பாதுகாப்புத் துறையில் 'இந்தியாவில் தயாரிப்போம் (Make in India)' முன்னெடுப்பு : சவால்கள், தடைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் -ஜெய்மினி பகவதி & ஆல்யா சபர்வால்

தற்போதைய உலகளாவிய மோதல்களிலிருந்து இந்தியா என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தனியார் துறை எவ்வாறு இன்னும் பெரிய பங்களிப்பை வழங்க முடியும்? நிபுணர்கள் விளக்குகிறார்கள்.


இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) திட்டம் போர்க்களத்தில் இந்தியா மேம்பட்ட தொழில்நுட்பங்களை எவ்வளவு நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டியுள்ளது என்று கூறினார். இந்திய ராணுவமும் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியாளர்கள் சங்கமும் (Society of Indian Defence Manufacturers (SIDM)) இணைந்து பிரயாக்ராஜில் நடத்திய 'North Tech Symposium'  மாநாட்டில் பேசிய அவர், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக்கொள்ளும் நாடுகளே எதிர்காலப் போர்களில் பெரும் சாதகமான நிலையைப் பெறும் என்றும் குறிப்பிட்டார்.


பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன, இன்னும் என்னென்ன சவால்கள் உள்ளன? இதில் தனியார் துறை என்ன மாதிரியான பங்களிப்பை வழங்க முடியும்? ஆகிய கேள்விகளுக்கு, முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை (Indian Foreign Service) அதிகாரியும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் (Centre for Social and Economic Progress (CSEP)) சிறப்பு ஆய்வாளருமான ஜெய்மினி பகவதி மற்றும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மைய (CSEP) அமைப்பின் ஆராய்ச்சி ஆய்வாளர் ஆல்யா சபர்வால் ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர்.


பாதுகாப்புத் துறையில் இந்தியா ஏன் இறக்குமதியை இவ்வளவு அதிகமாகச் சார்ந்துள்ளது? இந்தச் சார்புத்தன்மை இன்று எங்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது?


இந்தியா தற்போது உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முன்னணி பத்து நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பாதுகாப்புத் துறை இறக்குமதிக்கான இந்தச் சார்புநிலைக்கு, நாட்டின் உள்நாட்டுத் தொழில்நுட்பக் குறைபாடுகளும், நிதிநிலை சவால்களுமே முக்கியக் காரணங்களாகும்.


சுதந்திரம் பெற்ற ஆரம்பக் காலகட்டத்தில், இந்தியா தனது ராணுவ உபகரணங்களுக்காக முதன்முதலில் இங்கிலாந்து நாட்டையும் (UK), அதன் பிறகு சோவியத் ஒன்றியத்தையும் (USSR) பெரிதும் நம்பியிருந்தது. காலப்போக்கில், அமெரிக்கா (US) மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக உருவெடுத்துள்ளன.


சீனாவும் தனது பாதுகாப்புத் தொழில் பயணத்தை சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் தொடங்கியது. இருப்பினும், 1961-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சீனாவின் தொழில் வளர்ச்சியும் பாதுகாப்பு உற்பத்தியும் பெரும்பாலும் அவர்களின் சொந்த உள்நாட்டு முயற்சிகளையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தன. 1950-களில் இந்தியாவும் சீனாவும் ஓரளவிற்கு சமமான உள்நாட்டுத் தொழில்நுட்பப் பின்னணியுடன் தொடங்கினாலும், தற்போது சீனா உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்பில் மிக உயர்ந்த மற்றும் அதிநவீன நிலையை எட்டியுள்ளது.


இந்தியா பல பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் தேவையான திறனை வளர்த்துக் கொண்டிருந்தாலும், ஜெட் என்ஜின்கள் (Jet engines) மற்றும் அதிநவீன ட்ரோன்கள் (Drones) போன்றவற்றை சொந்தமாகத் தயாரிப்பதில் இன்னும் சிரமங்களை எதிர்கொள்கிறது.


பொதுவாக ஒரு பாதுகாப்புத் துறைக்கான கொள்முதல் அல்லது ஆயுத உற்பத்தித் திட்டம் அரசாங்க அமைப்பிற்குள் எவ்வாறு நகர்கிறது, மற்றும் இதில் மிக அதிகளவிலான காலதாமதத்தை ஏற்படுத்தும் சிக்கல்கள் எங்கே ஏற்படுகின்றன?


இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்கும் செயல்முறை மிகவும் மையப்படுத்தப்பட்டதாகவும், பல அடுக்கு அதிகார அமைப்புகளைக் கொண்டதாகவும் உள்ளது. ராணுவப் படைகள் தங்களுக்குத் தேவையான உபகரணங்களின் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு விவரக்குறிப்புகளை, அதாவது  அளவுசார் தேவைகள் (Quantitative Requirements) மூலம் அடையாளம் காணும்போது இந்தச் செயல்முறை தொடங்குகிறது.


இருப்பினும், இந்திய மற்றும் வெளிநாட்டு ஆதாரங்களில் இருந்து பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் நீண்டகாலமாகவே தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில திட்டங்கள் நிறைவடைவதற்குக் பல ஆண்டுகள்கூட ஆகின்றன. உதாரணமாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் (2022-23) அறிக்கையின்படி, மொத்தம் உள்ள 178 திட்டங்களில் 119 திட்டங்கள் திட்டமிட்ட காலக்கெடுவைப் பின்பற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 49 திட்டங்களை முடிப்பதற்கு, முதலில் ஒதுக்கப்பட்ட காலத்தைவிட கூடுதல் காலம் தேவைப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாமதங்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவைத் தாண்டி 16 சதவீதம் முதல் 500 சதவீதம் வரை நீடித்துள்ளன.


இந்தத் தாமதங்களுக்கு முக்கியக் காரணம், தற்போதைய நடைமுறையில் உள்ள பெரிய தடைகளே ஆகும். இதில் ஒரு காரணம், நிர்ணயிக்கப்படும் அளவுசார் தேவைகள் தெளிவற்றதாக இருப்பதாகும். இது தவிர, அதிகாரிகள் அளவில் பல அடுக்கு அனுமதிகள் பெற வேண்டியிருப்பதால், ஒரே மாதிரியான அனுமதிகள் மீண்டும் மீண்டும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டும், முடிவெடுக்கும் முறையாலும் நடைமுறைத் தாமதங்கள் ஏற்படுகின்றன.


மற்றொரு முக்கியப் பிரச்சினை என்னவென்றால், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வலுவான பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திறமையாளர்களின் பற்றாக்குறை நிலவுவதாகும். நாட்டின் மிகச்சிறந்த திறமையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு அரசாங்கத்தின் ஊதிய அமைப்பு கவர்ச்சிகரமானதாக இல்லாததே இதற்கு ஒரு பகுதி காரணமாகும்.


பாதுகாப்பு ரகசியங்களைப் பேணுவதற்காக அல்லது பிற காரணங்களுக்காக, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி பொதுத்துறையிலேயே நீடிக்க வேண்டிய இடங்களில், உயர்மட்ட அரசு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வழங்கப்பட வேண்டும். இது நாட்டின் மிகச் சிறந்த அறிவியல் மற்றும் பொறியியல் திறமையாளர்களை ஈர்க்கவும், அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவும் என்கின்றனர்.


காசா, லெபனான் மற்றும் ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட உலகளாவிய போர்களில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன?


இந்தியா இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் என்னவென்றால், உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகள் விநியோகச் சங்கிலியை பாதிக்கக்கூடும் என்பதால், வெளிநாட்டு ராணுவ உபகரணங்கள் வழங்குநர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டிலேயே மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் ஒரு வலுவான மற்றும் சுயசார்பு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.


சமீபத்திய மோதல்கள் காட்டுவது என்னவென்றால், நவீன போர்க்கால முறை என்பது இப்போது மேம்பட்ட வழக்கமான ஆயுதங்களை மட்டுமல்லாமல், ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற எளிதாக விரிவுபடுத்தக்கூடிய மற்றும் மலிவான தொழில்நுட்பங்களையும் சார்ந்துள்ளது.


உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடக்கும் போர்கள், குறைந்த விலை கொண்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles (UAVs) அல்லது ட்ரோன்கள்) ராணுவ சொத்துக்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டியுள்ளன.


வரலாற்றுரீதியாக, போர்கள் என்பது விமானம் தாங்கி கப்பல்கள், அதிக விலை கொண்ட போர் விமானங்கள், குண்டுகளை வீசும் விமானங்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட மற்றும் விலையுயர்ந்த அமைப்புகளையே பெரிதும் சார்ந்திருந்தது. இருப்பினும், குறைந்த விலை ட்ரோன்கள் தற்போது ஒரு முக்கியமான ராணுவரீதியில் பதிலடி கொடுக்கும் ஆயுதமாக மாறியுள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பிலும், ஈரானின் பிராந்திய ராணுவத்திலும், போர்க்களத்தின் முடிவுகளை மாற்றுவதில் இந்த ட்ரோன்கள் (UAVs) முக்கியப் பங்கு வகித்துள்ளன.


உதாரணமாக, ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களின் முதல் வாரத்தில், வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (Gulf Cooperation Council (GCC)) நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 71% ட்ரோன்கள் மூலமாகவே நடத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவைப் பொறுத்தவரை, இதன் பொருள் என்னவென்றால், பாரம்பரிய பாதுகாப்புத் துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வியூகரீதியாக எப்போதும் தயாராக இருப்பதற்கு ஏதுவாக ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs), தானியங்கி அமைப்புகள் மற்றும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதும் அவசியமாகும்.

இன்றைய சூழலில், தனியார் துறையின் பங்களிப்பு எந்த நிலையில் உள்ளது?


பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


அதில் ஒரு முக்கியமான நடவடிக்கை, உத்திசார் கூட்டாண்மை (Strategic Partnership) மாதிரியை அறிமுகப்படுத்தியதாகும். இது நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் போன்ற முக்கிய பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதில், இந்தியத் தனியார் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கும் (Original Equipment Manufacturers (OEMs)) இடையே கூட்டுறவை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.


மற்றொரு முக்கியமான சீர்திருத்தம் என்னவென்றால், பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment (FDI)) விதிகள் தளர்த்தப்பட்டதாகும். பாதுகாப்புத் துறையிலான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 2016-ஆம் ஆண்டில் 24%-லிருந்து 49%-ஆக உயர்த்தப்பட்டது; பின்னர் 2020-ஆம் ஆண்டில் தானியங்கி வழிமுறை மூலமாக இது 74%-ஆக மேலும் அதிகரிக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவது எளிதாக்கப்பட்டுள்ளது. இது அதிநவீன தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் மற்றும் உள்நாட்டுத் தொழில்சார் உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 70%-க்கும் அதிகமான பங்கினை இன்னும் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களே (Defence Public Sector Undertakings (DPSUs)) தன்வசம் வைத்துள்ளன.





தனியார் நிறுவனங்கள் இன்றும் பல முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கு (DPSUs) வழங்கப்படும் சிறப்பு முன்னுரிமை, மிகவும் கடுமையான ஆவண நடைமுறைகள், அடிக்கடி ஏற்படும் கட்டண விநியோகத் தாமதங்கள் மற்றும் கொள்முதல் முடிவுகளில் மிகக் குறைந்த அளவிலான பங்களிப்பு ஆகியவை இதில் அடங்கும்.


பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் மிகவும் சீரான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமானால், பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஆகிய இரு தரப்பினருக்கும் உண்மையான சம வாய்ப்புள்ள சூழல் அவசியமாகும். இதில் அரசாங்கத்தின் பங்கு, ஒரு தயாரிப்பாளராக இல்லாமல், ஒரு உத்திசார்ந்த கொள்முதல் அமைப்பாக மாறுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


இந்த உற்பத்தியில் இந்தியா பொதுத்துறையா அல்லது தனியார்துறையா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. உலகளாவிய உதாரணங்கள் பல்வேறு மாதிரிகளைக் காட்டுகின்றன: சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவில் அரசாங்கம் முன்னுரிமைகளை அமைத்து, கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கிறது, ஆனால் பெரும்பாலான உற்பத்திப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே செய்கின்றன.


இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஆகிய இரு நிறுவனங்களும் நியாயமான முறையில் போட்டியிட்டு, இணைந்து செயல்படும் ஒரு கலப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே முதன்மை இலக்காக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



Original Link: Make in India in defence sector: Challenges, bottlenecks, and the way forward.


Share: