மிகப்பெரிய பெருநிறுவனங்களும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) நிலைத்தன்மை மாற்றமும் -ஸ்ரீலட்சுமி ஹரிஹரன் மற்றும் முகுந்த் கோவிந்த் ராஜன்

 பெருநிறுவனங்களின் ஆதரவுடன் கூடிய பசுமை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) உத்தரவாதத் திட்டமானது, இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைவதில் பெரும் பங்கு வகிக்கும்.


2005-ம் ஆண்டு நிலைகளைவிட 47 சதவீதம் குறைவாக கார்பன் உமிழ்வு அடர்த்தியைக் குறைப்பதற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contribution (NDC)), பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழு அறைகளுக்குள் (boardrooms) மட்டும் இருந்து சாதித்துவிட முடியாது.


இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) சூழலமைப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மையமாகத் திகழ்கிறது. 74 மில்லியனுக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) கூட்டாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கின்றன. மேலும், இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே (MSME) ஏறக்குறைய 10-15 சதவீத தொழிற்சாலைக் கழிவு வெளியேற்றத்திற்கும், 25 சதவீத தொழிற்சாலை எரிசக்தி நுகர்விற்கும் காரணமாக உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் இவற்றின் எரிசக்தி தேவைகள் 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், எந்தவொரு தேசிய காலநிலை மற்றும் நிலைத்தன்மை சார்ந்த எந்தவொரு தேசிய உத்தியிலும் இவை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகின்றன.


இருப்பினும், அவற்றின் முக்கியப் பங்கு இருந்தபோதிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பசுமை நிதியில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பெறுகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் யதார்த்தங்களுக்கு ஏற்ற நிதிக் கட்டமைப்புகள் இல்லாததில்தான் உண்மையான சவால் அடங்கியுள்ளது. நிச்சயமற்ற வருமானத்தை திருப்பிச் செலுத்தும் காலக்கெடு, வரையறுக்கப்பட்ட பிணையம் மற்றும் குறைவான கடன் வரலாறு போன்ற காரணங்களால், பல கடன் வழங்குநர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மற்றும் அவற்றால் செய்யப்படும் நிலைத்தன்மை சார்ந்த முதலீடுகளை மிகவும் அபாயகரமானதாகக் கருதுகின்றனர்.


இதன் விளைவாக, தொழில்துறை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தைப் பசுமையாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றாக விளங்கும் இத்துறை, பசுமை நிதியுதவியால் மிகக் குறைவாகவே பயனடைகிறது. பெருநிறுவன ஆதரவுடனான பசுமை உத்தரவாதக் கருவி போன்ற ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த நிதிப் புத்தாக்கம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) நிலைத்தன்மை மாற்றத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட உதவக்கூடும்.


கட்டமைப்பு நிதியளிப்பு


இந்தியாவின் தொழில்துறை அமைப்பில் ஏற்கனவே ஒரு கட்டமைப்புரீதியான நிலை உள்ளது. பெருநிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) விநியோகர்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. இந்த தொடர்புகள், மூலதனத்தைத் திரட்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய இயல்பான நிதி இணைப்புகளை உருவாக்குகின்றன.


வாகனத் துறையை (automotive sector) உதாரணமாக எடுத்துக்கொள்வோம். டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள், தங்களின் விநியோகர்களின் விரிவான வலையமைப்புகளைச் சார்ந்துள்ளன. இந்த அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (original equipment manufacturers (OEM)), அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதற்காக, தங்களின் விநியோகர்கள் மூலம் தங்கள் செயல்முறைகளை நவீனமயமாக்கவும், உலைகளை மின்மயமாக்கவும், மேலும் அதிக ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்ற தூண்டுவதற்கு, நீண்டகால ஒப்பந்தங்களையும் பணம் செலுத்தும் வரலாறுகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


நுகர்வோர் பொருட்கள் துறையிலும் இதே போன்ற ஒரு சூழல் நிலவுகிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) மற்றும் ஐடிசி (ITC) போன்ற நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான தொகுப்பு உற்பத்தியாளர்கள் (packaging manufacturers) மற்றும் வேளாண் பதப்படுத்தும் நிலையங்களிடமிருந்து (agri-processing units) பொருட்களைப் பெறுகின்றன. தங்களின் பெருநிறுவன நிலைத்தன்மை உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு, இந்த விநியோகர்களை மறுசுழற்சி செய்யப்பட்ட தொகுப்பு, சூரிய ஆற்றலால் இயங்கும் செயல்பாடுகள் அல்லது தூய்மையான பதப்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு மாற்றுவது அவசியமாகும்.


ஆயிரக்கணக்கான சிறிய தளவாட நிறுவனங்கள் மற்றும் விநியோக உரிமைகளைச் சார்ந்திருக்கும் அமேசான் (Amazon), ஸோமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) போன்ற மின்வணிக மற்றும் விரைவு வணிகத் தளங்களுக்கான வாகனக் குழும மின்மயமாக்கல், மற்றுமொரு வாய்ப்பை வழங்குகிறது.


இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும், உச்சத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இல்லாத மூன்று சொத்துக்களைக் கொண்டுள்ளன. அவை : ஓரளவு வலுவான கடன் தகுதி, விநியோகர்களின் செயல்திறன் குறித்த விரிவான செயல்பாட்டுத் தரவுகள், மற்றும் விநியோகர்கள் போட்டித்தன்மையுடன் இருப்பதையும், தரம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்வதில் உள்ள நேரடி வணிக ஆர்வம்.



பசுமை ஆதரவு உத்தரவாதம்


இந்த விநியோகச் சங்கிலி உறவுகள், பெருநிறுவன ஆதரவுடனான பசுமை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உத்தரவாத வசதி (guarantee facility) என்ற ஒரு புதிய நிதியளிப்புக் கருவிக்கு அடித்தளமாக அமையலாம்.


இத்தகைய கட்டமைப்பின்கீழ், ஒரு பெரிய நிறுவனம், தனது விநியோகர்களுக்கு வழங்கும் நிலைத்தன்மைக் கடன்களுக்கு முதல் இழப்பு அல்லது பகுதி கடன் உத்தரவாதமாகச் செயல்படும் வகையில், கடன் தொகையில் சுமார் 1-2 சதவிகிதத்தை உள்ளடக்கிய ஒரு சிறிய உத்தரவாத இருப்பை நிறுவுகிறது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) அல்லது வளர்ச்சி நிதி நிறுவனங்கள், தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) விநியோகர்களுக்கு பசுமைக் கடன்களை வழங்கலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானம், கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்புகள், ஆற்றல் திறன் கொண்ட இயந்திர மேம்பாடுகள், மின்சார வாகனக் குழும மாற்றங்கள், நீர் மறுசுழற்சி அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அது போன்ற சரிபார்க்கப்பட்ட நிலைத்தன்மை முதலீடுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தும் முறையானது, முக்கிய நிறுவனத்திடமிருந்து பெறப்படும் எதிர்கால கொள்முதல் ஆணைகள் அல்லது வர்த்தகக் கடன்களுக்கு (Trade Receivables) எதிராக கட்டமைக்கப்படலாம். இது கடன் தவறும் அபாயத்தை (Risk of Default) கணிசமாகக் குறைக்கிறது.


இத்தகைய ஒரு அமைப்பை வடிவமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பல வழிகள் உள்ளன. மேலும், அத்தகைய திட்டத்தின் அம்சங்கள், இந்திய ரிசர்வ் வங்கி ஊக்குவிக்கும் 'வர்த்தகக் கடன் தள்ளுபடி அமைப்பில்' (Trade Receivables Discounting System (TReDS)) ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.


உதாரணமாக, ஒரு பெருநிறுவனமும், பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி அல்லது ICICI வங்கி போன்ற அதன் வங்கியாளரும், வரையறுக்கப்பட்ட விநியோகர்களை உள்ளடக்கிய விநியோகச் சங்கிலிக் கடன் வசதிக்காக ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம். மற்றொரு வழி, அந்தப் பெருநிறுவனம், விநியோகர் வலையமைப்பு முழுவதும் ஏற்படும் உமிழ்வுக் குறைப்புகளுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களுடன், நிலைத்தன்மையுடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலிப் பத்திரத்தை வெளியிடலாம். கலப்பு நிதிக் கட்டமைப்புகளையும் உருவாக்கலாம். இதில் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank of India (SIDBI)) அல்லது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development(Nabard)) போன்ற வளர்ச்சி நிதி நிறுவனங்கள், வணிகக் கடன் வழங்குநர்களுடன் இணைந்து பங்கேற்று, மூலதனத்தின் பல அடுக்குகளில் இடர்பாடுகளைப் பரப்புகின்றன.


மிதமான அணுகுமுறைகூட கணிசமான மூலதனத்தை ஈட்டித் தரும். நிலைத்தன்மை முதலீடுகளுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) தலா சுமார் ₹1.5 கோடி தேவை என்று வைத்துக்கொண்டால், 500 முக்கிய விநியோகர்களைக் கொண்ட ஒரு பெருநிறுவனம், உத்தரவாத கையிருப்பு நிதிக்காக அதிகபட்சம் ₹15 கோடி மட்டுமே செலவழித்து, ₹750 கோடி மதிப்பிலான கடன் நிதியை உருவாக்க முடியும்.


நற்பண்புச் சுழற்சி


இந்த வகையான நிதி மாதிரி முழு சூழல் அமைப்புக்கும் பயனளிக்கும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, இது கட்டுப்படியான குறைந்த விலையில் நீண்டகால மூலதனத்தைப் பெறுவதற்கான வழியைத் திறக்கும். பெருநிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றின் நிலைத்தன்மை நடைமுறைகளுக்கு மாற விநியோகர்களுக்கு ஆதரவளிப்பது, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) செயல்திறன் அளவீடுகளை மேம்படுத்தும், அபாயத்தைக் குறைக்கும், உலகளாவிய முதலீட்டாளர்களிடம் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் விநியோகச் சங்கிலியின் மீள்திறனை வலுப்படுத்தும். குறிப்பாக, பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்புள்ள பங்களிப்பாளர்கள் என்ற தங்கள் பிம்பத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.


நிறுவனங்களின் உத்தரவாதங்கள் மற்றும் நிலையான விநியோகர்களுடனான உறவுகள் காரணமாக, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்ட கடன் சார்ந்த இடர்பாடுகளுடன், ஒரு புதிய, விரிவாக்கக்கூடிய கடன் வழங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.


நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தில் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை ஒரு பிரச்சனையல்ல. அதுவே ஒரு சிறந்த வாய்ப்பாகும். பெருநிறுவனங்களின் ஆதரவுடனான பசுமை உத்தரவாத ஆவணங்கள், காலநிலை இலட்சியத்திற்கும் தொழில்துறை யதார்த்தத்திற்கும் இடையே ஒரு பாலமாக அமையக்கூடும். இதன் மூலம், இன்றே செயல்படுத்தக்கூடிய ஒரு எளிய, குறைந்த கடன் இடர்பாடுகொண்ட நிதிப் புதுமையின் வழியாகப் பெரும் மூலதனத்தைத் திரட்டமுடியும்.


ஹரிஹரன் ஈக்யூப் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்; ராஜன் அந்நிறுவனத்தின் தலைவர்.                

Original article : Large corporates and the sustainability transition of MSMEs -Sreelakshmi Hariharan and Mukund Govind Rajan

Share: