உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவமானது, மாணவர் சேர்க்கையில் உள்ள இடைவெளிகளைவிட, வேலைவாய்ப்பில் உள்ள பிரதிநிதித்துவ இடைவெளிகளால் அதிகமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) விதிமுறைகள் பெரும்பாலும் பாகுபாடு எதிர்ப்பு மற்றும் புகார்களைக் கையாளுவதிலும் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், இந்தக் கட்டமைப்பு இடைவெளிகளைப் போதுமான அளவு நிவர்த்தி செய்வதில்லை.
புதிய பல்கலைக்கழக மானியக் குழுவின் (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறைகள்-2026 (The new University Grants Commission (Promotion of Equity in Higher Education Institutions (HEIs)) Regulations), கல்வியாளர்கள் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் ஆதரவாகவும் எதிராகவும் கணிசமான விவாதங்களையும் எதிர்ப்புகளையும் தூண்டியுள்ளது. இந்த விதிகள் தெளிவற்றவை என்றும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் அவற்றின் அமலாக்கத்திற்குத் தடை விதித்திருந்தபோதிலும், இந்த விவகாரம் பல முக்கியமான கல்விசார் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக சமத்துவம், பாகுபாடு மற்றும் சாதி அடிப்படையிலான குற்றங்களின் அனுபவப்பூர்வச் சான்றுகளின் தேவை குறித்தும் இவை தொடர்புடையவையாக உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவம்
உயர்கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பல்வேறு சமூகக் குழுக்களின் பிரதிநிதித்துவம் இருப்பதே சமத்துவத்தின் மிக முக்கியமான அளவீடுகளில் ஒன்றாகும். பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023 ஆண்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட அட்டவணை 1-ஐப் பார்க்கும்போது, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள நான்கு முக்கியப் போக்குகள் தெரியவருகின்றன.
முதலாவதாக, பட்டியல் சாதியினர் (15%), பழங்குடியினர் (7.5%), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (27%) அரசியலமைப்புச் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, அனைத்து நிலைகளிலான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளிலும் இந்த சமூகக் குழுக்களின் பங்கு குறைவாக உள்ளது. இரண்டாவதாக, கீழ்நிலைப் பணிகளைவிட உயர்நிலை வேலைவாய்ப்புகளில் இந்த இடைவெளி அதிகமாக உள்ளது. மூன்றாவதாக, வேலைவாய்ப்புகளைப் போலல்லாமல், அனைத்து சமூகக் குழுக்களுக்குமான சேர்க்கைகளில் (இளநிலை, முதுநிலை, எம்.ஃபில், மற்றும் முனைவர் பட்டம்) பிரதிநிதித்துவம், அரசியலமைப்புச் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு ஏறக்குறைய நெருக்கமாக உள்ளது. நான்காவதாக, ஊக்கமளிக்கும் விதமாக, இளநிலைப் பட்டப் படிப்பைத் தவிர, மற்ற சேர்க்கைகளில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்ட அளவை விட 1.5 முதல் 2.7 மடங்கு அதிகமாக உள்ளது. இளநிலைப் பட்டப் படிப்பில் இது சற்று குறைவாக உள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், மாணவர் சேர்க்கையைவிட வேலைவாய்ப்பில்தான் சமத்துவமின்மை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.
மாணவர் சேர்க்கைகளில் ஏற்படும் இடைவெளிகளை ஓராண்டுக்குள் நிரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இது சாத்தியமில்லை. இப்போது, இட ஒதுக்கீட்டைக் கடுமையாக அமல்படுத்தினாலும், இந்த இடைவெளியைக் குறைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஏனெனில், இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாதபோது நியமிக்கப்பட்ட பணியாளர்களின் ஓய்வைப் பொறுத்தே இந்த இடைவெளிஅமைகிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) பாகுபாடு குறித்த தரவுகள்
உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து சமூகக் குழுக்களிடமும் பாகுபாடு தொடர்பான புகார்கள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்காததால், புறநிலை மற்றும் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு தடைபடுகிறது. இருப்பினும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒரு நாடாளுமன்றக் குழு மற்றும் உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2023-24-ஆம் ஆண்டில் 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் சம வாய்ப்பு மையங்கள் (Equal Opportunity Cells (EOC)) மற்றும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் மையங்களால் 378 புகார்கள் பதிவாகியுள்ளன.
சமூகக் குழுக்களின் அடிப்படையில், சம வாய்ப்பு மையங்கள் (EOC) புகார்களின் விரிவான பகுப்பாய்வு கிடைக்காததால், ஒரு முழுமையான மதிப்பீடு செய்வது கடினமாக உள்ளது. இருப்பினும், அனைத்து சம வாய்ப்பு மையங்கள் (EOC) புகார்களும் சாதி அடிப்படையிலானவை என்று வைத்துக்கொண்டாலும், அத்தகைய வழக்குகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சம் மாணவர்களுக்குச் சுமார் 3.7 ஆகவும், ஒரு கல்வி நிறுவனத்திற்குச் சுமார் 0.16 ஆகவும் உள்ளது (ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் சராசரியாக 4,000 மாணவர்கள் சேர்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்). மேலும், பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் தொடர்பான புகார்களின் தீர்வு விகிதம் 90% ஆக இருந்தது. இது ஒரு முக்கியமான மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாத அம்சமாகும்.
சாதி அடிப்படையிலான குற்றங்கள் குறித்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத் (NCRB) தரவுகள்
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் குறித்த தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau(NCRB)) வெளியிடுகிறது. இந்த அமைப்பு, இந்த சமூகத்தினருக்கு எதிராக 'மற்றவர்களால்' (Others) இழைக்கப்படும் அனைத்துக் குற்றங்களையும் சாதி அடிப்படையிலான குற்றங்களாக வகைப்படுத்துகிறது. இது முழுமையாக சரியானதாக குறிப்பிடமுடியாது. மேலும், இந்தச் சமூகங்களுக்கு வெளியே உள்ள தனிநபர்களால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களை மட்டுமே தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கையிடுகிறது. அது, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களுக்குள் நிகழும் குற்றங்கள் குறித்த பிரித்தறியப்பட்ட தரவுகளையோ அல்லது பிற சமூகக் குழுக்களுக்கான ஒப்பீட்டுத் தரவுகளையோ வழங்குவதில்லை. இது ஒப்பீட்டுப் பகுப்பாய்வின் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது.
2023-ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக 'மற்றவர்களால்' இழைக்கப்படும் குற்றங்கள், பதிவுசெய்யப்பட்ட மொத்தக் குற்றங்களில் முறையே சுமார் 0.9% மற்றும் 0.2% ஆகும். இருப்பினும், தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளின் வரம்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, பல்வேறு சமூகக் குழுக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களின் பரவலானது, மக்கள்தொகையில் அவர்களின் பங்கைப் பெருமளவில் பிரதிபலிக்கிறது என்று கருதலாம்.
குற்றங்களின் பரவல் ஏறக்குறைய மக்கள்தொகைப் பங்குகளைப் பிரதிபலிக்கிறது என்று கொண்டால், ஒவ்வொரு 100 குற்றங்களிலும், பட்டியல் சாதியினர் (16.6%) மற்றும் பழங்குடியினர் (8.6%) முறையே 16.6 மற்றும் 8.6 குற்றங்களுக்குக் காரணமாக இருப்பார்கள். மீதமுள்ள 74.8 குற்றங்கள் மற்ற குழுக்களால் செய்யப்பட்டிருக்கும்.
இந்த விகிதாசாரக் கணக்கீட்டின்படி, பட்டியல் சாதி/பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவர், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகக் குற்றம் புரிவதற்கான சாத்தியக்கூறு, மற்ற குழுக்களைச் சேர்ந்த ஒருவரைக் காட்டிலும் ஏறக்குறைய 52 மடங்கு அதிகமாக உள்ளது. அதேபோல், பட்டியல் சாதி/பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவர், பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகக் குற்றம் புரிவதற்கான சாத்தியக்கூறு, மற்ற பிரிவினரைச் சேர்ந்த ஒருவரைக் காட்டிலும் ஏறக்குறைய 125 மடங்கு அதிகமாக உள்ளது.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களின் பங்கு, அவர்களின் மக்கள்தொகைப் பங்கை விட அதிகமாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் நாம் கருத்தில்கொண்டால், அத்தகைய அதிகப்படியான குற்றமானது பட்டியல் சாதியினர்/பழங்குடியின சமூகங்களுக்குள் நிகழும் குற்றங்களிலும் கட்டாயம் பிரதிபலிக்கும். ஏனெனில், மற்ற பிரிவினரால் இழைக்கப்படும் குற்றங்களின் விகிதமானது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதாகவும், அறியப்பட்டதாகவும் உள்ளது.
குறைவாகப் பதிவு செய்தல் தொடர்பான பிரச்சினை
ஒரு முக்கியமான வரம்பு என்னவென்றால், மற்ற பிரிவினரால் செய்யப்படும் குற்றங்கள், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள், குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், முற்றிலும் அனுமானத்தின் அடிப்படையில், அத்தகைய குற்றங்களின் உண்மையான எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட 100 மடங்கு அதிகம் (இது ஒரு மிக அதிகப்படியான அனுமானம்) என்று வைத்துக்கொண்டாலும்கூட, மற்ற பிரிவினரால் செய்யப்படும் குற்றங்களைவிட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களால் செய்யப்படும் குற்றங்களுடன் ஒப்பிடும்போது முறையே 3.2 மற்றும் 14.3 மடங்கு அதிகமாகவே இருக்கும்.
மேலும், ஒட்டுமொத்த சராசரி விகிதம் 72.7% உடன் ஒப்பிடுகையில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் விகிதங்கள் முறையே 81.2% மற்றும் 79.5%-ஆக உள்ளன. இது, மற்ற பிரிவினரைக் காட்டிலும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நடைமுறைச் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது.
இந்த முடிவுகள் ஆச்சரியமானவை அல்ல. ஏனெனில், குற்றங்கள் பொதுவாக அருகருகே வசிக்கும் அல்லது சமூக மற்றும் புவியியல் அருகாமையில் உள்ள நபர்களிடையே நிகழ்கின்றன. இதற்கு மாறாக, சராசரியுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவிற்கு எதிரான மிகக் குறைந்த குற்ற விகிதம், உண்மையான நல்லிணக்கத்தைக் காட்டிலும் சமூகப் பிரிவினையையே சுட்டிக்காட்டக்கூடும்.
விதிமுறைகளில் உள்ள சிக்கல்கள்
இந்த ஒழுங்குமுறைகள் மூன்று முக்கிய குறைபாடுகளைக் கொண்டுள்ளன. முதலாவதாக, உயர்கல்வி நிறுவனங்களில் (HEI) உள்ள முக்கியப் பிரச்சினையானது, மாணவர் சேர்க்கையிலோ அல்லது புகாரளிக்கப்பட்ட பாகுபாட்டிலோ இல்லாமல், வேலைவாய்ப்பில் (குறிப்பாகத் தலைமைப் பதவிகளில்) சமத்துவத்தை அடைவதில்தான் உள்ளது என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இரண்டாவதாக, இந்த விதிமுறைகள் சமத்துவத்தையும் பாகுபாடு எதிர்ப்பையும் குழப்பிக்கொள்வதாகத் (confuse equity with anti-discrimination) தோன்றுகின்றன.
சமத்துவம் என்பது நியாயமான விளைவுகளை உறுதி செய்வதற்காக இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்குவதை உள்ளடக்கியது, அதேசமயம் பாகுபாடு எதிர்ப்பு என்பது, பொதுவாகப் புகார்-தீர்க்கும் வழிமுறைகள் மூலம், பாகுபாடு காட்டும் நடத்தையைக் கண்டறிந்து தண்டிப்பதில் கவனம் செலுத்துகிறது. சுவாரஸ்யமாக, தலைப்பு "சமத்துவத்தை மேம்படுத்துதல்" என்பதைக் குறிப்பிடுகிறது மற்றும் முன்னுரை சமத்துவம் மற்றும் பாகுபாட்டை ஒழித்தல் ஆகிய இரண்டையும் வலியுறுத்துகிறது, ஆனால் செயல்பாட்டு விதிகள், குறிப்பாகப் புள்ளிகள் 4 (சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான கடமை), 6 (சமத்துவ உதவி எண்), மற்றும் 7 (சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்), பெரும்பாலும் பிந்தையதற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவதாக, இந்த ஒழுங்குமுறைகள் அடையாளங்களின் அடிப்படையிலான குற்றங்களை முழுமையாக ஒழித்துவிடும் என்று கருதுவதாகத் தெரிகிறது. இது விரும்பத்தக்கதாக இருந்தாலும், ஒட்டுமொத்தக் குற்றங்களில் பரந்த அளவிலான குறைப்பு இல்லாமல் இது யதார்த்தமற்றது. மிகவும் கடுமையான நடவடிக்கைகள் சமூகப் பிரிவினையை வலுப்படுத்தும் அபாயத்தைக்கூட ஏற்படுத்தக்கூடும்.
என்ன செய்ய முடியும்?
உயர்கல்வி நிறுவனங்களில், குறிப்பாக உயர்மட்டப் பதவிகளில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வேலைவாய்ப்புப் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலம் சமத்துவத்தை மேம்படுத்துவதிலும், சமூகக் குழுக்களிடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். காலப்போக்கில், இந்தக் குழுக்களுக்கு இடையேயான தொடர்புகள் அதிகரிப்பதன் மூலம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்ற விகிதத்தை சராசரி குற்ற விகிதத்துடன் ஒன்றிணைக்க வழிவகுக்கலாம். இது ஆரம்பத்தில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, குற்றங்களைத் தனித்தனியாகக் கையாள்வதைவிட, ஒட்டுமொத்த குற்ற விகிதத்தைக் குறைப்பது, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்கவும் அவசியமாகும்.
உயர்கல்வி நிறுவனங்கள் (Higher Educational Institutions (HEI)) சமூக நெறிமுறைகளை வடிவமைப்பதால், பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை மேம்படுத்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு, குழுவாதத்தை ஊக்குவித்து, குறுகிய அல்லது அற்பமான ஆதாயங்களுக்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள இளம் மனங்களுக்குக் கற்பிக்கும் மாணவர் அரசியலையும் கட்டுப்படுத்த வேண்டும்.
அனிஷ் குப்தா டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பொருளியல் கற்பிக்கிறார். நொய்டாவில் உள்ள IEDS-ஐச் சேர்ந்த பிரேரோனா பருவாவிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளுக்கு நூலாசிரியர் நன்றி தெரிவிக்கிறார்.
original link:
The real equity gap in higher education.