"பருவமழையின் தொடக்கம்" (Onset of the monsoon) என்றால் என்ன ? - ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


தென்மேற்குப் பருவமழையானது, மே மாதம் 16-ஆம் தேதியன்று, தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகள், அந்தமான் கடலின் பல பகுதிகள், ஒட்டுமொத்த நிகோபார் தீவுகள் மற்றும் ஸ்ரீ விஜயபுரம் உள்ளிட்ட அந்தமான் தீவுகளின் சில பகுதிகளுக்குள் முன்னேறியுள்ளது, என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தப் பகுதிகளில் இந்த ஆண்டின் பருவமழையின் தொடக்கமானது, வழக்கமான காலத்தைவிடக் குறைந்தது ஆறு நாட்களுக்கு முன்னதாகவே  தொடங்கியுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு இந்தப்பகுதியில் பருவமழைத் தொடக்கம் வழக்கமாக தொடங்கும் நாட்களைவிட மே மாதம் 13-ஆம் தேதியன்றே  தொடங்கியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பருவமழைத் தொடக்க கால அட்டவணையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் (Port Blair) பகுதியில் பருவமழை தொடங்குவதற்கான வழக்கமான தேதி மே 22 ஆகும்.


கடந்த இரண்டு நாட்களாக நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. கூடுதலாக, மேற்கு திசைக்காற்று வலுவடைவதும், வெப்பச்சலன மேகக் கூட்டங்களின் இருப்பைக் குறிக்கும் 'வெளியேறும் நீண்ட அலைக்கதிர்வீச்சு' (outgoing longwave radiation) மதிப்புகள் சாதகமாக அமைவதும், பருவமழைத் தொடக்கத்தை அறிவிப்பதற்கான முக்கிய அளவுகோல்களாகக் கருதப்படுகின்றன.


அடுத்த 3-4 நாட்களில், தென்மேற்குப் பருவமழையானது தென்கிழக்கு அரபிக்கடலின் மேலும் சில பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகள், அந்தமான் தீவுகள் மற்றும் அந்தமான் கடலின் மற்ற பகுதிகள், மற்றும் மத்திய கிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் என பல இடங்களுக்குள் முன்னேறுவதற்கு சாதகமான சூழல்கள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கேரளாவில் பருவமழைத் தொடக்கம் மே மாதம் 26-ஆம் தேதியன்று தொடங்குவதற்கு  அதிக வாய்ப்புள்ளது. இதுவே இந்த ஆண்டின் நான்கு மாதப் பருவமழைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


 இந்தியாவில் இரண்டு வகையான பருவமழைக் காலங்கள் உள்ளன:


(1) தென்மேற்குப் பருவமழை: இது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில்  மழை பொழிவை வழங்குகிறது. இஇது முதலில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள கேரளாவைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பரவுகிறது.


 இந்தப் பருவமழையே இந்தியாவைப் பாதிக்கும்  முக்கிய பருவமழையாகும். இது வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் சூழலியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் குறிப்பாக 'கரீஃப்' (Kharif) பயிர்களின் விளைச்சலுக்கும் முக்கிய  பங்களிப்பை வழங்குகிறது.


நாட்டின் 70 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இந்த பருவக்காலத்தில்தான் தங்கள் ஆண்டு மழையின் பெரும்பகுதியைப் பெறுகின்றன.


(2) வடகிழக்குப் பருவமழை: இது இந்தியத் துணைக்கண்டத்தின் காலநிலை அமைப்பில் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான அம்சமாகும். இந்தப்பருவமழையின் பெயர், வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கி வீசும் பருவக்காற்றின் திசையிலிருந்து பெறப்பட்டது. இது அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில்  மழைப்பொழிவை வழங்குகிறது. இது தீபகற்ப இந்தியாவைப் பாதிக்கிறது. இது தென்மேற்குப் பருவமழையைப் போலத் தீவிரமானது அல்ல என்றாலும், ரபி பயிர்களின் (Rabi crops) வளர்ச்சிக்கு மிகவும்  முக்கியமானதாகும்.


தென்னிந்தியாவில் உள்ள  தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா மற்றும் யானம் ஆகிய பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவமழை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


வடகிழக்கு பருவமழையானது குளிர்காலப் பருவமழை (Winter Monsoon), பின்வாங்கும் பருவமழை (Retering Monsoon) அல்லது தலைகீழ் பருவமழை (Reverse Monsoon) என்றும் அழைக்கப்படுகிறது.


Original Link: What is meant by the “onset of the monsoon”?

Share: