கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வரலாற்றுப் பதிவுகளும் கட்டிடக்கலை சான்றுகளும் அந்தச் சர்ச்சைக்கரிய வளாகம் பார்மர் வம்சத்தைச் சேர்ந்த ராஜா போஜ் உடன் தொடர்புடையது என்பதையும், அது சமஸ்கிருதம் கற்பிக்கும் ஒரு முக்கிய மையமாக விளங்கியது என்பதையும் காட்டுவதாகக் கூறியுள்ளது.
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 'போஜ்சாலா-கமல் மௌலா மசூதி' வளாகத்தின் உண்மையான மத அடையாளம் 'போஜ்சாலா' தான் என்றும், அது வாக்தேவி (சரஸ்வதி)-க்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் என்றும் கூறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் நகரில் (Dhar) அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடைக்காலக் கட்டடம், நீண்டகாலமாக இரு தரப்பினரிடையே உரிமை கோரப்பட்டு சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இந்த வளாகத்தை, இந்துக்கள் 'வாக்தேவி' (சரஸ்வதி)-க்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் என்று நம்புகிறார்கள். அதேவேளையில், முஸ்லிம்கள் இதனை 'கமல் மௌலா மசூதி' (Kamal Maula mosque) என்று கருதுகிறார்கள்.
2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி, இந்துக்கள் செவ்வாய்க்கிழமைகளில் அந்த வளாகத்தில் பூசையும், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைகளில் நமாஸும் (தொழுகை) செய்து வந்தனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த வளாகத்தை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (Archaeological Survey of India (ASI)) விரிவான ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த வளாகத்தின் உண்மையான தன்மை மற்றும் அடையாளத்தை எவ்வித குழப்பமும் இன்றி தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) அறிக்கையில், தற்போது அங்குள்ள கட்டட அமைப்பானது, அதற்கு முன்னரே அங்கு இருந்த கோவில்களின் பாகங்களைக்கொண்டே கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று, நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, தனது 242 பக்கத் தீர்ப்பில் ஒரு முக்கிய விவரத்தைக் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களின்படி, சர்ச்சைக்குரிய அந்த இடம் பர்மார வம்சத்தைச் சேர்ந்த ராஜா போஜுடன் தொடர்புடைய சமஸ்கிருதக் கல்வி மையமான 'போஜ்சாலா' (Bhojshala) என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், மத்தியப் பிரதேசத்தின் தார் (Dhar) மாவட்டத்தில் ஒரு காலத்தில் சரஸ்வதி தேவிக்கான கோவில் ஒன்று இருந்தது என்பதை இந்த ஆதாரங்கள் உணர்த்துகின்றன.
நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை எவ்வாறு வழங்கியது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு.
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. வரலாற்றுப் பதிவுகள் மற்றும் கட்டடக்கலை சான்றுகளின்படி, சர்ச்சைக்குரிய அந்த வளாகம் பர்மார வம்சத்தைச்ச் சேர்ந்த ராஜா போஜுடன் தொடர்புடையது என்றும், அது சமஸ்கிருதக் கல்விக்கான ஒரு முக்கிய மையமாகச் செயல்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
'இந்து முன்னணி நீதிக்கான அமைப்பு' (Hindu Front for Justice) மற்றும் பிறர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) இயக்குநர் வெளியிட்டிருந்த உத்தரவின் சில பகுதிகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் அங்கு தொழுகை (நமாஸ்) நடத்த அனுமதி அளித்த அதே வேளையில், போஜ்சாலா (Bhojshala) வளாகத்திற்குள் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கான உரிமைகளை கட்டுப்படுத்தியிருந்த பகுதியே தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் (Dhar) மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள போஜ்சாலா (Bhojshala) மற்றும் சமஸ்கிருத கற்றல் மையத்தின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து முடிவுகளை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கும், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) அமைப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 'பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் 1958, சட்டத்தின்கீழ் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act (AMASR Act, 1958), பாதுகாக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) வசம் மட்டுமே இருக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சொத்தின் மீதான உரிமை குறித்த இறுதி முடிவு அல்ல
தற்போதைய இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய சொத்து யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து தான் எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர்கள் இந்தச் சர்ச்சைக்குரிய பகுதிக்கான உரிமையைக் கோருவது போலவே, பிற எதிர்மனுதாரர்கள் மற்றும் வழக்கில் இடையீடு செய்பவர்களின் பல வாதங்கள் அமைந்திருந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அயோத்தி ராம்ஜென்மபூமி-பாப்ரி மஸ்ஜித் (Ayodhya Ramjanmabhoomi-Babri Masjid) வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பானது சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை கோரல்கள் தொடர்பான ஒரு உரிமையியல் வழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய வழக்கில், நீதிமன்றம் அந்தச் சர்ச்சைக்குரிய பகுதியின் தன்மையை வரலாற்று ஆவணங்கள், கட்டிடக்கலை அம்சங்கள், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆய்வறிக்கைகள் (ASI) மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானித்துள்ளது.
முஸ்லிம் தரப்பினர் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டு தேதியிட்ட அரசாணை (Ailan) ஒன்றை சமர்ப்பித்தனர். அது சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ஒரு மசூதியாக அங்கீகரித்திருந்தது. இருப்பினும், இது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஒரு அரசியலமைப்பு உத்தரவு அல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதி ஏற்கனவே, பண்டைய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (1904) (Ancient Monuments Preservation Act, (AMPA) 1904) ஒரு பழமையான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது. இது 1904-ஆம் ஆண்டிலிருந்தே பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இருந்ததால், தார் (Dhar) சமஸ்தானத்தின் அன்றைய ஆட்சியாளர், ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டு தேதியிட்ட அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் தரப்பினர் சமர்ப்பித்த வரலாற்றுச் சான்றுகள்
முஸ்லிம் தரப்பினர் பல்வேறு வரலாற்று ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஹஸ்ரத் மௌலானா கமாலுத்தீன் சிஷ்டி அவர்கள் கி.பி. 1306-07-ஆம் ஆண்டில் (1306-07 AD) இந்த மசூதிக்கு அடிக்கல் நாட்டினார் என்று வாதிட்டனர்.
இருப்பினும், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும், மசூதி என்று உரிமை கோரப்படும் அந்த சர்ச்சைக்குரிய கட்டடம் கி.பி. 1034-ஆம் ஆண்டுக்கு (1034 AD) முன்பு கட்டப்பட்டது என்பதைக் காட்டவில்லை என்று நீதிமன்றம் கூறியது. மேல்முறையீட்டாளர்கள் சமர்ப்பித்த வரலாற்றுப் பதிவுகள், இலக்கியங்கள் மற்றும் அரசாங்க அறிவிப்புகளே அந்த மசூதி கி.பி. 1034-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கட்டப்பட்டது என்பதை நிரூபிப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றம் அந்த சர்ச்சைக்குரிய பகுதி ஆரம்பத்திலிருந்தே ஒரு மசூதியாகத்தான் இருந்தது என்ற வாதத்தையும் நிராகரித்தது. ஏனெனில், அந்த நிலம் ஒரு வக்ஃப் (Waqf) சொத்து (இஸ்லாமிய சட்டத்தின்கீழ் தொண்டு நிறுவனங்களுக்காக அல்லது மதக் காரியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளைச் சொத்து) என்பதைக் நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் அங்கு இல்லை.
வரலாற்று ஆவணங்கள் அந்தச் சொத்து ஒரு கொடையாளருக்குச் (Waqif) சொந்தமானது என்பதைக் காட்டவில்லை. மேலும், அந்தச் சொத்தின் உரிமையாளர் வக்ஃப் (Waqf) அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் மற்றும் அவர் அந்தச் சொத்தை எல்லாம் வல்ல இறைவனுக்காக அர்ப்பணித்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், எங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்களின் மூலம் இங்கு ஒரு 'வக்ஃப்' (Waqf) சொத்து உருவாக்கப்பட்டதற்கான எந்தவொரு நிரூபணமும் கிடைக்கவில்லை. எனவே, சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் ஒரு மசூதி இருந்ததாக ஊகம் செய்யவோ அல்லது அப்படியே ஏற்றுக்கொண்டு விடவோ முடியாது என்றும் கூறியுள்ளது.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய ஆய்வின் நம்பகத்தன்மை குறித்த குற்றச்சாட்டுகள்
இந்த அகழ்வாராய்ச்சிப் பணியை மேற்கொள்வதற்காகத் தொல்லியல் துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு முக்கியத் தொழில்நுட்பக் குழு உருவாக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையிலான ஏழு மூத்த தொல்லியல் ஆய்வுத்துறை நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். மேலும், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படும்போது, இந்தத் தொல்லியல் ஆய்வின் முழு செயல்முறையையும் நேரில் கண்காணிக்க, மனுதாரர்கள் தரப்பிலிருந்து நியமிக்கப்பட்ட தலா இரண்டு பிரதிநிதிகள் ஆய்வுக் காலம் முழுவதும் உடனிருந்தனர்.
