்று பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது. 2026-ம் ஆண்டின் இறுதியில் இப்பொறுப்பை சீனாவிடம் ஒப்படைக்கும். இந்தியா இதற்கு முன்பு 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இப்பொறுப்பை வகித்துள்ளது.


தற்போது பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் எவை?


பிரிக்ஸ் அமைப்பில் தற்போது 11 முழு உறுப்பினர்கள் உள்ளனர். அவை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் இந்தோனேசியா ஆகும். இது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் 2006-ம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது. பின்னர் டிசம்பர் 2010-ல் தென்னாப்பிரிக்கா இதில் இணைந்தது. 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இணைக்கப்பட்டதன் மூலம் இந்த அமைப்பு விரிவடைந்தது. இந்தோனேசியா 2025-ல் இணைந்து, இதில் சேர்ந்த மிகச் சமீபத்திய நாடாக உள்ளது. உறுப்பு நாடுகளைத் தவிர, பெலாரஸ், ​​பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய கூட்டணி நாடுகளும் இதில் உள்ளன.




நடத்தும் நாட்டின் பங்கு என்ன?


இந்த அமைப்புக்குரிய பல பொதுவான முன்னுரிமை விவகாரங்கள் குறித்து, 11 நாடுகளின் பிரதிநிதிகளுடனான கூட்டங்களை இந்தியா ஒருங்கிணைத்து வருகிறது. தலைமை வகிக்கும் நாடாக, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இக்குழுவின் உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துகளும், கவலைகளும் செவிசாய்ப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். விவாதங்களை முன்னெடுப்பது மட்டுமின்றி, உச்சிமாநாட்டின் இறுதிப் பிரகடனத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் உறுப்பினர்களிடையே இந்தியா ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும்.


இதுவரை, விண்வெளிப் பொருளாதாரம், விவசாயம், பேரிடர் தாங்கும் திறன், பெண்கள் அதிகாரமளித்தல், கலாச்சாரம் மற்றும் தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் பணிக்குழுக்களின் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உறுப்பினர்கள் 'கவுஹாத்தி பிரகடனத்தை' (Guwahati Declaration) ஏற்றுக்கொண்டுள்ளனர்.


இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?


இந்தியாவின் தலைமைத்துவ ஆவணங்களின்படி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கூட்டுப் பொறுப்பு, நடைமுறை ஒத்துழைப்பு மற்றும் மக்கள் மைய அணுகுமுறை ஆகியவை இந்த உச்சிமாநாட்டை வழிநடத்தும் முக்கிய நெறிமுறைகளாக உள்ளன. 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' (Building for Resilience, Innovation, Cooperation and Sustainability) என்ற கருப்பொருள், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




இந்த உச்சிமாநாடு ஏன் உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது?


உலகின் மொத்த மக்கள்தொகையில் குறைந்தது 50 சதவீதத்தினர் பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் வசிக்கின்றனர். உலகளாவிய ஒழுங்கமைப்பில் (global order) தங்களின் வலுவான இடத்தைப் பிடிக்க முயலும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளாக இந்தியா திகழ்வதால், உச்சிமாநாட்டின் போது நடைபெறும் விவாதங்கள் உலக வர்த்தகத்தின் கண்ணோட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். காலப்போக்கில் இக்குழு விரிவடைந்ததோடு, அதன் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 'உலகளாவிய தெற்கு' (Global South - வளரும் நாடுகள்) நாடுகளின் கவலைகளுக்குக் வலுவான குரல் கொடுப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.


இந்த உச்சிமாநாட்டிற்கான இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகள் என்ன?


மே 14, 2026 அன்று நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவுக்கான முன்னுரிமைக்குரிய அம்சங்களை எடுத்துரைத்தார். இதில், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல், சந்தைகளை விரிவுபடுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். விவசாயம், புத்தாக்கம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் கூட்டமைப்புகளை ஏற்படுத்துவதும் வலியுறுத்தப்பட்டது. தூய ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விவாதங்களும் செயல்திட்டத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள பல்வேறு நலன்களுக்கு இடையே சமநிலையைப் பேணுவதில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன?


புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் நிலவும் சூழலில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. குறிப்பாக, ஈரான் மற்றும் உக்ரைனில் நடைபெறும் போர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் பாதிக்கும் வகையிலான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தான் உறுப்பினராக உள்ள 'குவாட்' (Quad) மற்றும் ஜி20 (G20) போன்ற குழுக்களில் தனது தலைமைத்துவம் எவ்வாறு பார்க்கப்படும் என்பதையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வர்த்தகத்திற்குத் தேசிய நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற விஷயங்கள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வரவேற்கப்படலாம் என்றாலும், ஈரான் மற்றும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா இவற்றைச் சாதகமாகப் பார்க்க வாய்ப்பில்லை.


பிரிக்ஸ் அமைப்புக்குள்ளேயேகூட, உறுப்பு நாடுகள் மிகவும் மாறுபட்ட பொருளாதார முன்னுரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த நலன்கள் பெருமளவில் வேறுபடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் துணைநிலை அதிகாரிகள் மற்றும் சிறப்புத் தூதர்களின் கூட்டத்தின்போது, ​​போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன.


எதிர்பார்க்கக்கூடிய சாத்தியமான விளைவுகள் யாவை?


உலகளாவிய நிர்வாகம், பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்த பொதுவான நிலைப்பாடுகள் அடங்கிய கூட்டுப் பிரகடனம் (joint declaration) ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தித் துறையிலான உறவுகள், வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றில் புதிய முன்னெடுப்புகளையும் இக்குழு அறிவிக்கக்கூடும். மேலும், 'உலகளாவிய தெற்கு' (Global South - வளரும் நாடுகள்) நாடுகளுக்கான ஒரு சக்திவாய்ந்த அமைப்பாகப் பிரிக்ஸ் வகிக்கும் பங்கை வலுப்படுத்துவதற்கும் இந்த உச்சிமாநாடு உதவும்.


Original articles: What key issues of the BRICS Summit to be held in New Delhi in September? -Kannal Achuthan

Share:

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (BIMSTEC) என்பது என்ன, அதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் அது ஏன் கவனம் பெற்றுள்ளது?

BIMSTEC என்பது வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பு, மாறிவரும் புவிசார் அரசியல்  மற்றும் பாதுகாப்புச் சவால்கள் நிறைந்த சூழலில், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளுக்கு இடையேயான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அடுத்த ஆண்டு வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு தனது 30-வது ஆண்டு நிறைவை கொண்டாட உள்ள நிலையில், இந்த அமைப்பு பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், கடல் பாதுகாப்பு போன்ற புதிய பாதுகாப்புச் சவால்களை குறைத்து உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.


வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், 7 உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள், கடல்சார்ந்த சட்ட அமலாக்கம் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். இது பிராந்தியப் பாதுகாப்பின்மீது அந்த அமைப்பு செலுத்திவரும் வளர்ந்து வரும் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC))  என்றால் என்ன?


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு என்பது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். இது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்பட  முயற்சி செய்து வருகிறது.


1997-ஆம் ஆண்டில் வங்கதேசம், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து பொருளாதார ஒத்துழைப்பு (Bangladesh, India, Sri Lanka and Thailand Economic Cooperation (BIST-EC)) என முதலில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மியான்மர் இணைந்த பிறகு BIMST-EC ஆகவும், 2004-ஆம் ஆண்டில் நேபாளம் மற்றும் பூட்டானுடன் இணைந்து வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாக (BIMSTEC) ஆகவும்  மாறியது.


2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யூரியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய ஆதரவைத் திரட்டுவதற்கான இந்தியாவின் புதிய முயற்சி மற்றும் அதே ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (South Asian Association for Regional Cooperation (SAARC)) உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவும் எடுக்கப்பட்டது. அதுவரை, BIMSTEC அமைப்பு செயல்பாடு குறைந்த அமைப்பாகவே இருந்தது. கோவாவில் நடைபெற்ற BRICS உச்சிமாநாட்டோடு இணைந்து, பிம்ஸ்டெக் தலைவர்களுடன் இந்தியா ஒரு கலந்துரையாடல் உச்சிமாநாட்டை நடத்தியது.


BRICS  அமைப்பு என்றால் என்ன?


BRICS என்பது B – பிரேசில்; R – ரஷ்யா; I – இந்தியா; C – சீனா; S – தென்னாப்பிரிக்கா போன்ற முக்கிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இது முதலில்  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC) என்று இருந்தது. 2010-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா இணைந்த பிறகு அது (BRICS) என்று மாறியது.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (BIMSTEC) ஏன் உருவாக்கப்பட்டது?


தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (South Asian Association for Regional Cooperation (SAARC)) செயலிழந்துவிட்டதால், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் BIMSTEC ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது.


தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், இந்தியா–பாகிஸ்தான் இடையேயான சிக்கலான உறவில் முன்னேற்றம் இல்லாததால், தெற்காசியாவின் பிற நாடுகளுக்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நிலத்தால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூடான் போன்ற நாடுகளும், வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (BIMSTEC) நாடுகளுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் வங்காள விரிகுடா கடல் வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 7 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து, உலகின் மக்கள் தொகையில் 22% ஆன ஏறத்தாழ 1.7 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி $5 டிரில்லியன்களாகும்.


சீனாவின் அச்சுறுத்தல் மற்றொரு முக்கிய காரணியாகும். கடந்த 10- ஆண்டுகளில், பூட்டான் மற்றும் இந்தியாவைத் தவிர அனைத்து BIMSTEC நாடுகளிலும், 'பட்டை மற்றும் சாலை முன்னெடுப்பு' (Belt and Road Initiative (BRI)) திட்டத்தின்மூலம் உள்கட்டமைப்பிற்கு நிதியளிப்பதிலும் அவற்றை உருவாக்குவதிலும் சீனா ஒரு மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.






இந்தியாவைப் பொறுத்தவரை, BIMSTEC அமைப்பானது, சீனாவிற்கு ஒரு மாற்றாக பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதோடு, தென்சீனக் கடலில் சீனாவின் நடத்தைக்கு மாறாக, வங்காள விரிகுடாவைத் திறந்த மற்றும் அமைதியான ஒன்றாக எடுத்துக்காட்டுகிறது.


ஆனால், இதிலும் சில சவால்கள் உள்ளன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியரான சி. ராஜா மோகன், வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையேயான தொடர்ச்சியான பிரச்சினைகளையும், ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து இந்தியா–வங்கதேசத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். மியான்மரில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவை இணைக்கும் நிலப் பாலமாக செயல்படும் அந்நாட்டின் திறனும் குறைந்துள்ளது. BIMSTEC அமைப்பு உடனடியாக  முன்னேற்றங்களை காணாமல் இருக்கலாம் என்றாலும், “ஒருபோதும் உண்மையில் முன்னேறாத SAARC அமைப்பைப் போல அல்லாமல், BIMSTEC மெதுவாக இருந்தாலும் அதிகமான ஒத்துழைப்பை நோக்கி நகரும் ஒரு படகு போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


கூட்டத்தின் முடிவு என்னவாக இருந்தது?


பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், இணையவழி, கடல்சார்ந்த மற்றும் எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த 7 நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், கடல்சார் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான வழிகாட்டுதல்களையும், கடலில் உள்ள கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையேயான தொடர்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அங்கீகரித்தன.


வங்காள விரிகுடாவில் உறுப்பு நாடுகளின் கடல்சார் முகமைகளுக்கு இடையேயான தொடர்புகளின்போது, ​​கூட்டுப் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளைத் வேகப்படுத்துவதையும், முன்கணிப்புத் தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதையும் இந்தக் கடல்சார் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், தற்போதைய புவிசார் அரசியல் சூழல், பல்வேறு மோதல்கள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் உருவாகிவரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவை, நாடுகளுக்கிடையே நெருக்கமான பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை  பற்றி வலியுறுத்தி வருவதாக  கூறினார்.


Original Link: What is BIMSTEC, and why is it in focus ahead of its 30th anniversary?

Share:

இந்தூர் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது பிரிக்ஸ் (BRICS) அமைப்பு : இதில் மேற்கொண்ட 4 முன்னுரிமைகள் மற்றும் 4 புதிய முயற்சிகள் என்ன? - ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு :


அனைத்து விவாதங்களிலும் விவசாயிகளே மையமாக உள்ளனர் என்று வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் குறிப்பிட்ட நிலையில், ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘பிரிக்ஸ் இந்தூர் பிரகடனம்’ (BRICS Indore Declaration) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம் (BRICS Urbanisation Forum) ஜூன் 12 அன்று நிறைவடைந்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், 'பிரிக்ஸ் நகர்ப்புற ஆராய்ச்சி மற்றும் அறிவு வலையமைப்பை' (BRICS Urban Research and Knowledge Network) அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவை BRICS நாடுகள் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தூரில் நடைபெற்ற பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளவிலான கூட்டங்களில் 'பிரிக்ஸ் இந்தூர் பிரகடனம்' (BRICS Indore Declaration) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் கொண்ட விவசாயம், விவசாய வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் விவசாயம் ஆகியவற்றிற்குப் புதிய வழியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.


2. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், இப்பிரகடனத்தின் முக்கிய அம்சம் விவசாயிதான் என்று கூறினார். விவசாயியை மையமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், விவசாய வர்த்தகம், புத்தாக்கம், முதலீடு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் கொண்ட விவசாயம் மற்றும் நிலையான விவசாய மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான கூட்டு உறுதிப்பாடு இப்பிரகடனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


3. 'இந்தூர் பிரகடனத்தின்' கவனம் விவசாயியின் மீதே உள்ளது என்று வேளாண் அமைச்சர் தெரிவித்தார். விவசாயியை மையமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், விவசாய வர்த்தகம், புத்தாக்கம், முதலீடு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் கொண்ட விவசாயம் மற்றும் நிலையான விவசாய மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான கூட்டு உறுதிப்பாட்டை இப்பிரகடனம் பதிவு செய்கிறது.


4. நான்கு முக்கிய முன்னுரிமைகள் : புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இப்பிரகடனம், விவசாயிகள், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய நான்கு முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


   பிரிக்ஸ் (BRICS) நாடுகள் உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியைத் தன்னுள் கொண்டுள்ளன. உலகளாவிய விவசாய நிலத்தில் சுமார் 42 சதவீதத்தைக் கொண்டுள்ளன மற்றும் உலக தானிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 42 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.


5. நான்கு நிறுவனரீதியான முன்னெடுப்புகள் : மேற்கூறிய நடவடிக்கைகளைத் தவிர, நான்கு நிறுவனரீதியான முன்னெடுப்புகளும் முன்மொழியப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,


(i) வேளாண்-சூழலியல் மற்றும் மீளுருவாக்க வேளாண்மைக்கான சிறப்பு மையங்கள் (Centres of Excellence on Agro-Ecology and Regenerative Agriculture): வேளாண்-சூழலியல் மற்றும் மீளுருவாக்கம் சார்ந்த வேளாண்மைக்கான சிறப்பு மையங்களின் 'பிரிக்ஸ்' (BRICS) வலையமைப்பை நிறுவுவது, இயற்கை, அங்கக (organic) மற்றும் மீளுருவாக்க வேளாண் நடைமுறைகள் குறித்த கூட்டு ஆராய்ச்சி, அனுபவப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு தளத்தை உருவாக்கும். இதன் மூலம், உறுப்பு நாடுகள் ஒன்றையொன்று சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதோடு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய மற்றும் நிலையான வேளாண் அமைப்புகளை ஊக்குவிக்கும் என்று சௌஹான் கூறினார்.


குறிப்பாக, இந்தியாவில், மோதிபுரத்தில் உள்ள 'இந்திய வேளாண்மை அமைப்புகள் ஆராய்ச்சி நிறுவனம்' (Indian Institute of Farming Systems Research), இந்த வலைப்பின்னலின் கீழ் இயற்கை விவசாயத்திற்கான 'சிறப்பு மையமாக' (Centre of Excellence) முக்கியப் பங்கை வகிக்கிறது. இது கூட்டு ஆராய்ச்சி, அறிவுப் பகிர்வு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் பங்களிப்புகளை வழங்கும்.


(ii) டிஜிட்டல் விவசாயத்திற்கான பிரிக்ஸ் வலைப்பின்னல் (BRICS Network on Digital Agriculture) : இரண்டாவது முக்கிய முன்னெடுப்பு 'டிஜிட்டல் விவசாயத்திற்கான பிரிக்ஸ் வலைப்பின்னல்' ஆகும். இது செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் தரவு சார்ந்த விவசாயத் தீர்வுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்குப் புதிய நிலையை வழங்கும். இந்தியாவில் உள்ள ஐஐடி டெல்லி (IIT Delhi) இந்த வலைப்பின்னலை ஒருங்கிணைக்கும்.


(iii) விதை அமைப்புகளில் விவசாயிகளின் உரிமைகளுக்கான உலகளாவிய மன்றம் (Global Forum on Farmers’ Rights in Seed Systems) : மூன்றாவது அறிவிப்பு 'விதை அமைப்புகளில் விவசாயிகளின் உரிமைகளுக்கான உலகளாவிய மன்றத்தை' அமைப்பது தொடர்பானது. இது விவசாயிகளின் விதை உரிமைகள், உள்நாட்டு விதைகளின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும்.


(iv) பிரிக்ஸ் அக்ரி-என் (BRICS AgriN - வேளாண் உள்ளீடுகள், மரபணு வளங்கள் மற்றும் தகவல் வலைப்பின்னல்) : நான்காவது முன்னெடுப்பு 'பிரிக்ஸ் அக்ரி-என்' ஆகும். இது வேளாண் உள்ளீடுகள், விதைகள் மற்றும் மரபணு வளங்கள் ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.


பல்வேறு நாடுகளில் கிடைக்கும் சிறந்த ரகங்கள், மரபணு வளங்கள் மற்றும் உள்ளீடுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்கவும் ஏதுவாக, இந்த வலைப்பின்னல் தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் என்று சௌஹான் கூறினார்.


பிரிக்ஸ் நகர்ப்புற ஆராய்ச்சி மற்றும் அறிவு வலையமைப்பு (BRICS Urban Research and Knowledge Network)


1. டெல்லியில் பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம் (BRICS Urbanisation Forum) நிறைவடைந்தது. 'பிரிக்ஸ் நகர்ப்புற ஆராய்ச்சி மற்றும் அறிவு வலைப்பின்னலை' அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தெரிவித்தார்.


2. பிரிக்ஸ் நாடுகளுக்குள் நகர்ப்புற ஒத்துழைப்பிற்கான நடைமுறை மற்றும் நிலையான வழிமுறையை வழங்குவதற்காக, ஒரு தலைமைப் பொறுப்பு (Chairship) மற்றும் நிறுவனரீதியான இணைப்பைக் கொண்ட தளமாக இந்த வலைப்பின்னல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


3. இது முறையான அறிவுப் பகிர்வு மற்றும் பரஸ்பர கற்றலை ஆதரிக்கும். அதே வேளையில் நடைமுறைத் தீர்வுகள், நகர அளவிலான அனுபவங்கள் மற்றும் செயல்பாட்டுப் பாடங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் கொள்கைக்கும் அமலாக்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும்.


4. இணையம் சார்ந்த (virtual), குறைந்த செலவு மற்றும் நெகிழ்வான மாதிரியின் மூலம் செயல்படும் இந்த வலைப்பின்னலை, ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாட்டின் முதன்மை நிறுவனம் ஒருங்கிணைக்கும். இதன் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்பவர்களிடம் ஒப்படைக்கப்படும்.



பிரிக்ஸ்  மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank)


1. பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கிறது. இவை மேற்கத்திய நாடுகள் சாராத பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஆரம்பகால ஐந்து உறுப்பினர்களாகும். 2025-ல், இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக முழு உறுப்பினராக இதில் இணைந்தது. இதனால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இக்கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன. இக்கூட்டமைப்பு தற்போது உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியையும், உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட கால்பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சவுதி அரேபியாவும் இதில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


2. 'BRIC' (பிரிக்) என்ற சுருக்கப்பெயர் முதன்முதலில் 2001-ம் ஆண்டில் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தால் ’உலகிற்குச் சிறந்த பொருளாதார 'பிரிக்' நாடுகள் தேவை’ (The World Needs Better Economic BRICs) என்ற தலைப்பிலான அதன் உலகளாவிய பொருளாதார ஆய்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டது. அடுத்த 50 ஆண்டுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழும் என்று அந்த அறிக்கை கணித்திருந்தது.


3. 2006-ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற G8 அவுட்ரீச் (Outreach) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து, 'பிரிக்' (BRIC) ஒரு முறையான கூட்டமைப்பாகத் தொடங்கியது. 2006-ல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் (UNGA) கூட்டத்தின்போது நடைபெற்ற 'பிரிக்' (BRIC) வெளியுறவு அமைச்சர்களின் முதல் கூட்டத்தில் இந்த அமைப்பு முறைப்படுத்தப்பட்டது.


4. முதல் பிரிக் உச்சிமாநாடு 2009-ல் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரில் நடைபெற்றது. 2010-ல் நியூயார்க்கில் நடைபெற்ற பிரிக் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இதில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2011-ல் சீனாவின் சான்யா (Sanya) நகரில் நடைபெற்ற 3-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா பங்கேற்றது.


5. புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank(NDB)) என்பது பிரிக்ஸ் நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு பன்முக மேம்பாட்டு வங்கியாகும். புதிய மேம்பாட்டு வங்கியை (NDB) நிறுவுவதற்கான யோசனை முதன்முதலில் 2012-ல் இந்தியாவில் உள்ள புது தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது முன்வைக்கப்பட்டது. இதனை நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஜூலை 15, 2014 அன்று கையெழுத்தானது. பின்னர் ஃபோர்டலேசாவில் (Fortaleza) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, ​​ஜூலை 21, 2015 அன்று இவ்வங்கி செயல்பாட்டுக்கு வந்தது. இது 'ஃபோர்டலேசா பிரகடனம்' (Fortaleza Declaration) என்று அழைக்கப்படுகிறது.


original article : BRICS adopts Indore Declaration: What are 4 priorities and 4 new initiatives? -Roshni Yadav

Share:

BRICS கூட்டமைப்பு நாடுகள் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். -ஜெயா ஜும்ரானி மற்றும் ஷிவ் குமார்

இந்தக் கூட்டமைப்பு வெறும் கலோரி நிறைந்த உணவுகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், அனைவருக்கும் பல்வேறு வகையான சத்துமிக்க உணவுகள் எளிதாகவும் நியாயமான முறையிலும் கிடைப்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் (Brazil, Russia, India, China, South Africa (BRICS)) அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்த நேரத்தில்,      இந்தக் கூட்டமைப்பு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. மேற்கத்திய அமைப்புகளுக்கு வெறும் ஒரு பொருளாதார மாற்றாக மட்டும் இல்லாமல், பிரிக்ஸ் அமைப்பை இன்னும் மக்கள் நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பாக மாற்றுவதை இந்தியாவின் "மனிதநேயத்திற்கு முதலிடம்" (Humanity First) என்ற அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதன் விரிவாக்கத்திற்குப் பிறகு, பிரிக்ஸ் அமைப்பு தனது புவியியல் எல்லை, மக்கள்தொகை மற்றும் வேளாண் திறனைப் பெருமளவில் அதிகரித்துள்ளது.     இதன் உறுப்பு நாடுகள் உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும், இவற்றில் அதிக வேளாண் உற்பத்தித் திறன் கொண்ட பிராந்தியங்களும், அதேநேரத்தில் உணவுப் பாதுகாப்பற்ற, உணவுப் பற்றாக்குறை உள்ள பொருளாதாரங்களும் அடங்கியுள்ளன.


உலகளாவிய வேளாண் உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் பெரும் பங்கைக் கொண்டிருந்தாலும், உலகின் பசியால் வாடும் மக்கள்தொகையிலும் அவை கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. இந்த சமமற்ற நிலையை மாற்றுவதற்கு கடுமையான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.




வெவ்வேறு நாடுகளை உற்று நோக்கும்போது இந்த முரண்பாடு இன்னும் தெளிவாகப் புரிகிறது. பிரேசில் (Brazil) உலக அளவில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகும், இருப்பினும் அங்குள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னமும் பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு உணவுக் பற்றாக்குறை காரணம் அல்ல; மாறாக வருமான சமத்துவமின்மை, நிலையற்ற சமூக நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒட்டுமொத்த வேளாண் வணிகத்துறையின் கட்டமைப்பு ஆகியவை ஏழை மக்கள் நாட்டின் உணவு உபரியின் பலனைப் பெறுவதைத் தடுக்கின்றன.


இந்தச் சிக்கலுக்கு இந்தியாவும் ஒரு முக்கிய உதாரணத்தையும், யதார்த்தமான ஒரு பிரதிபலிப்பையும் வழங்குகிறது. இந்தியா ஒரு நிகர உணவு ஏற்றுமதி நாடாகவும் (Net food exporter), பஞ்சத்தை முழுமையாக வென்ற நாடாகவும் இருந்தாலும், அது இன்னும் ஊட்டச்சத்து நெருக்கடியை எதிர்கொண்டே வருகிறது.                      இந்தியா போதுமான அளவு உணவை உற்பத்தி செய்து, ஒவ்வொரு மாதமும் பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)) மூலம் 80 கோடி மக்களுக்கு வழங்கி வந்தாலும், பலரது உணவுமுறைகள் அதிக கலோரிகளையும், மிகக் குறைந்த அளவிலான புரதம் மற்றும் அத்தியாவசிய நுண் ஊட்டச்சத்துக்களையுமே கொண்டுள்ளன. ஐந்து வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி குன்றி இருக்கும் நிலையில், போதுமான கலோரிகள் கிடைப்பது என்பது சரியான ஊட்டச்சத்து கிடைத்துவிட்டது என்று அர்த்தமாகாது என்பதை இந்தியா உணர்த்துகிறது.


உணவுப் பற்றாக்குறை அதிகம் உள்ள நாடான எத்தியோப்பியா, இந்தப் பட்டியலின் மிகக் கடைசியில் இருக்கிறது.


தெற்கத்திய நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவைப் பற்றிப் பேசினாலும், பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பிடம் உணவுப் பாதுகாப்பிற்கான வலுவான பொதுவான கட்டமைப்பு எதுவும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பொது வேளாண் கொள்கை அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations (ASEAN)) அவசரகால உணவு இருப்புத் திட்டம் போன்ற முறையான அமைப்புகள் ஏதுமின்றி, பிரிக்ஸ் நாடுகள் பெரும்பாலும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (Bilateral agreements) மூலமாகவே செயல்படுகின்றன. ‘New Development Bank’ (பிரிக்ஸ் நாடுகளால் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி) உள்கட்டமைப்பு வசதிகளில் பெருமளவில் முதலீடு செய்திருந்தாலும், ஊரகப்புற உணவு முறைகள் மற்றும் அவற்றுக்கான மீள்திறனை பெருமளவில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இந்த பிரிக்ஸ் நாடுகளால் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank), போதிய நிதி மற்றும் தெளிவான இலக்குகளுடன் கூடிய பிரத்யேக உணவு முறைத் திட்டம் ஒன்றை உருவாக்கும் வரை, இந்த வாய்ப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கும். இவற்றுடன், ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து பல சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, 2023-ஆம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடையும், ரஷ்யா-உக்ரைன் போரும் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சந்தைகளில் கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தின.


இந்த அரசியல் மற்றும் பொருளாதாரக் குறைபாடுகளுக்கு இடையில்,           நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் ஒரு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நெருக்கடி உள்ளது. பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உணவு ஒத்துழைப்புக் கட்டமைப்பு முக்கியமாக 'கலோரி விநியோகத்தை' (Calorie supply) மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனால் உணவு கிடைப்பது, விலை நிலைத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை ஊட்டச்சத்து சார்ந்த முழுப்பிரச்சனையையும் தீர்க்காது. ஏனெனில், பிரிக்ஸ் நாடுகள் தற்போது ஒரே நேரத்தில் மூன்று விதமான ஊட்டச்சத்து குறைபாடு சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றன: அவை போதிய ஊட்டச்சத்தின்மை, பரவலான நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் (வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு) மற்றும் வேகமாக அதிகரித்துவரும் உடல் பருமன் மற்றும் இதர தொற்றா நோய்கள் ஆகியனவாகும். 

                 

இந்தக் குறைபாடுகளால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா, எத்தியோப்பியா மற்றும் சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் பெண்களிடம் காணப்படும் அதிக அளவிலான இரத்த சோகை, தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளின் போதிய வளர்ச்சியின்மை மற்றும் பலவீனமான அறிவாற்றல் வளர்ச்சி போன்ற மோசமான சூழற்சிக் குறைபாடுகளுக்கு காரணமாக அமைகிறது.




உத்திசார் கொள்கை மாற்றங்கள்


பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் எந்தவொரு தீவிரமான திட்டமும், வெறும் போதுமான உணவை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல்,                பெண்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பலவகைப்பட்ட உணவுகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியா பிரிக்ஸ் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும்போது சில முக்கியமான கொள்கை மாற்றங்களை ஊக்குவிக்க முடியும். முதலாவதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊட்டச்சத்து ஆகியவை பிரிக்ஸ் நாடுகளின் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மாற வேண்டும். இதற்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றைத் தடுப்பதற்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும், உணவு ஏற்றுமதி தடைகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவசரகால உணவு இருப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


இரண்டாவதாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்குள் வேளாண் துறைசார்அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். இதில் சீனாவின் துல்லியப் பண்ணை முறைகள் (Precision farming), இந்தியாவின் பெரிய அளவிலான பொது விநியோகத் திட்டம் (PDS) சார்ந்த அனுபவங்கள், சிறு வேளாண் தொழிலாளர்களுக்கான பிரேசிலின் ஆதரவுத் திட்டங்கள் மற்றும் பாலைவன வேளாண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates (UAE)) நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவை அடங்கும்.


மூன்றாவதாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் வேளாண் கொள்கைகளில் சிறு வேளாண் தொழிலாளர்களுக்கும் பெண் உற்பத்தியாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏற்றுமதியை மட்டுமே மையமாகக் கொண்ட கொள்கைகளில் இருந்து மாறுபட, நில உரிமைகளில் சீர்திருத்தங்கள், பெண்களுக்கு அதிக சொத்துரிமை மற்றும் கடன் வசதிகள், மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமானது பெரிய வேளாண் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பங்களுக்குப் பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இறுதியில், பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலருக்கு சவால் விடுகிறதா அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (United Nations Security Council (UNSC)) சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறதா என்பதை வைத்து மதிப்பிடப்பட மாட்டாது.  மாறாக, அது பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்வாதார நிலைகளையும் மேம்படுத்துகிறதா என்பதை வைத்தே மதிப்பிடப்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஜெயா ஜும்ரானி மற்றும் ஷிவ் குமார், புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR) தேசிய வேளாண் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIAP) மூத்த விஞ்ஞானி மற்றும் (பொறுப்பு) இயக்குநர் ஆவர்.

 

Original article : BRICS needs to prioritise food security. -Jaya Jumrani and Shiv Kumar

Share: