புகை மற்றும் வாகனப் புகையைத் தவிர, நகரத்தில் உள்ள மற்றொரு முக்கிய மாசுபடுத்தி, கண்முன்னே மறைந்திருக்கும் நச்சுத் தூசியாகும். பொதுவான தீர்வுகள் குறைந்த அளவிலான நிவாரணத்தையே அளிக்கின்றன.
இந்த தூசு நீண்டகாலம் காற்றில் தங்கிவிடுகிறது. மக்கள் இதைத் தங்கள் நுரையீரலுக்குள் ஆழமாக சுவாசிக்கிறார்கள். மேலும் இது இரத்த ஓட்டத்திலும் நுழையக்கூடும். இது நோய்களை உண்டாக்கக்கூடிய, நுரையீரலைச் சேதப்படுத்தக்கூடிய மற்றும் குறிப்பாகக் குழந்தைகளிடையே புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய நச்சு உலோகங்களையும் கொண்டுள்ளது.
இந்த சாலைப் புழுதி, டெல்லியின் மாசுபடுத்திகளின் முக்கிய வில்லன் ஆகும். ஒவ்வொரு நாளும் தங்கள் உயிருக்கு அமைதியாக ஆபத்தை விளைவிக்கிறது.
காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் (Commission for Air Quality Management (CAQM)) அமைக்கப்பட்ட உயர்மட்ட நிபுணர்கள் குழுவின் ஜனவரி 2026 அறிக்கை, சாலைப் புழுதியை டெல்லியின் ஒரு முக்கிய மாசு மூலமாக அடையாளம் கண்டுள்ளது. ஏனெனில் அது "ஒரு முதன்மை உமிழ்வாகவும், ஒரு நீடித்த மூலமாகவும்" செயல்படுகிறது. சாலைகள் மற்றும் சாலையோரங்களில் இருந்து காற்றில் பரவும் தூசி, வாகனங்களின் இயக்கம், உலர்ந்த மண் மற்றும் சாலைத் தேய்மானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக சாலைப் புழுதியை அந்தக் குழு பரந்த அளவில் வரையறுத்தது. மோசமான சாலை மேற்பரப்புகள், பள்ளங்கள், உடைந்த விளிம்புகள், செப்பனிடப்படாத சாலைப் பகுதிகள், சாலையில் சக்கர தேய்மானம் மற்றும் கட்டுமானம் மற்றும் இடிப்பு (construction and demolition (C&D)) பொருட்களைக் கொண்டு செல்லும்போது விழும் குப்பைகள் ஆகிய அனைத்தும் புழுதியின் அளவு அதிகரிப்புக்குப் பங்களிக்கின்றன என்று அந்த அறிக்கை கூறியது.
சாலைப் புழுதியைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்கும் செயல்முறையையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. சாலை மேற்பரப்புகளில் படியும் தூசியானது, குறிப்பாக வறண்ட காலங்களில், வாகனங்களின் இயக்கத்தால் மீண்டும் காற்றில் கலக்கப்படுகிறது. இதனால், தூசியை உருவாக்கும் செயல்பாடுகள் எதுவும் இல்லாதபோதும், மாசுபாட்டின் அளவு அதிகமாகவே இருக்கிறது.
ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின் (Council on Energy, Environment and Water Programme) தூய்மையான காற்றுத் திட்டத் தலைவரான முகமது ரஃபியுதீன் கூறுகையில், “அறிவியல்ரீதியாக, கட்டுமானம் மற்றும் இடிப்புத் தூசியுடன் ஒப்பிடும்போது சாலைப் புழுதி முற்றிலும் வேறுபட்டது. சாலைப் புழுதியானது ஒரு நேரியல் மூலமாகும் (வரிசையாக பரவியிருக்கும்). ஆனால் ஒரு கட்டுமானத் தளத்தில், உருவாகும் தூசி ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து வருகிறது.” இதன் பொருள், சாலைப் பாதை முழுவதும் சாலைப் புழுதிக்குத் தொடர்ச்சியான சுத்தம் செய்தலும் மேற்பரப்பு மேலாண்மையும் தேவை என்பதாகும். அதேசமயம் கட்டுமானத் தூசியானது தள அளவிலான கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
அது ஏன் தொடர்கிறது?
கடந்த ஆண்டு காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் (CAQM) அமைக்கப்பட்ட சாலைப் புழுதிக் குழு, சாலை ஓரங்கள் மற்றும் நடுப்பகுதிகளில் தொடர்ச்சியாகப் படியும் தூசி, பொருத்தமற்ற சாலை உள்கட்டமைப்பு வடிவமைப்பு, மோசமான பராமரிப்பு மற்றும் போதுமான தூசி மேலாண்மையின்மை நடைமுறைகள் ஆகியவற்றால் தூசி மீண்டும் காற்றில் கலப்பதாகத் தெரிவித்துள்ளது.
தார் போடப்படாத சாலை நடுப்பகுதிகளிலிருந்து வரும் தூசி அடிக்கடி சாலைகளில் வீசப்படுவதாகக் குழு குறிப்பிட்டது. நீர்ப்பாசன முறைகள் இப்பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும். ஏனெனில், சாலையின் நடுப்பகுதி மற்றும் நடைபாதைகளில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சப் பயன்படுத்தப்படும் தடிமனான குழாய்கள் பெரும்பாலும் மண்ணைச் சாலைகளில் கொட்டுகின்றன. அது பின்னர் காய்ந்து தூசியின் அளவை அதிகரிக்கிறது. ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தம் ஆகியவையும், தூய்மைப் பணியைத் தடுக்கும் மற்றும் தூசி குவிய அனுமதிக்கும் செயல்பாட்டுத் தடைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டன.
உள்ளூர் சாலைகள் மற்றும் துணைச் சாலைகள் வழக்கமான பராமரிப்பு அட்டவணைகளிலிருந்து பெரும்பாலும் விலக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கை கூறியது. "சாலைகளில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்ட பின்னரே பெரும்பாலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நீண்டகால தூசு வெளியேற்றம் ஏற்படுகிறது," என்றும் அது குறிப்பிட்டது.
CSIR-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) மற்றும் CSIR-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI) இணைந்து நடத்திய ஒரு தனி கூட்டு ஆய்வு, பிப்ரவரி 7, 2025 அன்று காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திற்கு (CAQM) சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வில், "சாலைத் தடுப்புகளின் ஓரங்களில் தொடர்ச்சியாக தூசு படிதல், மோசமான சாலை வடிவமைப்பு அல்லது அதன் நிலை மற்றும் பராமரிப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட தூசு மேலாண்மை நடைமுறைகள் ஆகியவற்றால் சாலைப் புழுதி மீண்டும் காற்றில் கலக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தலைநகரில் உள்ள சில சாலைப் பகுதிகளில், சாலையிலிருந்து 10 மீட்டர் தூரம் வரை PM-10 வெளியேற்றம் 1700 µg/m³ வரை "அதிர்ச்சியளிக்கும் வகையில் மிக உயர்ந்த அளவில்" பதிவாகியுள்ளதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டது. இதற்கு மாறாக, PM10 துகள்களுக்கான அனுமதிக்கப்பட்ட வரம்பு, 24 மணி நேர அடிப்படையில் 100 µg/m³ ஆகவும், ஆண்டு சராசரியாக 60 µg/m³ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாலைப் புழுதி யை மதிப்பிடும்போது மூன்று கூறுகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என 'ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின்' (Council on Energy, Environment and Water) திட்ட இணைப்பாளர் அர்பன் பத்ரா கூறினார். இது தூசியின் மூலங்கள், காற்றினால் பரவும் தூசியின் பங்கு மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் தூசியின் பங்கு (கட்டுமானம் தொடர்பானவை உட்பட), மற்றும் மீண்டும் காற்றில் கலப்பதற்காக சாலை மேற்பரப்புகளில் கிடைக்கும் தளர்வான துகள்களின் அளவு போன்றவற்றை குறிப்பிட்டார்.
வாகனப் புகை வெளியேற்றம் குறையும்போது, சாலைப் புழுதியின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் அதிகரித்து வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான, 2023-ம் ஆண்டு பல நகரங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தூய்மையான எரிபொருட்களால் வாகனப் புகை வெளியேற்றம் குறைந்தாலும், "மீண்டும் காற்றில் கலக்கக்கூடிய சாலைப் புழுதி , டயர் தேய்மானம் மற்றும் பிரேக் தேய்மானம்" போன்ற புகை அல்லாத மூலங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகள், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் புழுதிப் புயல்கள் ஆகியவற்றால் டெல்லியில் வண்டல் மண் அதிகமாகக் காணப்படுகிறது என்று அந்த ஆய்வு காட்டியுள்ளது. 32 நகரங்களில், வண்டல் மண்ணின் அளவு ஒரு சதுர மீட்டருக்கு 0.2 கிராம் முதல் 111.2 கிராம் வரை இருந்தது. இதில் டெல்லியின் சராசரி அளவு ஒரு சதுர மீட்டருக்கு 14.47 கிராம் ஆகும்.
ஆரவல்லி மலைத்தொடரின் சிதைவு, டெல்லியைச் சுற்றியுள்ள இயற்கையான தூசித் தடுப்பை பலவீனப்படுத்தியுள்ளது என்றும், இதனால் காற்றினால் அடித்து வரப்படும் தூசி அதிகளவில் நகருக்குள் நுழைய அனுமதிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதும், சாலைப் புழுதியால் ஏற்படும் பாதிப்பானது ஆண்டுதோறும் 10,207-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடையது என்று அந்த ஆய்வு தெரிவித்தது.
டெல்லி என்ன செய்கிறது?
இயந்திர சாலைத் துடைப்பு இயந்திரங்கள் (Mechanical Road Sweeping Machines (MRSM)) மூலம் தூசியை அகற்றுவதுடன், டெல்லி மாநகராட்சி (Municipal Corporation of Delhi (MCD)), அந்த இயந்திரங்கள் நுழைய முடியாத பகுதிகளைத் துடைப்பதற்காக மொத்தம் 57,000 துப்புரவுப் பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்துகிறது.
ஆனால், இயந்திரமயமாக்கப்பட்ட சாலைத் துடைப்புப் பணிகள் அடிக்கடி செய்யப்படுவது மட்டுமல்லாமல், மேலும் அறிவியல்பூர்வமானதாக மாறவேண்டும் என்று NEERI-CRRI அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "அறிவியல் ஆய்வின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட வகையான சாலைகளில் இயந்திரச் சாலைத் துடைப்பான்களை இயக்குவதற்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை (standard operating procedure (SOP)) தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்று கூட்டு நிறுவனம் அறிக்கையில் கூறியது. சாலைத் துடைப்பு இயந்திரப் பயன்பாட்டின் அதிர்வெண் மற்றும் செயல்திறன், மற்றும் பயன்பாட்டின் போதும் அதற்குப் பின்னரும் கிளறப்படும் தூசியின் துகள் அளவுப் பகுப்பாய்வு ஆகியவை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியது.
மற்ற நடவடிக்கைகளில் நீர் தெளிப்பான்கள், நகரும் புகை தடுப்புத் துப்பாக்கிகள் (anti-smog guns (ASG)) மற்றும் சாலைகள் மற்றும் பள்ளங்களைச் சீரமைத்தல் ஆகியவை அடங்கும். உதாரணமாக, டெல்லி மாநகராட்சியில் (MCD) சாலைகளில் மொத்தம் 167 நீர் தெளிப்பான்களும் 63 நகரும் புகை தடுப்புத் துப்பாக்கிகளும் (ASG) நிறுவப்பட்டுள்ளன. மேலும், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளுக்கான பதப்படுத்தும் வசதிகள், எஞ்சிய சாம்பலுக்கான சுகாதார நில நிரப்பு வசதிகள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளைச் சுத்திகரிப்பதற்கான கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகளும் உள்ளன.
எதைச் சரிசெய்ய முடியும்? — எதைச் சரிசெய்ய முடியாது?
டெல்லியின் இயற்கைச் சூழல் அந்நகரத்திற்குப் பாதகமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சாலைகளின் நிலை மேம்பட்டாலும், "எப்போதும் சிறிதளவு தூசி இருக்கத்தான் செய்யும்" என்றும், அதைத் தீவிரமாக அகற்றி நிர்வகிக்க வேண்டியுள்ளது என்றும் ரஃபியுதீன் கூறினார். வறண்ட கோடைக்காலங்கள், அடிக்கடி ஏற்படும் புழுதிப் புயல்கள், தளர்வான வண்டல் மண் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த மழைப்பொழிவு ஆகியவற்றால் நகரத்தில் தூசிக்கான இயற்கையான அடிப்படை நிலை இருப்பதே இதற்குக் காரணம்.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில தணிப்பு நடவடிக்கைகள் குறைந்த அளவிலான பலன்களையே அளிக்கின்றன. புகைமூட்டத் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து 2017-ல் ஒரு முன்னோடியான ஆய்வை வழிநடத்தியவரும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று ஆய்வகத்தின் முன்னாள் தலைவருமான தீபங்கர் சாஹா, தூசியைக் கட்டுப்படுத்துவதில் அத்தகைய நடவடிக்கைகள் பயனற்றவை என்று கூறினார்.
"தண்ணீர் தெளிப்பான்களையோ அல்லது நீர்த் தெளிப்பான்களையோ சார்ந்திருக்கக் கூடாது. அவை தூசியை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்துகின்றன. துகள்கள் அடியில் தங்கி, மேற்பரப்பு காய்ந்தவுடன், தூசி மீண்டும் காற்றில் கலக்கிறது. இது ஈரப்பதமாதலுக்கும் வழிவகுக்கிறது," என்று அவர் கூறினார்.
காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் (CAQM) நியமிக்கப்பட்ட சாலைப் புழுதிக் குழு, தனது 2025 அறிக்கையில், புகைமூட்டத் தடுப்புக் கருவிகள் "அதிக முன்னுரிமை உள்ள சூழ்நிலைகளில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளது. மேலும், அவசரகாலங்களில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைப்பதோடு, "சாலைகளில் தூசியைக் கட்டுப்படுத்துவதில் அவை குறைந்த முன்னுரிமை கொண்டவை" என்றும் விவரித்துள்ளது.
அதற்குப் பதிலாக, சாலை அமைத்தல், சாலையின் வழித்தடங்களில் பசுமையாக்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பிற்கு அக்குழு அழைப்பு விடுத்ததுடன், தீர்வுகள் வெறும் துடைப்பதை மட்டும் தாண்டியதாக இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறியது.
பசுமையாக்குதல் குறித்து, தாவரங்கள் காற்றில் பரவும் தூசியைத் தடுத்து, தார் போடப்படாத பகுதிகளில் இருந்து அது மீண்டும் காற்றில் கலப்பதைத் தடுப்பதன் மூலம் உதவுகின்றன என்று அந்த அறிக்கை கூறியது. அகன்ற கிளைகளையும், சொரசொரப்பான அல்லது பெரிய இலைகளையும் கொண்ட, தூசியை சிறப்பாகத் தக்கவைக்கும் வறட்சியைத் தாங்கக்கூடிய தாவர வகைகளைச் சாலையோரம் நடுமாறு அது பரிந்துரைத்தது. மேலும், காற்று வீசும் காலங்களில் மண் சரிந்து விழுவதைக் குறைப்பதற்காக, மண் மட்டத்திற்கும் நடைபாதைக் கற்களின் மேல் பகுதிக்கும் இடையே 8-12 அங்குல இடைவெளி விடுவது போன்ற நடைமுறை வடிவமைப்பு நடவடிக்கைகளையும் அது பரிந்துரைத்தது.
2025-ம் ஆண்டின் CSIR-NEERI கூட்டு ஆய்வும் இதையே எதிரொலித்தது. ஏனெனில், அது முக்கிய சாலைப் பகுதிகளில், குறிப்பாக ஓரங்களிலும் நடுப்பகுதிகளிலும், மோசமான பராமரிப்பு மற்றும் கண்ணுக்குத் தெரியும் தூசி படிதலை இந்த ஆய்வுச் சுட்டிக்காட்டியது. மேம்படுத்தப்பட்ட சாலை வடிவமைப்பு, தாவரத் தடைகள், கழிவுநீரிலிருந்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் மெட்ரோ உள்கட்டமைப்பைச் சுற்றிப் பசுமையாக்குதல், மற்றும் தளர்வான மண்ணை நிலைப்படுத்தி தூசி வடிகட்டிகளாகச் செயல்படக்கூடிய மும்முனை மரக்கன்று நடும் முறை ஆகியவற்றை அது வலியுறுத்தியது.
நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
சாலைப் புழுதியானது PM-2.5 மற்றும் PM-10 ஆகியவற்றின் ஒரு முக்கிய ஆதாரமாகும். இந்த நுண்ணிய துகள்கள் நுரையீரலின் ஆழம் வரை ஊடுருவி, இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடியவை. இந்தத் துகள்களை உள்ளிழுப்பதால் நுரையீரல் எரிச்சல் மற்றும் அழற்சி ஏற்படலாம். மேலும், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற ஏற்கனவே உள்ள நோய்களை இது மோசமாக்கி, பெரும்பாலும் தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சிரைப்புக்கு வழிவகுக்கிறது. PM-2.5 உடன் நீண்டகாலத் தொடர்பு, குறிப்பாக நாள்பட்ட இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களிடையே இறப்புடன் சேர்த்து, குழந்தைகளில் நுரையீரல் வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறைவதுடனும் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Original link:
Why road dust is emerging as Delhi’s biggest pollution threat?.