முஸ்லிம் தரப்பினர் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனது அறிக்கையைத் தயாரிப்பதற்காகப் பின்பற்றிய நடைமுறைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர். ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்துவிட்டது.
இந்த ஆய்வானது அறிவியல் பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி, நேர்மையான மற்றும் நடுநிலையான வழியில் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம். இதில் நிபுணர்கள் பயன்படுத்திய முறைகள் அவர்களின் தனித்துவமான அனுபவ அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். கார்பன் வயதுக் கணிப்பு முறை (Carbon dating) என்பது அந்தப் பொருளின் வயதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறதே தவிர, அது கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய அல்ல. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள கட்டடக்கலை அமைப்பின் காலத்தைக் கண்டறிவதே ஆகும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்களும் நவீனக் கழிவுகளும் மீட்கப்பட்டதாகவும், இது அந்த இடம் சேதமடைந்திருப்பதைக் காட்டுவதாகவும் முஸ்லிம் தரப்பு முன்வைத்த வாதத்திற்குப் பதிலளித்த நீதிமன்றம், “அத்தகைய பொருட்கள், ஏற்கனவே நவீனக் குப்பைக் கழிவுகள், பாதுகாப்புச் சிதைவுகள், பீங்கான் துண்டுகள், உறைகள் மற்றும் பலதரப்பட்ட கழிவுகளைக் கொண்டிருந்த, மிகவும் மேலுள்ள பலதரப்பட்ட சிதைவு அடுக்குகளில் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன என்றும நீதிமன்றம் கூறியது.
புத்த மதமும் சமண மதமும்
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) கௌதம புத்தரின் சிலை கண்டெடுக்கப்பட்டதை மறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, நீதிமன்றம் தொல்லியல் துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. தொல்லியல் துறை தனது வாதத்தில், அப்படி எந்தவொரு புத்தர் சிலையும் கண்டெடுக்கப்படவில்லை; எதிர்த்தரப்பினர் குறிப்பிடும் அந்த கலைப்பொருள் உண்மையில் ஒரு சமண (ஜைன) சிலை ஆகும். அது ஏற்கனவே முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.
அங்குள்ள சரஸ்வதி சிலை உண்மையில் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்த அம்பிகா தேவியின் சிலைதான் என்ற சமண சமூகத்தின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்தியாவில், சமண மதமும் (ஜைன மதமும்) இந்து மதமும் தனித்தனி பிரிவுகள் அல்ல என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் கூற்றுப்படி, சமணம் மற்றும் இந்து ஆகிய இரு மதங்களும் பண்டைய காலத்திலிருந்தே ஒன்றோடொன்று இணைந்தே வளர்ந்துள்ளன. மேலும், சமண மற்றும் இந்து ஆகிய இருமரபுகளைச் சேர்ந்த சிலைகள் பெரும்பாலும் இரு மதங்களின் கோயில்களிலும் காணப்படுகின்றன. இதற்குச் சட்டப்பூர்வமாக வலுசேர்க்க, நீதிமன்றம் இந்து திருமணச் சட்டம், 1955 (Hindu Marriage Act, 1955) மற்றும் இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 (Hindu Succession Act, 1956) ஆகியவற்றின் விதிகளைக் குறிப்பிட்டுக் காட்டியது. இந்தச் சட்டங்களின்கீழ் சமண மதமும் புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன என்று நீதிமன்றம் விவரித்துள்ளது.
எனவே, அகழ்வாராய்ச்சியின் போது சர்ச்சைக்குரிய இடத்திற்குள் ஒரு சமண தீர்த்தங்கரரின் சிலை கண்டெடுக்கப்பட்டது ஒன்றும் ஆச்சரியமளிக்கும் விஷயம் அல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
Original Link: Why Madhya Pradesh High Court ruled that Bhojshala was a temple.