தாயின் நடத்தையைச் சுட்டிக்காட்டி, 10 வயதுக் குழந்தையின் இடைக்கால பாதுகாப்பை மீண்டும் அவரது தந்தையிடமே புனே குடும்ப நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. குழந்தை யாருடைய பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்மானிக்கும்போது, ஒரு பெற்றோரின் "நடத்தை" என்பதை அவை எவ்வாறு வரையறுக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.
ஒரு 10 வயது சிறுவனின் இடைக்கால பாதுகாப்பை மீண்டும் குழந்தையின் தந்தையிடமே ஒப்படைத்த குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, அந்தப் பெற்றோரின் கணவன்/மனைவி என்ற முறையிலான நடத்தையையோ அல்லது ஒரு மருமகளாக அவர் நடந்துகொண்ட விதத்தையோ தகுதியாகப் பயன்படுத்த முடியுமா?
ஒருபுறம், ஒரு பெற்றோரின் "மோசமான நடத்தை" அல்லது ஒழுக்கக் குறைபாடுகள் மட்டுமே அவர்களுக்குக் குழந்தையின் பாதுகாவலர் உரிமையை மறுப்பதற்கான காரணியாக மாறிவிடாது என்ற நிலைநாட்டப்பட்ட சட்டக் கொள்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பெற்றோர் ஒருவரின் தனிப்பட்ட ஒழுக்கத்தைவிட, குழந்தையின் உணர்வுப்பூர்வமான, கல்விசார்ந்த மற்றும் உடல்நலன் சார்ந்த நல்வாழ்வு உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்ப நலனுக்கே நீதிமன்றங்கள் எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
மற்றொருபுறம், குழந்தையைத் தந்தையின் பொறுப்பில் ஒப்படைத்து உத்தரவிட்ட நீதிமன்றம், அந்தத் தாய் "ஒரு கணவனுக்கு மனைவியாகச் செய்ய வேண்டிய புனிதமான கடமைகளைச் செய்யத் தவறிவிட்டார்" என்று குறிப்பிட்டது. மேலும் "குடும்பத்தைப் பேணிக் காப்பது, மரியாதையைக் காப்பாற்றுவது மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்குவது" போன்ற விஷயங்கள் அந்தப் பெண்ணுக்கு முற்றிலும் தொடர்பில்லாத வார்த்தைகளாக தோன்றுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இறுதியாக, இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் நிழலில் வளர்ந்தால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது என்றும் நீதிமன்றம் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கு எதைப் பற்றியது?
குடும்பப் பணிப்பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய சில நாட்களிலேயே, கணவர் வேலை விஷயமாகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், தாய் குழந்தையுடன் சிங்கப்பூரிலிருந்து புனேவிற்குத் திரும்பியதைத் தொடர்ந்து இந்தத் தகராறு ஏற்பட்டது. குழந்தையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் குடும்ப நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, தந்தை குழந்தையின் பாதுகாவலர் உரிமையை மீண்டும் கோரினார்.
இறுதியில், குடும்ப நீதிமன்றம் குழந்தையைத் தற்காலிகமாகத் தந்தையின் பொறுப்பில்) ஒப்படைக்க உத்தரவிட்டது. இதற்கு நீதிமன்றம் பல காரணங்களைக் குறிப்பிட்டது – சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை யாரும் எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஒரு காரணம்; மேலும், அந்தக் குழந்தை தனது வளரும் பருவத்தின் மிக முக்கியமான முதல் மூன்று ஆண்டுகளைச் சிங்கப்பூரிலேயே கழித்திருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன், தாய் தன் குழந்தையைத் தந்தையிடமிருந்து பிரிக்க அல்லது அவரிடமிருந்து விலக்கி வைக்க முயற்சி செய்துள்ளார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றங்கள் எவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது?
இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டத்தின் 13-வது பிரிவின்கீழ் (Hindu Minority and Guardianship Act (HMGA)), குழந்தைக்கு எது நல்லது மற்றும் அவசியமோ அதற்கே மிக முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒருவருக்குக் குழந்தையின் பாதுகாவலர் (Guardianship) உரிமையை வழங்குவது அக்குழந்தையின் நலனுக்கு ஏற்றதல்ல என்று நீதிமன்றம் கருதினால், இந்தச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்தவொரு இந்து பாதுகாவலர் சட்டத்தின் கீழோ எந்தவொரு நபரும் அக்குழந்தைக்குப் பாதுகாவலராகத் தங்களை உரிமை கொண்டாட முடியாது என்று இந்தச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
காப்பாளர்கள் மற்றும் காப்பாள் சட்டத்தின் (Guardians and Wards Act) பிரிவு-17, ஒரு குழந்தையின் நலனை நீதிமன்றம் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது. இதன்படி, குழந்தையின் வயது, பாலினம், மதம், பரிந்துரைக்கப்படும் பாதுகாவலரின் குணம் மற்றும் அவரது தகுதி, அந்தப் பாதுகாவலருக்கும் குழந்தைக்குமான உறவு முறை, மறைந்த பெற்றோரின் விருப்பங்கள், மற்றும் பாதுகாவலருக்குக் குழந்தையுடனோ அல்லது குழந்தையின் சொத்துக்களுடனோ கடந்த காலத்தில் இருந்த அல்லது தற்போது இருக்கும் தொடர்பு ஆகியவற்றை நீதிமன்றம் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இப்பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
இந்த இரண்டு சட்டங்களும் ஒன்றிணைத்தே பயன்படுத்தப்படுகின்றன. இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம் (HMGA) 'குழந்தையின் நலன்' என்ற அடிப்படைக் கொள்கையை விவரிக்கும் வேளையில், பாதுகாவலர் மற்றும் வார்ட்ஸ் சட்டம் (GWA) குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கான நடைமுறைகளை வழங்குகிறது.
ரோஸி ஜேக்கப் vs ஜேக்கப் ஏ. சக்ரமாக்கல் (Rosy Jacob v Jacob A. Chakramakkal (1973) வழக்கின் போது, உச்சநீதிமன்றம் ஒரு முக்கியக் கருத்தைப் பதிவு செய்தது. "குழந்தைகள் வெறும் அசையும் சொத்துகளோ, அல்லது தங்களின் பெற்றோர்கள் விளையாடுவதற்கான வெறும் பொம்மைகளோ அல்ல." மேலும், இன்றைய நவீன சமுதாயத்தில், பெற்றோர்களின் முழுமையான மற்றும் வரம்பற்ற உரிமைகளைவிட, குழந்தையின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம் (HMGA) அல்லது காப்பாளர்கள் மற்றும் காப்பாள் சட்டம் (Guardians and Wards Act) ஆகிய இரண்டுமே, தம்பதியினருக்கு இடையே உள்ள திருமணக் கடமைகளை ஒரு பெற்றோர் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை மட்டும் குழந்தையின் பாதுகாப்பு உரிமையைத் தீர்மானிப்பதற்கான ஒரு காரணமாகக் கருதுவதில்லை. மாறாக, உச்சநீதிமன்றம் அது குழந்தையின் நலனை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்துகிறது.
மௌசாமி மைத்ரா கங்குலி vs ஜெயந்த் கங்குலி (Mausami Moitra Ganguli vs Jayant Ganguli (2008)) வழக்கில் உச்சநீதிமன்றம், தந்தை என்ற முறையில் அவருக்கு இருக்கும் 'இயற்கையான பாதுகாவலர்' என்ற சட்டப்பூர்வ தகுதிநிலையோ அல்லது குழந்தையின் மீது இரு பெற்றோர்களில் யாருக்கு இருக்கும் பாசமோ மட்டுமே குழந்தையின் பாதுகாப்பு மீதான உரிமையைத் தீர்மானிக்கும் ஒரே காரணியாக இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
நடைமுறையில், ஒரு குழந்தையின் நலன் என்பது பெற்றோரின் தனிப்பட்ட குணங்களை வைத்து மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அந்தக் குழந்தையின் அன்றாட வாழ்க்கையை வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் வழக்கமான பள்ளிப்படிப்புத் தொடர்ச்சி, தினசரி நடைமுறைகள் மாறுமால் இருப்பது, மனரீதியான நிலைத்தன்மை, குழந்தையின் அன்றாடக் காரியங்களில் ஒவ்வொரு பெற்றோரின் ஈடுபாடு மற்றும் குழந்தையின் சொந்த விருப்பம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்கின்றன. இருப்பினும், குழந்தையின் சொந்த விருப்பங்கள் மிகவும் கவனமாக ஆராயப்படுமே தவிர, அதுவே இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
பெற்றோரின் நடத்தை எப்போது பொருத்தமானதாகிறது?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் குழந்தை பாதுகாப்பு தொடர்பான சட்ட நெறிமுறைகளை பரந்த அளவில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று உணர்த்துகின்றன. முதலாவது வகை நேரடியாகக் குழந்தையைப் பற்றியது; ஏனெனில், குழந்தையைப் புறக்கணிப்பது, அவர்களுக்கு நிலையற்ற சூழலை உருவாக்குவது போன்ற விஷயங்கள் அவர்களின் வாழ்வில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புனே நீதிமன்றம் இந்த 'பாசப் பிரிவினை' (Alienation) என்ற அம்சத்தை சுட்டிக்காட்டி, தந்தைக்கு எதிராக "விஷமத்தனமான கருத்துக்கள்" குழந்தைக்கு புகட்டப்படுவதாகக் கூறியுள்ளது. இது நேரடியாக அந்தக் குழந்தையின் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வோடு தொடர்புடையதாக அமைகிறது.
இரண்டாவது, குழந்தையைப் பராமரிப்பதற்கான பெற்றோரின் திறனைப் பொறுத்தது ஆகும். இதில் குடும்ப வன்முறை அல்லது பராமரிப்பைப் பாதிக்கக்கூடிய மற்ற சூழல்கள் போன்ற காரணிகலும் அடங்கும். இங்கு, பெற்றோரின் தனிப்பட்ட குணநலன்களை ஆராய்வதைவிட, அவர்களின் நடத்தை குழந்தையின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்பதில்தான் முழுக் கவனமும் செலுத்தப்படுகிறது. லஹரி சகமூரி vs சோபன் கோதாலி (Lahari Sakhamuri vs Sobhan Kodali (2019)) வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, குழந்தைக்குப் பொறுப்பேற்க முன்வரும் பாதுகாவலரின் "நெறிமுறை சார்ந்த குணம்" என்பது ஒரு முக்கியமான காரணியாகும்; அதோடு, பெற்றோர் ஒரு தனிமனிதராக எப்படிப்பட்டவர் என்பதைப் பார்ப்பதைவிட, குழந்தையுடன் அவர்களுக்கு இருக்கும் உறவுமுறை எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்பதே முக்கியம என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாவது விஷயம், திருமண வாழ்க்கைக்குள் கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் நடத்தைகளைப் பொறுத்தது ஆகும். அதாவது கொடுமைப்படுத்துதல், துரோகம் செய்தல் (infidelity) அல்லது திருமணப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுதல் போன்ற, குழந்தையை நேரடியாகப் பாதிக்காத குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். 'ரோஸி ஜேக்கப்' (Rosy Jacob) வழக்கின் தீர்ப்பில், நீதிமன்றம் ஒரு மனைவியின் ஒழுக்கம் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, "குழந்தையின் பாதுகாப்பு சார்ந்த உரிமையை யாருக்கு வழங்குவது என்று தீர்மானிக்கும்போது முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டது. மேலும், முழுக் கவனமும் எப்போதுமே குழந்தையின் நலனில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
மனைவியின் புகார்களை விசாரித்த புனே நீதிமன்றம், தந்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கையாளும்போது இந்தக் கொள்கையையே பின்பற்றியது. வீட்டுவேலை செய்யும் பணிப்பெண் சம்பந்தமாக மனைவி சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த நீதிமன்றம், அதனை நிராகரித்தது. ஒருவேளை இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாகவே இருந்தாலும்கூட, ஒழுக்கக்கேடான குணம் கொண்ட ஒரு கணவர், கண்டிப்பாக ஒரு மோசமான தந்தையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, குழந்தையின் பாதுக்காப்பு சார்ந்த உரிமையைத் தீர்மானிக்கும் இந்த வழக்கின் ஆரம்ப நிலையில், இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை வழக்கின் இறுதி விசாரணையின்போது முடிவு செய்துகொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.